இன்று போய் நாளை வா

ஆஷ்வாஸ்யா நிர்யாஹி (12 min audio in tamil. same as the script below)

இன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல, யுத்த காண்டத்துல அம்பத்தி ஒன்பதாவது ஸர்கத்துல ஒரு ஸ்லோகம்,

गच्छानुजानामि रणार्दितस्त्वं प्रविश्य रात्रिंचरराज लङ्काम् |

आश्वस्य निर्याहि रथी च धन्वी तदा बलम् द्रक्ष्यसि मे रथस्थः ||

கச்சானுஜானாமி ராணார்திதஸ்த்வம்

ப்ரவிஷ்ய ராத்ரிம்சரராஜ லங்காம் |

ஆஷ்வாஸ்ய நிர்யாஹி ரதி ச தன்வி

தாதா பலம் தரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ ||

அப்படின்னு ஒரு ஸ்லோகம், இது ராமர் ராவணன் கிட்ட சொல்றது. முழு கதையையும் சொல்றேன். அப்போ இந்த ஸ்லோகத்தோட அருமை புரியும்.

ராம ராவண யுத்தம் ஆரம்பிச்சுடுத்து. வானராளுக்கும் ராக்ஷஸாளுக்கும் யுத்தம் நடக்கறது. ஒவ்வொருத்தரா வாறா அங்கே லங்கையிலிருந்து. தூம்ராக்ஷன், வஜ்ராதம்ஷ்ட்ரன் அப்படின்னு ஒவ்வொருத்தரா வாறா. இங்க அங்கதன், ஹனுமார் யாரவது ஒருத்தர் அவாளை யுத்தம் பண்ணி வதம் பண்ணிடறா. அகம்பனன் ஒரு பெரிய வீரன் வரான், அகம்பனன்னா அவனை அசைக்கவே முடியாது அப்படின்னு அர்த்தம். அவனை ஹனுமார் வதம் பண்ணிடறார். அதுக்கு முன்னாடி ராம லக்ஷ்மணா இந்திரஜித் போட்ட அந்த நாக பாசத்திலேருந்து விடுபட்டுடறா, அதை நேற்றைக்கு சொன்னேன்.

ராவணன் சேனாதிபதி ப்ரஹஸ்தன் கிட்ட சொல்றான், “இது வந்திருக்கறது பெரிய எதிரியா தெரியறது. நம்முடைய படையில நீயோ, நானோ, கும்பகர்ணனோ, இந்திரஜித்தோ தான் இவாளை எதிர்க்க முடியும் போல தோணறது, அதனால நீ நாளைக்கு முக்கால்வாசி படையை எடுத்துண்டு போய், இந்த ராமனோடு யுத்தம் பண்ணு” அப்படின்னு சொல்றான். ப்ரஹஸ்தன் “சரி, நீ எனக்கு எவ்வளோவெல்லாம் பண்ணியிருக்க, கௌரவப்படுத்தி இருக்க. உனக்காக உயிரையே விடுவேன்” அப்படின்னு சொல்லி, ப்ரஹஸ்தன் மறுநாள் யுத்தத்துக்கு போறான். பெரிய ஸர்கம், ப்ரஹஸ்தன் யுத்தத்துக்கு போறதோட வர்ணனைகள், அப்பறம், எல்லாரும் அவனோட யுத்தம் பண்ணி தோத்துடுறா, நீலன் அப்படின்னு, வானராளோட சேனாதிபதி, அவன் அக்னியோட பிள்ளை. அந்த ப்ரஹஸ்தனுக்கும் நீலனுக்கும் கடுமையான யுத்தம் நடக்கறது, கடைசில, நீலன் ஒரு பெரிய கல்லை தூக்கி அவன் மேல போட்டு, இவனோட தேர், சாரதி, இந்த ப்ரஹஸ்தன் எல்லாரையும் சேர்த்து வதம் பண்ணிடறான்.

