பெண்களிடம் கருணை


ஸ்வாமிகள் எப்போதுமே ஸ்த்ரீகளிடத்தில் கருணையா இருப்பார்னு சொல்லிண்டு இருந்தேன். ஸ்வாமிகளோட அம்மா அவரோட மூணு வயசுல முக்தி அடைஞ்சுட்டா. அவா அம்மா ரொம்ப ப்ரியாமாக இருப்பாளாம். “அந்த அன்பு எனக்கு கிடைக்காம போயிடுத்து. பூர்வ ஜன்மத்தில் ஏதோ பாவம் பண்ணி இருக்கேன். இந்த ஜன்மத்திலாவது  பெண்களிடத்தில், எந்த விதத்திலும் அவாளை புண்படுத்தாம நடந்துக்கணும்” என்று  நினைச்சு ரொம்ப ஜாக்கிரதையா அன்போடு பழகுவார். எங்க கிட்டல்லாம்கூட “பெண்கள் physical ஆ (உடம்பால உழைச்சு) வேலை பண்றா. கடுமையா பேசாதே kind ஆ இருக்கணும்” னு சொல்லுவார்.

அவர் அம்மா காலமான பின்ன, அவர் அப்பா இன்னொரு கல்யாணம்  பண்ணிக்கரார். அந்த சித்தி ஒரு தடவை தன் அப்பா ஆத்துக்கு போய்ட்டு ஒரு ரெண்டு நாள் லேட்டா வந்தாளாம். அவா அப்பா கோச்சுண்டாராம். “நீ பாட்டுக்கு போற, இஷ்டப்படி வரனு” அப்படினு ஏதோ நாலு பேர் முன்னாடி கடுமையா பேசி இருக்கார். அவா மனசு ரொம்ப வருத்தபட்டிருக்கா. அதனால சமைக்கும்போது வெந்நீரை கால்ல கொட்டிண்டுட்டாளாம். அப்ப கூட இருந்த ஒரு அத்திம்பேர் “என்னதுக்கு நீ வந்தவளை எல்லார் முன்னாடி திட்டற. அவ வருத்ததுல வெந்நீரை கொட்டிண்டுட்டா பாரு” அப்படின்னு இவர் அப்பாவை கண்டித்தாராம். உடனே இவர் அப்பா “பருஷம் ஜனஸம்ஷதி” னு, ராமர் எல்லார் முன்னாடிதானே சீதையை கடுமையா பேசினார்.” அப்படின்னு சொன்னாராம்.

அக்னிப்ரவேசத்துக்கு முன்னாடி, ஸீதாதேவியைப் பார்த்து ஸ்ரீராமர் “இராவணன் கிருஹத்திலே ஒரு வருஷம் இருந்தே, இனிமே எனக்கு நீ வேண்டாம் உன் இஷ்டப்படி போகலாம்.” அப்படிங்கற கடுமையான வார்த்தைகளை, எல்லார் முன்னாடியும் தான் சொல்றார். அதை அவா அப்பா quote பண்ணுகிறார். அப்ப ஸ்வாமிகள் அங்க இருந்தாராம். ஸ்வாமிகள் சித்திக்கு டிஞ்சர் அயோடின் கொடுத்துவிட்டு அப்பா கிட்ட சொன்னாராம், “ஜனகர் ஆத்துக்கு போயிட்டு வந்ததுக்கு ஒண்ணும் ராமர் கோச்சுக்கலையே”. அந்த சித்தி “என் கண்ணே!” னு கட்டிண்டாளாம். அந்த மாதிரி பெண்கள் வருத்தபடுவது ஸ்வாமிகள் தாங்க மாட்டார். அவர் அப்பா அவரை “நீ ஸுயுக்தவாதீ” னு சொன்னாராம். ஸுயுக்தவாதீ னா பொருத்தமான வார்த்தைகளை பேசுபவர் என்று அர்த்தம்.

