ஸுப்ரமண்ய புஜங்கம் – இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம் – அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே

ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு, ‘முருகா! என்னைச் சேர்ந்த எல்லாரும் உன் கிட்ட பக்தியோட இருந்து, உன்னுடைய ஸ்தோத்திரத்தைப் பண்ணணும், உன்னுடைய பூஜையைப் பண்ணணும், உன் கிட்ட ஸ்நேஹத்தோட இருக்கணும், உன்னை நமஸ்காரம் பண்ணணும்ன்னு ஒரு ஸ்லோகத்துல வேண்டிண்டார்.

कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा

नरो वाथ नारि गृहे ये मदीयाः ।

यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं

स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥ २८॥

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா |

யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||

ன்னு ஒரு ஸ்லோகம் பார்த்தோம்.

இன்னிக்கு இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம். முருகப் பெருமானுடைய  கையில இருக்கிற வேலுடைய மஹிமை.

मृगाः पक्षिणो दंशका ये च दुष्टा-

स्तथा व्याधयो बाधका ये मदङ्गे ।

भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे

विनश्यन्तु ते चूर्णितक्रौञ्जशैल ॥ २९॥

ம்ருகா: பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா:

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா: ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல ||

க்ரெளஞ்ச மலையை வேலால் பொடிப் பொடியாக ஆக்கியவரேன்னு கூப்பிட்டு ‘மதங்கே’ என்னுடைய உடம்பில்  ‘யே’ – எந்த கஷ்டங்கள் – பலவிதமான உடம்புக்கு வரக் கூடிய ஆபத்துக்களை சொல்றார். ‘ம்ருகா:’ – கொடிய மிருகங்களால் கஷ்டம் வரலாம், ‘பக்ஷிண:’ – தீடிர்னு ஏதாவது பக்ஷி வந்து தாக்கலாம். ‘தம்சகா:’ –  பலவிதமான பூச்சிகள், கொசுக்கள் அதெல்லாம் வந்து கடிக்கலாம். ‘ததா’ – அப்படியே, ‘துஷ்டா: வ்யாதய:’ – ரொம்ப கஷ்டப் படுத்தக் கூடிய வ்யாதிகள் ‘பாதகா:’ – இதெல்லாம் என்னை  ஹிம்சை பண்றது. அவற்றையெல்லாம், ‘பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா:’ உன்னுடைய சக்தி ஆயுதம், உன்னுடைய வேலாயுதத்தைக் கொண்டு, அது தீக்ஷ்ணமா இருக்கு. கூராக  இருக்கு. அதை வெச்சு நீ மலையையே பிளந்தாய். இந்த வ்யாதிகள் மாதிரி எனக்கு வர கூடிய கஷ்டங்களை எல்லாம், அந்த வேலின் கூர் முனையால வெட்டி போட்டுடு. பின்னம் பண்ணி போட்டுடு, ‘ஸுதூரே விநச்யந்து’ – அதையெல்லாம் எங்கேயோ தூரத்துல கொண்டு போய் தள்ளி நாசம் பண்ணிடுன்னு ஒரு ஸ்லோகம். அப்படி அந்த ஸுப்ரமண்ய ஸ்வாமியோட வேலை வெச்சுண்டு பூஜை பண்றவாளுக்கு எந்த ஒரு கஷ்டமும் அண்டாதுங்கற ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தை படிச்ச உடனே, கந்தர் அலங்காரத்துல பலஸ்ருதியா ஒரு ஸ்லோகம் சொல்றார்.

சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்

துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்

கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்

அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.

