ஸ்ரீ சங்கர சரிதம் – பதினொன்றாம் பகுதி – மண்டனமிஸ்ரரை சங்கரர் வென்றது

நேற்றைய கதையில், சுப்ரமண்ய ஸ்வாமியோட அவதாரமாகவே பூமியில வந்து, கர்ம மீமாம்சையை, வேதத்தை, வேதத்துல சொல்லி இருக்கிற கர்மாக்களை, எல்லாரும் புஷ்களமாக பண்ணும் படியாக அனுக்கிரஹம் பண்ணின குமாரில பட்டருடைய கதையைப் பார்த்தோம். அவர் அக்னி ஸ்வரூபமா இருக்கிறதுனால கடைசியில அக்னியிலேயே மறைஞ்சுட்டார். குமாரிலபட்டர் சங்கரர் கிட்ட “நீங்க மாஹிஷ்மதியில இருக்கக் கூடிய மண்டனமிஸ்ரரை போய் பார்க்கணும்” அப்படின்னு வேண்டிக்கறார். அப்போ ஆதி சங்கரர் சரின்னு அங்கே இருந்து மாஹிஷ்மதி வர்றார்.

இந்த மண்டனமிஸ்ரர் ரொம்ப தீவிர மீமாம்ஸகர். அதனால அவர் சன்யாஸிகளை பார்க்கக் கூட கூடாதுன்னு வெச்சுண்டு இருக்கார். சன்யாஸம் எங்கிறதே தப்பு, அப்படிங்கற கொள்கை அவருக்கு. அப்படி நம்மை பார்க்கவே கூடாதுன்னு வெறுக்கறவாளை கூட ஆதி சங்கரர் தேடிப் போய் பார்த்தார். ஏன்னா, கருணை. இந்த மண்டனமிஸ்ரரும், அவருடைய எத்தனையோ சிஷ்யர்களும் இந்த கர்மாக்கு மேலான நிலைமைகளெல்லாம் தெரியாம இருக்காளே அப்படின்னு வருத்தம். ஞானத்துனால ஏற்படக்கூடிய அந்த பேரானந்தத்தை, தெரிஞ்சுக்காம இருக்காளே, அவாளுக்கு உபதேஸம் பண்ணனும். அது மூலமா உலகத்துல எல்லாருக்கும் உபதேஸம் பண்ணனுங்கற அபார கருணையினால ஆதி சங்கரர் அந்த மாஹிஷ்மதிக்கு வந்து, அங்க குளத்துல சில ஸ்திரீகள், ஜலம் எடுத்துண்டு இருந்தாளாம், அவா கிட்ட மண்டனமிஸ்ரருடைய வீடு எங்கே இருக்குன்னு கேட்டாராம். அவா சொல்றா

ஸ்வத : ப்ரமாணம் பரத : ப்ரமாணம் கீராங்கநா யத்ர ச ஸங்கிரந்தே |

த்வாரஸ்த நீடாந்தர ஸந்நிருத்தா ஜாநீஹி தந்-மண்டந பண்டிதௌக ||

அப்படின்னு சொல்லி, எந்த வீட்டு வாசல்ல பெண் கிளிகள் ஸ்வத: ப்ரமாணம், பரத: ப்ரமாணம் அப்படிங்கற சாஸ்த்ர கொள்கைகளை எல்லாம்  விசாரிச்சிண்டு இருக்கோ, அந்த வீடு தான் மண்டன மிஸ்ரருடைய வீடு, அப்படின்னாளாம். அதாவது, மண்டனமிஸ்ரர், அந்த நகரத்தையே பண்டித நகரமாக ஆக்கி வச்சிருக்கார். பெண்கள் இவ்ளோ அழகா ஸ்லோகம் சொல்றா. அந்த கிளிகள் கூட, இவாள்ளாம் பேசறதை கேட்டு, கேட்டு சாஸ்திர விசாரம் பண்றது. அப்படிங்கற அந்த பெருமையை காண்பிக்கறதுக்காக இந்த ஸ்லோகம்.

