Categories
Sankshepa Ramayanam

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning

வால்மீகி ராமாயணம் முதல் சர்க்கம் சங்க்ஷேப ராமாயணத்துல பத்து பத்து ஸ்லோகமா அர்த்தம் பாத்துண்டுவறோம். நேத்திக்கு 20 ஸ்லோகம் பாத்ததுல, தரசரத மஹாராஜா ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் பண்ணி வைக்கணும்னு, ஜனங்களோட கலந்தாலோசித்து முடிவெடுத்தார். அதை மிக சந்தோஷமாக ஜனங்களுக்கு சொல்றார். ஜனங்கள் எல்லாம் ரொம்ப கொண்டாடறா.. ஊரையே அலங்காரம் பண்றா.. இது வரை நேத்திக்கு ஸ்லோகங்கள். இன்னைக்கு 21ம் ஸ்லோகம் 2 வது பகுதி.

यौवराज्येन संयोक्तुमैच्छत्प्रीत्या महीपति: |
तस्याभिषेकसम्भारान्दृष्ट्वा भार्याऽथ कैकयी ।।1.1.21।।
யௌவராஜ்யேன ஸம்ʼயோக்துமைச்ச²த்ப்ரீத்யா மஹீபதி: |
தஸ்யாபி⁴ஷேகஸம்பா⁴ராந்த்³ருʼஷ்ட்வா பா⁴ர்யா(அ)த² கைகயீ ||1.1.21||

அந்த ராம பட்டாபிஷேகத்துக்கு “அபி4ஷேக சம்பா4ரான்” அபிஷேகத்திற்கு சாமான்கள் எல்லாம் அதாவது புண்ய தீர்த்தங்கள் பல விதமான நதிகளிலேர்ந்தும் புண்ய தீர்த்தங்கள் எல்லாம் வந்திருக்கு. அப்பறம் சிங்கம், எருது, யானை, பசு, கன்யா பொண்கள் அலங்காரம் பண்ணிண்டு, வைஸ்யர்கள், வேதியர்கள், க்ஷத்ரியர்கள், மந்திரிகள், ப்ரோகிதர்கள் இப்படி எல்லாரும்.. எல்லா ஏற்பாடும் நடந்துண்டிருக்கு. இதை ஊரே அலங்காரம் பண்ணி, கௌசல்யை எல்லாருக்கும் தானம் தர்மம் பண்றா.. இதெல்லாம் பார்த்த தசரதருடைய மனைவி கைகேயி- அப்டின்னு சொல்றார்… தசரதருடைய மனைவி கைகேயிகிட்ட இதை வந்து சொன்னது கூனிங்கற ஒரு தாசி. அவ பாத்துட்டு வந்து கைகேயிகிட்ட சொல்றா.. என்ன உனக்கு இவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கு தெரியலையானு சொல்றா.. என்ன ஆபத்து…ன்னா ராமருக்கு பட்டாபிஷேகம் பண்ணப்போறார் தசரதர் நாளைக்கு அப்டின்னு சொன்னவுடனே, ஒரு முத்து மாலையை கொடுத்து ஆஹா.. இதுக்கு மேல சந்தோஷமான செய்தி எனக்கு நீ சொல்ல முடியாது “ ராமே வா ப⁴ரதே வா(அ)ஹம்ʼ விஶேஷம்ʼ நோபலக்ஷயே “ , எனக்கு ராமனுக்கும் பரதனுக்கும் எந்த வித்யாசமும் கிடையாது. ராமனுக்கு பட்டாபிஷேகம்னா பரதனுக்கு பண்ணின மாதிரி தானே .. எனக்கு அவ்வளவு சந்தோஷம் இதுல. இந்தா இதை வாங்கிக்கோ. உனக்கு இன்னும் வேற எதாவது வேணும்னாலும் கேட்டு வாங்கிக்கோ அப்டிங்கறா. அப்படி ஒரு பளிங்கு மனசு