Categories
Sri Shankara Charitham

ஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர்

நேற்றைய தினம், சங்கரர் தன் அம்மா கிட்ட உத்தரவு வாங்கிண்டு, முறைப்படி ஸன்யாசம் எடுத்துக்கணும் அப்படின்னு ஒரு குருவைத் தேடி கிளம்பறார், அப்படீன்னு சொல்லிண்டு இருந்தேன்.

மஹா பெரியவா இந்த இடத்துல ஒரு ஐம்பது பக்கம், அம்மாவோட பெருமையைப் பத்தி பேசியிருக்கார். அம்மாங்கிற ஸ்தானம் ரொம்ப உயர்ந்தது. ஒருத்தர், ஸன்யாஸி ஆகிவிட்டால், உலகத்துல எல்லாரும் அவரை நமஸ்காரம் பண்ணணும். அவருடைய அப்பா, உட்பட எல்லாரும், ஸன்யாசிக்கு தான் நமஸ்காரம் பண்ணனும். அது தான் பிரம்மச்சரியம், கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், ஸன்யாஸம், அப்படீன்னு இந்த நாலு ஆஸ்ரமங்கள் ல ரொம்ப உயர்ந்த ஆஸ்ரமம். ஆனால், ஒரு ஸன்யாஸி தன் அம்மாவைப் பார்த்தா, அந்த ஸன்யாஸி, அம்மாவை நமஸ்காரம் பண்ணனும்னு இருக்கு. எல்லா ருணத்தையும், ஒருத்தன், துறக்கலாம். ஆனா மாத்ருருணம்கிறது, ஒருத்தன் துறக்கவே முடியாது. அம்மா, permission கொடுத்தா தான், அதைத் துறக்க முடியும், அப்படீன்னு சொல்றா. அதனால, சங்கரர், ஏகபுத்ரனா இருக்கறதுனால, “உன்னுடைய அந்திமக் காலத்துல, நான், உன் பக்கத்துல வந்து இருப்பேன் அம்மா” அப்படீன்னு, வாக்கு கொடுக்கறார்.

இந்த இடத்துல, ஒரு incident ஞாபகம் வறது. Professor வீழிநாதன் சொல்லியிருக்கார். யாரோ பெரியவா கிட்ட ஒரு சங்கர சரிதம் படிச்சுண்டு இருந்தாளாம். அதுல, ஆதி சங்கரர், தன்னுடய அம்மாவுக்கு, அந்திம காலத்துல வந்து பக்கத்துல இருந்து முக்தி குடுத்து, அப்பறம் சம்ஸ்காரம் பண்ணினார். ஸன்யாஸி, சம்ஸ்காரம் பண்றது ஸாஸ்த்ர விரோதமா இருந்தாலும், அவர் தன்னுடைய அம்மாவுக்கு, சம்ஸ்காரம் பண்ணார், ஆதி சங்கரர் “இது ஸாஸ்த்ர விரோதமா இருந்தாலும் நான் பண்றேன்”. அப்படீன்னு சொன்னார், அப்படீன்னு இருந்துதாம், அந்த book ல. மஹா பெரியவா, சொன்னாளாம், “சங்கர பகவத் பாதாள், நான் சாஸ்திரத்தை மீறுவேன் அப்படீன்னு சொன்னதும் கிடையாது. சாஸ்திரத்தை மீறினதும் கிடையாது. ஏக புத்திரனா இருந்தால், அவன் சன்யாசி ஆனாலும் தன்னுடைய, அம்மாவுக்கு ஸம்ஸ்காரம் பண்ணலாம், அப்படீன்னு சாஸ்திரம்”, அப்படீன்னு சொன்னாளாம். அந்த அளவுக்கு, மஹா பெரியவாளுக்கு, ஆதி சங்கரர் சாஸ்திரத்தை மீறினார், அப்படீன்னு சொல்றதே பொறுக்கலை.

நம்ம மஹா பெரியவாளுக்கு, கூடப் பொறந்தவா இருந்ததுனால, அவருடைய பூர்வாவாச்ரம அம்மா அப்பாக்கு ஸம்ஸ்காரம், மத்தவா பண்ணி இருப்பா. அண்ணா பண்ணியிருப்பார், ஆனால், ஒரு ஸன்யாஸி, தன்னுடைய அம்மா, அப்பா ரெண்டு பேரும் காலமாயிட்டான்னு கேள்விப்பட்டா கட்டின துணியோட  ஸ்நானம் பண்ணனும், அப்படீன்னு சாஸ்த்ரம். மத்த உறவுக்காரா யாருக்குமே, ஒரு ஸ்நானம் கூட கிடையாது.