அந்த மண்டனமிஸ்ரருடைய ஆத்துக்கு சங்கரர் போகும் போது, ஏற்கனவே அவர் கர்மடிஅன்னிக்கு வேற அவர் சிரார்த்தம் பண்ணிண்டு இருக்கார். சிரார்த்தம்-னா இன்னும் ரொம்பவே ஜாக்ரதையா எந்த அனாச்சாரமும் உள்ளே வராம பார்த்து பண்ணுவா. அவர் வாசல் எல்லாம் பூட்டி உள்ளுக்குள்ள சிரார்த்தம் பண்ணிண்டு இருக்கார். அவரோட அந்த கர்மா-ல இருக்கற சிரத்தையினால அவருக்கு ஜைமினி முனிவரும், வியாஸாச்சார்யாளுமே ப்ராம்மணார்த்தத்துக்காக வந்திருக்கா. அப்பேற்பட்ட பெரியவர் அவர். ஆனா, ஆதி சங்கரர் எப்படியாவது அவரைபார்க்கணும்னு வந்திருக்கார். அதனால அவர் அங்க ஒரு யோக மார்க்கத்துனால உள்ள போனார், அப்படின்னு ஒரு கதை.

இன்னொரு கதைல, சாணான், அப்படின்னு, தென்னை மரத்திலேர்ந்து தேங்காய் பறிக்கறவா, பனை மரத்துல ஏறி கள்ளு இறக்கறவா, அவாளுக்கெல்லாம் சாணான்னு பேரு. அவாளுக்கு ஒரு மந்த்ரம் தெரியுமாம், அந்த மந்த்ரத்தை சொல்லி அந்த தென்னை மரத்தோட கீழே ஒரு தட்டு தட்டினான்னா, மரம் வளைஞ்சு தரையை தொடுமாம், அதுல ஏறிண்டு அவா தேங்காய் எல்லாம் பறிச்சிண்டு கோணியில போட்டுண்ட உடனே, திரும்பவும் ஒரு மந்திரம் சொல்வாளாம், மரம் திரும்பவும் வளைஞ்சு அவாளை தரையில இறக்கி விட்டுடுமாம். அது மாதிரி, ஒரு மரமும் இருந்தது, ஒரு சாணானும் இருந்தானாம், அவன் கிட்ட ஆதி சங்கரர் வேண்டிக் கேட்டுக் கொண்டு, அந்த வித்தையை கத்துண்டு அது மூலமா இந்த மண்டனமிஸ்ரருடைய வீட்டுக்குள்ள போய் இறங்கினார் அப்படின்னு வர்றது.

இந்த இடத்துல பெரியவா சொல்றா, அவ்ளோ பெரியவர் ஆதி சங்கரர், இருந்தாலும் ஒரு வித்தை கத்துக்கணும்னா, யாரா இருந்தாலும் அவாள்ட்ட request பண்ணி, அந்த வித்தையை தெரிஞ்சுண்டு இருக்கார். இப்படி இருந்ததுனாலதான் அவர் சர்வஞர்  ஆனார், அப்படின்னு சொல்றா. இதுக்கும் நமக்கு example, வேற எங்கேயுமே போக வேண்டாம். மஹா பெரியவா தான். மஹா பெரியவா தன் கிட்ட வர்றவாட்ட எல்லாம் மணிக்கணக்கா விஷயங்களை கேட்டு தெரிஞ்சுப்பா. இராஜா ராமண்ணானு ஒரு atomic scientist. அவர் தன் அம்மாவை பத்தி ஒரு article எழுதினார். மாத்ரு பக்தியோட இருக்கார் அப்படின்னு சொல்லிட்டு, பெரியவா அவரை வரச்சொல்றார். அவருக்கு ஆச்சரியம், இவர் நம்மை கூப்பிடறாரேன்னு, வந்த இடத்துல “உங்க அம்மாவை பத்தி நீ article எழுதியிருந்தியா, எனக்கு உன்னை பார்க்கணும் போல இருந்ததுன்னு”, அப்படின்னு, அவரை முதல் வார்த்தையிலேயே அணைச்சுண்டுடறார். அப்புறம் அவர் கிட்ட இந்த நாகர்ஜுனரங்கறவர் புத்த மதத்தை பத்தி புஸ்தகம் எழுதி இருக்கார், உனக்கு தெரியுமான்னா, அவர் அதுலேயும் research பண்ணிண்டு இருக்கார், அத பத்தி ஒரு மணி நேரம் பேசி அதெல்லாம் பெரியவா கேட்டுக்கறா.