ப்ரஹஸ்தனே வதமாயிட்டான்னு கேள்வி பட்ட உடனே, ராவணனே யுத்தத்துக்கு வரான்.  ராவணன் கிளம்பின உடனே அவன் பின்னாடி எல்லாருமே வரா, இந்திரஜித்து, மஹோதரன், அதிகாயன் அப்படின்னு அவன் sideல இருக்க எல்லா பெரிய வீரர்களும் வரா. கும்பகர்ணன் வரல, அவன் தூங்கிண்டு இருக்கான். இவா எல்லாருமா வெளியில வரா, அப்போ ராமர் விபீஷணன் கிட்ட கேக்கறார் “யாரு இவாள்ளாம்?” என்றவுடனே, விபீஷணன் ஒவ்வொருத்தரா சொல்லிண்டு வரான், “அதோ யானை மேல வரனே அவன் தான் மஹோதரன்,  இந்த குதிரை மேல இருக்கானே அவன் பேர் தேவாந்தகன்,  அப்படின்னு ஒவ்வொருத்தரா சொல்லிண்டு வந்து, ஒரு பெரிய தேர் மேல ராவணன் இருக்கான், “இதான் ராவணன்” அப்படின்ன உடனே ராமர், “ஆஹா இந்த ராவணன் ஒரு சூரியன் மாதிரி தேஜஸா இருக்கானே, பெரிய வீரனா தெரியறான்” அப்படின்னு எதிரியோடு வீரத்தைக் கூட ராமர் வியக்கறார்.

அந்த ராவணன் என்ன சொல்றான் மத்தவாள் கிட்ட எல்லாம், கூடியிருந்த ராக்ஷஸா கிட்ட எல்லாம்,  “நீங்க அவா அவா postக்கு போங்கோ, அந்தந்த கோட்டை வாசல்ல காவலுக்கு போங்கோ, இல்லைன்னா அந்த வழியா வானரா உள்ள வந்து கோட்டையை பிடிச்சிற போறா” அப்படின்னு சொல்றான். எல்லாரும் போயிடுறா. ராவணன் மட்டும், அவனோட படையோட யுத்தம் பண்றான். யாருமே அவன் கிட்ட நிக்க முடியல, ரொம்ப பராக்ரமத்தோட யுத்தம் பண்றான். எல்லாரும் ராமர் கிட்ட வந்து சரணாகதி பண்றா. ராமர் பக்கதுல இருந்த லக்ஷ்மணர் சொல்றார், “இந்த ராவணனை நீங்கதான் வதம் பண்ணப் போறேள், இருந்தாலும், நான் இவனோட யுத்தம் பண்றேன்” அப்படின்னு சொன்ன  உடனே ராமர் “போய் யுத்தம் பண்ணு, அவன் பெரிய வீரன். வரங்கள் எல்லாம் பெற்றவன்,  அதனால உன்னுடைய பலத்தையும் பாத்துக்கோ, அவனுடைய பலத்தையும் பாத்துக்கோ, உன்னுடைய weaknessஅ  பாத்துக்கோ, அவனுடைய weaknessஅ  பாத்துக்கோ, போய் யுத்தம் பண்ணு” அப்படின்னு சொல்றார்.

அப்படி இவா பேசிண்டு இருக்கும்போது ஹனுமார் போய், ராவணன் கிட்ட “ஹே ராவணா, என்னோடு யுத்தம் பண்ணு” அப்படின்னு சொல்றார். அப்போ ராவணன் சொல்றான் “நான் எல்லாரோட எல்லாம் யுத்தம் பண்ண மாட்டேன், உன்னோட பலத்தை காண்மி, ஒரு குத்து விடு, அதை பாத்துண்டு உன்னோடு வேணும்னா யுத்தம் பண்றேன்” அப்படிங்கறான். அப்போ ஹனுமார் சொல்றார் “முன்ன நான் வந்த போது உன் பிள்ளை அக்ஷனை வதம் பண்ணிணனே அதுலேர்ந்து என் பலம் தெரியலையா?” அப்படிங்கறார், உடனே ராவணனுக்கு ரோஷம் வர்றது, ராவணன் ஹனுமாரை ஒரு குத்து விடறான். ஹனுமார் நடுங்குறார், ஆடிடறார். அடுத்தது   ஹனுமார் ராவணனை ஒரு குத்து விடறார். அவன் தன்னோட தேரிலேயே விழுந்துடறான், கலங்கி போயிடறான். அப்பறம் எழுந்துண்டு ராவணன் ஹனுமார் கிட்ட சொல்றான், “நீ ரொம்ப பலசாலி தான், உன்னோட நான் யுத்தம் பண்றேன்”, என்கிறான். அப்போ ஹனுமார் சொல்றார் “எனக்கு இது அவமானம், நான் ஒருத்தனை குத்தறதாவது. அவன் உயிரோடு வந்து என்ன பாராட்டறதாவது” அப்படிங்கறார். உடனே ராவணனுக்கு திரும்பவும்  ரோஷம் வர்றது, அவன் ஹனுமாரை பயங்கரமா ஒரு குத்து விட்றான், உடனே ஹனுமார் கீழே விழுந்துடறார்.