அப்படி ஒரு நாளைக்கு, வாக்யார்த்தம், பண்ணிண்டு இருக்கா. அப்போ ஒருத்தர், தந்தி ஒண்ணு எடுத்துண்டு வரார். “கும்பகோணத்துல இருந்து தந்தியா?”, அப்படீன்னு, பெரியவா கேட்கறா. அவர் “ஆமாம்”, அப்படீன்னு சொல்றார். மஹாலட்சுமி அம்மா முக்தி அடைந்து விட்டா. பெரியவா எழுந்துண்டு, பக்கத்துல ஒரு அருவி இருக்கு. நேரே, அந்த அருவியில் போயி ஸ்நானம் பண்றா. அதுக்குள்ள விஷயம், எல்லாருக்கும் தெரிஞ்சுடறது. ஒரு 100 பேர் கூட வரா. எல்லாருமா போய் அந்த புண்யவதிக்காக ஸ்நானம் பண்றா.

அது மாதிரி,  அந்த மாத்ரு பக்திங்கிறது, எல்லா மஹான்களும் காண்பிச்சிருக்கா. நம்ம சிவன் சார் 93 வருஷங்கள் இருந்தார். அவா, அப்பா அம்மா காலமானதிலேருந்து, ஒவ்வொரு வருஷமும் அம்மா, அப்பாக்கு ஸ்ராத்தம் பண்ணார். அந்த 93 ஆவது வயசுல கூட சிவன் சார் ஸ்ராத்தம் பண்ணார். முந்தின நாள், ஒரு ஆத்துல எல்லாத்தையும் ready பண்ணிடுவா.  வந்து சொல்லுவா. அவர் போய், வாத்தியாரை வெச்சுண்டு, சிவன் சார் ஸ்ராத்தம் பண்ணினார். அவர் ஸந்யாஸம் வாங்கிக்கலை. அதி வர்ணாஸ்ரமியா இருந்தார். ஆனா, அந்த ஸ்ரார்தத்தை, கடைசி வருஷம் வரைக்கும், பண்ணினார்.

அதுமாதிரி, எவ்வளோ, பெரிய ஞானிகளா இருந்தாலும், மாத்ரு பக்திங்கிறது, மஹான்கள் காண்பிச்சு இருக்கா. கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு, மூணு வயசுல அவம்மா காலமாயிட்டா. ஆனா, ஸந்யாஸம், வாங்கிண்ட பின்ன, அவரோட 70 ஆவது வயசுல கூட அவர் தன்னோட அம்மாவை நினைச்சு கண் ஜலம் விடறதை நான் பார்த்திருக்கேன்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் காண்பிச்சிருக்கார். ராமகிருஷ்ண பரமஹம்சருடைய அம்மா அவர் கூட வந்து இருந்தா. ரமணருக்கும், அம்மா கூட வந்து இருந்தா. ராமகிருஷ்ண பரமஹம்சரோட அம்மா கிட்ட, மதுர்பாபுங்கிற ஒருத்தர், ராமகிருஷ்ணருக்கு வேண்டியதெல்லாம் பண்ணிண்டு இருந்தவர். அவர், அந்த ராமகிருஷ்ணருடைய அம்மா கிட்ட “உங்களுக்கு ஏதாவது வேணும்னா சொல்லுங்கோளேன், என்னை கேளுங்கோளேன்”, அப்படீன்னார். அந்தம்மா, “நீ தான் எனக்கு, சாப்பாடு போடற. நன்னா, பாத்துக்கறயேப்பா, வேணா, எனக்கு காலணா பொடி வாங்கி கொடு அப்படீன்னாளாம்” “இந்த மாதிரி, ஒரு பெரியவாளா நீங்க இருக்கறதுனால தான், இப்படி ஒரு மஹான் , உங்களுக்கு, குழந்தையா பொறந்திருக்கார்” என்கிறார் மதுர் பாபு. அவர் வந்து, நான், உங்களுக்கு, ஒரு சொத்து, எழுதி வைக்கறேன். உங்களுக்கு, வீடு கட்டித்தரேன்னு கேட்கறார். இவா காலணா குடுங்கறா, இந்த அம்மா.

