Categories
Shankara Stothrani Meaning

ஹனுமத் பஞ்சரத்னம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 1 and 2

ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை; hanumath pancharathnam stothram meaning

ஶங்கர ஜயந்தியையொட்டி ஆசார்யாள் ஸ்லோகங்களுக்கெல்லாம் சிலதெடுத்து அர்த்தம் பார்த்துண்டிருந்தோம். அதுல, ஹனுமத் பஞ்சரத்னதுக்கு அர்த்தம் சொல்லி, பூர்த்தி பண்ணிண்டு, திரும்பவும் சிவானந்தலஹரி அர்த்தம் சொல்லலாம்னு ஆசைப்படறேன்.

ஹனுமத் பஞ்சரத்னம், பஞ்சரத்னம் தான். 5 ஸ்லோகங்கள் ஹனுமார் மேல ஆசார்யாள் ராமாயணத்தைப் படிச்சு, ஸுந்தர காண்டம் பாராயணம் பண்ணி ஹனுமாரை நினைச்சு புலகாங்கிதமா சொன்ன ஒரு 5 ஸ்லோகங்கள்.

இந்த பஞ்சரத்னதுக்கு “சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி”னு அவர் பலஸ்ருதி சொல்றார்.

இங்க இந்த உலகத்துல போகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவன் ராம பக்தி அடைவான்.

ஆசார்யாள் ராம பக்தி அடைவான்னு சொன்னா, “அந்த ராமனுக்கு பூஜை பண்ற பாக்யம் கிடைக்கும், ராமர்கிட்ட பக்தி பண்ற பாக்யம் கிடைக்கும், ராமனாவே ஆயிடுவான்” அப்படீன்னு கர்ம பக்தி ஞானத்தை சொல்றவா அவா. அதனால, அப்பேர்ப்பட்ட  ராம பக்தி கிடைக்கும் இந்த ஸ்லோகத்தை படிச்சாங்கறது ஆசார்யாள் சொன்ன பலஸ்ருதி.

ஆனா இந்த ஸ்லோகத்தோட நிர்வாகத்துல, அமைப்புலயே  ஆசார்யாளுக்கே ஹனுமாருடைய தர்ஶனம் கிடைச்சிருக்கு. எடுத்தவொடனேயே நான் “அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்” – இன்னிக்கு மனஸுல அந்த ஹனுமானை த்யானம் பண்றேன்னு  சொல்றார். அடுத்தது, “ஸஞ்ஜீவநமாஶாஸே” – அந்த ஹனுமார ஸ்தோத்ரம் பண்றேன்னு சொல்றார். அடுத்தது “பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³” – அந்த ஹனுமாரைப் பற்றி கொள்கிறேன் அப்படீன்னு சொல்றார். “அவலம்பே³ மா” – நான் அவரையே பிடிசிக்கறேன்! என்னுடைய ஊன்றுகோலாக அவரோட கைய பிடிசுக்கறேங்கற மாதிரி சொல்றார். அடுத்தது, “புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:” –  என் முன்னால் ஹனுமார் காட்சி கொடுக்கட்டும் அப்படீன்னு சொல்றார். அப்படி சொல்லிட்டு அடுத்த ஶ்லோகத்துல,

“பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்” – “அந்த வாயு பகவானுடைய தபஸெல்லாம் சேர்ந்து ஒரு வடிவம் எடுத்த மாதிரி அந்த ஹனுமாரை நான் கண்டேன்”, அப்படீன்னு சொல்றார். அப்படி இந்த ஸ்லோகத்துலயே  அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைச்சுது. அது ஒரு பெரிய பலன் இல்லியா. இத சொல்லிண்டே இருந்தா ஹனுமாரோட தர்சனம் கிடைக்கும். அப்படீங்கறது ஆசார்யாளே கண்ட பலன்! அது நமக்கும் கிடைக்கும்!