சுமந்தரரை ராமாயணத்தில் ஸுயுக்தவாதீ னு வால்மீகி சொல்வார். கௌசல்யை ராமரை பிரிந்த துக்கத்தில் கதறுகிறாள். அப்ப சுமந்தரர் ஆறுதல் சொல்கிறார். “அந்த ராமரைப் பற்றியோ ஸீதாதேவியைப் பற்றியோ லக்ஷ்மணரைப் பற்றியோ, மஹாராஜாவைப் பற்றியோ உங்களைப் பற்றியோ நீங்கள் வருந்த வேண்டாம். இப்படி சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஒருத்தர் பிரியமான பிள்ளையைக் காட்டிற்கு அனுப்பினார், அதை அவனோட தாயார் ஒத்துண்டா. அந்த பிள்ளையும் அப்பா பேச்சைக் கேட்டு காட்டிற்குப் போனான். அவன் மேல் கொண்ட அன்பினால் அவனுடைய தம்பியும், அவன் மனைவியும் கூட காட்டிற்குப் போனா அப்படினு, இந்த மாதிரி ஒரு நடத்தையை, உலகம் பார்த்ததில்லை. இந்த உத்தம சரித்திரத்தை சாஸ்வதமாக எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கப் போகிறார்கள். “இதம் ஹி சரிதம் லோகே ப்ரதிஷ்டாஸ்யாதி சாஸ்வதம்” என்று சுமந்திரர் சமாதானம் சொல்கிறார். அங்கே வால்மீகி சுமந்திரரை ஸுயுக்தவாதீ னு சொல்றார்.

ஸ்வாமிகளோட அப்பா அந்த மாதிரி “உன்னைப் பேசி ஜெயிக்க முடியாது” என்று சொல்ல அடிக்கடி ஸுயுக்தவாதீ னு சொல்வாராம்.

இன்னொரு நிகழ்ச்சி. ஸ்வாமிகள் பத்து வயசுலேர்ந்து, தான் படிச்சு அனுபவிச்ச ராமாயணத்தை கேட்கறவாளுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டார். அப்படியே ரேழிக் கதவைப் பிடிச்சுண்டு மணிக்கணக்காக சொல்வாராம். ஒரு பாட்டி. அவா சின்ன வயசுலேயே விதந்து ஆகிட்டா. அந்த பாட்டிக்கு ஸ்வாமிகள் ராமாயணம் முழுக்க சொல்லி முடிச்சு இருக்கார். அதுல ராவண வதம் முடிஞ்சு, அக்னி பிரவேசமும் முடிஞ்ச பின், தசரதர் வானுலகத்திலிருந்து வந்து, ராமரையும் சீதையையும் லக்ஷ்மணரையும் வாழ்த்துவார். தசரதர் சொல்வார் – “நான் ரிஷிகள் புடை சூழ சொர்க்கத்தில் இருக்கேன். ஆனாலும் நீ அயோத்திக்கு திரும்பி போனபின் உன்னுடைய பட்டாபிஷேகத்தை பார்க்கப் போகும் அந்த அயோத்தி ஜனங்கள் தான் குடுத்து வெச்சவா. அந்த கௌசல்யை தான் பாக்யவதி” னு சொல்வார். ஸ்வாமிகள் இந்த பாட்டி கிட்ட, சின்ன வயசுலேயே கணவரை இழந்து எத்தனை பேச்சு கேட்டிருப்பா, அவாகிட்ட “பாட்டி, பாருங்கோ, தசரதர் கௌசல்யா தேவியை பாக்யவதினு சொல்றார். கணவனில்லாத அவளை மத்தவா அபாக்யவதினு சொல்லுவா. ஆனா ராம பட்டாபிஷேகத்தை பார்த்ததுனால அவா தான் பாக்யவதி. அதை மாதிரி நீங்க ராமாயணம் கேட்டுண்டு இருக்கேள். ராம பக்தி இருக்கறவா தான் பாக்யவதி” னு சொல்லி இருக்கார். சின்ன குழந்தைக்கு பாட்டிக்கு சமாதானமா பேசணும்னு தோன்றி இருக்கு. அது தான் ஸ்வாமிகளுடைய சஹஜமான (உடன் பிறந்த) கருணை.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

பெண்களிடம் கருணை (5 min tamizh audio, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.