அதே மாதிரி, வினோபாபாவே, தன்னுடைய அம்மா கிட்ட ரொம்ப பக்தியா இருந்தார். அவர் தன்னுடைய சுய சரிதை எழுதியிருக்கார். அதுல, அம்மாவைப் பத்தி ஒரு chapter , எழுதியிருக்கார். அதை கண் ஜலம் விடாம படிக்கவே முடியாது. அந்த வினோபாபாவே வோட அம்மா அவ்வளவு  விவேகியா இருந்ததுனால, வினோபாபாவே அவருடைய, ரெண்டு சகோதரர்கள். மூணு பேருமே, ப்ரம்மச்சாரிகளா இருந்து, ஸந்நியாசிகள் போல இருந்து, தேச சேவை பண்ணியிருக்கா.

இவா எல்லாரும், அந்த மாத்ரு பக்தியைத் தான், அம்பாள் பக்தியா அப்படியே கடைசி வரை வெச்சுண்டு, இருந்துருக்கா. ராமகிருஷ்ண பரமஹம்சர் கிட்ட தோத்தாபுரின்னு, ஒருத்தர் வரார். அவர், அத்வைத வேதாந்தி. அவர் வந்து, இவரை அத்வைத மார்கத்துல initiate பண்றார். சன்யாசம் குடுத்து மஹாவாக்யங்கள் எல்லாம், உபதேசம் பண்ணி, உட்கார வெச்சு, இவருக்கு, initiation பண்ண உடனே, இவர் நிர்விகல்ப ஸமாதியில போயிடறார், ராமகிருஷ்ணர். நிர்விகல்ப ஸமாதியில மூணு நாளா அசையாம, உட்கார்ந்து, இருக்கார். தோத்தாபுரிக்கு ஆச்சர்யம். “நான், 40 வருஷம், சாதனை பண்ணி, எதை ஸமாதியில அனுபவிச்சேனோ, அதை, இவர் ஒரு second ல அனுபவிக்கறாரே”, அப்படீன்னு சொல்லி, “அந்த உயர்ந்த நிலைமைக்கு, போயிட்டாரே” ன்னு, அவர், பார்த்துண்டே, இருக்கார். அப்புறம் , இவர் மூணு நாளா பூட்டி,வெச்சுருக்காரே தோத்தாபுரின்னு, எல்லாரும், வந்து object பண்ணின உடனே, அப்புறம் எப்படியோ அந்த சமாதியிலிருந்து ராமகிருஷ்ணரை, வெளியில கொண்டு வரா.

அந்த தோத்தாபுரிக்கு, இந்த ராமகிருஷ்ணர் காளி பக்தி பண்றது, வேடிக்கையா இருக்கு. “என்னமோ, அம்மா, அம்மான்னு, காளி கோயில்ல போய், நீ ஆரத்தி காண்பிச்சுண்டு, பூஜை பண்ணிண்டு, நமஸ்காரம் பண்ணிண்டு இருக்கியே. நான் உனக்கு வேதாந்தம் சொல்லி கொடுத்திருக்கேன்.” அப்படீன்னா உடனே, ராமகிருஷ்ணர் சொல்றார். “ஒரு பாம்பு அசையாம, இருந்தாலும் பாம்பு தான். அசைஞ்சாலும் பாம்பு தான். அதனால சிவமும், சக்தியும், ஒண்ணு தான். எனக்கு, எங்க அம்மா வேணும். நான் விடமாட்டேன், காளியை”, அப்படீன்னு, சொல்லி, அந்த பவதாரிணிகிட்ட பக்தியா இருக்கார். அந்த தோதாபுரிக்கு, என்ன  ஆறது, தாங்க முடியாம வயித்து வலி வர்றது. அவர் போயி கங்கையிலே விழப்போறார். உடம்பெல்லாம் அநித்யம் அப்படீன்னு சொல்லி, கங்கையிலே போயி விழப்போறார். அப்பா அவருக்கு, காளி அம்பாளோட தரிசனம் கிடைக்கறது. அந்த கங்கை வந்து ஜலமே இல்லாம ஆயிடறது. அவரால மூழ்கவே முடியல கங்கையிலே. அப்போ, அம்பாளோட மாயை ன்னு, ஒண்ணு இருக்கு, அம்பாள் அனுக்ரஹம் பண்ணினா தான் ஞானம் கிடைக்கும், அப்படீங்கிறதை அவர் உணர்ந்து, அவரும் சேர்ந்து, அந்த பவதாரிணியை அந்த காளியை வழிபடறார்.