இந்த கிஷ்கிந்தா காண்டத்தினுடைய கடைசில, “யாரு இந்த நூறு யோஜனை கடல்  தாண்டறது?  எப்படி லங்கைக்கு போறது? ஸீதையை யாரு பார்த்துண்டு வரப்போறா?  நம்ம ஸீதையை தர்சனம் பண்ணாம திரும்பியும் கிஷ்கிந்தைக்கு போனோம்னா, ஸுக்ரீவனுடைய கோவத்துக்கு ஆளாக வேண்டிருக்குமே!” அப்படீன்லாம் எல்லாரும் கவலைப்பட்டுண்டிருக்கா. அங்கதன் ரொம்ப கவலைப்பட்டு “நான் உயிரை விடப்போறேன். ப்ராயோபவேசம் பண்ண போறேன்”லாம் சொல்லும்போது, “யாரு எங்களுக்கு அபயம் தரப்போறா?” அப்படீன்னு கேட்க்கும் போது ஜாம்பவான் சொல்றார், “இந்த காரியத்தை பண்ணக்கூடியவன் ஹனுமார் தான். நம்ப போய் அவர உத்ஸாகப்படுத்துவோம்”னு. எல்லாரும் வந்து ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்றா. ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணப் பண்ண அவருடைய ரூபமும் தேஜஸும் பலமும் எல்லாம் வளர்றது!

ஸ்வாமிகள் சொல்வார், “ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணி, அவர்கிட்ட நம்ப வரங்கள் கேட்டா அவர் கொடுப்பார். இந்த ஹனுமத் பஞ்சரத்னத்தை 108 தடவை சொல்லிட்டு, அவர்கிட்ட ப்ரார்த்தனை பண்ணிக்கோங்கோ. கட்டாயம் உங்களுடைய ப்ரார்த்தனையப் பூர்த்தி பண்ணுவார்”, அப்படீன்னு சொல்லுவார். அப்படி இந்த ஹனுமத் பஞ்சரத்னத்துக்கு அபார மஹிமை.

இதுல முதல் ஸ்லோகம்,

वीताखिल-विषयेच्छं जातानन्दाश्र पुलकमत्यच्छम् ।

सीतापति दूताद्यं वातात्मजमद्य भावये हृद्यम् ॥ १॥

வீதாகி²ல-விஷயேச்ச²ம் ஜாதாநந்தா³ஶ்ர புலகமத்யச்ச²ம் ।

ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥

“வீதாகி²ல-விஷயேச்ச²ம்” – எல்லா விஷய இச்சைகள், புலன்களுக்கு இன்பத்தை தரக்கூடிய, போகப்  பொருட்கள் மேல இருக்கிற ஆசைகளிடமிருந்து விடுபட்டவர். அதெப்படி ஹனுமார் அப்படி இருந்தார்னா, அடுத்த பாதத்துலயே பதில் இருக்கு!

“ஜாதாநந்தா³ஶ்ர புலகம்” –  அவர் ராம நாமத்தை ஜபிச்சு,

‘ஆனந்த அஶு’ –   ஆனந்த கண்ணீர் பெருகுபவராகவும், ‘புலகம்’னா மயிர்கூச்செரியறது. அப்படி அந்த ராம நாமத்துனால, இடையறாது  ராம நாம ஜபத்துனால, எவருக்கு கண்களில் ஆனந்த பாஷ்பமும், உடம்புல மயிர்கூச்சலும் ஏற்படறதோ, அப்படி ராம பக்தி வந்துடுத்துனா, எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் வராமாட்டான்! அப்பாகிட்ட பிள்ளைக்கு பயம்!  எங்க காமன் இருக்கானோ, அங்க ராமர் வரமாட்டார்! அந்த மாதிரி அந்த காம வாஸனையே இத்து போன ஒரு ‘அத்யச்ச²ம்’ – ரொம்ப நிர்மல வடிவானவர், தூய்மையே வடிவானவர் ஹனுமார்!

