Categories
Govinda Damodara Swamigal

யௌவன வன ஸாரங்கீம்

யௌவன வன சாரங்கீம் (7 min audio file in tamizh, same as the transcript above)

நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு ஸ்தோத்ரங்கள் மீது ரொம்ப பக்தி, ப்ரியம். கணேஷ பஞ்சரத்னம், சுப்ரமண்ய புஜங்கம் முதல் ஹனுமத் பஞ்சசரத்னம் வரை எல்லா ஸ்தோத்ரங்களையும் விரும்பி கேட்பார். கற்றுக் குடுப்பார். நிறைய பாராயணம் பண்ண ஊக்கம் அளிப்பார். எந்த கஷ்ட நிவர்த்திக்கும் ஸ்தோத்ர பாராயணத்தை அவர் அதிகம் உபதேசம் செய்வார். ஸ்தோத்ர பாராயணம் எளிமையாக இருந்தாலும் அது பண்ணும் அனுக்ரஹம் ரொம்ப பெரிசு என்பது அவருடைய வாழ்க்கையில் அவர் கற்ற அனுபவ பாடம். அவருடைய நம்பிக்கையும் அதனால் ஏற்பட்டதே.

நாமெல்லாம் மணிக்கணக்காக நாவல் (fiction) படிப்பதைப் போல் ஸ்வாமிகள் சிறிய வயது முதற் கொண்டே ஸ்தோத்ரங்கள், ராமாயணம் போன்றவற்றை எடுத்து கொண்டு போய் படித்துக் கொண்டு இருப்பாராம். அவருடைய சித்தி தேடிக் கொண்டு வந்து “கொழந்தே! சாப்பிடலயே டா… மணி நாலாகப் போறதே” என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு போடுவாராம். அப்படி ராமாயணத்தில் மூழ்கி அதை வாசித்து அனுபவித்து இருக்கிறார். பத்து வயதிலேயே அதை பிரவசனமும் செய்து இருக்கிறார். அப்படி அவருக்கு பிறவியிலேயே சம்ஸ்க்ருத பக்தி கிரந்தங்கள் புரிந்தது. அதை அனுபவிக்கவும் தெரிந்தது.

அம்பா நவரத்ன மாலா என்று ஒரு ஸ்தோத்ரம்.

ओङ्कारपञ्जरशुकीमुपनिषदुद्यानकेलिकलकण्ठीम् ।

आगमविपिनमयूरीमार्यामन्तर्विभावये गौरीम् ॥ १॥

दयमानदीर्घनयनां देशिकरूपेणदर्शिताभ्युदयाम् ।

वामकुचनिहितवीणां वरदां सङ्गीतमातृकां वन्दे ॥ २॥

ஓம்கார பஞ்சர சுகீம் உபனிஷதுத்யான கேளிகல கண்டீம் |

ஆகம விபின மயூரீம் ஆர்யாம் அந்தர்விபாவயே கௌரீம் || (1)

தயமான தீர்க்க நயனாம் தேசிக ரூபேண தர்ஷிதாப்யுதயாம் |

வாம குச நிஹித வீணாம் வரதாம் சங்கீத மாத்ருகாம் வந்தே || (2)

என்று ஆரம்பிக்கும். இதில் ஒன்பது ஸ்லோகங்கள் உண்டு. அதில் ஒன்று

सरिगमपधनिरतां तां वीणासङ्क्रान्त कान्त हस्तां ताम् ।

शान्तां मृदुलस्वान्तां कुचभरतान्तां नमामि शिवकान्ताम् ॥

சரிகமபதனிரதாம் தாம் வீணா சங்க்ராந்த காந்த ஹஸ்தாந்தாம்|

சாந்தாம் ம்ருதுல ஸ்வாந்தாம் குசபரதாந்தாம் நமாமி ஷிவகாந்தாம்||

என்பது. இந்த ஸ்லோகத்தை மஹா பெரியவா மிகவும் விஸ்தாரமாக உபன்யாசம் செய்து இருக்கிறார். அதை அவருடைய குரலிலே கேட்பதே ஆனந்தமாக இருக்கும். இந்த “அம்பா நவரத்ன மாலா” வில் “யௌவன வன ஸாரங்கீம்” என்று ஒரு பதம் வரும். ஸாரங்கம் என்றால் மான் என்று அர்த்தம். யௌவன வனத்தில் இருக்கும் மான் போல் அம்பாள் இருக்கிறாள் என்று பொருள். இது ஸ்வாமிகளின் மனதில் பதிந்து இருக்கிறது.