இப்படி எல்லார் கிட்டேயும் நிறைய பெரியவா மணிக்கணக்கா பேசி, பேசி தெரிஞ்சுப்பா. காத்தால மூணு மணிக்கு எழுந்தார்ன்னா அவருடைய பூஜைகள், அனுஷ்டானம், தவிர பாக்கி நேரம் எல்லாம், மணிக்கணக்கா பெரியவா இராத்திரி ஒரு மணி வரைக்கும் பேசிண்டு இருப்பா. அதெல்லாம் கேட்டவா பாக்யசாலிகள். அப்படி நிறைய பெரியவா பேசுவா. குரல் வந்து அப்படி மதுரமா இருக்கும். சாட்சாத் காமாக்ஷி-யினுடையகுரல். நாம தான் இப்ப எல்லாம் கொஞ்சம் tape-ல எல்லாம் கேக்கறோமே. அந்த மாதிரி அழகா பேசிண்டே இருப்பார் பெரியவா, கேட்டுண்டே இருப்பா. ஒவ்வொரு கேள்வியா கேட்பா. முதல்ல simple கேள்வியில இருந்து ஆரம்பிச்சு, கேட்டு கேட்டு அவனுக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் இவர் தெரிஞ்சிண்டுருவார்.  அப்படி கேட்டு, கேட்டு தான் சர்வஞ்ஞன் ஆகணும்ங்கறது இல்லை. அது ஒரு வேடிக்கை. அப்படி கேட்டு தெரிஞ்சுக்கணும் ன்னு ஒண்ணு இருக்கு. நாம inquisitive-வா இருக்கணும் அப்படிங்கற பாடம் சொல்லித்தறதுக்காக பெரியவா அப்படி கேட்டுண்டு இருக்கா. பெரியவாள்ளாம் வந்து படிச்சு ஒன்ணும் அவாளுக்கு சர்வஞத்வம் வரலை.

அருணகிரிநாதர் பண்ண திருவகுப்புகளில் இந்த வேடிச்சி காவலன் வகுப்புன்னு ஒண்ணு இருக்கு. அதுல

அறிவுமறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்

அறி என இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும்…

அப்படின்னு ஒரு வரி

வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின்

மயில் என இருக்கும் ஒரு வேடிச்சி காவலனே

என்று ஒவ்வொரு வரியோட சேர்த்து பாடுவா. அப்படி அறிவும் அறி தத்துவமும், அபரிமித வித்தைகளும் அறி – தெரிந்துகொள், அப்படின்னு குரு வடிவா வந்து முருகன் எனக்கு அனுக்ரஹம் பண்ணினான். எனக்கு எல்லாமே தெரிஞ்சுடுத்து அப்படின்னு அருணகிரிநாதர் சொல்றார். அப்படித்தான் ஸர்வஞத்வம் வரும்.

ஒரு வாட்டி ஒரு பண்டிதர் ஸ்வாமிகள் கிட்ட பாகவதம் கேட்கறார். அந்த கோகுலாஷ்டமி ஸப்தாகத்தின் போது, பரீக்ஷித்தாக உட்கார்ந்து கேட்கறார்.  “இவர் எவ்ளோ படிச்சிருக்கார், எத்தனை விஷயங்கள் சொல்றார். ஆனா, என்ன படிச்சிருக்கேள், ஏதாவது சாஸ்த்ரம் வாசிச்சு இருக்கேளா” ன்னா, “ஒண்ணுமே படிக்கலை நான், பாகவதம் ஒண்ணு தான் படிச்சிருக்கேன்” அப்படின்னு சொல்றார். அப்படின்னு பெரியவாகிட்ட போய் அந்த பண்டிதர் சொல்றார். பெரியவா “வாஸ்தவம் தான், அவருக்கு வாசிக்கறதுக்கு எல்லாம் ஒண்ணுமே நேரம் இல்லை, ஆனால் அவர் என்னையும், குருவாயூரப்பனையும் ஒண்ணா நினைக்கிறார். அதனால அவருக்கு பாடம் சொல்லாமேலே எல்லாம் தெரிஞ்சிடுத்து. படிக்காமலே எல்லாமே அவருக்கு தெரியறது” அப்படின்னு பெரியவாளே சொல்லியிருக்கா. அப்படி அந்த சர்வஞத்வம் என்கிறது குரு அனுக்ரஹத்துனால கிடைக்கக் கூடிய விஷயம். ஆனா எளிமையா இருக்கணும். எல்லார் கிட்ட இருந்தும் ஒண்ணு தெரிஞ்சுக்கணும். அப்படிங்கறதை வந்து பெரியவா அடிக்கடி போற்றி பேசறா. அவாளும் அப்படி இருந்திருக்கா. ரொம்ப எளிமையா இருப்பா.