இன்னொன்னு, ஆதி சங்கர பகவத் பாதாள், அவ்வளவு ஞானத்தோட இருக்கார். இந்த ஆபத் ஸந்யாஸம் அப்படீன்னு சொல்லி, ப்ரைஷ மந்திரத்தை சொல்லி ஸந்யாஸம் வாங்கிண்டு, வெளியில வந்த உடனே முண்டனம் பண்ணிண்டு, பூணலை அறுத்து போட்டுட்டு, குருவைப் பார்க்கப் போறார். அவ்வளவு, ஞானியா  இருக்கறவர், அவர் என்னத்துக்கு ஒரு குருகிட்ட போயி, இந்த தண்ட கமண்டலத்தோட, ஸந்யாஸம் வாங்கிக்கணும் அப்படீன்னு, ஒரு கேள்வி. ஆதி சங்கரர் லோக குருவா இருக்கப் போறார். அது அவருக்கு, தெரியாது. மஹான்கள், எப்படி நடத்திக் காண்பிக்கறாளோ, அதைத் தான், உலகம் பின்பற்றும் அப்படின்னு பகவத் கீதைல வறது. அந்த மாதிரி நாம பண்றது முறைப்படியா பண்ணனும், அப்படின்னு அவர் குருவை தேடி போறார். இவருக்காகவே கோவிந்த பகவத் பாதர் அப்படின்னு அவருடைய குரு நர்மதை நதிக்கரைல  ஒரு குஹைல, காத்துண்டு இருக்கார்.

இந்த நாராயணம், பத்மபுவம், வசிஷ்டம்ன்னு அந்த குரு பரம்பரையை பத்தி நாளைக்கு சொல்றேன். அதுல elaborateஅ நிறைய கதைகள் இருக்கு, ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.

அந்த கோவிந்த பகவத் பாதரை போய் தர்சனம் பண்றத்துக்காக, இவர் இங்கேயிருந்து காலடியில் இருந்து, பல மலைகளையும் நதிகளையும் தாண்டி, நர்மதை நதிக்கரைல இருக்கற கோவிந்த பகவத் பாதரை போய் பார்க்க போறார். அப்போ நர்மதைல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடறது. அப்போ ஆதி சங்கரர் தன்னுடய கமண்டலத்துல அந்த வெள்ளத்தை அடக்கிடறார். அப்பறம், சாந்தமா அதை வெளியில போகும்படியா விடறார். இதை அந்த குரு பாத்துண்டு இருக்கார், இவர் வந்து கோவிந்த பகவத் பாதரை நமஸ்காரம் பன்றார்.

சங்கரர் ஏற்கனவே ஞானி, குரு தர்சனதுனால மேலும் பேரானந்தம் ஏற்படறது. நமஸ்காரம் பண்றார் “நீ  யார்”ன்னு கேட்கறார்  கோவிந்த பகவத் பாதர். அப்போ சங்கரர் சொல்றார், தசஸ்லோகி அப்டின்னு ஒரு பத்து ஸ்லோகங்கள், நான் இந்த உடம்பு கிடையாது, இந்த இந்திரியங்கள் கிடையாது, நான் சிவப்பும் கிடையாது, வெளுப்பும் கிடையாது, பருமனும் கிடையாது, ஒல்லியும் கிடையாது, நான் சிவஸ்வரூபம், ‘ததேகோவஷிஷ்ட சிவ: கேவலோஹம்’ அபபடின்னு முடியற ஒரு பத்து ஸ்லோகம். அதை சொல்லி நமஸ்காரம் பண்றார். அப்போ “உனக்காகத் தான் அப்பா காத்துண்டு இருந்தேன்”ன்னு  சொல்லி, மஹா வாக்யங்களை உபதேசம் பண்ணி, அந்த கோவிந்த பகவத் பாதர் இவருக்கு  முறைபடி சங்கரர்னே  தீக்ஷா நாமம் கொடுத்து சன்யாசம் கொடுக்கிறார்.

