முகுந்தமாலா 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை (10 minutes audio Meaning of Mukundamala slokams 5 and 6)

குலசேகர பெருமாள் அருளிச் செய்த முகுந்தமாலையில் நான்கு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 5, 6 ஸ்லோகங்களைப் பார்ப்போம். ஐந்தாவது ஸ்லோகம்,

श्रीमुकुन्दपदाम्भोजमधुनः परमाद्भुतम् ।

यत्पायिनो न मुह्यन्ति मुह्यन्ति यदपायिनः ॥ ५ ॥

ஸ்ரீ முகுந்த3 பதாம்போ4ஜ மது4ன: பரமாத்பு4தம் |

யத்பாயினோ நமுஹ்யந்தி முஹ்யந்தி யத3பாயின: ||

ன்னு ஒரு ஸ்லோகம். ஸ்ரீ முகுந்தனுடைய திருவடித் தாமரைகளில் உள்ள மது எப்பேற்பட்டது? ‘பதாம்போஜம்’ – திருவடித் தாமரைன்னு சொல்றார். தாமரைன்னா அதுல தேன் இருக்கும். அந்த முகுந்தனுடைய பாதத் தாமரையில் உள்ள தேன் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ‘பரமாத்புதம்’ – ரொம்ப அற்புதமா இருக்கு. என்ன அற்புதம்னா ‘யத் பாயினோ ந முஹ்யந்தி:’ – இந்த மதுவை எவர்கள் குடிக்கிறார்களோ அவா மயக்கம் இல்லாம இருக்கா. ‘முஹ்யந்தி யதபாயின:’ – இதை யார் குடிக்கலையோ அவர்கள் எல்லாம் மயக்கத்தோட இருக்கான்னு சொல்றார். மதுவை குடிச்சா தான் மயக்கம் வரும். இந்த ஸ்ரீ முகுந்த பதாம்போஜ மது எப்படி இருக்குன்னா இதை யாரு குடிச்சாளோ அவா ரொம்ப தெளிவா இருக்கா. இதை யார் குடிக்கலையோ அவா ரொம்ப கலக்கத்தோட இருக்கான்னு சொல்றார்.

அதாவது உலக விஷயங்கள்ல மனசை கொடுத்தா, அதுவும் முக்யமா பணத்துல பேராசைன்னு ஒண்ணு இருந்துடுத்துன்னா அது மனுஷனை பைத்தியமா அடிக்கறது. என்ன பண்ணறோம்னே தெரியறது இல்லை. அவ்ளோ ஓயாத கார்யங்களில் மூழ்கி பைத்தியம் போல தான் இருக்கா ஜனங்கள். அதுக்கு மேல கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருந்துதுன்னா கேட்கவே வேண்டாம்! அந்த பணம் சம்பாதிக்கறதுக்கு ஓடி ஓடி stress, அந்த stress க்காக ஏதேதோ பழக்கங்கள் வந்துடறது. அந்த பழக்கங்கள்னால stress ஜாஸ்தி ஆறது. அப்படி அந்த உலக வாழ்க்கையில மனசை ரொம்ப கொடுத்தா கஷ்டம் தான். ‘படகு தண்ணியில போகலாம். படகுக்குள்ள தண்ணி வரக் கூடாது’ ன்னு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார். அந்த மாதிரி உலக வாழ்க்கையில நாம இருக்கோம். ஆனா அதுவே வாழ்க்கை ஆயிடுத்துன்னா ரொம்ப கலக்கம் ஜாஸ்தியா இருக்கும். பித்து பிடிச்சா மாதிரிதான் அவா இருப்பா, அப்படீன்னு குலசேகர கவியும் சொல்றார். அதே நேரத்துல பகவானுடைய பாதத் தாமரைகள் ல மனசு வெச்சு அந்தத் தேனைப் பருகினா பரம சாந்தமாக, ரொம்ப தெளிவா, ரொம்ப ஆனந்தமா இருப்பா, அப்படீங்கிற உயர்ந்த உண்மையை ரொம்ப வேடிக்கையா இந்த ச்லோகத்துல கவிதையா சொல்ற மாதிரி சொல்றார். மூகபஞ்சசதி ல கடாக்ஷ சதகத்துல கூட இந்த மாதிரி கருத்து உள்ள ஒரு ஸ்லோகம் இருக்கு.