“ஸீதாபதி தூ³தாத்³யம்” – ஸீதா பதியினுடைய, ஸீதையினுடைய கணவரான ராமருடைய தூதர். இந்த ‘ஸீதாபதி தூ³தாத்³யம்’ங்கறது கிஷ்கிந்தா காண்டத்துல, 3வது ஸர்கத்துல மொதல்ல ஸுக்ரீவன அனுப்ச்சு ராமர் கிட்ட ஹனுமார் வேஷம் போட்டுண்டு வரார்! ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து நமஸ்காரம்  பண்ணி, ரொம்ப அழகா பேசறார். “நீங்க யாரு? உங்களைப் பார்த்தா ராஜகுமாரர்கள் மாதிரி இருக்கேள்! ஆனா ரிஷிகள் மாதிரி வேஷம் போட்டுண்டு இருக்கேள்! சுத்திமுத்தி ஏதோ தேடிண்டே வரேள். சந்த்ர ஸூர்யாளே பூமில இறங்கி வர்றமாதிரி அவ்ளோ தேஜஸா இருக்கேள்! உங்களுடைய தேஜஸுனால இந்த பம்பை ஏரியும் இந்த மலையும் ஒளிர்கிறது!”, அப்படீன்னு அழகா பேசி , ராம லக்ஷ்மணாளை வந்து பார்த்து நமஸ்காரம் பண்ணவொடனேயே அவா மேல பக்தி ஏற்படறது! அதனால ஸுக்ரீவன் “சூழ்ச்சியா பேசி தெரிஞ்சுண்டு வா”னு சொன்னா கூட, ஹனுமார் உள்ளபடி சொல்லிட்டார். “நான் ஸுக்ரீவன் என்கிற வானர ராஜாவின் மந்திரி. என் பேர் ஹனுமான். ஸுக்ரீவன் உங்களோடு நட்பை விரும்புகிறார்!” அப்படீன்னு சொல்லிடறார். அப்போ ஹனுமாருடைய இந்த பேச்சைக் கேட்டு ராமர் ரொம்ப கொண்டாடறார்.  “ரிக் யஜுஸ் ஸாம வேதங்களை அத்யயனம் பண்ணி, நவ வ்யாகரணங்களையும் பல முறை கேட்டாத்தான் இந்தமாதிரி பேசமுடியும்! இவ்ளோ நேரம் பேசினார். இவர் பேசினதுல ஒருவிதமான grammatical mistake, அபசப்தம் ஒண்ணு கூட வரல! இவர் ரொம்ப உரக்க பேசல! ரொம்ப அடிதொண்டைல பேசல! ரொம்ப விருவிருன்னு பேசல! ரொம்ப இழுத்து இழுத்து subjectடுக்கே வராம பேசிண்டே இருக்கல!”

संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम्।
उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम् ||

ஸம்ஸ்கார க்ரம ஸம்பந்நாம அத்3ருதாம விலம்பி3தாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருத3ய ஹாரிணீம் ||

மனத்தை கொள்ளைக் கொள்ளும் மங்களகரமான வார்த்தைகளைப் பேசறார். ‘ஸம்ஸ்காரம்’ – ரொம்ப பண்பாடோட cultureரோட இருக்கு இவரோட வார்த்தைகளும் பேச்சும்! இப்பேர்ப்பட்ட ஒரு தூதன் ஒரு ராஜாக்கில்லைன்னா அவனோட காரியங்கள் எப்படி நடக்கும்!”

एवं गुणगणैर्युक्ता यस्य स्युः कार्यसाधकाः।
तस्य सिध्यन्ति सर्वाऽर्था दूतवाक्यप्रचोदिताः।।

ஏவம் குணக3ணைர்யுக்தா யஸ்ய ஸ்யு: கார்யஸாத4கா: |
தஸ்ய ஸித்4யந்தி ஸர்வார்தா2 தூ3தவாக்ய ப்ரசோதி3தா: ||

“அதே நேரத்துல இப்பேர்ப்பட்ட ஒரு தூதன் இருந்தான்னா, அந்த ராஜாக்கு இந்த தூதனுடைய வார்த்தைகள்னால எல்லா காரியங்களும் நடக்குமே!” அப்படீன்னு சொல்லி, ராமர் அந்த ஹனுமாரைப் பார்த்தவொடனேயே ‘இந்த ஹனுமார் தான் நமக்கு ஸஹாயமா இருக்கப் போறார்ன்னு  ராமதூதன் அப்படீங்கற அந்த titleல அங்கேயே குடுத்துட்டார்!’