ஒரு குழந்தை வந்து பெரியவா கிட்ட பேசிண்டு இருக்கும்போது வாசல்ல ஐஸ் கிரீம் மணி அடிச்சிண்டே போறான், அந்த குழந்தைக்கு, பெரியவாகிட்ட ஒரு ப்ரியம் வந்துடுத்து. “பெரியவா, பெரியவா, அப்பா கிட்ட கேட்டு நான் ஐஸ்-கிரீம் வாங்கி தர்றேன், பெரியவா சாப்பிடரேளா?” அப்படின்னு கேட்டவுடனே, பெரியவா சொன்னாளாம், அங்க வேலை பண்ணிண்டு இருக்கற பெண்களோட குழந்தைகள் இருந்தா, “நீ இந்த குழந்தைகளுக்கெல்லாம் வாங்கி கொடு, நீயும் சாப்பிடு. நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி” அப்படின்னு சொல்லியிருக்கா. அந்த மாதிரி, அந்த குழந்தையையும் வருத்தப் படுத்தாம, தானும் வந்து ஆசாரத்தை விடாம, அப்படி எளிமையா இருப்பா பெரியவா.

அதே மாதிரி இன்னொரு பையன் வந்து, அவன் எல்லார் கிட்டேயும் autograph வாங்குவானாம், பெரியவா கிட்ட வந்து autograph போட்டுத் தரணும், அப்படின்னு கேட்டிருக்கான். “நாங்க சன்யாஸிகள் கையெழுத்து போடறதில்லை. ஆனா நான் உனக்கு autograph போடறேன்”, அப்படின்னு சொல்லிட்டு, அந்த மடத்தோட முத்திரையைப் போட்டு manager-ஐ கொண்டு அங்க நாராயணா-ன்னு எழுத சொல்லி, “அதே மாதிரி எங்களோட மடத்துல ஒரு புஸ்தகம் வச்சிருக்கோம், பெரிய மனுஷாள்ளாம் வந்தா அவாளோட பேரை அதில எழுதிட்டு போவா, அதுல ஞாபகமா நீ உன் பேரை எழுதிட்டு போ”, அப்படிங்கறார் அந்த பையன் கிட்ட.

அதே நேரத்துல எனக்கு எல்லாம் தெரியும்-னு யாராவது வந்தா அவாகிட்ட வந்து, பெரியவா ஒரு வார்த்தையில, தான் யாருன்னு புரிய வச்சிடுவா. பெரியவா மீனம்பாக்கம் airport வந்திருக்கா, அங்க ஒரு cheif–scientist வந்து explain பண்ணிண்டு இருக்கார். அவர் பெரியவாளுக்கு தெரியாதுன்னு நினைச்சிண்டு, வானத்துல ஒரு level-க்கு  மேல போற காத்தெல்லாம் கம்மியா இருக்கும்” என்கிறார். “stratosphere ன்னு சொல்ற. அதைத் தான சொல்ல வரே!, அப்படின்னு சொல்றா பெரியவா. அவர் அதுக்கப்புறம் பய பக்தியா, எல்லாத்தையும் explain பண்றார். அதேமாதிரி பெரம்பூர் integral coach factory க்கும் வந்திருக்கா. அதுமாதிரி பெரியவாளுக்கு ஞானத்துல படிப்புல அவ்ளோ ஆர்வம். அதை சொல்ல வர்றேன்.

அந்த மாதிரி இந்த சாணான் கிட்ட கேட்டுண்டு, உள்ளே போயி சங்கரர் இறங்கினாராம். இந்த சங்கரரை பார்த்தவுடனே மண்டனமிஸ்ரருக்கு கோபம் வர்றது. என்னடா இது இவரை பார்க்கவே கூடாதுன்னு வச்சிண்டு இருக்கோம். ஒரு சன்யாஸி இங்கே வந்து குதிக்கறாரேன்னு சொல்லிட்டு அவர் “எங்கேயிருந்து நீ வந்தே” அப்படின்னு கோபமா, “நீ இங்க எங்க வந்து தொலைஞ்சே” ன்னு கேட்கறமாதிரி, “எங்கேயிருந்து முண்டி?” அப்படிங்கறார். முண்டின்னா  மொட்டை அடிச்சிண்டு இருப்பவர்ன்னு அர்த்தம். எனக்கு பார்க்க வேண்டாம் மொட்டை அடிச்சிண்டவாளை அப்படின்னு சொல்றார். அப்ப சங்கரர்  வேடிக்கையா “கழுத்திலேர்ந்து முண்டி” அப்படின்னாராம், சன்யாஸிகள்  கழுத்துக்கு கீழே வபனம் (ஷவரம்) பண்ணிக்க மாட்டா, அதனால கழுத்துக்கு மேல நான் முண்டி, அப்படின்னு வேடிக்கையா பதில் சொல்றார்.