नीलोऽपि रागमधिकं जनयन्पुरारेः

लोलोऽपि भक्तिमधिकां दृढयन्नराणाम् ।

वक्रोऽपि देवि नमतां समतां वितन्वन्

कामाक्षि नृत्यतु मयि त्वदपाङ्गपातः ॥

நீலோபி ராகமதிகம் ஜனயன்புராரே:

லோலோபி பக்திமதிகாம் த்ருடயன் நாரணாம்

வக்ரோதி தேவி நமதாம் ஸமதாம் விதன்வன்

காமாக்ஷி ந்ருத்யது மயி த்வதபாங்கபாத:

ன்னு ஒரு ஸ்லோகம். அம்மா, உன்னுடைய கண் நீலமா இருக்கு. காமாக்ஷியினுடைய கண் கரு நீல வர்ணத்துல இருக்கு. இருந்தாலும் இந்த முப்புரத்தை எரித்த பரமேஸ்வரனுக்கு இது ராகத்தை உண்டாகிறது. ராகம்ங்கிற வார்த்தைக்கு சிகப்புன்னு சமஸ்க்ருததுல ஒரு அர்த்தம். ராகம்ங்கிற வார்த்தைக்கு ஆசைன்னு ஒரு அர்த்தம். அந்த மாதிரி உன் கண் நீலமா இருந்தா கூட அவருக்கு ஆசையை ஜாஸ்தி பண்றது. அதாவது காமாக்ஷி பார்த்தா பரமேஸ்வரனுக்கு ஆசை வர்றதுன்னு அர்த்தம்.

லோலோபி – கண் பார்வைங்கிறது இங்க அங்க போயிண்டு இருக்கும். அந்த மாதிரி உன்னுடைய பார்வை சலித்துக் கொண்டு இருந்தாலும், காமாக்ஷியை நமஸ்காரம் பண்றவாளுக்கு லோலோபி பக்திமதிகாம் த்ருடயன் நாரணாம், அவாளுடைய பக்தியை த்ருடம் பண்றது. அவாளோட மனசு சஞ்சலம் அடையாம தெளிவா ஒரே இடத்துல இருக்கும்படியா, உன்னுடைய பாதத்துலேயே இருக்கும்படியா பக்தியை த்ருடப் படுத்தறது, உன்னுடைய கடாக்ஷம் அப்படீன்னு சொல்றார்.

வக்ரோதி தேவி நமதாம் ஸமதாம் விதன்வன் கண் வளைஞ்சு தானே இருக்கும். அது மாதிரி வக்ரமா இருந்தாலும் உன் கண், நமஸ்காரம் பன்றவாளுக்கு சமத்துவத்தை கொடுக்கறது. இந்த த்வந்தங்கள் ஒண்ணுமே அவாளை படுத்தறது இல்லை. அவா எப்பவுமே equanimity யோட இருக்கான்னு சொல்றார். காமாக்ஷி உன்னுடைய அப்பேற்பட்ட கடாக்ஷம், காமாக்ஷி ந்ருத்யது மயி த்வதபாங்கபாத – என் மேல் அது நடனம் இடட்டும், அப்படீன்னு எல்லாத்தையும் ஒண்ணா பார்க்கிற தன்மை, நேர்மை அதை காமாக்ஷியினுடைய கடாக்ஷம் கொடுக்கும், அப்படீன்னு ஒரு ஸ்லோகம். அந்த மாதிரி ‘கடாக்ஷம் வளைந்து இருந்தாக் கூட அந்த கடாக்ஷம் ஒருத்தனுக்கு கிடைச்சா அவன் நேர்மையா இருப்பான்’ ன்னு வேடிக்கையா சொல்ற மாதிரி இங்க குலசேகர கவி ‘உன்னுடைய பதாம்போஜத்திலிருந்து வருகிற தேனைப் பருகக் கூடியவர்கள் இந்த மதுவைப் பருகி ரொம்ப தெளிவோட இருக்கா. இந்த மதுவைப் பருகாதவர்கள், உலக விஷயங்களிலேயே ஈடுபாட்டிருக்கிறவா ரொம்ப கலக்கத்தோட இருக்கான்னு சொல்றார். இது ஐந்தாவது ஸ்லோகம். ஆறாவது ஸ்லோகம்

नाहं वन्दे तव चरणयोर्द्वन्द्वमद्वन्द्वहेतोः कुम्भीपाकं गुरुमपि हरे नारकं नापनेतुम् ।

रम्यारामामृदुतनुलता नन्दने नापि रन्तुं भावे भावे हृदयभवने भावयेयं भवन्तम् ॥ ६ ॥

நாஹம் வந்தே³ தவ சரணயோர்த்³வந்த்³வமத்³வந்த்³வஹேதோ:

கும்பீ⁴பாகம் கு³ருமபி ஹரே நாரகம் நாபனேதும் ।

ரம்யாராமாம்ருʼது³தனுலதா நந்த³னே நாபி ரந்தும்

பா⁴வே பா⁴வே ஹ்ருʼத³யப⁴வனே பா⁴வயேயம் ப⁴வந்தம் ॥ 6 ॥

ஹே முகுந்தா! நான் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வணங்குகிறேன். தவசரணயோ: த்வந்த்வம் அஹம் வந்தே – நான் வணங்குகிறேன். எதுக்காகன்னு நீ கேட்கறயா? முன்னமே சொன்னேனே! எனக்கு ஒரு வரம் தான் வேணும். உன்னை மறக்காம இருக்கணும். உன்கிட்ட பக்தி இருக்கணும். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் உன் திருவடித் தாமரைகளை நான் மறக்காத அந்த வரத்தை மட்டும் கொடுன்னு கேட்டேன். இப்போ ஸ்வாமி கேட்கறாராம். ‘உனக்கு இதுனால என்ன பிரயோஜனம்? நீ நமஸ்காரம் பண்ணினா ஒண்ணு மோக்ஷத்தை கேட்கணும். ஏதாவது ஒரு பிரயோஜனமா கேளு. இல்ல, பண்ணின பாவத்துக்கு பலனாக எந்த கஷ்டமும் என்னை பாதிக்காம தயவு பண்ணி என்னுடைய வினைகள் எல்லாம் போக்கி எனக்கு கும்பிபாகம்ங்கிற பயங்கரமான நரகத்துல நான் விழாம என்னை காப்பாத்துன்னு கேளு. அத்வந்த்வம் னா முக்தின்னு அர்த்தம். அந்த மாதிரி முக்தியை கேளு. இல்லேனா நரக உபாதை இல்லாம இருக்கணும்னு கேளு. இல்ல சௌக்யமா இருக்கணும். ஸ்வர்கத்துல நந்தனம்ங்கிற தோட்டத்துல அழகான பெண்கள் எல்லாம் இருக்கா. அவாளோடக் கூடிக் களிக்கணும், அப்படீன்னு கேளு’ அப்படி நீங்க சொல்றேளா? ன்னு குலசேகர கவி கேட்டுண்டு ‘எனக்கு அதெல்லாம் வேண்டாம். நான் என் மனசுல முகுந்தனை எழுந்தருளப் பண்ணி, தியானம் பண்ணி, அந்த ‘அவிஸ்ம்ருதி’ உன்னை மறக்காத அந்த ஒன்றைத்தான் நான் கேட்கறேன். ஏன்னா எனக்கு அது கிடைச்சுதுன்னா இந்த சுகமோ, துக்கமோ மோக்ஷமோ எனக்கு ஒண்ணுமே பண்ணாதே. அதெல்லாம் நான் உணரவே மாட்டேனே! அதனாலே ‘ஹ்ருதய பவனே’ – என் மனக் கோவிலில் உன்னை எழுந்தருளப் பண்ணி பாவயேயம் பவந்தம் – உன்னை தியானம் பண்ணிண்டே இருக்கணும். இதை மட்டும் எனக்குக் கொடு. இந்த சங்கல்பம் தான் நான் பண்றேன். எனக்கு வேற எதுவுமே வேண்டாம்னு இன்னொரு தடவை சொல்றார்.

இந்த மாதிரி பக்தி பண்ணுகிறவர்களை உலகம் புரிஞ்சுக்காது. உலகத்துல so called பெரிய மனுஷா, பணம், பதவி, வசதி இருக்கிறவர்களைத் தான் இந்த உலகத்துல பாராட்டப் போறா. ஏதோ ஏழையா பரம சாதுவா பகவத் பஜனம் பண்றவாளை உலகம் புரிஞ்சுக்காது. ஏன்னா, அவாளும் உலகத்தவர்களை திருப்தி படுத்தறதுக்கான கார்யம் எதுவுமே அவா பண்ண மாட்டா. அவா பகவானுடைய பக்தியிலேயே மூழ்கி இருப்பா. குலசேகரக் கவி சொல்றார். இந்த மாதிரி பதாம்போஜ மது – பாதத் தாமரையிலிருந்து வெளி வரும் அந்த மதுவைப் பருகினவர்கள் ரொம்ப தெளிவா இருப்பா. அதைப் பருகாதவர்கள் கலக்கமா இருப்பான்னு அவர் சொல்றா. ஆனா உலகத்தவர்கள் என்ன சொல்வா? ‘அவன் ஒரு மாதிரி. அவன் என்னமோ புஸ்தகத்தை வெச்சு எப்பப் பார் படிச்சுண்டே இருப்பான். பிழைக்கத் தெரியாதவன்’ அப்படீன்னு தான் உலகத்தவர்கள் சொல்வா. ‘நாம எல்லாம் ரொம்ப smart ஆ இருக்கோம். அவன் ஐயோ பாவம்’ னு சொல்வா. அந்த பகவானுடைய ருசியைக் கண்டவர்கள் தான் அதை அனுபவிச்சிண்டு ஏகாந்தத்துல இருப்பா. ஏதோ பாக்யவசத்துனால யாராவது வந்தா அவாளுக்கு வழி காண்பிப்பா. அது மாதிரி இந்த ஸ்லோகத்துல குலசேகர கவி சொல்றது ‘எனக்கு உன்னை தியானம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கணும். இது ஒண்ணுதான் வேணும். இதுனால எனக்கு ஒரு உலக சுகங்களோ, இல்ல கஷ்ட நிவர்த்தியோ, இல்லை மோக்ஷமோ கூட வேண்டாம்’ என்றார். இது தான் உத்தம பக்தி. அடுத்த ஸ்லோகத்துலயும் எனக்கு தர்மார்த்தகாமமோக்ஷம் எதுவும் வேண்டாம். பக்திதான் வேணும்னு சொல்றார். ‘நாஸ்தா தர்மே’ ங்கிற ஸ்லோகத்தை நாளைக்குப் பாப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.