இந்த அலங்காரத்துல இருக்கற நூறு பாடல்கள்ல ஏதாவது ஒரு பாட்டு தெரிஞ்சவா கூட புலியோ, கரடியோ, யானையோ அதுக்கெல்லாம் கலங்க மாட்டார்கள்னு ஒரு பலஸ்ருதி சொல்லியிருக்கார். இந்த கந்தர் அலங்காரத்துல நூறு பாடல்கள் சொல்லி  பலஸ்ருதியும் சொன்ன பின்ன ‘திருவடியும் தண்டையும்’ மாதிரி ஆறு அழகான பாடல்கள் இருக்கு.  பலஸ்ருதியும் சொன்ன பின்ன என்ன ஒரு ஆறு பாடல்ன்னு யோசிச்சேன். வாரியார் ஸ்வாமிகள் அதுக்கு அழகான விளக்கம் கொடுத்து இருக்கார். ஒரு மாலை இருக்கு. அதை கட்டி முடிச்ச பின்னே கிழே ஒரு தொங்கல்-னு சின்னதா டாலர் மாதிரி ஒண்ணு  தொங்கவிடுவா இல்லையா? அருணகிரி நாதர் இந்த  நூறு பாடலை வச்சு ஒரு மாலை பண்ணின உடனே இன்னொரு ஆறு பாடல் வச்சு ஒரு தொங்கல் பண்ணியிருக்கார் ன்னு சொல்றார். அப்படியெல்லாம் அனுபவிக்கிறது என்பது பெரியவாளுக்குத் தான் தெரியறது.

ஹனுமான்பிரசாத் போத்தார்ன்னு ஒரு மஹான், பசுமாட்டோடு பெருமை பத்தி கீதா பிரஸ்-ல ஒரு book போட்டிருக்கார். அதுல 1st chapter -லயே கோபிகைகள் என்ன பக்தி பண்ணினாளோ, அவாளுக்கு கிருஷ்ணனே கிடைச்சான். கோபிகைகள் அப்படி என்ன தான் புண்ணியம்  பண்ணினாளோ, பகவானே கிடைச்சான் அப்படீன்னு சொல்றா. அவா தான் பசு மாட்டை பார்த்துண்டாளே. இதுக்கு மேல என்ன புண்ணியம் பண்ணனும்! அவாளுக்கு கிருஷ்ணன் கிடைச்சுதல என்ன ஆச்சர்யம்ன்னு ஆரம்பிக்கறார். அது மாதிரி மஹான்களுக்கு தனியான ஒரு அர்த்தம்  தோண்றது.

அலங்காரத்தோட இந்த ஸ்லோகத்தை படிச்ச பின்ன இந்த கந்தர் அலங்காரத்துல, மயிலை பத்தியும், கொடியையும், சேவலைப் பத்தியும் சில பாடல்கள் வர்றது. ஆனால் வேலைப் பற்றி நிறைய பாடல்களில் வரது. அதனால இன்னிக்கு, இந்த கந்தர் அலங்காரத்துல இருந்து, வேலைப் பத்தி வரக்கூடிய கந்தர் அலங்கார பாடல்கள் சிலது படிக்கலாம்ன்னு ஆசைப் படறேன்.

தேர் அணி இட்டு புரம் எரித்தான் மகன் செம் கையில் வேல்

கூர் அணி இட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து அரக்கர்

நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்

பேர் அணி கெட்டது தேவேந்திர லோகம் பிழைத்ததுவே

தேரை அலங்கரித்துச் செலுத்தி, [‘ஆணவம்-மாயை-கன்மம்’ என்னும்] மூன்று கோட்டைகளைத் [தம் திருப்பார்வையினாலேயே] எரித்து அருளிய சிவபெருமானுடைய திருக்குமாரர் திருமுருகப்பெருமானின் சிவந்த கையில் உள்ள கூர்மையான வேலாயுதத்தால் தைக்கப்பட்ட கிரௌஞ்ச மலையானது அணு அணுவாக துகள்பட்டு அழிந்தது. ஆரம்பத்தில் நேராக அணி வகுத்து வந்து பின்னர் வட்ட வடிவில் வளைந்து கொண்ட அசுரர்களின் சேனை தளர்ந்து ஓடியது; சூரபன்மனுடைய பெரிய நடுச்சேனையும் அழிந்தது. தேவர்களின் உலகமான அமராவதியும் அசுரர்களிடமிருந்து உய்வு பெற்றது.

வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்

நொய்யிற் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல் போல்

கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே

கூர்மையான ஒளிவீசும் அழகான வேலையுடைய திருமுருகப் பெருமானைத் துதித்து ஏழைகளுக்கு எப்போதும் நொய்யில் பாதி அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள். உங்களுக்கு இவ்விடத்து வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல மரணகாலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருளும் துணை செய்ய மாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே

வைவைத்த வேற்படை வானவனே மறவேனுனை நான்

ஐவர்க்கிடம் பெறக் காலிரண்டோட்டி அதிலிரண்டு

கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.