படைத்தவளா அவ இருக்கா. அப்படி பட்டவளை இந்த கூனி “ அத்யந்த பராக்ரமை: வசோபி: “ அப்டிங்கற மாதிரி The pen is mightier than the sword னு சொல்ற மாதிரி அவ பலவிதமான பேச்சு பேசி இவ மனசை கலைக்கறா. பரதனுக்கு ஆபத்து ராமன் ராஜாவாயிட்டான்னா.. ராமனும் லக்ஷ்மணனும் ஒரு கட்சி.. பரதனும் சத்ருக்னனும் ஒரு கட்சி. அதனால ராமன் ராஜாவானால் பரதனுக்கு உயிருக்கே ஆபத்து.. மேலும் நீ ரொம்ப.. தசரதர் உன் பேச்சை கேட்கரார்னு, கௌசல்யைய ரொம்ப ஏளனப்படுத்தியிருக்க.. இப்ப கௌசல்யைக்கு வாழ்வு வந்ததுனா உனக்கு தாழ்வு வரும். எங்களை மாதிரி நீயும் பிச்சைக்காரியா ஆயிடுவ.. தாசி ஆயிடுவ.. அப்டின்னு பலதை சொன்னவுடனே அவ மனசு மாறிடறது. பொறாமை வந்துடறது அவளுக்கு. அவ என் புள்ளை பரதன் ராஜாவாகணும். ராமன் காட்டுக்கு போகணும் இதுக்கு என்ன வழி சொல்லுனு கேட்டவுடனே, கூனி, முன்ன ஒருதடவை நீ தசரதரோட உயிரை காப்பாத்தின.. அப்ப ரெண்டு வரம் கொடுத்தார். அந்த வரத்தை கொண்டு பரதனை பட்டாபிஷேகம் பண்ணணும். ராமனை 14 வருஷம் காட்டுக்கு அனுப்பணும் அப்டின்னு கேளு தசரதரை அப்டின்னு சொல்லி கொடுக்கறா. இது கைகேயிக்கு ரொம்ப புடிச்சுடறது. இதைக் கொண்டு தசரதர் எப்பவும் போல சாயங்காலம் ஆனால் கைகேயியை பார்க்க வருவார். அந்த மாதிரி வரார். வரும் போது இவ கோபக்ருஹத்துல உட்கார்ந்திருக்கா கைகேயி. எல்லா அணிகலன்களையும் தூக்கிப் போட்டுட்டு எனக்கு மாலையும் வேண்டாம் சந்தனமும் வேண்டாம் எனக்கு எந்த சுகமும் வேண்டாம் அப்டின்னு .. அந்த பேச்செல்லாம் சுமங்கலிகள் பேசக்கூடாதுன்னு தெரியறது.. அவ சொன்ன மாதிரியே அதெல்லாம் இல்லாமலே போய்டுத்து அவளுக்கு. அப்படி ரொம்ப கடுமையான கோபத்துல அங்க உட்கார்ந்துண்டு தசரதர் வந்தவுடனே ரொம்ப அவர்கிட்ட கோபத்தை காண்பிக்கிறாள். அவர் என்னம்மானு மடில போட்டுண்டு ஏன் நீ கோச்சுக்கற ஆண் பிள்ளைகளுக்குள் ராமன் தான் எனக்கு உயிர். பெண்களிலே நீ தான் எனக்கு உயிர் இது உனக்கு தெரியாதா.. உனக்காக நான் என்ன வேணா பண்ணுவேன். எனக்கு உயிருக்கும் மேலான ராமன் மேல ஆணை உனக்கு என்ன வேண்டும்னு சொல்லு நான் செய்யறேன் அப்டின்னு சொல்றார். அப்ப அவ இப்படி கேட்கறா என்ன கேட்கறான்னா..
पूर्वं दत्तवरा देवी वरमेनमयाचत।
பூர்வம்ʼ த³த்தவரா தே³வீ வரமேனமயாசத
முன்ன குடுத்த வரத்தைக்கொண்டு கைகேயி கேட்கறா..