லக்ஷ்மணன்கிட்ட, “நீ நம்மளுடைய விஷயத்தை சொல்லிடு”னு லக்ஷ்மணன் ரொம்ப தயவா ரொம்ப பரிதாபமா சொல்றான் . “இந்த சக்ரவர்த்தி குமாரர், தானா காட்டுக்கு வந்திருக்கார். மனைவியை இழந்து கஷ்டப்படறார். தனுங்கற கந்தர்வன் , ஸுக்ரீவன் ஸஹாயம் பண்ணுவான்னு சொல்லிருக்கான். எங்களுக்கு ஸுக்ரீவனோட தயவு வேணும்!”னு சொல்லும் போது, ஹனுமார் சொல்றார் , “ஆஹா! நீங்க அப்படி சொல்லாமா? உங்களை மாதிரி உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களும் , புலன்களையும் கோபத்தையும் ஜெயிச்சவர்களுமா இப்பேர்ப்பட்ட மஹானுபாவர்கள் அந்த ஸுக்ரீவனுக்கு ஒரு நட்பா கிடைக்கறது இப்ப அவன் பண்ண புண்ணியம்! அவன் இந்த ரிஷ்யமுக மலையிலேர்ந்து  வெளியே போகமுடியாம மாட்டிண்டிருக்கான்! அப்படி இருக்கும்போது நீங்க வந்தது அவன் பண்ண பாக்யம்! நான் உங்களை அவன்கிட்ட அழைச்சுண்டு போறேன்”னு  அழைச்சுண்டு போறார்.

ஸுக்ரீவன்கிட்ட, அழகா ராம லக்ஷ்மணாளைப் பத்தி பெருமையா சொல்லி, , “இவாளுடைய நட்பை நீ கோர வேண்டும். இதனால உனக்கு காரியம் நடக்கும். உனக்கு உன்னுடைய மனைவி, ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்!” அப்படீன்னு சொன்னவொடனே, ஸுக்ரீவன் கை கூப்பி, “நான் ஒரு ஸாதாரண வானரம். என்னை நீங்க நண்பனா ஏற்றுக்கொள்வீர்களா?” அப்படீன்னு கேட்கறான். ராமரும் அவன் கையை பிடிச்சு ஆலிங்கனம் பண்ணிண்டு, “நானும் நீயும் நண்பர்கள்” அப்படீன்னு சொல்றார். உடனே ஹனுமார், அக்னியை மூட்டி, அக்னி சாட்சியா ராமரும் ஸுக்ரீவனும் ஸக்யம் பண்ணிக்கறா!

ஸுக்ரீவன் கிட்ட ராமரை அழைச்சிண்டு வந்ததுலேர்ந்து, ஸீதா தேவிகிட்ட ராம தூதனா போய், ராமருடைய சேதியை சொல்லி, ஆச்வாஸப்படுத்தி, அவளுடைய உயிரையே காப்பாத்தினார். அவ உயிரையே விடறதா இருந்தா. அவகிட்ட மெதுவா, அவ காதுல மட்டும் விழறமாதிரி  ராம கதையை சொல்லி, அவ மனஸை ஸமாதானப்படுத்தி, அப்புறம் போய் எதிர்ல நமஸ்காரம் பண்ணி, நம்பிக்கையை சம்பாதிச்சு, நடந்த விவரங்களெல்லாம் ஒண்ணு விடாம அழகா சொல்லி, அப்புறம் ராமருடைய மோதரத்தைக் கொடுத்து,

रामनामाङ्कितं च इदम् पश्य देवि अन्गुलीयकम् ||

ராம நாமாங்கிதம் சேத3ம் பஶ்ய தே3வி அங்கு3லீயகம் ||

“இதோ பாரம்மா! ராமருடைய மோதரம் கொடுத்திருக்கார்!” அப்படீன்னவொடனே ஸீதைக்கு பரம சந்தோஷம்!

विक्रान्तस्त्वं समर्थस्त्वं प्राज्ञस्त्वं वानरोत्तम।

விக்ராந்தஸ்த்வம் ஸமர்த2ஸ்த்வம் ப்ராஜ்ஞஸ்த்வம் வாநரோத்தம |

“ஹே வானரோத்தமா! ஹே ஹனுமான்! நீதான் ‘விக்ராந்த:’ – உன்னிடத்தில் தான் உடல் பலமிருக்கு! ‘ஸமர்த்த:’ – மனோபலம் இருக்கு! ‘ப்ராஞ:’ – புத்தி பலமிருக்கு! எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு! இப்பேர்ப்பட்ட காரியத்தை இந்த ராவணனுக்கு பயப்படாம வந்து இத்தனை படையும் காவலையும் தாண்டி, மீறி என்னை வந்து பார்த்து, என் உயிரைக் காப்பாத்தி, ராமருடைய செய்தியை சொல்லி என்ன ஆச்வாஸப்படுத்தினியே!” அப்படீன்னு கொண்டாடறா.

“ஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜம்” –  எப்படி ஹனுமாரால இந்த ஸமுத்ரத்தை தாண்ட முடியறதுனா, ஜாம்பவான் உத்ஸாஹப்படுத்தும் போது சொல்றார்,  “ஹே ஹனுமான்! நீ வாயுவோட அனுக்ரஹத்துனால அஞ்ஜனா தேவிக்கு பிறந்தவன். அதனால உன்னால வாயுமாதிரி, கருடன் மாதிரி ஆகாஶத்துல பறக்க முடியும்! கருடனுக்கு றெக்கைகள்ல என்ன பலமோ, அந்த பலம் உன்னுடைய கைகள்ல இருக்கு! உன்னால இந்த காரியத்த பண்ணமுடியும்!

த்வய்யேவ ஹனுமனஸ்தி பலம் புத்தி: பராக்கிரம:

உன்னால முடியும்னு சொல்லல. “உன்னாலதான் முடியும் ஹனுமான்!” அப்படீன்னு சொல்லி உத்ஸாஹப்படுத்தி, எல்லா வானராளுமா ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணினஉடனே, “ஆமா. நான் என்னுடைய அப்பாவுக்கு நிகரான பலமும் பராக்ரமமும் படைத்தவன்! என்னாலேயே எங்கும் தடையில்லாம போகமுடியும்! இதோ ஆகாசத்துல போறேன் பாருங்கோ!” அப்படீன்னு சொல்லிட்டு,

यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः।

गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।।

 

யதா2 ராக4வ நிர்முக்த: ஶர: ஶ்வஸன விக்ரம: |

3ச்சேத்  தத்3வத்3  க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் ||

 

“எப்படி ராம பாணம் தடையில்லாம போகுமோ, அந்த மாதிரி நான் கிளம்பி  இப்போ இலங்கைல போய் குதிப்பேன்! அங்க ஸீதை இல்லனா மூவுலகத்துலேயும் தேடி எப்படியாவது ஸீதைய கண்டுபிடிச்சிண்டு வருவேன்! இராவணனை வால்ல கட்டி இழுத்துண்டு வருவேன்! எப்படியாவது காரியத்தை முடிச்சிண்டு வருவேன்!” அப்படீன்னு கர்ஜனை பண்ணிண்டு ஆகாச மார்க்கமா, பல தடைகள்லாம் வர்றது. அதை மீறிண்டு போய் இலங்கைல குதிக்கறார்.

‘வாதாத்மஜம் அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ – ‘என்னுடைய ஹ்ருதயத்துல இன்னிக்கு நான் அவரை த்யானம் பண்றேன்!’ அப்படீன்னு சொல்றார்.

அடுத்த ஸ்லோகம்,

तरुणारुण मुख-कमलं करुणा-रसपूर-पूरितापाङ्गम् ।

सञ्जीवनमाशासे मञ्जुल-महिमानमञ्जना-भाग्यम् ॥ २॥

தருணாருண முக²-கமலம் கருணா-ரஸபூர-பூரிதாபாங்க³ம் ।

ஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥

‘தருணாருண முக²கமலம்’ – ‘அருண:’னா ஸூரியன்.  ‘தருணாருண:’னா இளம் ஸூரியன்! உதய ஸூரியன் போன்ற தேஜஸ் கொண்ட முகம். ‘கமலம்’ – கமலம் போன்ற அழகான ஸூரியனை போன்ற அழகான அவருடைய முகம்!

‘கருணாரஸபூர’ – கருணாரஸம் நிரம்பிய,

‘பூரிதாபாங்க³ம்’ – கண்கள். அவருடைய  கண்கள்ல கருணை நிரம்பியிருக்கு!  அப்பேர்ப்பட்ட கருணை! அதனால தானே அவர் ஸீதை படற கஷ்டத்தைப் பார்த்து தவிக்கறார். இந்த ஸீதை இப்படி கஷ்டப்படலாமா? ராமன் கணவரா, ஜனகர் அப்பாவா, தஶரதரை மாமனாராப் பெற்ற இந்த ஸீதை இப்படி இங்க கஷ்டப்படறாளே! இந்த ராமரையும் ஸீதையயும் சேர்த்து வெக்கணும். அந்த ராமர் அங்க அப்படி கஷ்டப்படறார் ஸீதைய பிரிஞ்சு!