தெய்வீகம் பொருந்தியதும் அழகானதுமான மலையாகிய திருச்செங்கோட்டில் வசிக்கும் செழுமையைத் தரும் சோதியே! கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்ட தெய்வமே! உனை அடியேன் மறவேன். ஐம்புலன்களுக்கு இடமாகும்படி இரண்டு கால்களை நிறுத்தி அங்கு இரண்டு கைகளை அமைத்துள்ள இல்லம் போன்ற இந்த உடம்பு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக!

பாலென்பது மொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்

சேலென்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை

வேலென்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித்தண்டைக்

காலென்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.

பாலை ஒத்தது [பெண்களின்] சொல், பஞ்சை ஒத்தது பாதம், கண்கள் கெண்டை மீனை ஒத்தவை என்று எண்ணி மயங்கித் திரிகின்ற மனமாகிய நீ, திருச்செந்தூர்த் திருமுருகப்பெருமானின் திருக்கையில் விளங்கும் வேலாயுதமே என்று சொல்கின்றாயில்லை; வெற்றி பொருந்திய மயில் என்றும் சொல்கின்றாயில்லை; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்கின்றாயில்லை. [ஆதலால்] நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனமோ?

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை

மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண்டெனக் கொட்டியாட வெஞ்சூர்க் கொன்ற ராவுத்தனே.

கற்கண்டைப் போன்ற சொற்களையுடையவரும் மென்மையானவருமான பெண்களின் காமப் புணர்ச்சியாகிய மதுவினை நிரம்பவும் மொண்டு குடித்து அவ்வெறியால் அறிவு மயங்கினாலும் தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் ‘டுண்டுண் டுடுடுடு …’ என்னும் ஒலியை உண்டாக்கிக் கொண்டு பறையடித்துக்கொண்டு கூத்தாடுமாறு வெய்ய சூரபன்மனைக் கொன்று அருளிய சேவகனே.

சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்

வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்

கால்பட்டழிந்தது இங்கென் தலை மேல் அயன் கையெழுத்தே.

சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால் அழிந்துபோயிற்று. பெருமை தங்கிய மயில் வாகனத்தையுடைய திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும் கிரௌஞ்ச மலையும் அழிந்து போயின. இவ்வுலகில் கந்தவேளின் திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால் எழுதப்பட்டிருந்த [‘விதி’ என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.

சூரிற் கிரியிற் கதிர் வேலெறிந்தவன் தொண்டர்குழாஞ்

சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்

தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்

நீரிற் பொறி யென்றறியாத பாவி நெடுநெஞ்சமே.

ஓ’ மனமே, சூரபன்மன் மீதும் கிரௌஞ்சமலை மீதும் ஒளிவீசும் வேலை விடுத்து அருளிய திருமுருகப்பெருமானின் அடியார்களது திருக்கூட்டத்தை அடைவதைவிட சிறந்த கதி வேறு ஒன்றும் எங்கும் இல்லை என்பதைக் காண்பாயாக. படைகளுடன் பிரயாணம் செய்து, தேரின் மீதும் யானையின் மீதும் குதிரையின் மீதும் ஏறி உலாவுகின்ற [அரசர்களுடைய] செல்வம் முழுவதும் நீரின்மீது எழுதிய எழுத்துக்கு ஒப்பாகும் என்று நீ உணரவில்லையே, நீண்ட காலப் பாவியாகிய மனமே!

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போது மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே.

சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.

தொண்டர் கண்டண்டி மொண்டுண்டிருக்குஞ் சுத்த ஞானமெனுந்

தண்டையம் புண்டரிகந்தருவாய் சண்ட தண்டவெஞ்சூர்

மண்டலங் கொண்டு பண்டண்டர் அண்டங்கொண்டு மண்டிமிண்டக்

கண்டுருண்டு அண்டர் விண்டோடாமல் வேல்தொட்ட காவலனே. (பாடல் 92)

