Categories
Stothra Parayanam Audio

சீர் பாத வகுப்பு பொருளுரை + ஒலிப்பதிவு; Meaning of Seer Pada Vaguppu (article + audio link)


சீர் பாத வகுப்பு பொருளுரை (42 min audio file)

இன்னிக்கு வைகாசி விசாகம். முருகப் பெருமானுடைய அவதாரத் திருநாள். என்னுடைய தகப்பனார் சுந்தரம் ஐயர் முருக பக்தியிலேயே தோய்ந்து இருந்தார். அவர் ஒரு விசாக நக்ஷத்ரம் கூடின நாள்ல தான் முருகப் பெருமானோட கலந்தார். எங்களுடைய க்ருஹத்துல திருப்புகழ் எப்பவும் கேட்கும். திருப்புகழ் பஜனைகள் நடக்கும். என்னுடைய தகப்பனார் தானா உட்கார்ந்து திருப்புகழ் படிச்சுண்டே இருப்பார். அவருடைய பிரார்த்தனா பலனோ என்னவோ, எங்க எல்லாருக்கும் திருப்புகழ்ல ஒரு பிரியம் வந்திருக்கு.

‘எல்லாரும் ஞானத் தெளிஞரே கேளீர் சொல்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ

பொல்லாக் கருப்புகழை கேட்குமோ

கான மயில் வீரன் திருப்புகழைக் கேட்கும் செவி ‘

ன்னு ஒரு வெண்பா இருக்கு. உலகத்தவர்களை புகழ்ந்து பேசுகிற அந்த வீண் பேச்சை நாங்கள் கேட்போமா?. எல்லாக் கல்லும் மாணிக்கக் கல்லாகுமா? கான மயில் வீரன் திருப்புகழைக் கேட்கும் செவி – திருப்புகழைக் கேட்ட பின்னே வெறும் பேச்சை நாங்கள் கேட்போமா ? ன்னு சொல்றார். அப்படி திருப்புகழைக் கேட்கிறதுக்கு ஒரு ஆசையை வளர்த்து விட்டார் எங்க அப்பா.

நான் இந்தத் திருப்புகழை படிச்சுண்டு வரும்போது திருவகுப்புகள் மேல ஒரு தனி பிரியம் ஏற்பட்டு, ஆறு திருவகுப்புகள்

‘கடைக்கணியல் வகுப்பு’ ,

‘சீர்பாத வகுப்பு’,

‘தேவேந்திர சங்க வகுப்பு’,

‘வேல் வகுப்பு’,

‘வேளைக்காரன் வகுப்பு’,

‘வேடிச்சி காவலன் வகுப்பு’

ன்னு இந்த ஆறு வகுப்புகள், அது தவிர திருஎழுக்கூற்றிருக்கை ன்னு இருக்கு. இந்த ஏழு பெரிய பாடல்களையும் அதோட பொருத்தமான சில கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ், முதல்ல பிள்ளையார் பாடல்கள், விநாயகர் அகவல், முடிவிலே ‘உருவாய் அருவாய்’ இப்படி ஒரு அமைப்பா, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பாராயணம் ன்னு ஒரு வரிசைப் படுத்தி, இத கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்கிட்ட நான் படிப்பேன். அவர் ரொம்ப சந்தோஷமாக் கேட்பார். எப்படி ஒரு முகுந்த மாலைக்கும், மூக பஞ்ச சதிக்கும், சிவானந்த லஹரிக்கும் உருகுவாரோ அதே மாதிரி உருகி ‘ஆஹா ஆஹா’ன்னு சொல்லி, ரொம்பக் கொண்டாடுவார், படிக்கிறவாளுக்கு அதுல ஒரு சந்தோஷம். அந்த மாதிரி படிச்சு படிச்சு, இந்த வகுப்புகள் மேல இன்னும் ப்ரியத்த ஏற்படுத்திக் கொடுத்தார்.

அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம்


அதுல இந்த ‘சீர்பாத வகுப்பு’ எல்லாத்தைக் காட்டிலுமே ரொம்ப அழகா இருக்குன்னு எனக்கு எண்ணம். தமிழ்லேயே முருகப் பெருமானுடைய துதி ன்னா ‘சீர்பாத வகுப்பு’தான் அப்படிங்கிற அளவுக்கு எனக்கு அதுல பிரியம்.

‘வரிசை தரும் பதம் அது பாடி –

வளமொடு செந்தமிழ் உரைசெய

அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’

(‘பரவு நெடுங்கதிர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்) ன்னு ஒரு திருப்புகழ்ல பாடறார். அந்த முருகனுடைய பாதங்களை வணங்கினால் வரங்களும் கிடைக்கும். இந்த சீர்பாத வகுப்புக்கு முக்கியமா ஞானம் வரும் ன்னு ஒரு பலஸ்ருதி சொல்லி இருக்கார் வள்ளி மலை ஸ்வாமிகள். இந்த சீர்பாத வகுப்போட பெருமை என்னனா, இதுல நமக்கு இந்த பாதம் என்ன அருள் பண்ணும் அப்படிங்கற விஷயம் இருக்கு. நாம எப்படி இந்த பாதத்தை அணுகி பக்தி பண்ணனும்ங்கிற விஷயமும் இருக்கு.

பாதத்தின் பெருமை, எல்லை இல்லாத பெருமை. அதைப் பத்தி நிறைய விஷயங்கள் இருக்கு. ஸ்கந்த புராணத்துல வர்ற எல்லாக் கதைகளையும் சுருக்கமா நாலு வரிகள்ல சொல்றார். மொத்தம் பதினாறு வரி. நாலு வரிகள்ல குழந்தையா பிறந்து அப்பா அம்மாவோட கொஞ்சி விளையாடறது. அடுத்து கொஞ்சம் வளர்ந்த உடனே குமரனாகி தேவ சேனாதிபதியாகி சூர ஸம்ஹாரம் பண்ணது. அப்புறம் கணபதியோட போட்டி போட்டு உலகம் முழுக்க சுத்தி வந்தது. அதுக்கு அப்புறம் யுவன் ஆன பின்னே வள்ளிஅம்மையோட காதல் புரிந்தது. இப்படி எல்லாம் வறது. நம்முடைய ஷண்மதத்தில இருக்கக் கூடிய ஆறு தெய்வங்களை பத்தியும் இராமாயணக் காட்சிகள், ஸ்ரீ மத் பாகவதத்துல வரக் கூடிய காட்சிகள் அப்படி எல்லா தெய்வங்களுடைய விஷயமும் வறது. மொத்தம் அறுபது சம்ஸ்கிருத வார்த்தைகள் வறது. இது தனியான ஒரு ஸ்துதி.