विवासनं च रामस्य भरतस्याभिषेचनम् ।।1.1.22।।
விவாஸநம் ச ராமஸ்ய ப4ரதஸ்யாபி4ஷேசநம் ৷৷1.1.22৷৷
ராமன் வனவாசம் போகணும் 14 வருஷம். பரதனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைக்கணூம் அப்டின்னு கேட்டவுடனே ரொம்ப தவிச்சுடறார் தசரதர். என்ன இந்த மாதிரி நீ பேசினதே கிடையாதே எங்கிட்ட.. எப்பவுமே அன்பா இருப்ப நீ இந்த மாதிரி பேசறியே யார் உனக்கு இப்படி சொல்லி குடுத்தா.. குலத்தையே அழிக்கற கார்யமாச்சே இது.. ராமன் என்ன தப்பு பண்ணினான். ஒரு தப்பும் பண்ணாத ராமனை காட்டுக்கு அனுப்பினா ஜனங்கள்ளாம் என்னை எப்படி மதிப்பா.. ஒரு பிராமணன் குடிச்சிட்டு போனான்னா எப்படி காறி துப்புவாளோ அப்படி துப்புவாளே… ஒரு ரிஷி பொய் சொன்னா மாதிரி என்னை ஜனங்கள்ளாம் வெறுப்பாளே .. பொண்டாட்டி பேச்சை கேட்டுண்டு நேத்திக்கு ராமனுக்கு பட்டாபிஷேகம்னு சொன்னதை இன்னிக்கு பொழுது விடிந்ததும் பரதனுக்கு பட்டாபிஷேகம்னு சொல்றார் அப்டின்னு என்னை வந்து உலகமே ஏசும்படியா நான் உயிரை விட வேண்டியிருக்கும். தயவு பண்ணு. உன் கால்ல விழறேன்னு கெஞ்சி பாக்கறார்.
“ந கிஞ்சிதா³ஹாஹிதமப்ரியம்ʼ வசோ ந வேத்தி ராம꞉ பருஷாணி பா⁴ஷிதும்
கத²ன்னு ராமே ஹ்யபி⁴ராமவாதி³னி ப்³ரவீஷி தோ³ஷான்கு³ணநித்யஸம்மதே “ ||2.12.110||
ராமன் கடுமையா ஒண்ணுமே பேசமாட்டானே அவன்கிட்ட போய் இந்த கடுமையான கொலை தண்டனைக்கு சமமான வார்த்தையை நான் எப்படி சொல்வேன். என் குழந்தை, நான் இந்த வார்த்தையை சொன்னேன்னா, இதென்ன பேச்சுனு சொல்லி என்னை புடிச்சு ஜெயில்ல போட்டா நான் சந்தோஷப்படுவேன். அவன் பண்ண மாட்டானே! அவன் சரியப்பா இதோ கிளம்பறேன்னுனா சொல்வான். அப்டின்னு ரொம்ப தவிக்கிறார். ஆனா என்ன பண்றது.. அவ பிடிவாதம் புடிச்சுடரா..
स सत्यवचनाद्राजा धर्मपाशेन संयत: |
विवासयामास सुतं रामं दशरथ: प्रियम् ।।1.1.23।।
ஸ ஸத்யவசநாத்³ராஜா த⁴ர்மபாஶேன ஸம்ʼயத: |
விவாஸயாமாஸ ஸுதம்ʼ ராமம்ʼ த³ஶரத²: ப்ரியம் ||1.1.23||
அவர் சத்யசந்தராக இருக்கறதால குடுத்த வார்த்தையை காப்பாத்தணும்னு நெனைச்சதனால, த4ர்மபாஶேந – தர்மம்ங்கற கயறால கட்டப்பட்டவரா ஆய்டறார். அவரால ஒண்ணும் பண்ண முடில. எனக்கு என் புள்ளையை பார்க்கணும்னு சொல்றார். சுமந்திரர் போய் அழைச்சிண்டு வரார். ஜனங்கள்ளாம் ராமர் தேர்ல ஏறிண்டு கைகேயி அரண்மனைக்கு வர்ரதை பார்த்து வழில நின்னுண்டு, ராமரோட பெருமையை பேசறா.. சீதையோட பாக்யத்தை பேசறா. அந்த ராமன் கண்ணுலேர்ந்து மறைஞ்சா கூட அவா மனசுலேர்ந்து மறையவே இல்ல. அப்படி ராமன்ட்ட அவனோட உருவத்துல ப்ரியமா இருக்கா அவனோட குணத்துல கட்டுபட்டு இருக்கா..