அப்பறம் ராவணன் மத்தவா கிட்ட யுத்தம் பண்றதுக்கு போறான். இந்த ப்ரஹஸ்தனை வதம் பண்ண நீலனை பாக்கறான், உடனே இவன் தானே என் சேனாதிபதியை வதம் பண்ணிணான் அப்படின்னு, நீலனோடு யுத்தம் பண்றான். நீலன் பெரிய மாயாவி. அவன் ஒரு சின்ன பட்டாம்பூச்சியாட்டம் உருவம் எடுத்துண்டு, இவனோட தேர்தட்டிலேயும், கொடியிலேயும், அவனோட  தலை மேலேயும் , குதிரைகள் மேலேயும் மாத்தி மாத்தி உட்காரறான், பறந்து பறந்து போகிறான். இதை பார்த்த் உடனே ராவணனுக்கு ஆச்சரியமாக இருக்கு, என்ன பண்றதுன்னு சொல்லிட்டு, டக்குன்னு அக்னி அஸ்த்ரத்தை அந்த நீலன் மேல போடறான். அந்த நீலன் மேல போட்ட உடனே அவன் ஆன்னு கத்திண்டு விழுந்துடறான். ஆனா அவன் அக்னியோட பிள்ளையா இருக்கறதுனால அந்த அக்னியாஸ்திரம் அவனை கொல்லலை.

அடுத்தது, லக்ஷ்மணர் யுத்தத்துக்கு வரார், ராவணனுக்கும் லக்ஷ்மணனுக்கும் கடுமையான யுத்தம் நடக்கறது. கடைசில ஒரு அஸ்த்ரத்தை போட்டு, லக்ஷ்மணர் மயங்கி விழுந்துடறார். அப்போ ராவணன் என்ன நினைக்கிறான், “இந்த லக்ஷ்மணை இலங்கைக்கு தூக்கிண்டு போயிடறேன்”, அப்படின்னு சொல்லி நெருங்கி வந்து, லக்ஷ்மணனை ராவணன் தூக்க பாக்கறான்.  அவன் மந்தர மலையெல்லாம் தூக்கினவன், ஆனா லக்ஷ்மணனை ராவணனால தூக்க முடியல, ஏன்னா அவர் ஸாஷாத் விஷ்ணுவோட அம்சமாச்சே. அப்போ ஹனுமார் அங்க வந்து ‘ஹே ராவணா, இன்னும் ஒரு குத்து பாக்கி இருக்கு. இந்தா வாங்கிக்கோ!” ன்னு ஒரு குத்து குடுக்குறார். அவன் ரத்தம் கக்கிண்டு, மயங்கியே விழுந்துடறான். அப்போ ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தனா இருக்கறதுனால, லக்ஷ்மணஸ்வாமி லகுவாக, எளிமையாக ஆகிவிடுறார். ஹனுமார் அவரை தூக்கிண்டு வந்து ராமர் கிட்ட்  சேத்துடறார்.

அப்போ ராமர் சொல்றார் “இந்த ராவணனோட நானே யுத்தம் பண்றேன்” அப்படின்னு கிளம்பறார். அப்போ ஹனுமார் சொல்றார்”என்மேல ஏறிக்கோங்கோ, எப்படி கருடபகவான் மேல ஏறிண்டு விஷ்ணு பகவான் யுத்தம் பண்ணுகிறாரோ, அந்த மாதிரி என்மேல் ஏறிண்டு இந்த ராவணனோட யுத்தம் பண்ணுங்கோ”ன்னு சொல்றார். இதை கொண்டுதான் கருடபகவானை பெரிய திருவடின்னும், ஹனமாரை  சிறிய திருவடின்னும் வைஷ்ணவா சொல்லுவா.

அந்த மாதிரி ராமர் ஹனுமார் மேல ஏறிண்டு ராவணனோட யுத்தம் பண்றார். இங்க எங்க பார்த்தசாரதி கோயில்ல கூட, ராம நவமி அன்னிக்கி, அந்த ஒன்பது நாள் உத்ஸவம் பண்ணி, ராம நவமி அன்னிக்கி பூர்த்தி பண்ணும் போது சாயங்காலம், ஹனுமந்த வாஹனத்துல ராமர் வருவார்,  ரொம்ப அழகான சேவை அது.


அப்படி ஹனுமார்  மேல ஏறிண்டு ராவணனோட ராமர்  யுத்தம் பண்றார், ராவணன் அங்கேருந்து அம்பாக போடறான், ராமர் மேல ஒண்ணுமே படல, ராவணனுக்கு ஹனுமார் மேல ரொம்ப கோபம், வெறி. இவர் தான் நமக்கு ரொம்ப நாசத்தை உண்டு பண்றார் அப்படின்னு ஹனுமார் மேல அம்பாக போடறான், அப்போ ராமருக்கு “என்னடா இது அம்பு மழை பொழியறது. நம்ம மேல ஒண்ணுமே விழலயே”ன்னு  பாத்தா, அங்க எல்லாம் ஹனுமார் மேல பட்டு, அவர் மேலேர்ந்து ரத்தமா கொட்றது,

ततो रामो महातेजा रावणेन कृतव्रणम् |

दृष्ट्वा प्लवगशार्दूलं कोपस्य वशमेयुवान् ||

“ததோ ராமோ மஹாதேஜா: ராவணேன க்ருதவ்ரணம் |

திருஷ்ட்வா ப்ளவகஸார்துலம் கோபஸ்ய வஷமேயிவான் ||

அப்படின்னு ஹனுமார் இந்த மாதிரி ராவணனால் அடிபட்டு ரத்தமாயிருக்கு, ராமர்  காலெல்லாம் ரத்தம். இதைப் பார்த்த உடனே, “கோபஸ்ய வஷமேயிவான்”  அவர் கோபத்துக்கு ஆளாகிவிட்டார், அதாவது பகவான் வந்து காமத்தையோ, கோபத்தையோ, பயத்தையோ ஒரு காரணத்துக்கு எடுத்துண்டு அது மூலமா ஒரு அனுக்ரஹம் பண்ணுவார். சிக்ஷை கொடுக்கறது கூட ஒரு மறக்கருணை. அந்த மாதிரி கோபத்துக்கு வசமே ஆகமாட்டா. கரனோடு யுத்தம் பண்ணும்போது பதினாலாயிரம் ராக்ஷசர்களை வதம் பண்றதுக்கு கூட “ராமர் கோபத்தை வரவழைத்துக் கொண்டார். எடுத்துண்டார்” அப்படின்னு அங்க வரது. இங்கே “கோபத்துக்கு வசமானார்” அப்படின்னு வரது. ஏன்னா, பக்தனுக்கு ஒரு கஷ்டம்ன்னா பகவான் கோபத்துக்கு வசமாகி விடுகிறார்.

உடனே ராமர் பதிமூன்று அம்புகளை எடுத்து பட படன்னு ராவணன் மேலே விடறார். ஒண்ணு அவனோட தேரை உடைச்சுடறது. ஒண்ணு சாரதியை வதம் பண்றது. ஒண்ணு அவனோட வில்லை தள்ளிடறது. ஒண்ணு தலைப்பாகையை தூக்கிடறது. குதிரைகள் போயிடறது. கவசம் போயிடறது. ராவணனை நிராயுதபாணியாக ஆக்கிடறார். அடுத்த அம்பு போட்டா இராவணன் வதம் ஆகிவிடுவான். அப்படி ராமர் கோபமாக ராவணன் மேலே அம்புகளை போட்டு தன்னுடைய வீரத்தை காண்பிக்கிறார். ராவணன் முதல் தடவையாக வாழ்க்கையில் ராம பாணத்தோட சக்தியை பார்க்கிறான். அவனுக்கு உயிர்பயம் வரது. இந்த இடத்தில் ராமர் பகைவனுக்கும் அருள்வாய் என்று சொல்வது போல இந்த ஸ்லோகத்தை சொல்றார்.

கச்சானுஜானாமி ராணார்திதஸ்த்வம்

ப்ரவிஷ்ய ராத்ரிம்சரராஜ லங்காம் |

ஆஷ்வாஸ்ய நிர்யாஹி ரதி ச தன்வி

தாதா பலம் தரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ ||

கச்ச அனுஜானாமி – நீ போகலாம். உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன். ராணார்திதஸ்த்வம் – இன்னிக்கு யுத்தத்தில் நன்றாக யுத்தம் செய்து அடிபட்டு களைத்து இருக்கிறாய். ப்ரவிஷ்ய ராத்ரிம்சரராஜ லங்காம் – ராத்ரிம்சர: – ராக்ஷசர்கள் இரவில் சுத்துபவர்கள். இவன் அவாளோட ராஜா. லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய் கொள். ஆஷ்வாஸ்ய நிர்யாஹி ரதி ச தன்வி – களைப்பை போக்கிக் கொண்டு ஒரு தேரையும் வில் அம்புகளையும் எடுத்துக் கொண்டு மீண்டும் யுத்தத்துக்கு வா. தாதா பலம் தரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது என் பலத்தை நான் காண்பிக்கிறேன். இதைத்தான் கம்ப ராமயாணத்தில் இன்று போய் நாளை வா னு ராமர் சொன்னார் அப்படின்னு வரும். அப்படி ராமர் ராவணனுக்கு உயிர்பிச்சை கொடுக்கிறார்.