அந்த குருவுக்கு கொஞ்ச நாள் சுஷ்ரூஷை பண்ணிண்டு அங்க இருக்கார். அப்பறம், பதினாறு வருஷங்கள் தானே ஆயுசு. இவர் பெரிய கார்யங்கள் எல்லாம் பண்ணனும்னு சொல்லி, அந்த குரு “இது உனக்கு வ்யாஸாச்சார்யாள் இட்ட கட்டளை, என்கிட்ட நீ வருவேன்னு சொல்லி இருந்தார், நீ காசியிலே போய், பிரஸ்தான த்ரய பாஷ்யம் அப்படின்னு, பத்து உபநிஷத்துகள்னு முக்யமா இருக்கு, அந்த பத்து உபநிஷத்துகளுக்கும், மேலும் பகவத் கீதைக்கும், பிரம்ம சூத்ரம் அப்படின்னு வ்யாஸர்  வேதத்துல இருந்து சூத்ரங்களா சிலது எடுத்து collect பண்ணி வெச்சு இருக்கார், அதுக்கும் பாஷ்யம் எழுதணும். மேலும் அத்வைதம் தான் தத்வம், அப்படிங்கிறதை நீ எல்லாருக்கும் புரிய வைக்கணும்” அப்படின்னு குரு ஆக்ஞை பண்றார். “அப்படியே” ன்னு சொல்லி சங்கராச்சார்யாள் கிளம்பி காசிக்கு போறார்.

‘காஷ்ம்யாம்  து காஷ்யதே காசீ காசீ ஸர்வப்ரகாசிகா’ அப்படின்னு காசீனாலே ஒளின்னு அர்த்தம், ஒளிமயமான அந்த விஸ்வநாத க்ஷேத்ரம், விசாலாக்ஷியோட விஸ்வநாதர், அண்ணபூரணி இருக்கா, காலபைரவர் இருக்கார், டுண்டி கணபதி இருக்கார். அந்த மணிகர்ணிகா கட்டத்துல முக்தி மண்டபத்துல உட்காந்துண்டு, ஆதி சங்கரர் இந்த புஸ்தகங்களுக்கு எல்லாம் விளக்கங்கள் சொல்றார். அவருக்கு நிறைய சிஷ்யர்கள், அம்பத்திஆறு தேசத்துல இருந்தும் பண்டித சிஷ்யர்கள் வந்து சேர்ந்து, எல்லாரும் அவர் வாக் அம்ருத்தை அந்த தேனை குடிக்கிறா. அதனால எல்லாருக்கும் தெளிவு எற்படறது. அதனால நம்ம மதத்துக்கே ஒரு மறுமலர்ச்சி ஏற்படறது. ஒரு சின்ன குழந்தை இவ்ளோ அழகா இவ்ளோ தெளிவா சொல்றாரே அப்படின்னு எல்லாரும் சந்தோஷபட்டு, எல்லாரும் அவா அவா தேசத்துல போய், அந்த அத்வைத தத்வத்தை, அத்வைதம் தத்வம் என்பார்கள். மத்தது எல்லாம் சித்திதாந்தம் கொள்கை, அத்வைதம் தான் உண்மை எங்கிறதுனால அது தத்வம்ன்னு சொல்லுவா. அந்த அத்வைத தத்வதை உலகத்துல பிரகாசம் பண்றா.

அப்பறம் இந்த பிரஸ்தான த்ரய பாஷ்யங்கள் எழுதறார்.  இன்னிக்கு வரைக்கும் ஆதி சங்கரர் எழுதின கீதா பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், பிரம்மசூத்ர பாஷ்யம் இதுக்கு equalஆக ஒரு, intellectual book ஏ இல்லை என்று பண்டித உலகத்தில், எல்லா பாஷையிலும், எல்லா தேசத்துலயும் இன்னிக்கும் இதை கொண்டாடறா. நம்ம மஹா பெரியவா வந்து அதுக்கு பாடம் எடுத்து இன்னும் இதை ஜொலிக்க பண்ணினா.

இந்த பாஷ்யத்தை, அதோட பெருமை தெரியணும்ங்கிறதுக்காக, வ்யாஸாசார்யாளே வந்து ஆதி சங்கரர் கிட்ட வாதம் பண்றார், அதுக்கு முன்னாடி, நம்ம தென் தேசத்துல இருந்து, சனந்தனர் அப்படின்னு ஒருத்தர் போய் முதல்ல ப்ரதம சிஷ்யரா சேந்துக்கறார். ஒரு நாள் ஆதி சங்கரர் கங்கைக் கரையில ஸ்நானம் பண்ணிண்டு இருக்கார், அக்கரையில சனந்தனர் இருக்கார், ஸ்நானம் பண்ணிட்டு “துண்டு எடுத்துடுவா”ங்கறார், அவர் சனந்தனர் “ஆச்சார்யாள் துண்டு கேட்கறாரே, ஸ்நானம் பண்ணிட்டு ஈரமாக நிக்கறாரே” என்று அந்த கங்கை மேலயே நடந்து வரார், கங்கை ஆறு நடுவில இருக்கறது கூட தெரியல, அவர் நடந்து வரார், அவர் நடக்கற காலை எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியிலயும் கங்கா தேவி தாமரை புஷ்பத்தை வரவெச்சு, அவரை விழாம காப்பாத்தறா. இங்க வந்து சேர்ந்த உடனே சங்கரர்  “எப்படி ஆத்து மேலே வந்தே?”ங்கிறார், “தெரியலயே”ன உடனே “திரும்பி பார்”ன உடனே அங்க நிறைய தாமரைகள் இருக்கு, “நீ இன்னையில் இருந்து பத்மபாதர் என்று விளங்குவாய், நீ உன்னுடைய குருபக்தியினால ஆற்றையே தாண்டினியே” அப்படின்னு சொன்னபோது, “உங்களுடைய சரணத்தை பிடிச்சிண்டா பவக்கடலையே தாண்டலாம், ஒரு ஆற்றை தாண்டறது என்ன கஷ்டம்” அப்படின்னு பத்மபாதர் சொன்னாராம். அந்த சனந்தனர், பத்மபாதர், முக்ய சிஷ்யரா இருக்கார்.

வ்யாஸாசார்யாள் ஒரு கிழவராட்டம் வந்து ப்ரம்மசூத்ர பாஷ்யத்துலேயும் கீதா பாஷ்யத்துலேயும் சங்கரரோட வாதம் பண்றார். இந்த வாதத்துல straightஅ பண்றதுனு இருக்கு, கொண்டி வாதம், விதண்டா வாதம், எல்லாவிதமான வாதங்களும் வியாசர் பண்றார். அப்போ பத்மபாதர் பாத்துண்டே இருக்கார். கடைசியிலே பத்மபாதர் சொல்றார், “வந்து இருக்கறது, விஷ்ணு ஸ்வரூபமான வ்யாஸர், இங்க உட்கார்ந்து இருக்கறது சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபமான சங்கரர். இவா ரெண்டு பெரும், வாதம் பண்ணா யாரு ஜெயிக்க போறா? ரெண்டு பெருக்கும் நமஸ்காரம்!” அப்படின்னு அவர் சொல்றார். வ்யாஸாசார்யாள் சுயரூபத்தை காண்பிச்சு சங்கரர் கிட்ட”நீ பண்ண இந்த பாஷ்யத்துல யாருமே எந்தவித குற்றமும் கண்டுபிடிக்க முடியாது, இதுக்கு மேல ஒரு வாதமே காண்பிக்க முடியாதுன்னு தெரியத்தான் நான் பரிக்ஷை பண்ணேன். இந்த உலகத்துல உன்னுடைய பாஷ்யங்கள் ப்ரஸித்தியா விளங்கும்”ன்னு ஆசீர்வாதம் பண்றார்.