யஶ்ச ராமம்ʼ ந பஶ்யேத்து யம்ʼ ச ராமோ ந பஶ்யதி ||2.17.14||
நிந்தி³த ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மா(அ)ப்யேனம்ʼ விக³ர்ஹதே.
அப்டின்னு யார் ராமனை பார்க்கலையோ அவனை ஜனங்கள்ளாம் வைய்யறா.. என்னடா ராமர் போறார் நீ எங்கயோ போய்ட்ட னு ராமன் தன்னை பார்க்கலைனா அவாளே நொந்துக்கறா.. ஐயோ ராமன் என்னை பாக்கலையேனு …அப்படி ராமனிடம் ப்ரியமா இருக்கா.. ராமன் அப்பா தாத்தா எல்லாரையும் விட நன்னா ஆட்சி பண்ணுவான். நம்ப தான் ரொம்ப கொடுத்து வைத்த ஜெனெரேஷன் அப்டின்னு பேசிக்கறா.. அதெல்லாம் இருக்கட்டும் இன்னிக்கு பட்டாபிஷேகம் பண்ணி அவனை பாக்கணும். இன்னிக்கு அந்த யானை மேல ஏறி வரும் போது அவனை பாக்கணும். அப்பறம் நம்ப சுகமா வாழ்வது இருக்கட்டும் இன்னிக்கு இந்த பாக்யம் கிடைச்சது நமக்கு.. அப்படின்னு ஒருத்தர்க்கு மேல ஒருத்தர் பேசி சந்தோஷப்பட்டுண்டு இருக்கா. ராமன் கைகேயி அரண்மணைக்குள்ள போறான். வெளில ஜனக்கடல் ராம(ச்)சந்திரனுடைய வருகையை நோக்கி காத்துண்டிருக்கு. உள்ள போனா தசரதர் அவனை பார்த்தவுடனே மேலும் கஷ்டப்பட்டு மயங்கி விழறார். கைகேயி கிட்ட என்னம்மா என்ன ஆச்சுன்னு கேட்டவுடனே நான் அவர்ட்ட ரெண்டு வரம் கேட்டிருக்கேன். அவர் அதை குடுத்துட்டு இந்த மாதிரி தவிக்கிறார். நான் சொன்னா நீ கேட்பாய் என்றால் உன்னிடம் நான் சொல்றேன்னவுடனே என்னம்மா என்னை பார்த்து இப்படி பேசறேள்.. நான் தசரத மஹாராஜா நெருப்புல விழுன்னா விழுவேன். விஷத்தை குடின்னா குடிப்பேன். என்னை பார்த்து .. இத்தனை வருஷத்துல எனக்கு ஒரு reputation இல்லையா 25 வருஷத்துல .. சொன்னா கேட்பான் ராமன்னு கூட ஒரு நம்பிக்கை உங்களுக்கு இல்லையா.. என்ன வேணாலும் சொல்லுங்கோ நான் பண்ணுவேன் ராமோ ந த்விர்பாஷதே – ராமன் வார்த்தை மாத்தி பேசமாட்டான். “ஓக பாணம் ஓக மாட்ட ஓக பத்தினி”- அந்த மாதிரி நான் சொன்ன வார்த்தையை மீற மாட்டேன். சொல்லுங்கோன்னவுடனே இது மாதிரி நான் வரம் கேட்டேன். நான் ஒண்ணும் பிச்சை கேட்கலை. அவர் உயிரை காப்பாத்தியிருக்கேன். அதனால அவர்கிட்ட ரெண்டு வரம் கேட்டேன். நீ பதினாலு வருஷம் காட்டுக்கு போகணும். பரதனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைக்கணும். அப்டின்னவுடனே ராமர், அதனால என்ன பரதனுக்கு ராஜ்யம்னா நானே கொடுப்பேனே அதென்னத்துக்கு தசரதர் வரம் கேட்டு.. அப்டில்லாம் கேட்டு… ஹே ராமா நீ காட்டுக்குப்போ பரதனுக்கு ராஜ்யம் குடுக்கணும்னு நீங்க சொன்னாளே கேட்பேனே.. அப்படி பேசறான் அவன். தசரதர் மேலும் கஷ்டப்படறார் இந்த வார்த்தையை கேட்டு. அவர் ராமான்னு சொல்றார். பரதனை அழைச்சிண்டு வாங்கோன்னு சொல்றான் ராமன்.. அதை எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீ இன்னிக்கே கிளம்பு என சொல்றா அவ.. இந்த மாதிரி பேசினதை கேட்டதும் ராமருக்கு வருத்தமா இருக்கு.