ஸ்வாமிகள் 25 வயதில் சென்னைக்கு வந்து, ஒரு ஒண்டு குடித்தனத்தில் இருந்து கொண்டு, போஸ்ட் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த குடித்தனத்தில் கணேஷ கனபாடிகள் என்பவர் வசித்து வந்தார். அவர் படித்தவர், பண்டிதர், கவிஞரும் கூட. ஸ்லோகங்கள், ஸ்தோத்ரங்கள் எழுதுவதில் அவருக்கு ஒரு ருசி உண்டு. ஸ்வாமிகளோடு பழகிப் பழகி அவருக்கு ஸ்வாமிகள் மேல் ரொம்ப பிரியம் வந்து விட்டது.

ஸ்வாமிகளுக்கு நல்ல வித்வத். அதோடு கூட அவர் பரம ரசிகர். ஒரு சின்னக் குழந்தை பாடினால் கூட ‘ஆஹா’ என்று ரசிப்பார். சுருதியா, தாளமா என்று பார்க்காமல், ‘அம்பாளுடைய நாமம் இருக்கு; மஹான்களுடைய கிருதி’ என்று அதை ரசிப்பார். அப்படி ஒரு ஸரசமான ஹ்ருதயம். அப்படி ஒரு ரசிகத்தன்மை.

கணேஷ கனபாடிகள் தான் எழுதின ஸ்லோகங்களை எல்லாம் ஸ்வாமிகள் கிட்ட படிச்சு காமிப்பார். ஸ்வாமிகளும் அதைக் கேட்டு “நன்னா இருக்கு நன்னா இருக்கு” என்று ரசிப்பார். இது அவர்களுக்குள் ஒரு நல்ல ஸ்னேகத்தை உருவாக்கியது. கணேஷ கனபாடிகள் மஹா பெரியவா மேல அஞ்சு ஸ்லோகங்கள் எழுதி அதை மஹாபெரியவா சென்னைக்கு வரும்போது அவரிடம் சமர்ப்பணம் செய்யணும்னு வெச்சுண்டு இருந்தார். ஆனால் மஹாபெரியவாளோட சென்னை விஜயத்தும் போது, திருவல்லிக்கேணி வந்த போது அவருக்கு ஒரு தீட்டு வந்து விட்டது.

அப்பொழுது அவர் ஸ்வாமிகளிடம் “கல்யாணம்! நீ போய் பெரியவா முன்னாடி இதைப் படிச்சு சமர்ப்பிக்கணும்” என்றார். அதைக் கேட்டவுடன் ஸ்வாமிகள், “நான் குடுமி வெச்சுக்கலையே… பெரியவா கோச்சுப்பாளோ?” என்று கேட்க, கணேஷ கனபாடிகள், “உன்னை எல்லாம் கோச்சுக்க மாட்டா டா. போயிட்டு வா” சொல்லி என்று உத்சாகப் படுத்தினார். அப்பொழுது திருவேட்டீஸ்வரன் பேட்டையில் மஹாபெரியவா வந்திருந்தார். காலை வேளை ஸ்னானம் செய்து விட்டு பூஜை முடியும் வரை, மஹாபெரியவா சம்ஸ்க்ருதத்தில் தான் பேசுவார். அப்போது ஸ்வாமிகள் போய் மஹாபெரியவா கிட்ட ஸ்லோகத்தை படித்து காட்டினார். பெரியவா கேட்டு “साधु – சாது” – அதாவது “ரொம்ப நன்னா இருக்கு” என்று சம்ஸ்க்ருத்த்தில் சொன்னார். மேலும், அதில் ஏதாவது ஒரு ஸ்லோகத்துக்கு ஜனங்களுக்கு தமிழில் அர்த்தம் சொல்லு என்று ஸ்வாமிகளிடம் சம்ஸ்க்ருதத்தில் சொன்னாராம். ஸ்வாமிகளும் “கலியுகத்தில் துவாபர யுகம் வரும்படி பெரியவா தர்ம சம்ஸ்தாபனம் பண்ணிட்டா” என்று அர்த்தம் வரும்படியான ஒரு ஸ்லோகத்தை எடுத்து, அதை விஸ்தாரமா சொல்லி இருக்கார். பெரியவாளும் ஆமோதனம் செய்து, மீண்டும் சாயங்காலம் சம்ஸ்க்ருத காலேஜில் வந்து இதே போல் ஐந்து ஸ்லோகங்களையும் படித்து, பின்பு வேறொரு ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்லும்படி சொன்னார்.

ஸ்வாமிகளும் சாயங்காலம் சம்ஸ்க்ருத காலேஜுக்குச் சென்று ஐந்து ஸ்லோங்களை படித்தார். அப்பறம் பெரியவாளை பரமேஸ்வரனாக பாவித்து எழுதின ஒரு ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொன்னார். அப்படிச் சொல்லும்போது அதில் “ஸாரங்கம்” என்ற ஒரு பதம் வந்தது. பரமேஸ்வரனுக்கு “ஸாரங்கபாணீ” என்று பெயர். விஷ்ணு பரமாத்மாவுக்கு “ஷார்ங்கபாணீ” என்று பெயர். “வனமாலீ கதீ ஷார்ங்கீ” என்பதில் ஷார்ங்கீ என்பது விஷ்ணுவின் கையில் உள்ள ஒரு வில். விஷ்ணு பகவானுக்கு அதனால் ஷார்ங்கபாணீ என்று பெயர். “ஸாரங்கம்” என்றால் மான் என்று அர்த்தம். பரமேஸ்வரனின் கையில் மான் இருப்பதால் அவருக்கு “ஸாரங்கபாணீ” என்று பெயர். அப்படி அந்த ஸ்லோகத்தில் ஸாரங்கம் என்ற பதம் வந்த போது “அந்த பதத்திற்கு அர்த்தம் மான் என்று எப்படி தெரியும்?” என்று மஹாபெரியவா ஸ்வாமிகளைக் கேட்டு இருக்கா. அப்போது ஸ்வாமிகள் “யௌவன வன ஸாரங்கீம்” என்று சொன்னாராம். உடனே மஹாபெரியவா மிகவும் சந்தோஷப்பட்டு “அப்படியா! அம்பாள் பக்தனா நீ” என்று சொன்னாராம். “அந்த மஹாபெரியவா வாக்கினால் ‘நீ அம்பாள் பக்தனா’ என்று சொன்னது என்னுடைய வாழ்வில் அப்படி ஒரு அனுக்ரஹமாக, வைபவமாக இருந்தது” என்று ஸ்வாமிகள் சொல்லுவார்.

ஶ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு; Shyamala Navarathnamalika audio mp3

ஸ்வாமிகள் ஒரு அத்யந்த அம்பாள் பக்தர். அதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். ஒரு முறை பிச்சு ஷ்ரௌதிகள் என்று ஒரு பெரியவர் ஸ்வாமிகளைத் தேடிக் கொண்டு வந்து “என் கனவில் அம்பாள் வந்து நீ இந்த இடத்தில் இருக்கனு சொன்னா. உனக்கு மந்த்ர உபதேசம் பண்ண சொன்னா” என்று சொல்லி இவருக்கு ஸ்ரீவித்யா மந்திர உபதேசம் செய்து, ஒரு ஸ்ரீசக்ர யந்த்ரத்தைக் கொடுத்து, எத்தனையோ லக்ஷம் ஆவர்த்தி ஜபங்கள் ஆன பிறகு ஸ்ரீவித்யையின் முடிந்த முடிவான பூர்ணாபிஷேகத்தையும் செய்து கொடுத்து விட்டுச் சென்றார். அப்பேற்பட்ட பாக்கியம் ஸ்வாமிகளுக்குக் கிடைத்தது.