எனக்கு personal-லா ஒரு experience ஆச்சு. ஸ்வாமிகள் என்னை அமெரிக்காலேர்ந்து திரும்பி வான்னு சொன்னார். எனக்கு அதை விட முடியல. அங்க அவ்வளவு வசதியான வாழ்க்கை. சிரமப் படாம நிறைய சம்பாத்தியமும், தொந்தரவும் இல்லாத வாழ்க்கை. அப்படி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. வருவதற்கே இஷ்டம் இல்லாம இருந்தது. ஸ்வாமிகள் ஆனா ‘விட்டுட்டு வா’ன்னு சொன்னார். இதுக்குள்ள நான் ஸ்வாமிகளிட்ட பழகினதுல அவர் எந்த ஒரு காரிய சித்திக்காகவும், ஒரு கஷ்டம் போகிறதுக்கும் ஸ்தோத்திரங்கள் எழுதி கொடுப்பார். அதை பாத்துப் பாத்து, “நீங்க வான்னு சொல்றேள். இந்த அமெரிக்கா என்னை விடாது போல இருக்கு. இதுக்கு ஏதாவது ஸ்லோகங்கள் கொடுங்கோ “அப்படினேன். அவர் ‘மூக பஞ்ச சதி’ தான் எனக்கு சொல்லி வெச்சுருந்தார். இதுல ‘பாதார விந்த’ சதகத்த மட்டும் பாராயணம் பண்ணு ன்னு சொன்னார். தனியா உட்கார்ந்து சீக்கிரமா படிச்சா, பாதார விந்த சதகம் ஒரு இருபது நிமிஷம் ஆகும்,. ‘சீர் பாத வகுப்பு’ ஒரு இரண்டு நிமிஷம் ஆகும். இரண்டும் சேர்த்து இருபதுலேர்ந்து இருபத்தி ஐந்து நிமிஷம் ஆகலாம். இந்த பாதார விந்த சதகத்த ஒரு ஆவர்த்தி, அதோட முடிவுல இந்த சீர்பாத வகுப்பை ஒரு பத்து ஆவர்த்தி, இப்படி படிச்சுண்டே வான்னு சொன்னார். இப்படி பண்ணிண்டே இருந்தேன். Some turn off events , மூணாவது மாசம் என்னை இங்க இந்தியாவில கொண்டு வந்து தள்ளிடடுத்து. சீர் பாத வகுப்பு அப்படி ஒரு அநுக்கிரகம் பண்ணி திரும்பி வந்து ஸ்வாமிகளோட ஆறு வருஷங்கள் இருந்து, எத்தனையோ கத்துண்டு அதுக்கு அப்புறம் இங்க கல்யாணம் குழந்தைகள் , எங்க அப்பாவோட, அவ்வளவு ஒரு உத்தம பக்தரோட கூட இருந்து, அவருக்கு கைங்கரியங்கள் பண்ணி அவரைக் கடை ஏத்தி, அப்படி என்னுடைய சில கடமைகள் எல்லாம் நடந்தது. அவ்வளவு ஒரு திருப்தி. இன்னைக்கு இந்த திருப்புகழ், இந்த ஸ்தோத்திரங்கள் பத்தி பேசறேன். எவ்வளவு பேர் எங்கிட்ட அன்பா இருக்கா. அமெரிக்கால இருந்திருந்தா ஒரு கார வித்துட்டு இன்னொரு பெரிய கார் வாங்கி இருப்பேன். இந்த வீட வித்துட்டு இன்னொரு வீடு வாங்கி இருப்பேன். அவ்வுளவு தான் மிஞ்சி இருக்கும். இந்த பகவத் பஜனம், அதனால கிடைச்ச சத்ஸங்கம், இதுல இருக்கிற திருப்தி எதுவுமே இல்லாம போய் இருக்கும். அப்படி ஒரு பெரிய அநுக்கிரகம் பண்ணித்து இந்த ‘சீர்பாத வகுப்பு’ ன்னு என்னுடைய நம்பிக்கை. இதனால சீர் பாத வகுப்பை நான் விரும்பி படிப்பேன்.

இன்னைக்கு வைகாசி விசாகமா இருக்கிறதால இதோட பொருளை சொல்லலாம் ன்னு ஒரு ஆசை. முதல் வரி,

உததியிடை கடவுமர கதவருண குலதுரக

வுபலளித கனகரத…… சதகோடி சூரியர்கள்

உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை

யுகமுடிவின் இருளகல…… ஒருசோதி வீசுவதும்

…மணநாறு சீறடியே. இந்த மணநாறு சீறடியேங்கிறது கடைசி இரண்டு மூன்று பதங்கள். அதை இந்த ஒவ்வொரு வரியிலேயும் சேர்த்துண்டு சொல்றது ஒரு வழக்கம். அப்பதான் பொருள் அழகா வரும். இந்த முதல் வரியே எவ்வளவு அழகு, என்ன கவித்துவம், என்ன ஒரு அழகான ஸ்துதி அப்படிங்கறத காண்பிக்கிறது.

உததினா -கடல்,

உததியிடை – கடலுக்கு நடுவில்,

கடவு – ஒரு தேர ஓட்டிண்டு சூரிய பகவான் வர்றார்.

அந்த தேர்ல ஏழு விதமான வர்ணங்கள் கொண்ட துரகங்கள்(குதிரைகள்) இருக்கு. VIBGYOR – violet, indigo அந்த ஏழு வண்ணங்களைச் சொல்றார்.

‘கடவு மரகத அருண’ – மரகதம், அருணம் முதலிய பச்சை, சிவப்பு முதலிய நிறங்களோடு கூடிய,

குலதுரக – உயர்ந்த ஜாதி குதிரைகள் பூட்டிய,

உபலளித – ‘லளித’ ன்னா அழகு, ‘உபலளித’ ன்னா doubly beautiful ரொம்ப அழகான.