நாஹமர்த²பரோ தே³வி லோகமாவஸ்துமுத்ஸஹே|
வித்³தி⁴மாம்ருʼஷிபி⁴ஸ்துல்யம்ʼ கேவலம்ʼ த⁴ர்மமாஸ்தி²தம்||2.19.20||
எப்படியோ சம்பாதிச்சு இந்த உலகத்துல சுகமா வாழணும்னு நினைக்கறவன் கிடையாதும்மா நான். ரிஷிகளை போல தர்மத்தை முக்யமா நினைச்சு வாழ்க்கை நடத்துபவன். இதோ ஒரு மணி நேரம் குடுங்கோ நான் போய் சீதைட்ட சொல்லிட்டு அம்மாட்ட உத்தரவு வாங்கிண்டு கிளம்பறேன் அப்டின்னு சொல்லிடறான்.

விவாஸயாமாஸ ஸுதம்ʼ ராமம்ʼ த³ஶரத²: ப்ரியம் ||1.1.23||
தசரதர் இதுக்கு ஒத்துண்டார்னா என்ன அர்த்தம். சத்யத்தை மீறி நரகத்துல விழுந்துடுவோமோனு பயம் இருக்கு. அந்த பயம் நீங்க படாதீங்கோப்பானு சொல்றான் ராமன். நீங்க கவலைப்படாதீங்கோ. நான் இந்த வார்த்தையை கேட்பேன். அது தான் right அப்டின்னு சொல்லி அப்பாவையும் சமாதானப்படுத்திட்டு
स जगाम वनं वीर: प्रतिज्ञामनुपालयन्।
पितुर्वचननिर्देशात्कैकेय्या: प्रियकारणात् ।।1.1.24।।
ஸ ஜகா³ம வனம்ʼ வீர: ப்ரதிஜ்ஞாமனுபாலயன் |
அப்பா கொடுத்த சத்தியத்தை காப்பாத்திக்கொண்டு பிதுர் வாக்கியத்தை முக்கியமாக நினைச்சு அவன் காட்டுக்குப் போனான்.

பிதுர்வசனநிர்தே³ஶாத்கைகேய்யா: ப்ரியகாரணாத் ||1.1.24||
அப்பாவோட வார்த்தைக்கு மட்டுமில்ல.. கைகேயிக்காகவும் அவன் காட்டுக்குப்போனான். கைகேயிக்கு பரதனை பட்டாபிஷேகம் பண்ணி பாக்கணும். அவன் ராஜாவாகணும் அப்டிங்கற எண்ணம் வந்துடுத்தோல்யோ .. அது தான் நடக்கட்டுமே.. அப்டின்னு ராமர்கு .. அதுல அவ்வளவு சந்தோஷப்படறார் அவர். அந்த அளவுக்கு தம்பிகள் மேல அன்பு வச்சிருக்கார். அந்த ராமர் அங்கேர்ந்து கிளம்பும்போது லக்ஷ்மணனுக்கு கடும் கோபம் வருது.. ஒரு தப்பும் பண்ணாத ராமருக்கு வனவாசமா அப்டின்னு. ஆனா பின்னாடியே போறான். ஏன்னா அவனுக்கும் ராமரை போலவே குணம். ராமரை மீறி எதுவும் பண்ண மாட்டான். அதுக்கப்பறம் கௌசல்யா அரண்மனைல நடந்ததெல்லாம் இந்த சங்க்ஷேப ராமாயணத்துல இல்லை.. அவா கௌசல்யா அரண்மனைக்கு வரா.. அங்க கௌசல்யை தங்கத்தட்டுல சாப்பாடு குடுத்து தங்கப்பலகைல உட்கார்ங்கறா. அம்மா நான் தர்ப்பைபாய்ல உட்கார வேண்டிய வேளை வந்துடுத்து.. பெருந்தகையான அப்பா என்னை பதினாலு வருஷம் காட்டுக்கு