அப்படி, பகைவனுக்கும் அருளும் நெஞ்சம், ராமருக்கு. இந்த காட்சியை பார்க்கும் போது, எனக்கு, ராமருக்கு இந்த குணம் எங்கேயிருந்து வந்ததுன்னா, அவா அம்மா, கௌசல்யா தேவி கிட்ட இருந்து வந்ததுனு தோன்றுகிறது.

அது என்னன்னா, பரதனும், சத்ருக்னனும், தசரதர் காலமான பின் அயோத்திக்கு திரும்பி வரா. வந்த போது இந்த மாதிரி, ராமரை காட்டுக்கு அனுபிச்சுட்டா, தசரதர் காலமாயிட்டார், என்றெல்லாம் கேட்ட போது, அவாளுக்கு ரொம்ப வருத்தம் ஏற்படறது. அப்போ, அங்க அந்த மந்தரை, நிறைய நகை எல்லாம் போட்டுண்டு வரா. அப்போ காவலர்கள், அவளை பரதன், சத்ருக்னன் கிட்ட பிடிச்சுண்டு வந்து, “இவள் தான் உங்களுடைய, தகப்பனார் காலமானதுக்கும், ராமர் காட்டுக்குப் போனதுக்கும் காரணம்”, அப்படீன்னு சொல்றா. அவளை பார்த்தா, ஒரு வானரம் நகைகளைப் போட்டுண்டு வந்த மாதிரி இருக்குங்கறார், வால்மீகி. உடனே, சத்ருக்னனுக்கு கோபம் வர்றது. அவளை கீழ தள்ளி அடிக்கறான்,  அப்போ,அந்த மந்தரையோட தோழிகளும், கைகேயியோட மத்த வேலைக்காரிகளும், “ஐயோ, அடுத்தது, நம்மளை அடிக்கப் போறா”ன்னு, பயந்துண்டு, அவாள்லாம், “நேர நாம போயி, கௌசல்யா தேவியை சரணடைவோம். அவள் தான் எதிரிக்கும் அருள் பண்ணுபவள்” அப்படீன்னு சொல்றா. அப்பேற்பட்ட, அந்த கௌசல்யா தேவியோட, பிள்ளை ராமர். அதனால, பகைவருக்கும் அருளும் நெஞ்சம் ராமருக்கு. அதனால, ராவணனை, உயிரோட விடறார். அப்படி உயிரோட விட்டதால என்னாச்சுன்னா, அந்த மத்த, குண்டர்கள், அந்த கும்பகர்ணன், இந்திரஜித், மத்த அசத்துகள், எல்லாமும் வந்துஉயிரை விடறா. அந்த இராவணன், குலமே பூண்டோட அழியறது. அதுக்காக தானே, பகவானோட அவதாரம்.

அந்த மாதிரி, மந்தரையை, சத்ருக்னன் கொன்னுண்டு இருக்கான், அப்படீன்னு கேள்விப் பட்ட உடனே, கைகேயி வந்து பரதன் கிட்ட வேண்டிக்கறா. அப்ப, பரதன், சத்ருக்னன்கிட்ட, “போனா போகட்டும், அவளை விட்டுடு, எனக்கு இருக்கற கோபத்துல, இந்த கைகேயியை, கூட வதம் பண்ணுவேன், ஆனா, ராமர், அப்புறம் என்னை பார்க்கவே மாட்டார், பேசவும் மாட்டார். இந்த மந்தரையை, அடிச்சோம்னு, தெரிஞ்சா கூட கோச்சுப்பார், அதனால,அவளை நீ விட்டுடு”, அப்படீன்னு சொல்றான். சரீன்னு அந்த சத்ருக்னன் மந்தரையை விட்டுடறான்.

இராவணன் தோத்து லங்கைக்கு திரும்பி போறான். புலம்பறான். “இப்படி ஆயிடுத்தே, இப்படி ஆயிடுத்தே. ஒரு மனுஷன் கிட்ட தோத்துப் போயிட்டேனே”, அப்படீன்னு கலங்கறான். அப்புறம், “கும்பகர்ணனை, எழுப்புங்கோ. கும்பகர்ணன் இருக்கும் போது எனக்கு,  கவலை இல்லலை” அப்படீங்கறான். கும்பகர்ணனை எழுப்பறதுங்கிறது, ராமாயணத்துல ஒரு நகைச்சுவையான, காட்சி. அதை இன்னொரு நாளைக்கு, சொல்றேன்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.