இந்த மாதிரி அவர் ஏதோ கேள்விகள் கேட்டதாகவும், ஆதி சங்கரர் எல்லாத்துக்குமே வேடிக்கையா பதில் சொன்னதாகவும் கதை. அதாவது மீமாசகர்களுக்கு, தர்க்க  சாஸ்த்ரம், வ்யாகரணம் எல்லாம் எங்களுக்கு நன்னா தெரியும், வேதத்தை சரியானபடி நாங்கதான் பொருள் தெரிஞ்சிண்டு இருக்கோம் அப்படின்னு.  ஒரு கர்வமாம், அதை அடக்கற மாதிரி அந்த நாலு கேள்வியிலேயே, ஆதி சங்கரர் பதில் சொல்றதுலேயே தன்னுடைய வித்வத்தை காண்பிச்சுடறார். அப்போ மண்டனருக்கு இன்னும் கோபம் வர்றது. அப்போ ஜைமுனி முனிவரும், வ்யாஸாச்சார்யாரும் “இந்த விஷ்ணு இலைல  சன்யாஸியை உட்கார வைக்கலாம், அதனால நீ அவரை பிக்ஷைக்கு கூப்பிடு. அதுதான் நியாயம்” அப்படின்னு சொல்றாளாம். பிராமணார்த்தத்துக்கு வந்தவா சொன்னா கேட்கணுமாம், அதானால் இவர் “நீங்க பிக்ஷைக்கு வாங்கோ” ன்னாராம். அப்போ ஆச்சார்யாள் சொல்றாளாம், “எனக்கு அன்ன பிக்ஷை வேண்டாம், எனக்கு வாத பிக்ஷை வேணும். அதுக்குதான் நான் வந்திருக்கேன்” அப்படின்னு சொன்னாராம். “நீங்க சாப்பிடுங்கோ, அப்புறம் வாதம் பண்ணலாம்” அப்படின்னு சொல்லி நல்லபடியா அந்த சிரார்த்தம் முடிஞ்சுது.

அதற்கப்புறம் ஆச்சார்யாளும் மண்டனமிஸ்ரரும் வாதத்துக்கு உட்கார்றா. இதற்கு மத்யஸ்தம் யாருன்னா, ஸரஸவாணின்னு மண்டனமிஸ்ரரரோட மனைவி. சாட்சாத் ஸரஸ்வதி தேவியோட அவதாரம். நல்ல படிப்பு இருந்து, உலகமெல்லாம் கொண்டாடும் அளவுக்கு பெரிய புத்திமதியாக இருந்ததனால் உபய பாரதி-ன்னு title கொடுத்திருக்கா, அப்பேற்பட்ட ஸரஸவாணி இருக்கறதனால, ஆதி சங்கரரே, இவாளே மத்யஸ்தரா இருக்கட்டும்ன்னு சொல்றார். அப்பேற்பட்ட பெண்களுக்கு கொடுத்த கௌரவத்தைப் பார்க்கணும்.

அந்த மாதிரி பண்ணினவுடனே, ஸரஸவாணி வந்து “சரி இருந்தாலும், நாம பாரபட்சம் பண்ணோம்னு இருக்கக்கூடாது, அப்புறம் கணவர் தோத்து போயிட்டார்னா அதை வாய்விட்டு எப்படி சொல்றது”, அப்படிங்கறதுனால, இரண்டு பேர் கிட்டேயும் இரண்டு மாலையை கொடுத்து “நீங்க இதை கழுத்துல போட்டுக்கோங்கோ, எந்த மாலை வாடறதோ அவாளுக்கு அபஜயம் எது வாடாம இருக்கோ அவாளோட பக்ஷம்தான் ஜெயிச்சதுன்னு வச்சுக்கோங்கோ”, அப்படின்னு சொன்னாளாம்.

எங்கேயாவது நாட்கணக்காக மாலை வாடாம இருக்குமா, 21 நாள் வாதம் பண்றா, எங்கேயாவது 21நாள் மாலை வாடாம இருக்குமா? அம்பாள் தன்னோட சித்தத்தை அந்த மாலையில வச்சிருக்கான்னு அர்த்தம். அப்புறம் இரண்டு பேருமே வாதம் பண்றா.

இந்த இடத்துல சங்கரர் சொன்ன வாதம் “ஒரு காயை மரத்திலேர்ந்து பறிச்சா, அதுலேயிருந்து சொட்டு ஜலம் வரும், இல்லேன்னா பால் வரும், அழற மாதிரி இருக்கும், அது மாதிரி இந்த உலக விஷயங்கள்ல இருக்கும் போது, காரியங்கள் பண்ண வேண்டியது தான், இதுலேர்ந்து ஒருத்தரை பிடிவாதமாக விலக்க பார்த்தா அவனால விட முடியாது. அழுகை வரும். காரியங்கள் எல்லாம் பண்ணனும். அதனால கர்ம மார்க்கம் முக்கியம். அதைத் தான் வேதத்துல கர்மத்தை stress பண்ணி சொல்றா. ஆனால் வயசாக வயசாக மனசு தானா கனியற மாதிரி ரொம்ப பக்குவமான ஆத்மாவுக்கு, இந்த உலக காரியங்கள் எல்லாம் கடைசி வரை பண்ணிண்டே இருக்க வேண்டியது இல்லை. சாந்தமும், ஞானமும், கருணையும், நிரம்பி இருக்கும் போது, அவன் இந்த உலக காரியங்களை விட்டு, ப்ரம்மத்தை சிந்தனை பண்ணி ஞானத்தை அடையறதுக்கு தான் முயற்சி பண்ணணும். இதுதான் வேதத்தோட நிஜ தாத்பர்யம். இதுதான் உபநிஷத்துகள்-ல இருக்கு”, அப்படிங்கறதை ஆதி சங்கரர் புரியும்படியா சொல்றார்.

இதை கேட்க கேட்க மண்டனமிஸ்ரருக்கு அதுதான் சத்தியம்-னு புரியறது. அப்போ அவர் கழுத்துல இருந்த அந்த மாலை வாடிடறது. ஆதி சங்கரர் ஜயிச்சுடறார். இந்த இடத்துல அந்த ஸரஸவாணி எப்படி சமயோஜிதமா ரெண்டு பேர்ல யார் ஜயிச்சா, யார் தோத்தான்னு வாயால சொல்லாம “ரெண்டு பேரும் பிக்ஷைக்கு வாங்கோ”ன்னாளாம். அதாவது, அதுக்கு முன்னாடி அவா ஒரு போட்டி வெச்சுண்டு இருக்கா. ஆதி சங்கரர் ஜெயிச்சார் ன்னா சுரேஸ்வரர் ஸந்யாசம் வாங்கிண்டு ஞான மார்க்கத்துல வரணும். சுரேஸ்வரர் ஜெயிச்சார் ன்னா ஆதி சங்கரர் கல்யாணம் பண்ணிண்டு க்ரஹஸ்தரா போகணும்னு ஒரு version. ஆனா ஆதி சங்கரர் எங்கேயாவது போயி, திரும்ப கல்யாணம் பண்ணிப்பாரா? நான் மரணாந்தப் ப்ராயஸ்சித்தம் பண்றேன், அப்படீன்னு உயிர் போற வரைக்கும் அன்ன பானம் இல்லாம இருக்கேன் அப்படீன்னு சொன்னார்னு, ஒரு version. அந்த மாதிரி ரெண்டு பேரும் பேசிண்டு இந்த வாதத்தை ஆரம்பிச்சு இருக்கா. அதனால இப்போ ஆதி சங்கரர் ஜயிச்சதுனால மண்டனமிஸ்ரர் ஸந்நியாசி அப்படீன்னு குறிக்கறதுக்கு ஸரஸவாணி “ரெண்டு பேரும் பிக்ஷைக்கு வாங்கோ” ன்னு கூப்பிட்டாளாம், ஆஹாரத்துக்கு வாங்கோன்னு கூப்பிடாம.