தேவரீரின் தொண்டர்கள் [தம் ஞானக் கண்ணால்] பார்த்து, முகந்து, பருகி இன்புற்று இருக்கின்ற தேனையொத்த மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லதாகிய தண்டை அணிந்த அழகிய தாமரை மலர் போன்ற தேவரீரின் திருவடிகளை அடியேனுக்கும் தந்தருள்வீராக! வேகத்தையுடையவனும் தண்டாயுதத்தைக் கொண்டவனுமாகிய வெய்ய சூரபன்மன் முற்காலத்தில் மண்ணுலகையும் தேவருலகையும் கைப்பற்றி நெருங்கியதைப் பார்த்த தேவர்கள் அச்சத்தினால் கீழே விழுந்து உருண்டு தமது உலகை விட்டு ஓடாதபடி வேலாயுதத்தை விடுத்து அருளிய இரட்சக மூர்த்தியே!

கதிதனை யொன்றையுங் காண்கின்றிலேன் கந்த வேல்முருகா

நதிதனை யன்ன பொய் வாழ்விலன்பாய் நரம்பாற் பொதிந்த

பொதிதனையுங் கொண்டு திண்டாடுமாறெனைப் போதவிட்ட

விதிதனை நொந்து நொந்திங்கே யென்றன்மனம் வேகின்றதே. (பாடல் 98)

கந்தப் பெருமானே, வேலாயுதத்தையுடைய திருமுருகப் பெருமானே! முக்திவீட்டை அடைவதற்குரிய நெறியொன்றையேனும் காண்கின்றேன் இல்லை. ஆற்றுநீர்ப் பெருக்கு போல [நிலையற்ற] பொய்யான உலக வாழ்க்கையில் பற்றுடையவனாகி, நரம்புகளால் கட்டப்பட்ட உடலாகிய மூட்டையைச் சுமந்து கொண்டு துன்புறுமாறு பிறக்கச் செய்த விதியினை நினைத்து உள்ளம் நொந்து நொந்து அடியேனின் மனம் வேதனைப் படுகின்றது.

ஒரு சில பாடல்கள் நான் படிச்சேன். இதே கந்தர் அலங்காரத்துல வேலோட மஹிமையை இன்னும் எத்தனையோ பாடல்கள்ல சொல்றார். திருப்புகழ்ல கேட்கவே வேண்டாம். நூற்றுக்கணக்கான திருப்புகழ் பாடல்கள்ல ‘வேல்முருகா’ அப்படின்னு கூப்பிடறார். வேலோட பெருமையைப் பேசறார்.

அருணகிரி நாதர் திருப்புகழ் பாடியிருக்கார். அலங்காரம், அனுபூதி எல்லாம் பாடியிருக்கார். எல்லாத்துலேயுமே இந்த ‘பெண்கள் மையல் போகணும். மரண பயத்துல இருந்து என்னை மீட்கணும்’ ன்னு எல்லாம் வேண்டுதல் இருக்கு. ‘திருவகுப்புகள்’ னு பண்ணியிருக்கார். அதுல ரொம்ப highest philosophy and பக்தி. அதுல அந்த மாதிரி லௌகீக பிரார்த்தனைகள் இல்லாம, முழுக்க முருகனுடைய ஸ்தோத்திரமா இருக்கும். அது ரொம்ப ஆனந்தமா இருக்கும். அதுல ‘வேல் வகுப்பு’ ன்னு ஒண்ணு பண்ணியிருக்கார். அதுல சில வரிகளைச் சொல்றேன்.

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

என(து) உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே

வள்ளியம்மையோட கண்கள் வேல் மாதிரி இருக்குன்னு சாதாரண அர்த்தம் சொல்லலாம். வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் இதுக்கு விசேஷமா அர்த்தம் சொல்லி இருக்கார். இந்த ‘பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ்’ ங்கறதுக்கு, அம்பாள் பண்ணக்கூடிய அஞ்சு காரியங்கள் ‘ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்ரஹம்’ அப்படின்னு அர்த்தம் சொல்லி இருக்கார். மேலும் எப்படி அம்பாளோட கடாக்ஷம் அனுக்ரஹம் பண்ணுமோ, அந்த மாதிரி வேல் அனுக்ரஹம் பண்ணும் அப்படின்னு அவ்வளவு அழகா சொல்லி இருக்கார்.

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன்

இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும்

இது நக்கீரருக்காக – அந்த கற்கிமுகி பூதத்தைக் கொன்னு 1000 புலவர்களை விடுவிச்ச அந்தக் கதை.