सीतेति मधुरां वाणीं व्याहरन्प्रतिबुध्यते।।

ஸீதேதி மது4ராம் வாணீம் வ்யாஹரந்ப்ரதிபு3த்4யதே৷৷

ராமர் தூங்காம சாப்படாம இந்த ஸீதைய நெனச்சுண்டு கஷ்டப்படறார். எப்பயாவது தூங்கினாகூட “ஸீதா!”னு சொல்லிண்டு எழுந்துண்டுடறார். அப்படி அங்க அவர் தவிக்கறார். இங்க இவ இப்படி தவிக்கறா. தபஸ் பண்ணிண்டிருக்கா.

नैषा पश्यति राक्षस्यो नेमान्पुष्पफलद्रुमान्।

एकस्थहृदया नूनं राममेवानुपश्यति।।

நைஷா பஶ்யதி ராக்ஷஸ்யோ நேமாந்புஷ்பப2லத்3ருமாந் |

ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி৷৷

இவள், இந்த அசோகவனம் இவ்ளோ அழகா இருக்கு! இதையும் பார்க்கல! ராக்ஷஸிகள் கோரமா இருந்துண்டு பயமுறுத்தறா! அதையும் பார்க்கல!

‘ஏகஸ்தஹ்ருத3யா நூநம் ராமமேவாநுபஶ்யதி’ – ‘ஒரே மனஸா ராமனயே பார்த்துண்டிருக்கா! தபஸ் பண்ணிண்டிருக்கா இவோ! அதனால இந்த ராமனையும் ஸீதையையும் சேர்த்து வெக்கணும்!’ அப்படீன்னு அதுக்கு என்னென்ன பண்ணணுமோ அதெல்லாம்  பண்றார். அங்கிருந்து வந்து, ராமரை பார்த்தவொடனே ஸீதை படற கஷ்டத்தை சொல்லி,

सर्वथा सागरजले संतारः प्रविधीयताम्।

ஸர்வதா2 ஸாக3ரஜலே ஸம்தார: ப்ரவிதீ4யதாம்|

‘உடனே எப்படி கடல் தாண்டறது? அதுக்கான முயற்சியைப் பண்ணுவோம்’னு அப்படி கிளப்பறார் ஹனுமார் ராமரை!

‘ஸஞ்ஜீவநமாஶாஸே’ – உயிரைக் கொடுத்த அந்த ஹனுமாரை போற்றுகிறேன்! ஹனுமார் இந்தமாதிரி ஸீதைக்கு மட்டுமா உயிர் கொடுத்தார்! லக்ஷ்மணன் அடிப்பட்டு விழுந்த போது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.  எல்லா வானரப்படையுமே இந்திரஜித் ப்ரம்மாஸ்த்ரத்துனால வீழ்த்தினபோது, ஸஞ்ஜீவி மலையைக் கொண்டு வந்து உயிர் கொடுத்தார்.

அப்படி நமக்கே ஹனுமாருடைய த்யானம்

अपराजित पिङ्गाक्ष नमस्ते राम पूजिता |

அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமா பூஜிதா |

அவருடைய ஸ்தோத்ரம் பண்ணா, நம்முடைய உயிர் வளரும். அப்படி உயிரைக் கொடுப்பவர் எல்லாருக்கும்!

‘மஞ்ஜுள-மஹிமாநம்’ – அவருடைய மஹிமை ரொம்ப அழகான மஹிமை அப்படீங்றார் ஆசார்யாள். அவரே ஸுந்தரர்னு பேரு! அவருடைய மஹிமையும் ரொம்ப ஸுந்தரமா இருக்கு! அதனால தான் அந்த காண்டத்துக்கே ‘ஸுந்தர காண்டம்’னு பேரு! ‘மஞ்ஜுள-மஹிமாநம்’ – அவர் பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கார். ஏன்னா,

‘அஞ்ஜநா-பா⁴க்³யம்’ – ‘அஞ்ஜநா’ங்கறவ ஒரு அப்ஸர ஸ்த்ரீ வானரமா பொறந்திருக்கா! அந்த அப்ஸர ஸ்த்ரீக்கு குழந்தையா பொறந்து, அந்த ஹனுமார் அவ்ளோ அழகா இருக்கார். ஸீதா தேவி ராம கதையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது, ஸூர்யோதயம் போன்று மஞ்சள் பட்டு உடுத்திக்கொண்ட அழகான அந்த வானர வீரரைப் பார்த்து, மனஸுல ஸந்தோஷப்பட்டா! அவர் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, ‘கொரங்கைப் பார்த்தேனே!’ன்னு கவலைப்படறா. அப்பறம் இது கனவில்லை! கனவுல தான் கொரங்கைப் பார்த்தா கஷ்டம். இது நனவு தான்! “ஏன்னா எனக்கு ஸுகமிருந்தாதான் தூக்கம் வரும். தூக்கமிருந்தாதான் கனவு வரும். எனக்கு கனவே கிடையாது. இது நேரத்தான் நான் பார்க்கறேன். இவன் சொன்ன வார்த்தையெல்லாம் சத்தியமாகட்டும்”! அப்படீன்னு. நமஸ்காரம் பண்ணும்போது இராவணனான்னு ஸந்தேஹம் வர்றது! ஆனா சீதை சொல்றா, “அன்னைக்கு ஸந்யாஸி வேஷம் போட்டுண்டு வந்த இராவணனைப் பார்த்தபோது என் மனம் நடுங்கித்து!  இன்னிக்கு வானரமா நீ வந்திருக்க! ஆனாலும் உன்னைப் பார்த்து என் மனஸுல ஒரு உல்லாசம் ஏற்படறது! ஒரு சாந்தி ஏற்படறது!”ன்னு சொல்றா.

அப்படி ஒரு ரூபம் ஹனுமாருடைய ஒரு ரூபம்! அந்த ஹனுமார்ங்கறதே  குருவினுடைய வடிவம்தான்! ஸீதாதேவி, அம்பாளே ஒரு ஜீவனா இருந்து, ராமர்ங்கிற பகவானை அடையறதுக்காக தவிச்சிண்டிருக்கா. தபஸ் பண்ணிண்டிருக்கா. அப்போ நம்ம மஹாபெரியவா மாதிரி, ஆசார்யாள் மாதிரி வர அந்த குரு, அந்த குரு மாதிரி ஹனுமார் வந்தார்! அந்த ஸுந்தர காண்டத்துல, த்ரிஜடை ஸ்வப்னம் சொன்ன பின்ன ஒரு ஸ்லோகம் வர்றது.

पक्षी च शाखानिलयं प्रविष्टः पुनः पुनश्चोत्तमसान्त्ववादी।
सुस्वागतां वाचमुदीरयानः पुनः पुनश्चोदयतीव हृष्टः।।

பக்ஷீ ச ஶாகாநிலயம் ப்ரவிஷ்ட: புந: புநஶ்சோத்தமஸாந்த்வவாதீ3 |
ஸுஸ்வாக3தாம் வாசமுதீ3ரயாந: புந: புநஶ்சோதயதீவ ஹ்ரு’ஷ்ட:৷৷

ஒரு பக்ஷியானது மரக்கிளைல உட்கார்ந்துண்டு, ‘புந: புநஶ்ச உத்தமஸாந்த்வவாதீ3’ – ‘மீண்டும் மீண்டும் உத்தமமான மனஸ் ஸமாதானம் ஆகக்கூடிய வார்த்தைகளைப் பேசிண்டே இருக்கு’ அப்படீன்னு! இது ஹனுமார் வந்திருக்கார்ங்கறதுக்கு ஸூசகமா சொல்றார். வால்மீகி, “ஒரு குருவானவர் ஒரு ஜீவன் கிட்ட, பகவான் வருவார்! உன்னை மீட்டுண்டு போவார்”. “க்ஷிப்ரமேஷ்யதி ராகவா:” சீக்கிரம் வருவார். வானரப் படைய இழுத்துண்டு வருவார். எப்படி கருடனை இழுத்துண்டு கஜேந்திரனைக் காப்பாத்தறதுக்காக விஷ்ணு பகவான் வந்தாரோ, அந்த மாதிரி, வானரப் படைய இழுத்துண்டு வந்துருவார். உன்னை மீட்டுண்டு போவார். நான் போய் திரும்பி சொல்ற இந்த நேரம் தான் delay ஆகப்போறது!  இனிமே நீ கவலையே படவேண்டாம்!” அப்படீன்னு ஒரு 25 வாட்டி வர்றது அந்த பத்து ஸர்கத்துல! அத்தனை வாட்டி சொல்லி ஆறுதல் சொல்றார். இதத்தான் ஒரு குருவானவர் பண்ணுவார்! “பகவான் உன்னை நினைச்சுண்டிருக்கார். உன்னை வந்து மீட்பார்! நீ கவலைப்படாதே!” அப்படீன்னு சொல்ற அந்த வார்த்தையை ஹனுமார் பண்றார். அதனால ஹனுமார் வந்து ஒரு குருவுக்கு உருவகம். அந்த ஹனுமாருடைய மஹிமை மஞ்ஜுள மஹிமை! அஞ்ஜனையுடைய பாக்யமா அவதாரம் பண்ணவர்! அதனால ஆஞ்சநேயன்னு பேரு! இந்த ரெண்டு ஸ்லோகங்கள் இன்னைக்கு இருக்கட்டும். பாக்கி ஸ்லோகங்கள் நாளைக்குப் பார்போம்.