கனகரத – ஒரு தங்க தேரில்

சூரியன் கடல்ல காத்தால உதயம் ஆகிறார். இது ஒரு சூரியன் கடல்ல வரும் போது,

சதகோடி சூரியர்கள் – இந்த மாதிரி ஒரு ஆயிரம் கோடி சூரியர்கள் உதயம் ஆச்சுனா எப்படி இருக்குமோ அப்படி,

அதிகவித கலபகக – ‘கலபம் ‘ ன்னா தோகை, ‘ககம் ‘ ன்னா பறவை, தோகையோடு கூடிய பறவை எது? மயில். அந்த மயிலின்மிசை. ஒரு சூரியன் வந்தா ஒரு இரவோட இருட்டு போறது அந்த பகவானுடைய, முருகப் பெருமானுடைய மயில் மேல் வர்ற காட்சி என்ன பண்ணறதுன்னா, யுக முடிவின் இருளை எல்லாம் போக்குகிறது. அப்படி ஒரு ஜோதி. இந்த சூரியோதயத்துக்கும் சதகோடி சூரிய உதயத்துக்கும் முருகனுடைய பாதத்துக்கும் எப்படி comparison ன்னா முருகப் பெருமான் மயில் மேல வர்றார். அந்த நீல வானத்துல பச்சை மயில் மேல முருகப் பெருமானுடைய பாதங்கள் செக்கச்செவேல் ன்னு இருக்கு. அப்படி அந்த பல வர்ணங்கள் கொண்ட தோகை, ‘புரவி’ ன்னு சொல்லாம். அந்த மயில் மேல முருகப் பெருமான் உட்கார்ந்து இருக்கார். அவருடைய பாதங்கள் கோடி சூரியர்கள் உடைய (தேஜஸ்) ஒளியோடு விளங்குகிறது. இந்த முருகப் பெருமானுடைய பாதத்தினுடைய ஒளி, யுக முடிவின் இருளையே போக்குகிறது அப்படிங்கிறார். ‘ஜோதிஸ்’ அந்த முருக பெருமானுடைய பாதம் ஒளி வெள்ளமா வந்து அருணகிரியாருக்கு காட்சி கொடுத்து இருக்கு. இது முதல் வரி.

‘உடலும் உடல் உயிரும் நிலைபெருதல் பொருளென உலகம்

ஒருவி வரு மநுபவன…… சிவயோக சாதனையில்

ஒழுகுமவர் பிறிது பரவசமழிய விழி செருகி

உணர்வு விழி கொடுநியதி…… தமதூடு நாடுவதும்’

நம்முடைய இந்த உடல் இருக்கு. ‘உடலும் உடல் உயிரும்’ – அப்படினா

உடலுமும் உடல்ல இருக்க கூடிய உயிரும் ன்னு ஒரு அர்த்தம். உடலுமம், உடல்லேர்ந்து எப்ப பாத்தாலும் யுத்தம் பண்ணி பிரிஞ்சி போகக் கூடிய உயிரும் ன்னு இன்னொரு அர்த்தம். ஒவ்வொரு பிறவியிலேயும் சண்டை போட்டுண்டு உயிரும் உடலும் பிரியும் இல்லையா இறக்கும் போது, அப்படி அந்த ‘உடலுமுட லுயிருநிலை பெருதல் பொருள்’ – இந்த மாதிரி திருப்பித் திருப்பி பல யோனிகள்ல பிறந்து வாழ்ந்து திரும்பியும் இறந்து, இது அர்த்தமே இல்ல. இந்த உயிர் நிலை பெற வேண்டும். மோக்ஷம் அடைய வேண்டும் என்று அறிந்து கொண்டு, அதை வாழ்க்கையின் பயனாக புரிந்து கொண்டு.

‘என உலகம் ஒருவி’ – உலக விஷயங்கள் பிரபஞ்சத்திலிருந்து மனதைத் திருப்பி.

‘வரு மநுபவன சிவயோக சாதனையில்’ – மநுபவனம்னா மந்திரங்கள். அந்த மந்திரங்களைக் கொண்டு சிவயோக சாதனையில்

‘ஒழுகுமவர்’ – சிவயோக சாதனைகள் எல்லாம் பண்ணக்கூடிய அந்த வேதாந்திகள்,

‘பிறிது பரவசமழிய’ – உலகத்துல பஞ்ச இந்திரியங்களை கொண்டு கண்ணால ஒன்னு பாத்தால் பரவசம். காதால ஒன்னு கேட்டாப் பரவசம் இந்த பரவசங்கள் எல்லாம் அவாளுக்குப் போயிடும்.

‘விழிசெருகி’ – அவாளுடைய ஞானக் கண் திறந்ததனால இந்த ஊனக் கண் மேல சொருகிக்கும்.

‘உணர்வுவிழி’ – ‘உணர்வுவிழி’ன்னா ஞான விழி.

கொடுநியதி – முறையாக அவா எதை நாடிண்டு இருக்கா, எதை தரிசனம் பண்ணறான்னா.. ‘மணநாறு சீறடியே’.

‘உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்

உழலுவன பரசமய…… கலையார வாரமற

உரையவிழ வுணர்வவிழ உளமவிழ உயிரவிழ

உளபடியை யுணருமவர் அநுபூதியானதுவும்

மணநாறு சீறடியே’

பர சமயங்கள் நிறைய இருக்கு. அதுல எல்லாம் நிறைய புஸ்தகம்

எழுதி வைச்சுண்டு ஆரவாரமா என்ன என்னமோ சண்டைபோடறா.

‘பகவானுக்கு உரு உண்டு’ அப்படிங்கிறா. ‘நாங்க சொல்ற இந்த உருவம் தான்’ங்கிறா,

‘அரு’ – ‘பகவானுக்கு உருவம் கிடையாது’ ன்னு ஒரு சமயம்.

‘பகவான் இருக்கார்’ ன்னு ஒரு கட்சி – உளது.

‘பகவானே கிடையாது’ – இலது ன்னு நாஸ்த்திகம் பேசறது.

இப்படி இதுல உழன்று,

உழலுவன பரசமய கலையார வாரமற – இந்த ஆரவாரம் எல்லாம் நின்னு போய்,

உரையவிழ – வார்த்தைகள் எல்லாம் நின்னு போயாச்சு, பேச்சே இல்ல,

உணர்வவிழ – thinking, யோசனைகள் எல்லாம் நின்னு போயாச்சு,

உளமவிழ – மனோலயம் மனசை தாண்டி வந்தாச்சு.

உயிரவிழ – உடல் உயிர் இரண்டுமே இல்லாம இதுக்கு எல்லாம் மேலான,

உளபடியை – எது உள்ள பொருள் என்பதை உணருமவர் – அந்த உணருபவர்கள்.

சீறடியே – அவாளுடைய அனுபவம் எதுன்னா, முருகா உன்னுடைய சீர் அடி தான்.

உறவுமுறை மனைவி மகவெனும் அலையில் எனதிதய

உருவுடைய மலினபவ சலராசி யேறவிடும்

உறுபுணையும் அறிமுகமும் உயரமரர் மணிமுடியில்

உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்

மணநாறு சீறடியே

உறவுமுறை – நாம பிறக்கும் போதே அப்பா, அம்மா, அண்ணா, மாமன், மாமி இப்படி பல உறவுமுறைகள் இருக்கு. அப்புறம் நம்ம சேர்த்துக்கறது மனைவி, மக்கள் இப்படி நிறைய பேர்.. எல்லாரையும் திருப்தி பண்ண பாக்கறோம். அவாள்ட்ட நமக்கு உறவு இந்த வாழ்க்கையில மேலும் கீழுமா இருக்கு. எனது மனமாகிய கப்பல், இந்த சம்சார சாகரத்துல நிறைய மக்கள், உறவுக்காரா இப்படிங்கிற அலை அடிச்சு அடிச்சுஒரு நாள் உடைந்தே போய்டறது.

உருவுடைய – இப்ப நான் எங்க இருக்கேன்னா,

மலின – பாபம் நிறைந்த,

பவசலராசி – இந்த சம்சார கடல்ல மூழ்கிண்டு இருக்கேன்.

என்னுடைய மனமாகிய கப்பல், சுலபமா ஒரு இரண்டு அலை அடிச்ச உடனே உடையற அளவுக்கு weakஆ இருக்கு. இப்ப எனக்கு ஒரு தெப்பம் கிடைச்சா அதை பிடிச்சுண்டு மீள வழி இருக்கு. அந்த ஜலராசி ஏறவிடும் உறுபுணையும் பகவானுடைய பாதம் ., அந்த பகவானுடைய பாதம் என்கிற புணை எப்படி இருக்குன்னா, ரொம்ப strongஆ எந்த அலையையும் தாங்கக் கூடிய அளவுக்கு சக்தியைக் கொடுக்கும். என்னைக் கரை ஏத்தும் உறுபுணையாக பகவானுடைய பாதங்கள் விளங்குகின்றன.

அறிமுகமும் – எனக்கு அந்த பக்தி மார்க்கத்துக்கு அறிமுகமா இருக்கிறது

மணநாறு சீறடியே.

உயரமரர் மணிமுடியில் உறைவதுவும் – அமரர்களுடைய மணிமுடியில் உறைவது முருகப் பெருமானுடைய சீர் அடி அப்படிங்கிறார். நமக்கு முதல்ல பகவான் அறிமுகம் ஆகும் போது ‘இந்திராதி வந்த்யத்வம்’ அப்படிம்பா. ஒருத்தர் யாரு பெரியவாளா நினைக்கிறோமோம் ன்னா, அவாளைநாம யாரு பெரியவாளா நினைக்கிறோமோ அவாள்ளாம் வந்து நமஸ்காரம் பண்ணா, மகாபெரியவாளை ராஜாக்கள் வந்து பார்த்தா ன்னு சொன்னா,’ ஓ அப்ப அவ்வளவு பெரியவர்’ ன்னு நினைக்கிறோம். மகாபெரியவா அந்த ராஜாக்கள் நமஸ்காரம் பண்ணதாலதான் அவர் பெரியவர் இல்ல.

ஆனாலும் நமக்கு அந்த உயர அமரர் மணிமுடியில் உறைவதுவும் மணநாறு சீறடியே ன்னு சொன்ன உடனே தான் ஒரு ஆர்வம் வர்றது. உலைவிலதும் – எந்த ஒரு மாற்றமும் இல்லாதது முருக பெருமானுடைய சீர் அடி.

அடியேன் மனோரதமும் – எனக்கு என்னுடைய மனோரதங்களை எல்லாம் பூர்த்தி பண்ண வைக்க கூடியது அந்த மணநாறு சீறடி.

அடுத்த நாலு வரிகள்லதான் அந்த ஸ்கந்த புராணக் கதைகள் வர்றது.

இதழி வெகுமுக ககன நதியறுகு தறுகணர

இமகிரண தருண உடுபதி சேர் சடாமவுலி

இறைமகிழ உடை மணியொடணிசகல மணிகலென

இமையமயில் தழுவுமொரு திருமார்பிலாடுவதும்

மணநாறு சீறடியே.

ஸூப்ரமண்ய புஜங்கத்துல,

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா

ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்

ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்

ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம்

ன்னு ஒரு ஸ்லோகம்.

பார்வதி தேவியினுடைய மடியில இருந்த குழந்தையை பரமேஸ்வரன் என்கிட்ட வான்னு சொன்னதும், ஓடி வந்த குழந்தையை அள்ளி அணைச்சுக்கிறார் ன்னு ஒரு ஸ்லோகம். அதே கருத்து இந்த பாடல் வரிக்கள்லேயும் இருக்கு.

இதழின்னா கொன்றைப் பூ,

வெகு முக ககன நதி – ஆயிர முகத்து நதி பாலனும்-ன்னு திருவேளைக்காரன் வகுப்புல சொல்வார். அப்படி பலவிதமான முகத்தோட பலவிதமான கிளைகளா ஆகாச கங்கை ககன நதி வறதாம்.

கொன்றைப் பூவையும் கங்காதேவியையும், அருகு- அருகம்புல்லையும், தறுகண் அரவு – பயத்தை கொடுக்க கூடிய வீரம் பொருந்திய அரவு வாசுகியையும், இமகிரண தருண உடுபதி – ‘உடு’ன்னா நட்சத்திரங்கள் -உடுபதின்னா சந்திரன். ‘இமகிரண’ அந்த சந்திரன் பனி கொட்றது. அந்த மாதிரி குளிர்ச்சியான கிரணங்களை கொண்ட தருணவுடு பதி – இளமையான சந்திரன். அப்படினா மூன்றாம் பிறைன்னு அர்த்தம். இதெல்லாம் தன்னுடைய ஜடா முடியில் சேர்த்து கொண்டு இருக்கும் இறை – சிவபெருமான் மகிழ, அவர் ரொம்ப சந்தோஷப் படும் படியாக இந்த முருகப் பெருமானுடைய பாலமூர்த்தி, இடையில கைல, கால்கள்ல எல்லாம் சதங்கைகள் கட்டி இருக்கா. அவர் கட்டிண்டு இருக்கிற உடையிலேயும் நிறைய மணிகள் இருக்கு. இதெல்லாம் ‘கல்’ன்னு சத்தம் இடுதாம்.

உடைமணியொடணிசகல மணி ‘கல்’ என சத்தம் பண்ணும் படியாக, பரமேஸ்வரனுடைய திருமார்பில் ஆடுவதும். மார்பில குதிச்சு விளையாடுறதாம் முருகப் பெருமானுடைய பாதங்கள். எப்பேர்பட்ட திருமார்புனா, இமயமயில் தழுவுமொரு திருமார்பில் ஆடுவதும் – ‘இமயமயில்’ ங்கிறது இங்க பார்வதி தேவி, ஹிமவானுடைய புத்திரி. அந்த இமயமயில் தழுவுமொரு திருமார்பிலாடுவதும் மணநாறு சீறடியே.

அடுத்த வரி, இமையவர்கள் நகரில் இறை குடிபுகுத – இமையவர்கள் உடைய அமராவதிலேர்ந்து சூரபத்மன் இந்திராதி தேவர்களை எல்லாம் விரட்டி விட்டுட்டான். அங்க வேலைக்கார ஆட்களை வைச்சு இருக்கான். இமையவர்கள் நகரில் இறை – இந்திரன் முதலிய தேவர்கள் திரும்பவும் வந்து குடி புகும் படியாகவும்,

நிருதர் வயிறெரி புகுத – முருக பெருமான் அவதாரம் பண்ணதுலேர்ந்து நிருதர்கள் எல்லாம் அவா வயித்துல நெருப்பு கட்டிண்டு இருக்கா. இங்க முருக பெருமான், தேவ சேனாதிபதியாக யுத்தத்திற்கு இன்னும் கிளம்பல. அவர் அவதாரம் பண்ணி இருக்கார். அவர் தளர் நடை பழகும் போதே இவ்வளவு தூரம் நடக்கறது. இந்திரன் ரொம்ப சந்தோஷப் படறான். தனக்கு அமராவதி திரும்ப கிடைக்க போறது, தன்னுடைய கஷ்ட காலம் முடிஞ்சிதுன்னு. அசுர்களல்லாம் வயித்துல நெருப்பு கட்டிண்டு இருக்கா.

உரகர்பதி அபிஷேக மாயிரமும் – ஆதிசேஷ னுடைய ஆயிரம் தலைகளும், அதாவது முருக பெருமான் தளர் நடை பழகும் போது அந்த ஆயிரம் தலைகளும் அதிர்றதாம்.

எழுபிலமும் – ஏழு பாதாளம் வரைக்கும் இருக்கக் கூடிய உலகங்களை ஆதிசேஷன் தாங்கிட்டு இருக்கார். அது எல்லாம் நெறுநெறென முறிய – எல்லாம் நெறுநெறென முறியும் படியாகவும்,

வட குவடிடிய – மேரு மலை இடியும் படியாகவும், இளையதளர் நடைபழகி விளையாடல் கூருவதும் மணநாறு சீறடியே – முருக பெருமானுடைய அப்பேர்பட்ட பிரபாவம், அப்பேர்பட்ட வீரம், சக்தி அதைக் காண்பிக்கிறதுக்காக பாதங்களுடைய பெருமையை சொல்றார்.

அடுத்த இரண்டு வரியில பிள்ளையாரோடு போட்டி போட்டு உலகத்த சுத்தி வந்ததும், வளர்ந்து பின் வள்ளியம்மையைத் தேடி போனது எல்லாம் சொல்றார்.

இனியகனி கடலை பயறொடியல்பொரி அமுதுசெயும்

இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்

இகலி முது திகிரிகிரி நெரிய வளைகடல் கதற

எழுபுவியை ஒரு நொடியில் வலமாக வோடுவதும்

மணநாறு சீறடியே –

பிள்ளையார் அப்படினாலே நிறைய பட்சணங்கள்லாம் பண்றவர். அவருக்குப் பிடிச்ச நெய்வேத்தியங்கள் எல்லாம் லிஸ்ட் போடறார்.

இனியகனி – நிறைய கனி வகைகள்,

கடலைபயறு ஒடியல் – ஒடியல்ன்னா பனங்கிழங்கு, பொரி

அமுதுசெயும் – இதுலாம் விரும்பி உண்ணும்,

இலகுவெகு கட – அவருடைய தலை மேல இருந்து மதஜலம் கொட்டறது . அந்த மதஜலம் கொட்ட கூடிய,

‘விகடம்’ – அவருடைய முகமே ரொம்ப விகடமா சந்தோசமா, சிரிச்ச முகமா இருக்கு, விகட – விகடம் ன்னா பதினாறு நாமாவளில ஒரு பெயர் இருக்கு இல்லையா,

‘அந்த தடபார மேருவுடன்’ – பெரிய மேரு போன்ற அவருடைய அந்த உருவம், அந்த மேருவுடன்.

‘இகலி’ – சண்டை போட்டுண்டு,

முது திகிரிகிரி நெரிய – பழைய மலைகளெல்லாம் நெரியும்படியாகவும் அதாவது அந்த முருக பெருமான் அந்த பழத்துக்காக கணபதிகிட்ட போட்டி போட்டுண்டு உலகத்த பிரதட்சணம் பண்ணறதுக்காக போகிற அந்த வேகத்த சொல்றார், மயில்ல ஏறி, உலகத்த பிரதட்சணம் பண்ணறார். அது எப்படி இருக்குன்னா,

திகிரிகிரி நெரிய வளை கடல்கதற – உலகத்தோடு வளைந்து, சுத்திட்டு இருக்கிற கடல் எல்லாம் கதறுகிறதாம் அவர் போகிற வேகத்துல,

எழுபுவியை ஒருநொடியில் வலமாக வோடுவதும் மணநாறு சீறடியே – இப்படி ஓடுவது எதுன்னா அந்த முருக பெருமானுடைய சீர் அடிகள் ன்னு சொல்றார்.

எறுழிபுலி கரடி அரி கரிகடமை வருடையுழை

யிரலைமரை யிரவுபகல்…… இரைதேர் கடாடவியில்

எயினரிடும் இதணதனில் இளகுதினை கிளிகடிய

இனிதுபயில் சிறுமிவளர்…… புனமீதுலாவுவதும்

மணநாறு சீறடியே.

இந்த காட்டுல இருக்கிற மிருகங்கள் எல்லாம் சொல்றார், எறுழிபுலி கரடியரி, கரிகடமை, வருடையுழை – எல்லா மான் வகைகள், நரி, ஓநாய், கரடி, புலி, ‘அரி’ ன்னா சிங்கம் இந்த மாதிரி மிருகங்கள்லாம் இரவு-பகல் இரை தேடிண்டு இருக்கு.

கடாடவியில் – அடர்த்தியான காட்டில்,

எயினர்கள் – வேடர்கள், வேடர்கள் அமைத்துக் கொடுத்த

‘இதண்’ ன்னா – ஒரு height ல இருக்க கூடிய ஒரு structure, (பரண்)

அது மேல ஏறி நிண்ணுண்டு,

இளகுதினை கிளிகடிய – தினைப் புனத்துல ஆலோலம் ஓட்டுறது ன்னு சொல்லி, சின்னச் சின்ன கல் வைச்சுண்டு, கையில ஒரு சின்ன கவண் இருக்கும். அதுல அந்த கல் வைச்சு சுத்தி அடிச்சா, இந்தத் தினையை சாப்பிட வர்ற கிளிகள் எல்லாம் பறந்து ஓடி போய்டும்.

கிளி கடிய – இந்த கிளிகளை விரட்டுவதற்கு இனிமையாக பயிற்சிகள் பண்ணி கொண்டு இருக்கும் சிறுமி வள்ளியம்மை.

அந்த வள்ளியம்மை எங்கு இருக்காளோ, சிறுமி வளர் புனமீதுலாவுவதும் – அந்த புனத்துல நாரதர் வந்து சொல்றார். அங்க வள்ளியம்மைன்னு ஒருத்தி இருக்கா. உன் மேல ஆசையா இருக்கா அப்படின்ன உடனே, முருகப் பெருமான் எங்க இருக்கான்னு தேடிண்டு அந்த காடெல்லாம் நடந்து போனாராம். அந்த தினைப் புனத்தத் தேடிப் போனார். எந்த பாதங்கள் போச்சு அப்படினா, இந்த மணநாறு சீறடி தான் ன்னு சொல்றார்.

அடுத்த நாலு வரில்ல நாம எப்படி பக்தி பண்ணும் அப்படிங்கிறத காண்பிக்கிறார்.

முதலவினை முடிவில் இரு பிறையெயிறு கயிறுகொடு

முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட

முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை

முடியவருவதும் அடியர் பகைகோடி சாடுவதும்

மணநாறு சீறடியே.

முதலவினை முடிவில் – நம்முடைய வினை முடிவுல நமக்கு இறப்பு வர்றது. முதல்லேர்ந்து ஆரம்பிச்ச வினைகள், அதோட இந்த ஜென்மத்து முடிவுல சேர்த்துண்டது.

இரு பிறை – பிறை போல பிறையோட வடிவில இருக்கக் கூடிய

‘எயிறு’ – பற்கள். அந்த இரண்டு பற்கள் வெளியில துருத்திண்டு இருக்கு.

கயிறுகொடு – அந்த எமன் கையில ஒரு கயிற வைச்சுண்டு,

முதுவடவை விழிசுழல – ‘வடவை’ன்னா வடவாக்கினி ன்னு சொல்லக் கூடிய ஒரு அக்னி. அது போல கடுமையான அந்த பார்வையை வைச்சுண்டு விழிசுழல,

வருகால தூதர்கெட முடுகுவதும் – அப்படி காலதூதர்கள் வந்து அந்த கயிறு போட்டு உயிர எடுக்கணும் ன்னு நினைக்கும் போது, யாரு முருகனுடைய பாதங்களைப் பிடிச்சுண்டு இருக்காளோ அவாளுக்கு அந்த பயம் இல்ல. அந்த கால தூதர்களை இந்த முருகனுடைய பாதம் விரட்டிடறது, அருணெறியில் உதவுவதும் – அருள் நெறிக்கு அறிமுகமும் பாதார விந்தம் தான். அந்த அருள் நெறியில் ஒவ்வொரு step ஆக எடுத்து வைக்க உதவுவதும் மணநாறு சீறடியே.

நினையுமவை முடியவருவதும் – அந்த அருள் நெறியில் போகும் போது உலக விஷயங்கள்லேயோ, இல்ல, இந்த தெய்வ விஷயங்கள்லேயோ நமக்கு வரக்கூடிய சந்தேகங்கள், நமக்கு வரக்கூடியத் தேவைகள் எல்லாத்தையும் பூர்த்தி பண்றதும் இந்த பாதாரவிந்தம் தான்.

அடியர் பகைகோடி சாடுவதும் – யாராவது sincereஆ தெய்வ வழிபாடு பண்ண கிளம்பினா பகைவர்கள் வருவா, பல ரூபங்கள்ல வருவா. அந்த பகைகோடி சாடுவதும் – அந்த பகை எல்லாத்தையும் போக்கறதும் இந்த மணநாறு சீறடி தான்.

மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு

முறியுமலர் வகுளதள முழுநீல தீவரமும்

முருகு கமழ்வதும் – இந்த மலர்களை வர்ணிக்கிறார்.

மொகுமொகென மதுபம் முரல் – மதுபம்ன்னா – வண்டுகள் அது மொகுமொகுன்னு சத்தம் பண்ணிண்டு இந்த பூக்கள் மேல முரல்கின்றன. என்ன பூக்கள்ன்னா குரவு விள வினதுகுறு முறியுமலர் வகுளம் தளம் முழுநீல தீவரம் – இந்த முழுநீல தீவரம்ங்கிறதுக்கு ‘இந்தீவரம்’ ன்னு பேரு. நீலக் கலர்ல இருக்கக் கூடிய இந்தீவர புஷ்பங்கள். ‘முருகு கமழ்வதும்’, அவர் போட்டு இருக்கிறதுனால முருகப் பெருமானுடைய பாதங்கள் நல்ல வாசனையா இருக்கு.

‘முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும்’ – இந்த பக்தர்களுக்கு உலகத்திலேயே மேன்மையான ஒரு பதவியை இந்த பாதங்கள் தருகின்றன. முருகனுடைய பக்தன் அப்படிங்கிறதுக்கு மேல ஒரு பதவி இருக்கா. அப்படி அகில முதன்மை தருவதும்,

விரத முநிவர் கருதரிய தவ முயல்வார் தபோபலமும் – விரத முனிவர்கள் எல்லாம் கூட நினைச்சுப் பார்க்க முடியாத, முருக பக்தி என்ற தவம் பண்ணுபவர்களுக்கு, அவாளுடைய தபஸ்சுக்கு பலனா எது கிடைக்கிறதுனா இந்த பாதங்கள் கிடைக்கிறது ன்னு சொல்றார்.

அடுத்த வரி முருகன்கிட்ட எப்படி சரணாகதி பண்ணனும் அப்டிங்கிறத சொல்லி கொடுக்கிற வரி.