துதிக்கும் அடியவர்க்(கு)ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின்

அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்(கு)ஓர் துணை ஆகும்

‘பகைக் கடிதல்’ அப்படின்னு எதிரிகள் எல்லாம் காணாம பண்ணிடும், இந்த ஒரு ‘வேல் வகுப்பு’ பாராயணம். வள்ளிமலை ஸ்வாமிகள் இத 64ஆக மாத்தி மாத்தி போட்டு ‘வேல்மாறல்’ன்னு ஒண்ணு பண்ணியிருக்கார். அது பாராயணம் பண்றதுக்கு ஒரு 20 நிமிஷம் ஆகும். நிறைய பேர் அதை தினம் பாராயணம் பண்ணுவா. ஸ்வாமிகள் சொல்லியே நிறைய பேர் வேல் மாறல் பாராயணம் பண்றா.

தருக்கி நமன் முருக்கவரின் எருக்குமதி

தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகராகும்

‘தருக்கிநமன் முருக்கவரின்’ – எமன் எருமை மாட்டு மேல ரொம்ப கர்வத்தோட வந்து பாசக் கயிறைப் போட்டு முறுக்கும் போது, மார்க்கண்டேயன் கழுத்துல பாசக் கயிறு போட வந்த போது, ‘எருக்கு, மதி’ இதெல்லாம் தலையில வச்சிண்டு இருக்கற சிவபெருமானுடைய கழல் என்ன பண்ணித்தோ,அதை இந்த வேல் பண்ணும் அப்படின்னு சொல்றார். அதற்கு நிகரான காரியத்தை செய்யும்.

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுணவழைப்பதென

மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்கவளை வாகும் “

உலகத்தில் உள்ள எல்லார்க்கும் உணவளிக்கும் – அப்படின்னு, வேலை உபாசனை பண்ணா நிறைய அன்னதானம் பண்ணலாம்.

‘தனித்துவழி நடக்குமென திடத்துமொருவலத்தும்

இருபுறத்தும் அருகடுத்திரவு பகற்றுணையதாகும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

என(து) உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே’

தனியா போயிண்டிருக்கும் போது, ‘தனித்து வழி நடக்கும் எனது ஒரு இடத்தும். ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும்’ – அப்படின்னு – இதெல்லாம் மஹாமந்திரங்கள்.. ஒரு வைசியன் காட்டுல போயிண்டிருக்கும் போது ஒரு பிரம்மராட்சஸ் எதிரில வந்தது. அப்போ அவன் வெத்தலை பாக்கை கையில எடுத்தான். அந்த வெத்தலைக் காம்பைக் கிள்ளி, இந்த ‘தனித்துவழி வழி நடக்கும்..’ சொல்லி பிரம்மராட்சஸ் மேல போட்டான். அந்த வெத்தலைக் காம்பு வேலா பாய்ஞ்சு அந்த பிரம்மராட்சஸை விரட்டிடுத்து அப்படின்னு கதைகள் இருக்கு. அருணகிரிநாதர் திருச்செங்கோடுக்கு காட்டு வழியில போகும் போது பயந்தார். அப்ப இந்த, ‘தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு

வலத்தும் இரு புறத்தும் இரவு பகல் துணையதாகும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே’

என்கிறதை சொன்ன உடனே, எட்டு திக்குலேயும் ஒளி மயமா முருகனுடைய வேல் வந்து அவருக்கு வழி காண்பிச்சு அவரைக் கொண்டு போய் திருச்செங்கோடுல சேர்த்தது அப்படின்னு ஒரு புராணம் இருக்கு. அப்படி ‘வேல்’ங்கறது பயத்தைப் போக்கும். மிருகங்கள் கிட்ட இருந்தோ, வியாதியில் இருந்தோ நமக்கு வர்ற பயத்தை போக்கறதுக்கு ‘வேல் வழிபாடு’ உற்ற வழி, அப்படின்னு ஆச்சார்யாளும் சொல்லியிருக்கார். அருணகிரிநாதரும் நிறைய சொல்லியிருக்கார்.

ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி ஒன்பதாவது ஸ்லோகம் (14 min audio file. Same as the script above)

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *