Categories
Govinda Damodara Swamigal

பௌருஷம் விக்ரமோ புத்தி:

கேஷவ்னு ஒரு ஆர்டிஸ்ட். ஒரு தவமாய் தினமும் ஒரு கிருஷ்ணர் படம் வரைகிறார். அவர் நம் ஸ்வாமிகளுடைய இரண்டு கோட்டுச் சித்திரங்களை Facebookல் ஷேர் பண்ணிணார்.

அப்ப நான் அவருடன் connect பண்ணிண்டு உங்காத்துக்கு வரலாமான்னு கேட்டேன். அவசியம் வாங்கோனு ரொம்ப அன்பாக வரவேற்றார். நானும் விஜியுமா போனோம். ரெண்டு மணி நேரம் ஸ்வாமிகளை பத்தியும் மஹாபெரியவாளை  பத்தியும் ரொம்ப ஆனந்தமா பேசிண்டு இருந்தார்.

அவர் அகமே ஒரு கலைக்  கோயிலாட்டம் இருக்கு. அந்த ஸ்டுடியோல ஸ்ரீமத் பாகவதத்தை ஒரு பெரிய கான்வாஸ்ல ஒரே சித்திரமாக எழுதி இருக்கார். நடுவுல கிருஷ்ணர். சுத்தி பாகவதத்தில் இருக்கற எழுபது காட்சிகள். அது முழுக்க ஸ்வாமிகள் கிட்ட பாகவதம் கேட்டு, அதை மனசுல வெச்சுண்டு அந்த சித்திரத்தை எழுதியிருக்கார்.

இன்னொரு சித்திரம். ஹனுமத் ப்ரபாவம். நடுவில் ஹனுமார் ராமருடைய பாதத்தில் பணிஞ்சு இருக்கார். சுத்தி வர ராமாயணக் காட்சிகள். முதல்ல கிஷ்கிந்தா காண்டத்தோட ஆரம்பத்துல ஹனுமார் ராமர் பாதங்களில் பணிகிறார். சுக்ரீவன் போய் ராமர் கிட்ட பேசுங்கறான். ஹனுமார் நேரே வந்தவுடனே ராமரை நமஸ்காரம் பண்ணிடறார். பிக்ஷு  வேஷத்துல வரார் ஹனுமார். ஆனா ராமரை நமஸ்காரம் பண்றார். அப்புறம் ராமர் தன்னோட மோதிரத்தை கொடுத்தது, அதை எடுத்துண்டு கிளம்பினது, ஜாம்பவான் உத்சாக படுத்தினது. சம்பாதி வழி காண்பிச்சது. அரக்கிகள் எல்லாரையும் ஜெயிச்சது. அப்புறம் ராவணன் ஸீதையை மிரட்டும்போது மறைந்து இருந்து பார்த்து ஸீதையோட கற்பின் பெருமையை புரிஞ்சுண்டு, அப்புறம் ஸீதா தேவியை சமாதானம் செய்தது. அப்புறம் ஹதாஹதம் பண்ணி லங்கா தஹனம் பண்ணி திரும்ப வந்து மதுவனத்துல தேனெல்லாம் சாப்பிட்டு அடுத்தது ராமர் கிட்ட வந்து ஸீதா தேவியோட சூடாமணிய கொடுத்து ராமருடைய மனசை சமாதானம் செய்தது வரை எல்லாக் காட்சிகளும் இருக்கு.

அதாவது ஹனுமார் ராமரை சரணாகதி பண்ணார். சரணாகதி பண்ணிண பின்ன

यथा राघव निर्मुक्त: शर: श्वसनविक्रम: |

गच्छेत् तद्वद्गमिष्यामि लङ्कां रावण पालिताम् ||

யதா ராகவ நிர்முக்த: சர: ஸ்வசனவிக்ரம: |

கச்சேத் தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் ||

அப்படீன்னு ராமபாணம் எப்படி போகுமோ அந்த மாதிரி நான் போய் லங்கையில் இறங்கி ஸீதா தேவியை பார்த்துட்டு வருவேன் அப்படீன்னு ஹனுமார் சொல்றார். அதாவது பாணம்கிறது தானா போக முடியாது. யாராவது ஒருத்தர் ஏவி விட்டாதான் அது போக முடியும். அந்த மாதிரி ராமர்தான் உந்து சக்தி. நான் அவர் கையில் வெறும் ஒரு கருவி தான் “निमित्त मात्रं भव सव्यसाचिन्” “நிமித்த மாத்ரம் பவ சவ்யசாசின்” அப்படீன்னு கிருஷ்ணர் அர்ஜுனன்கிட்ட சொல்ற மாதிரி, ஹனுமார் தன்னை ஒரு நிமித்தமா நினைக்கறார். அந்த பணிவு. ஆனா அந்த பணிவுனால ஹனுமார் எவ்வளவு அபாரமான கார்யங்களை எல்லாம் பண்ணிடறார் அப்படீங்கறதை கேஷவ் இந்த ஒரு சித்திரத்துல கொண்டு வந்துருக்கார்.

தன் study ரூம்ல மஹாபெரியவாளோட ஒரு சித்திரம் வெச்சிருக்கார். அவரோட study ரூம்ல நிறைய புஸ்தகங்கள். அந்த மஹாபெரியவா சித்திரத்துக்கு முன்னாடி ஒரு விளக்கேத்தி வெச்சுருக்கு. “இங்கதான் உட்கார்ந்து  படிப்பேன். இவர் தான் எனக்கு inspiration எல்லாமே” என்கிறார்.

அந்த மஹாபெரியவா படத்தை மஹாபெரியவா கிட்டயே வெச்சு நமஸ்காரம் பண்ணிட்டு வர வழியில திருவல்லிகேணில  நம்ம

ஸ்வாமிகள் கிட்ட காண்பிச்சாராம்.

ஸ்வாமிகள் அந்த பெரியவாளுக்கு (படத்துக்கு) பூஜை பண்ணி, நமஸ்காரம் பண்ணி அப்புறம் அதை எடுத்துண்டு இறங்கி கீழ வரும்போது ஸ்வாமிகளும் கீழே படி இறங்கி வந்துட்டாராம். “நீங்க ஸ்ரமப்பட வேண்டாமே” என்ற போது “இல்லை வழியனுப்ப வரேன், சாக்ஷாத் ராமன்னா” அப்படீன்னு அந்த மஹாபெரியவா சித்திரத்தை வெறும் படமா நினைக்காம அதை  ஸ்வாமியா நினைக்கணும் அப்படீன்னு எனக்கு சொல்லிக் கொடுத்தவர் நம் ஸ்வாமிகள் என்கிறார்.


போன மார்கழி மாஸத்தில திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முப்பது சித்திரம் வரைந்தார். தினமும் பதினைந்து மணி நேரம் படிச்சு, மனசுல வாங்கிண்டு, அப்புறம் அன்னிக்கு பாசுரத்தோட படத்தை வரைந்து இருக்கார். முப்பதும் கொள்ளை அழகு.

ஸ்வாமிகள் வருஷா வருஷம் ஒரு மாசம் ரெண்டு மாசம் ஹைதராபாத் போவார். கேஷவோட அப்பா பிச்சுமணி ஐயங்கார் அங்கே இருந்தார். அவருக்கு ஸ்வாமிகள் கிட்ட அபார பக்தி. அதுனால சின்ன வயசுல இருந்தே இந்த கேஷவ்க்கு, சுவாமிளுடைய ராமாயண பாகவத கதை கேட்கற பாக்கியம் கிடைச்சிருக்கு. ஸ்வாமிகள் பிரவசனம் பண்ணும்போது, ராமாயண பிரவசனம் பண்ணுவது போலவும், பாகவத பிரவசனம் பண்ணுவது போலவும் நேரடியாக கோட்டு சித்திரமா வரைந்து இருக்கார். ஸ்வாமிகள் கிட்ட “ராமர் மேக வர்ணம் என்று சொல்கிறீர்கள், அது எந்த நீலம்? இதுவா இதுவா? என்றெல்லாம் கேட்டு தெளிவு பெற்று இருக்கிறார். அப்படி இந்த கேஷவ்க்கு அவர் மனசுல ஸ்வாமிகளுடைய உத்தம பக்தி ரொம்ப ஒரு பெரிய தாக்கமாக இருந்திருக்கு.

ஸ்வாமிகள் குருவாயூரப்பன் பூஜை பண்ணும் அழகை மனதில் வைத்துக் கொண்டு இந்த தியாகராஜ ஸ்வாமிகள் சித்திரம் வரைந்ததாக சொன்னார்.

அங்கே நான் பார்த்ததிலேயே ரொம்ப மனம் கவர்ந்த ஒரு சித்திரம் ஒரு பெரிய கான்வாஸில் இருந்த ஒரு ராமர் பட்டாபிஷேகம். அப்படியே பேசறது. அவ்வளவு அழகாக அற்புதமா இருக்கு. அதுல ஹனுமார் அந்த முத்து மாலையை வாங்கிண்டு அந்த சந்தோஷம், அந்த பக்தி, அந்த எளிமை, அந்த பணிவு எல்லாம் தெரியறது. நம்ம ஸ்வாமிகள் கையை கூப்பிண்டு ராமாயணம் படிக்கிற மாதிரி, அந்த ஹனுமார் அதே மாதிரி இருக்கார். அதுவும் கேஷவ் எடுத்த photo தான்.

இந்த படத்தை பாத்தவுடன் நான் விக்ராந்தஸ்த்வம் என்றேன். கேஷவ் ஆஹா “விக்ராந்தஸ்த்வம் சமர்தத்ஸ்த்வம் ப்ராக்ஞஸ்த்வம் வானரோத்தம” அப்படீன்னு அதை பூர்த்தி பண்ணார். அப்படி ஸ்வாமிகளால inspire ஆகி அவர் நிறைய வொர்க் பண்ணியிருக்கார்.

இந்த பட்டாபிஷேக படத்தை பார்த்தவுடனே ஸ்வாமிகள் சொல்ற பல விஷயங்கள் எனக்கு ஞாபகம் வந்தது.

ஸீதா தேவி பட்டாபிஷேகத்துக்கு அப்புறம் ஒரு முத்து மாலையை கையில்  எடுத்து ராமரை பாக்கறா. ராமர் இங்கிதஞ: அப்படீன்னு ஒரு வார்த்தை வரது. அதாவது இங்கிதம் தெரிந்தவர் ராமர். சபையில ஒருத்தர கௌரவிக்கனும்னா ஒரு criteria set  பண்ணணும். அந்த criteria set பண்ணி கௌரவப் படுத்தினா ஏன் அவாளுக்கு மட்டும் பண்ணிணான்னு யாரும் கேட்க மாட்டா. அதனால ஸீதையின் மனதை புரிஞ்சுண்டவரான ராமர் சொல்றார் “பௌருஷம் விக்ரமோ புத்தி: எஸ்மின் ஏதானி நித்யதா” அதாவது எவரிடத்தில் பௌருஷம், விக்ரமம், புத்தி, ஸர்வதா இருக்கிறதோ அதாவது புத்திபலம், மனோபலம் என்கிற தைரியம், உடல்பலம், இதெல்லாம் யார்கிட்ட இருக்கிறதோ, யார் கிட்ட உனக்கு த்ருப்தியோ அவாளுக்கு கொடு அப்படீன்னு சொல்றார். உடனே ஸீதா தேவி அந்த முத்து மாலையை ஹனுமாருக்கு கொடுக்கறா. ஹனுமார் அதை போட்டுண்டு  மலை மேல மேகம் போல ஜொலிச்சார் ன்னு தான் வால்மீகி சொல்கிறார். திருவண்ணாமலையில விடியக் கார்த்தால  மணிக்கு பாத்தா ஒரு மேகம் மலையை சுத்தி வரும். அது மாதிரி இந்த உவமை அவ்வளவு அழகா இருக்கு. ஏன்னா ஹனுமார் மலை போன்ற உருவம். அவர் கழுத்துல முத்துமாலை, மலை மேல மேகம் போல ஜொலிக்கறது.

இந்த ஸ்லோகத்துக்கும் இன்னொரு காட்சிக்கும் ஒரு தொடர்பு இருக்கு. ஸீதாதேவி ராமரோட பிரிவு தாங்காம உயிரை விட்டுடலாம்னு நினைக்கறா. அப்போ ஹனுமார் வந்து, மறைந்து இருந்து ராமருடைய கதையை சொல்லி, மனசை சமாதானப்படுத்தி, அப்புறம் பேச்சு கொடுத்து, ஆறுதல் வார்த்தைகளை  சொல்லி, அவளுக்கு இவரிடம் நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் ராமருடைய கணையாழியை எடுத்து கொடுத்தபோது, ஸீதை  அவ்வளவு சந்தோஷப்படறா. அப்போ அந்த சுலோகம் சொல்றா.

“விக்ராந்தஸ்த்வம் சமர்தத்ஸ்த்வம் ப்ராக்ஞஸ்த்வம் வானரோத்தம”

“இப்பேற்பட்ட ராக்ஷஸர்களுடைய காவலெல்லாம் கடந்து வந்து, என்னை பார்த்து, என் ராமனுடைய வார்த்தைகளைச் சொல்லி, இந்த மோதிரத்தையும் கொடுத்து என் உயிரை காப்பாற்றினாயே, ஹே ஹனுமான்! உன்னாலதான் இது முடியும். விக்ராந்தஸ்த்வம், சமர்த்தஸ்த்வம், த்வம், த்வம் அப்படீன்னு எல்லாமே நீதான், உடல் வலிமையும், புத்தி பலமும், மனோதைரியமும் உன் கிட்டதான் இருக்குப்பா” அப்படீன்னு வாயார வாழ்த்தறா. கொண்டாடறா. இந்த வார்த்தைகளை வலிமை, புத்தி, தைர்யம் மூணும் உன்கிட்டதான் இருக்கு அப்படீன்னு ஹனுமார்கிட்ட ஸீதாதேவி சொல்லும் போது அங்கே ராமர் இல்ல. அவர் கேட்கலை. ஆனா அதே வார்த்தையை அவர் பட்டாபிஷேகத்தும் போது சொல்றார். ராமரும் ஸீதையும் ஒண்ணுதான். அவா ரெண்டு உருவம். ஆனால் ஒரே உயிர். ரெண்டு பேரும் பேசிக்கணும்கிறது இல்ல. இவா மனசுல இருக்கறது அவாளுக்கு தெரியும். ஆதர்ச தம்பதிகள் என்கிறதை காண்பிக்கறது. அப்படி கௌரவபடுத்தி கொடுத்தது. அதை ஹனுமார் போட்டுண்டு ஜொலிச்சார் அப்படீன்னு ராமாயணத்துல வரது.

வேற ஏதோ புஸ்தகத்திலோ எங்கயோ “ஹனுமார் அந்த மாலையை எடுத்து முத்தை உடைச்சு இதுக்குள்ள ராமர் இல்லையே அப்படீன்னு சொல்லி தூக்கி போட்டார். மார்பை பிளந்து காண்பிச்சார். ராமரும் ஸீதையும் அங்க இருந்தா, என்று ஒரு கதை. அதை ஸ்வாமிகள் சொல்ல மாட்டார். ஸ்வாமிகள் சொன்னார் “அதை நான் சொல்ல மாட்டேன், எனக்கு மனசாகாது, ஏன்னா எங்கப்பா ராமாயணம் படிச்சு உடம்ப வளத்தார், அவருடைய பீஜத்ல இருந்து உண்டாகி நானும் ராம பிரசாதத்தை நம்பியிருக்கேன்.” நான் ராமரை நம்பியிருக்கேன்னு அப்படீன்னு ஸ்வாமிகள் சொல்ற வார்த்தை வந்து ரொம்ப ரொம்ப powerful. அது ஒரு மந்த்ரம் மாதிரி.