அப்போ ஆச்சார்யாள் “எனக்கு குடுத்த பதினாறு வருஷம் ஆயிடுத்து. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்”, நான் கைலாசத்துக்கு போறேன்னு சொல்லாம சொல்றார் சங்கராச்சார்யாள். அப்போ வ்யாஸாசார்யாள் சொல்றார் “இல்லை, நான் உனக்கு இன்னும் ஒரு பதினாறு வருஷம் ஆயுசு தரேன், நீ முப்பத்திரெண்டு வயசு வரைக்கும் இந்த பூமில இருந்து,  இந்த பாரத தேசம் முழுக்க சஞ்சாரம் பண்ணி, சங்கர திக்விஜயம்ன்னு பேரு, எல்லா க்ஷேத்திரத்துலேயும் போய் இந்த உன்னுடைய  பாஷ்யத்தை பண்டிதர்களுக்கு சொல்லிக் கொடு, உன்னுடைய தர்சனதுனாலேயே ஜனங்கள் எல்லாம் திருந்துவா, இன்னும் நீ நிறைய பண்ண வேண்டியது இருக்கு”ன்னு ஆசிர்வாதம் பண்ணறார். அப்படி எட்டு வயசு சன்யாசத்துனால பதினாறு ஆச்சு, இப்போ வ்யாஸாசார்யாள் அனுக்ராஹதுனால, ஆதி சங்கரருக்கு முப்பத்திரெண்டு வயசு ஆச்சு.

இந்த முப்பத்திரெண்டு வருஷங்கள்ல அவர் பண்ணினதெல்லாம் அபாரமான கார்யங்கள். மஹா பெரியவா சொல்றா “முப்பத்திரெண்டு வருஷங்கள்ல அவா பண்ணது, யானை மாதிரி இருந்தா, நங்கள் எல்லாம் பண்ணது, கொசு மாதிரி. என்னமோ எங்களையும் அபிநவ சங்கரர், சர்வஞர் அப்படியெல்லாம் கொண்டாடறா, அவருடைய பெருமையே தனி” அப்டின்னு மஹா பெரியவா இதை விடாம சொல்லுவா. பெரியவாளோட பணிவு ரொம்ப ஆஸ்ச்சர்யமா இருக்கும். இந்த மடத்துல பெரியவா முதல்ல வந்த போது, தனக்கு கைங்கர்யம் பண்ணவா எல்லாம், எப்படி அவளோட க்ராஹஸ்தாஸ்ரம  ச்ரமங்கள் எல்லாம் பார்க்காம, எவ்வளவு த்யாக புத்தியோட, இந்த மடத்துக்காக எவ்ளோ service பண்ணி இருக்கா அப்படின்னு சொல்றா. “என்னை வழிபடுத்தினவா அவா தான்”, என்னவோ, அவருக்கு தப்பு எல்லாம் திருத்தி கொடுக்கணும்ங்கற மாதிரி, “எனக்கு சொல்லி கொடுத்து, என்னை இந்த பீடத்துக்கு தகுதியா அவா தான் ஆக்கினா, அவாளுக்கெல்லாம் நான் ரொம்ப கடன் பட்டு இருக்கேன், அவா  எனக்கு ஏதாவது ஒண்ணு சொல்லி திருத்தணும்னா, சொல்லி கொடுத்துட்டு நமஸ்காரம் பண்ணுவா. நீங்க சன்யாசி உங்களுக்கு சொல்ல கூடாது, இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றோம்”,  என்று “அப்படி மடத்துக்கு service பண்ணி இருக்கா” அப்படிம்பா. அவாளோட கொள்ளு பேரன், எள்ளு பேரன் வரைக்கும், ஞாபகம் வெச்சுண்டு பெரியவா அவா எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிண்டே  இருந்தா.

அப்பேர்பட்ட ஆதி சங்கரர் காசி  க்ஷேத்ரத்துல வாசம் பண்ணும் போது, இன்னும் சில திருவிளையாடல்கள் எல்லாம் நடந்தது. விஸ்வநாதர் சண்டாளனா வந்தது, அதெல்லாம் நாளைக்கு சொல்றேன்.

காசியில் சங்கரர் (17 audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – நான்காம் பகுதி – சங்கரர் சன்யாசம்; மகாபெரியவா சன்யாசம்ஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரை >>

5 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர்”

சார் வழக்கம் போல பிரமாதமா இருந்தது.
வாழ்த்துக்கள்.

What a beautiful rendition. It has kept me spell bound till I finished reading it, I am happy that many more are yet to come. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam.