அப்படி இந்த இடத்துல மஹா பெரியவா சொல்றா “இந்த ஸரஸவாணிக்கு நம்முடைய தேசத்து பெண்களில் ஒரு தனி இடம். யாருக்காவது, தன்னோட கணவன் ஸன்யாசியா போகணும்னா மனசு வருமா? எவ்வளோ தாபப் படும்? ஆனா மதத்துக்காக, இந்த ஸரஸவாணி கணவனையே விட்டு கொடுத்தா. தன்னுடைய க்ரஹதாஸ்ரமத்தையே விட்டுக் கொடுத்து, தன கணவரை சங்கரர் பின்னாடி ஸந்யாசியா அனுப்பினா”, அப்படீன்னு சொல்றா.

அப்படி அந்த மண்டனமிஸ்ரர் சுரேஸ்வராச்சாரியார் என்கிற தீக்ஷா நாமத்தோட ஸந்யாசம் வாங்கிக்கறார். ஆதி சங்கரர் கிளம்பும்போது, சுரேஸ்வராச்சாரியார் கூட கிளம்பறார். ஸரஸவாணி “நான் ப்ரம்ம லோகத்துக்குப் போறேன்”, அப்படீன்னு சொல்றா. அப்போ ஆதி சங்கரர் இல்ல, “நீங்க இந்த பூமியிலேயே சாந்நித்தியத்தோடு இருந்து எல்லாருக்கும் ஞானத்தை அனுக்கிரஹம் பண்ணிண்டு இங்கேயே இருக்கணும்” னு வேண்டிக்கறார். அப்போ அம்பாள் “நீங்க எங்கே சொல்றேளோ அங்க இருக்கேன்” னு சொன்ன உடனே “நாங்க போயிண்டே இருக்கோம், நீங்க பின்னாடி வாங்கோ. எந்த இடத்துல அப்படீங்கிறதை நாம தீர்மானம் பண்ணுவோம்”, அப்படீன்னு சொல்றார். அப்போ அம்பாள் சொல்றாளாம் “நீங்க எங்க திரும்பி பார்க்கறரேளோ நான் அங்கேயே சிலை ஆயிடறேன்” அப்படீன்னு சொல்றா.

அப்படி அவா போயிண்டே இருக்கா. அங்கேயிருந்து கிளம்பி தெற்கு பக்கம் வந்துண்டே இருக்கும் போது துங்கா நதிக் கரையில கர்ப்பிணியா இருக்கக் கூடிய ஒரு தவளைக்கு ஒரு பாம்பு வெயில் படாம இருக்கட்டும்னு படம் விரிச்சு குடையா பிடிச்சிண்டு இருக்காம். அப்படி ஒரு அஹிம்சா க்ஷேத்ரம் அது. natural ஆ எதிரிகளா இருக்கக் கூடிய மிருகங்கள் கூட அங்க ஒண்ணுக்கு ஒண்ணு அன்பு பாராட்டிண்டு இருக்கு. இவ்ளோ திவ்யமான ஒரு க்ஷேத்ரமா! அப்படீன்னு ஆதி சங்கரர் நினைக்கறார். அந்த துங்கா நதியோட மணல்ல அம்பாள் நடந்து வரதுனால கால்ல இருக்கற சலங்கை சத்தம் நின்னு போயிடுத்து. அப்போ என்னடா சத்தம் கேட்கலையேன்னு ஆதி சங்கரர் திரும்பி பார்காறார். அங்கேயே அம்பாள் பிரதிஷ்டை ஆயிட்டா. அங்கேயே சாரதாம்பாள் கோயில் கட்டி ஸ்ருங்கேரி மடம் ஸ்தாபனம் பண்ணினார், ஆச்சார்யாள்.

இந்த ஸ்ருங்கேரி மடத்தோட பெருமை என்னன்னா, மத்த இடத்துல எல்லாம் ஆச்சார்யாள் மடம் ஸ்தாபனம் பண்ணார். ஸ்ருங்கேரியில அம்பாளே மடம் ஸ்தாபனம் பண்ணிண்டா, அப்படீன்னு மஹா பெரியவா சொல்றா. அவ்ளோ பரந்த மனசு.

இதோட இன்னிக்கு பூர்த்தி பண்ணிக்கறேன். நாளைக்கு பத்மபாதாச்சாரியாளோட கதை. ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கும். அதை நாளைக்கு பார்ப்போம்.

சங்கரர்  மண்டனமிஸ்ரரை வென்றது (17 min audio file. Same as the script above)

ஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதைஸ்ரீ சங்கர சரிதம் – பன்னிரண்டாம் பகுதி – பத்மபாதர் கதை >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.