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய் ஜய் ராம ராம

Series Navigation<< லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaningஹனுமத் பஞ்சரத்னம் 3 முதல் 6 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 3 to 6 >>

3 replies on “ஹனுமத் பஞ்சரத்னம் 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 1 and 2”

ஆஞ்சநேயர் ப்ரபாவம் சொல்லி மாளாது. அற்புதமான விஷய வர்ணனை. எல்லாம் அவர் அனுகூல அனுக்ரஹம். கேட்கும்போதும் படிக்கும்போதும் நமக்கு உத்ஸாஹம் உத்வேகம் கிடைக்கின்றது.நன்றிகள் பல. இந்த ஸத் விஷயங்கள் குரு க்ருபையால் தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

சுந்தர காண்டம் பாராயணம் செய்த பலன் முழுதும் இந்தப்.பொருள்
விளக்கம் படித்தவுடன் கிடைத்ததுு விடும் என்பது உண்மை !
எங்கெல்லாம் ராம கதை வாசிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சனேய ஸ்வாமி கை கூப்பி எழுந்தருள வார் என்பது அறிந்த விஷயம் !அப்படிப்பட்ட பிரத்யக்ஷ தெய்வம் பற்றியான ஸ்லோகம், அதுவும் நம் ஆசார்யாள் அருளியது என்றால் எத்தகைய மேன்மையான
பலனுடையது!!
பொருள் விளக்கம் மிக அருமை எப்போதும் போல் !
கிஷ்கிந்தையில் ராம லட்சுமணர் வருவதும் சுக்ரீவன் பயந்து ஆஞ்சநேயரை அனுப்புவதும், அவர் வினயத்துடன் அவர்கள்டம்ம்பேசுவதும் இங்கு படம் பிடித்தாற்‌ போல் விளக்கப்பட்டுள்ளது !
மேலும்.படிக்க, கேட்க ஆவல்!
தொடரட்டும் உங்கள் பணி!
ஶ்ரீராம் ஜெய்ராம் ….

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !! நமஸ்காரம் அண்ணா 🙏
ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் ஹனுமார் இருப்பார் என்பது உறுதி 🙏.
ஹனுமார் பராக்கிரமம், தைரியம் மற்றும் அடக்கம் போன்ற சொல்லொணா பண்பின் சிகரம். 🙏
You’ve painted a beautiful Hanuman picture in listeners mind. Description is simply superb 👌. கருணை நிறைந்த கண்கள் கண் முன் மலர்ந்தது.
As Saraswathi mami has mentioned a mini “Sundara kandam” discourse for this Hanuman Jayanthi
ஸ்ரீ ஆதி ஆசார்யாள், ஸ்ரீ மஹா பெரியவா நமக்கும் ஜகத்துக்கும் குரு. அது போல ஜகன் மாதாவாகிய சீதையின் உயிரையும், லக்ஷ்மணனின் உயிரையும் ஒரு குருவைப் போல மீட்டு தந்தார்,என்று சொல்லிய தருணத்தில் ஒரு புதிய ஷக்தி பிறந்தது.
ஆதிசங்கரர் அருளிய ஹனுமத் பஞ்சரத்னத்தின் ஒளி, (ஒலி வடிவத்தில்)
மின்னுகின்றது.
இந்த ஹனுமத் ஜயந்தியில் மேலும் அவரை ஸ்மரணம் செய்ய காத்திருப்போம். நன்றி 🙏 🙏 🌼🌼

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.