முருக சரவண மகளிர் அறுவர்முலை நுகரும் அறு

முககுமர சரணமென அருள்பாடி யாடிமிக

மொழிகுழற அழுது தொழுதுருகுமவர் விழியருவி

முழுகுவதும் வருகவென…… அறைகூவி யாளுவதும்

இன்னைக்கி இந்த வைகாசி விசாகத்துல முருகப் பெருமான் அவதாரம் பண்ணி, கார்த்திகைப் பெண்கள் பால் கொடுத்து, அம்பாள் சேர்த்தணைத்து அறுமுகனா ஆன தினம் ன்னு கொண்டாடுறா எல்லா கோவில்களிலும்.

அப்படி அந்த மகளிர் அறுவர்முலை நுகரும், ‘அறுமுகா குமரா சரணம் ‘ ன்னு சொல்லி, ‘அருள்பாடி ஆடி’ – ரொம்ப உருகிப் பாடி ஆடி அதை திருப்பித் திருப்பி சொல்லி அந்த சந்தோஷத்துல தொண்டை கத்கதமாகி,

மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் – முருகனை நினைச்சு அழுதுதொழுது உருகுகணும்,

அப்படி உருகுமவர் விழியருவி முழுகுவதும் – அவாளுடைய அந்தக் கண் ஜலத்துல அந்த பாதங்கள் மூழ்குகின்றன ன்னு சொல்றார். உட்கார்ந்து திருப்புகழ் பாடி கண் ஜலம் விட்டோம்னா அந்த கண் ஜலத்துல முருகனுடைய பாதங்கள் இருக்கும். அப்படின்னா என்ன அர்த்தம் பக்த்ர்களுக்கு முருக பெருமான் ரொம்ப பக்கத்துல இருக்கார். அவருடைய அநுக்கிரகம் நிச்சயம் கிடைக்கும் ன்னு அர்த்தம்.

வருகவென அறைகூவி யாளுவதும் – அப்படி இடையறாம முருகனைப் பாடிண்டு இருந்தா, ‘வா’ ன்னு கூப்பிட்டு ‘அறைகூவி ஆளுவதும்’ நம்மளை சேர்த்துப்பார்.

முடியவழி வழியடிமை யெனுமுரிமை அடிமைமுழு

துலகறிய மழலைமொழி…… கொடுபாடும் ஆசுகவி

முதலமொழி வனநிபுண மதுப முகரித மவுன

முகுள பரிமள நிகில…… கவிமாலை சூடுவதும்

அருணகிரி நாதருக்கு முருகப் பெருமான் தரிசனம் கொடுத்து ‘சும்மா இரு சொல் அற’ ன்னு சொன்னார். அப்படி அவர் தபஸ் பண்ணி ஒரு தெய்வப் பிறவி ஆன உடனே முருகப் பெருமான் ‘முத்து முத்தா என்னைப் பாடு’ ன்னு சொல்லி , ‘முத்தை தரு பத்தி திருநகைன்னு’ பாட ஆரம்பிக்கிறார். அந்தப் பாடல்களாகிய கவி மாலைகளை முருகப் பெருமானுடைய பாதங்கள் சூடி இருக்கின்றன அப்படிங்கிறத இந்த வரிகள்ல சொல்றார்.

‘முடிய வழிவழி அடிமை எனும் முரிமை’ – நான் ஜென்ம ஜென்மாவா, தலைமுறை தலைமுறையா, உன்னுடைய அடிமை. எனக்கு உன்னுடைய அடிமையா இருக்கிறதுக்கு உரிமை இருக்கு ன்னு சொல்றார்.

அப்படிப் பட்ட நான் முழுதுலகறிய – இது உலகத்துக்குத் தெரியும் படியாக இவன் முருகனுடைய அடிமை என்று உலகத்துக்குத் தெரியும் படியாக என்னுடைய ‘மழலை மொழி கொடுபாடும்’ – மழலைமொழிய வைச்சுண்டு ஆசுகவி, மதுர கவி, வித்தாரக் கவி, சித்திரக் கவி ன்னு நாலு விதமான கவிதைகள் இருக்கு. அதெல்லாம் அருணகிரிநாதர் பாடி இருக்கார். திருஞான சம்பந்தர் எப்படி பலவிதமான கவிதை பாடி இருக்காரோ அதே மாதிரி இவரும் பாடி இருக்கார்.

‘முதலமொழி வன’ – நான் சொல்ற அந்த வார்த்தைகள் எல்லாம்

‘நிபுண மதுப முகரித’ – நிபுணர்களான புத்திமான்களான மதுபம் – தேனீக்கள் முகரித – திருப்புகழ் என்ற பாமாலையில் புத்திமான்கள் என்ற தேனீக்கள் இருக்காளாம்.

‘மவுன முகுள’ – என்னுடைய மவுனத்தை விட்டு ரொம்ப வாசனையான இந்த ‘ஞான வாசம் வீசி பிரகாசியா நிற்ப, மாசிலோர் புத்தி யளிபாட மாத்ருகா புஷ்ப மாலை’ ன்னு பாடினார் இல்லையா. அப்படி அந்த பரிமள நிகில கவிமாலை சூடுவதும் மணநாறு சீறடியே. நான் பாடின எல்லா பாட்டையும் இந்த பாதங்கள் ஏத்துண்டுடுத்து ன்னு சொல்றார்.

‘மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய

மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

வருகருணை வரதன் ‘

இந்த இரண்டு வரி விஷ்ணு பகவானுடைய கதைகள். அதுல மதசிகரி – கஜேந்திரன் என்ற யானை ,

கதறி – ‘ஆதி மூலமே அநாத ரக்ஷகா காப்பாத்து’ என்று கதறின போது,

முது முதலை கவர் தர – ஒரு முதலை வந்து அதனுடைய கால்ல பிடிச்சுடுத்து,

நெடிய மடுநடுவில் – ஒரு மடுல வருஷக்கணக்கா யானையும் முதலையும் ஒன்னைஒன்னு இழுத்துண்டு இருக்கு.

அப்ப இந்த யானைக்கு பூர்வ ஜென்ம வாசனையினால தான் ஒரு விஷ்ணு பக்தன் என்கிற ஞாபகம் வந்த உடனே ‘ஆதி மூலமே என்னை காப்பாத்து’ ன்னு சொன்ன உடனே அந்த வார்த்தை காதுல விழுந்த உடனே

‘வருகருணை வரதன்’ – வெகு விரைவில் ஓடி வந்து கருணை புரிந்த

வரதன் என்கிற வார்த்தை சொல்றார். இங்க காஞ்சிபுரத்துல கூட கஜேந்திர வரதர் ன்னு பேரு. இந்த கஜேந்திரனுக்கு அனுக்கிரகம் பண்ண சுவாமி தான் வரதன் ன்னு சொல்றா. அப்படி வருகருணை வரதன்.