ஸ்வாமிகள், இந்த அம்பா நவரத்ன மாலா மூலம், மஹா பெரியவா செய்த அனுக்ரஹத்தால் தான், தனக்கு அம்பாள் அனுக்ரஹம் கிடைத்தது என்று நினைத்தார். அதே போல் ஸ்வாமிகளுக்கு “மூக பஞ்சசதீ” என்ற ஸ்தோத்ரத்தின் மீதும் மிக்க பிரியம். அந்த ஸ்தோத்ரத்தை அவர் எடுத்துச் சொல்லும்போது தான் ஸ்வாமிகளின் அம்பாள் பக்தி வெளிப்படும்.

  • நெற்றியில் விபூதி
  • வாயில் நாராயண நாமம், ராமர் கதை, க்ருஷ்ணர் கதை
  • மனதிற்குள் அம்பாள் பக்தி

இதுவே நம் ஸ்வாமிகள்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

Series Navigationகுழந்தையிலிருந்தே ராமபக்தி >>

6 replies on “யௌவன வன ஸாரங்கீம்”

Namaste Rama Rama,

Whenever I chance on this audio and hear would do a search for the Mahaperiyava’s talk on Amba Navaratna Malika (We also call it Shyamala Navaratna Malika) but somehow could not get it. Will be lovely if you can place a link of the same in this write up, since there is one now.

One of my favorite talks of yours, thanks for transcription of the same..

Regards
Sujatha.R

ரொம்ப அழகான சொற்கட்டுகளுடன் கூடிய ஸ்லோகம்,!
அம்பாளை மாதங்கியாக கையில் வீணையுடன் கன் முன் படம் பிடித்துக் காட்டும் ஸ்லோகம் !
உபநிஷத் என்ற உத்தியாவனத்தில் விளையாடுபவளாகச் சித்தரிக்கிறார் கவி !
பல ஸ்லோகங்கள் இது போல் அம்பாளை வர்ணிக்கிறன,!
வேதம் என்ற உத்யாவனத்தில் பழகிக் சிவந்த அதாவது நடை பயின்ற பாதாம்புத்தால் என்று பட்டர் வர்ணிக்கிறார் !
இதிலிருந்து வேதம் எத்தகைய மஹத்வம் வாய்ந்தது என்பதை இந்த நவரத்னமாலிகா நமக்கு உணர்த்துகிறது அன்றியும் அம்பாள் சங்கீத பிரியை என்பதும் கையில் வீணையும் சங்கீத சப்த ஸ்வரங்கழ்களு டன் ராஜ மாதங்கி யாக நம் கன் முன் தோன்றுகிறது நம்.பாக்யம் ! சங்கீத நாட்டம் உடையவர்கள் பாராயணம் செய்தால் பலன் உண்டு !
சௌந்தர்ய லஹரி யில் அம்பாள் சங்கீத நாட்டமுடையவளாய் கையில் இருக்கும் ஒரு ஸ்லோகம் உண்டு.

ஸ்வாமிகள் பெரியவாளிடம் யௌவன வன சாரங்கீம் என் ர ஒரே வார்த்தையில் சொன்னது தான் தேவி பக்தர் என்று சொன்னார் போலத் தோன்றுகிறது!
ஸ்வாமிகளின் எளிய வாழ்க்கை முறை, பழகும் பாங்கு, ஆச்சாரம் இவற்றில் எதுவுமே தற்கால வாழ்க்கையில் கடை பிடிக்க இயலாதது நம் இயலாமை!
ஸதா பகவான் நானாவில் திளைத்து பாராயணம் ஒன்றே வாழ்வின் குறிக் கோலாகக் கொண்ட சுவாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
ஜய ஜய ஜாகதம்ப சிவே…….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.