ஞானிகள் தங்கள் பெற்றோருக்கு ஸ்ராத்தம் செய்வது குறித்து ஒர் எண்ணம் இதைப் படிக்கும்போது தோன்றியது. சிவன் சார் தவறாமல் ஸ்ரா்தம் அவர் உறவினர் அகத்தில் செய்வது வழக்கம் . ச்யாமலா பாலகிருஷ்ணன் சாமான்கள் தேவையானவற்றை வாங்கி அட்டைப் பெட்டியில் பேக் செய்து வைத்து விடுவார். முதன் நாளே அதை எடுத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிடுவார் சார்.
ஒரு முறை அங்கு சென்றபோது உறவினர் சொன்னாராம்” கிணற்றில் ஜலமே இல்லை ” என்று. சார் பேசாமல் இருந்துவிட்டார். ஆனால் என்ன ஆச்சர்யம்! கிணற்றில் மொண்டு டுக்கும் அளவு ஜலம் நிறைந்தது!
ஸ்ரார்தம் நடக்கும்போது பிராம்மணாள் ஒரு திசையை நோக்கி வணங்குவதை எல்லாரும் பார்த்தனர். சிவன் சார் சொன்னார் ” என் அண்ணா பெரியவா வந்திருக்கா” என்று ! மின் விளக்கு இணைக்கும் பெட்டிக்கு அருகில் ஒர் சிறிய ஓட்டை, அங்கு பெரியவா தன் அம்மா ஸ்ராத்தம் நடப்பதிக் கவனித்துக் கொண்டு இருப்பதை பார்த்தனர்.!
மாத்ரு பக்திக்கு இதுவும் ஒர் எடுத்துக்காட்டு இல்லையா?
ஜய ஜய சங்கரா…

ஒரு தகுதியான சீடனுக்காக குரு காத்திண்டு இருப்பார் என்பது இங்கே தெளிவாகிறது. ஞானியானாலும் அன்னை ஓர் ஆலயம் என்பதை உணர்த்தியவர் ஆதி சங்கரர் தான் என்பதை அழகாகச் சொன்னது மிகவும் அருமை

வ்யாஸாச்சாரியாள் கோவிந்த பகவத்பாதருக்கு ஈச்வர நிமிதமாக ஏற்பட்டிருந்த பெரிய கார்யத்தைக் கொடுத்தாக சொல்லும் போது, “தக்ஷிணத்தின் கோடியில் கேரள தேசத்தில் அவதாரம் ஏற்படப் போகிறது. அவதாரக்காரர் பால்யத்திலேயே உபதேசம் வேண்டி அங்கிருந்து புறப்பட்டு வருவார். நாமானால் இங்கே வட கோடியில் ஹிமாசலத்தில் இருக்கிறோம். இத்தனாந்தூரம் அவர் நடந்து வரும்படி விடக்கூடாது. (காரணம்:) அவதாரம் என்பது ஒன்று; குழந்தை என்பது இன்னொன்று; அதோடுகூட சிஷ்யன் குருவைத் தேடிப் போகிற மாதிரியே குருவும் ஸச்சிஷ்யனைத் தேடிப் போகவேண்டும். அதனால் பாதிதூரம் அவர் வருவதாகவும் பாதி தூரம் நீ போவதாகவும் இருக்கட்டும். இங்கேயிருந்து தேச மத்திக்குப் போ.”

“நர்மதா தீரம் உனக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட இடம்தானே? அங்கேபோய், நீ மஹாபாஷ்ய உபதேசம் பெற்றுக்கொண்ட அரச மரத்தடியிலேயே காத்துக் கொண்டிரு. அங்கேயுள்ள குஹையில் ஆத்மாநுஸந்தானம் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திரு. உரிய காலத்தில் அவர் வந்து சேரும்போது ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணு” என்று வ்யாஸர் சொன்னார்.

‘ரவுன்ட் டேபிள் கான்ஃபரன்ஸ்’என்று உலகத் தலைவர்கள் கூடி ரிஸொல்யூஷன் பாஸ் பண்ணுகிற மாதிரி (தீர்மானம் நிறைவேற்றுவது போல்) வ்யாஸர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் ஆகிய நாலு பெரிய மஹான்கள் கூடிய மஹாநாட்டில் இப்படி ரிஸொல்யூஷன் பாஸ் ஆயிற்று!’ என்கிறார் மஹாபெரியவா🙏

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.