இகல் இரணியனை நுதியுகிரின் வகிரும் அடல் அரி – அடல் அரி ன்னா வீரம் பொருந்திய (சிங்க உருவில் வந்த) விஷ்ணு பகவான்,

இரணியனை – ஹிரண்ய கசிபுவை.

நுதி ன்னா நகம், நுதியுகிரின் வகிரும் அடல் அரி- நகத்தினால கிழித்து போட்ட நரசிம்ம சுவாமி ன்னு சொல்றார்.

‘வடிவு குறளாகி மாபலியை வலிய சிறையிட’ – வாமன மூர்த்தியாக வந்து மகாபலியை சிறை பிடிப்பதற்காக,

வெளியின் முகடு – ஆகாசத்தினுடைய முகடு, அந்த மேல இருக்க கூடிய அந்த edge.

கிழி பட – வானமே கிழியும் படியாக

வளருமுகில் நிருதன் – பெருசா வளர்ந்து ஆகாசத்தை அளந்தார்.

இருபதுவாகு பூதரமும் – இருபது தோள்களும்,

மகுடமொரு பதுமுறிய – பத்து மகுடங்களும் முறிந்து விழும் படியாக

அடுபகழி விடுகுரிசில் – ரொம்ப தீர்க்கமான அம்புகளை விடும் குரிசில். அது யாரு? ராமர், இப்படி இந்த நாலு விருத்தாந்தத்தையையும் சொல்லி, இந்த விஷ்ணு பகவானுடைய மருகன் ன்னு சொல்றார்.

மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு  ……  விசையாதி மூலமென

வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவு  ……  குறளாகி மாபலியை

வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிரு  ……  பதுவாகு பூதரமும்

மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில் மருகன்” – ன்னு அழகா ஒரு நிமிஷத்துல இந்த கதைகளையெல்லாம் நினைக்கும் படியா சொல்றார்.

நிசிசரர் தளமும் வரு தாரகாசுரனும்

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி

மறுகி முறையிட முனியும் வடிவேலன் –

வேலைக் கொண்டு சூரபத்மனையும், கிரவுஞ்ச மலையையும், அலை கடலையும் ‘அய்யோ என்னை விட்டுடு’ ன்னு கதறும்படியாக கோபித்துக் கொண்ட வடிவேலன் ன்னு சொல்றார்.

நீலகிரி மருவுகுரு பதி – நீலகிரிங்கிறது திருத்தணின்னு சொல்லுவா அதனால இதை திருத்தணி பாடல்ன்னு நினைச்சுடலாம். நீலகிரியில் மருவும் குருபதி அங்க இருக்கக் கூடிய நம்முடைய குரு. அடுத்த ஒரு இரண்டு வரியில அம்பாளுடைய நிறைய நாமங்களை சொல்றார். எப்பவுமே ‘நாம பாராயண ப்ரீதா’ ன்னு அம்பாளை சொல்லும் போது நாமாவளியா அடுக்குவார் அருணகிரி.

யுவதி பவதி பகவதி மதுர

வசனி பயிரவி கவுரி…… உமையாள் த்ரிசூலதரி

வநஜை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை

வநிதை அபிநவை அநகை…… அபிராம நாயகி –

ன்னு இத்தனை நாமாவளி சொல்றார்.

யுவதி ன்னா சின்ன பெண் ன்னு அர்த்தம்.

பவதி – பவனுடைய மனைவி பவதி.

பகவதி- பகவானுடைய மனைவி பகவதி

மதுரவசனி – இனிமையான வாக்குடையவள்,

பயிரவி – பயங்கரமானவள்,

கவுரி – தங்க நிறம் கொண்டவள்,

உமையாள் – பார்வதி. பர்வத குமாரி,

திரிசூலதரி – திரிசூலத்தை வைச்சுண்டு இருக்கா,

வநஜை – தாமரை போன்றவள்

மதுபதியமலை – தூய்மையானவள்,

விசயை திரிபுரை – திரிபுரனை எரித்தவனுடைய மனைவி திரிபுரை,

புநிதை – தூய்மையானவள்,

வநிதை – இளமையானவள்,

அபிநவை – புதுமையானவள்,

அநகை – பாபம் அற்றவள்,

அபிராம நாயகி – தெவிட்டாத அழகு படைத்தவள்,

அபிராம நாயகி தன் மதலை – இந்த அபிராம நாயகியுடைய குழந்தை.

மலை கிழவன் -அவன் குழந்தை தான் ஆனா மலைகளுக்கு எல்லாம் ராஜா, மலை கிழவன். அந்த ‘குழந்தை..கிழவன்’ என்கிற வார்த்தையை வைத்து விளையாடுறார்.

அநுபவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின்……

மணநாறு சீறடியே!

இந்த சீர் அடி எங்க இருக்குன்னா நாலு வேதங்களுடைய முதலிலும் இருக்கு, நடுவுல இருக்கு, முடிவுலையும் இருக்கு. உபநிஷத்துல இருக்கு. எல்லா வேத காண்டங்கள்லயும் இருக்கு ன்னு அந்த பாதார விந்தங்களினுடைய பெருமை. சீர் பாத வகுப்பு ஒரு மகா மந்திரம். சந்நியாசிகள் பிரணவ ஜபம் பண்ணா உலக விஷயங்கள்லாம் மறந்துரும். தன்னுடைய பேரு, ஊரு, கோத்ரம் எல்லாம் மறந்து அவாளுக்கு நிர்குண பிரம்மத்தினுடைய தரிசனம் கிடைக்கும், அனுபவம் கிடைக்கும்ன்னு சொல்றா. இந்த சீர் பாத வகுப்பை படிச்சுண்டே வந்தா இந்த உலகம் பொய் ன்னு நினைச்சு கைவிடவே வேண்டாம். இதுல இருந்துண்டு இருக்கும் போதே, சீர் பாத வகுப்பு படிச்சுண்டே வந்தா, அந்த முருகப் பெருமானுடைய திருவடி தரிசனம் கிடைக்கும். அதுவும், அந்த ஞானிகளுக்கு ஏற்பட்ட அனுபவமும் ஒண்ணு தான் ன்னு இந்த சீர் பாத வகுப்புலேயே சொல்றார். இப்பேர்பட்ட அழகான ஒரு தமிழ் கவிதை.

‘இதைப் பேசிப் பணிந்து உருகும் நேசத்தை இன்று தர இனி வர வேண்டும் முருகா’ ன்னு வேண்டிப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு, ஹர ஹரோ ஹர

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.