ஸ்ரீராம: பிரதிக்ருஹ்ணாதி ஸ்ரீராமோ வை ததாதி ச |

ஸ்ரீராம: தாரகோ த்வாப்யாம் ஸ்ரீராமாய நமோ நாம: ||

ராமருக்கு நமஸ்காரம். ராமர் உன்னையும்,என்னையும் காப்பாத்தட்டும். ராமர் கொடுக்கறார், ராமர் வாங்கிக்கறார், நீ கொடுக்கறேன்னு  நினைச்சுக்காத நான் வாங்கிகறேன்னு நினைச்சுக்காத அப்படீன்னு அவர் சொல்வார். அவரால்தான் அதை சொல்ல முடியும். ஏன்னா அவர் அந்த கொள்கையோடு இருந்தார். ஒருத்தர் முன்னாடி தலைய தாழ்த்தாம ஒரு வாழ்நாள் இருந்தார்.

அப்படி அவர் தன்னையும் தன்னை  சேர்ந்த எல்லாரையும், தன்னுடைய பக்தர்களையும் சரி, தன்னுடைய குடும்பத்தையும் சரி, ராம பிரசாதத்தை கொண்டு காப்பாத்தினார். காப்பாத்திண்டு இருக்கார். அதனால அவர் சொல்றது ரொம்ப விசேஷம். அதாவது “ராம ப்ரஸாதமா ஸீதாதேவி கைலேர்ந்து வந்த அந்த முத்து மாலையை ஹனுமார் உதாசீனம் பண்ணிணார்ங்கிற வார்த்தையை என்னால எப்படி பொறுத்துக்க முடியும். நான் அதை சொல்ல மாட்டேன்” அப்படீம்பார்.

கோபால விம்ஷதினு வேதாந்த தேசிகர் பண்ணின ஒரு ஸ்தோத்திரம். மாட்டுக் கிருஷ்ணனை வர்ணனை பண்ணி தனக்கு இந்த மாதிரி தரிசனம் கிடைக்கணும்னு வேண்டிக்கறார். ஸ்வாமிகளும் அந்த ஸ்லோத்தை ரசிச்சு அந்த ரூபத்தை ரொம்ப விரும்பி ஒரு மாட்டுக் கிருஷ்ணன் பொம்மை வெச்சிருந்தார். அந்த ஸ்லோகத்தில் இருப்பது போல ஒரு பெரிய சித்திரம் கேஷவ் வரைந்து வெச்சுருக்கார். அதுல ரொம்ப அழகா பெரிய திருவடி கருட பகவான், சிறிய திருவடி ஹனுமான், சங்க நிதி, பத்ம நிதி என்று அந்த கோபால விம்ஷதில இருக்கற எல்லா வர்ணனைகளையும் கொண்டு வந்து ரொம்ப அழகா ஒரு சித்திரத்தை வரைஞ்சிருக்கார்.

அவர் ரொம்ப பாக்யவான். அவரைப் பாத்தது எனக்கு ரொம்ப த்ருப்தியா  இருந்தது. இன்னொன்னு அவர் சொன்னார். ஸ்வாமிகளை பாத்ததுனால நான் ஓரளவு பேராசையில் மாட்டிக்காம இருக்கேன். ஸ்வாமிகளோட பக்தர்கள் எல்லாருக்கும், அவர் அவ்வளவு பணத்துல பற்றற்று இருந்ததால, ஒரு சொட்டு நம்மால பேராசையில் கொஞ்சம் ஒரு படி கீழ இறங்கினாகூட அது ஸ்வாமிகள் அனுக்ரஹத்தினால்தான் அப்படீன்னு புரிகிறது. நிறைய பேர் feel பண்ணியிருக்கா. நானே feel பண்ணியிருக்கேன். அந்த மாதிரி அவரும் சொன்னார். அப்படி அன்னிக்கு பொழுது ஒரு ஸத்சங்கமாக அமைஞ்சுது.

ஜானகீ காந்த ஸ்மரணம்!!! ஜய ஜய ராம ராம !!!

பௌருஷம் விக்ரமோ புத்தி:(11 min audio in tamizh, same as the transcript above)

 

One reply on “பௌருஷம் விக்ரமோ புத்தி:”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.