போக சொல்லிருக்கார்னவுடன் அவ மூர்ச்சை போட்டு விழுந்துடறா. அவளை சமாதானப்படுத்தினவுடனே அவ சொல்றா.. நான் இதுக்கு அனுமதிக்கவே மாட்டேன். என்னத்துக்கு இதை நான் அனுமதிக்கணும்? நீ எனக்கு சிஷ்ருஷை பண்ணிண்டு இங்கயே இரு. என் சக்களத்தி சந்தோஷத்திற்காக இந்த காரியத்தை பண்ணுவதை நான் ஏன் அனுமதிக்கணும் அப்டின்னு சொல்றா. அப்ப ராமர் சொல்றார்.. அம்மா, கைகேயி தசரதரை கைவிட்டுட்டாள். நானோ நீயோ சுமந்திரையோ லக்ஷ்மணனோ அது மாதிரி பண்ணக்கூடாது. இந்த நேரத்துல தசரதருக்கு துணையாக இருக்கணும். அது தான் உன்னுடைய கடமை. என்னுடைய கடமையும். அப்பா பேச்சை கேட்டு ஒருத்தருக்கு கெடுதலே வந்தது கிடையாதம்மா அப்டிங்கறார். அதற்கு அவர் பரசுராமர் கதையும், அந்த மாதிரி அப்பா பேச்சை கேட்டு தப்பு பண்ணின மாதிரி தோணினாலும், கஷ்டப்பட்ட மாதிரி தோணினாலும் பின்னாடி நன்மையடைந்த அந்த மாதிரி கதைகளை சொல்லி, அப்பா பேச்சை கேட்டு ஒருத்தர்க்கு கெடுதல் வராது. நான் போய்ட்டு வரேன். எனக்கு நீ ஆசீர்வாதம் பண்ணு அப்டின்னவுடனே அவ சொல்றா. அவளுக்கு புரிஞ்சுடுத்து இவன் மாற மாட்டான்னு. அப்ப கௌசல்யை சொல்றா. என்னை அழைச்சிண்டு போ. ஒரு மானாட்டம் pet animal மாதிரி என்னை வச்சுக்கோ. இங்க இருந்தா நான் உயிர் வாழ மாட்டேன். இந்த கைகேயி கிட்ட என்னை விட்டுட்டு போகாதே அப்டின்னு கெஞ்சறா. அப்ப அவர் சொல்றார் ராமர், ஒரு கோவில்ல ஒரு பூஜையும் பண்ண வேண்டாம். ஒரு மந்திரமும் ஜெபிக்க வேண்டாம். கணவனை தெய்வமாக வச்சிண்டிருக்கறவாளுக்கு வேரெதுவுமே வேண்டாம். அதனால ஒரு பெண்ணுக்கு பர்த்ரு சிஷ்ருஷை தான் எல்லாத்துக்கும் மேலான தர்மம். அதனால நீ உன் கணவனோட தான் இருக்கணும். அப்பா உயிரோட இருக்கும்வரை அவரோட தானே இருக்கணும். அவரை விட்டுட்டு எப்படி நீ வர முடியும் அப்டின்னு சொல்றார். அதையும் கேட்டுக்கறா கௌசல்யை. அவ்வளவு உத்தமி. எங்களுக்கு ஸ்வஸ்தீனம் பண்ணி ஆசீர்வாதம் பண்ணி அனுப்பம்மானு கேட்கறார். உடனே அவள் ஆசீர்வாதம் பண்ணி
யம்ʼ பாலயஸி த⁴ர்மம்ʼ த்வம்ʼ த்⁴ருʼத்யா ச நியமேன ச|
ஸ வை ராக⁴வஶார்தூ³ல த⁴ர்மஸ்த்வாமபி⁴ரக்ஷது||2.25.3||
எந்த தர்மத்தை இவ்வளவு உறுதியோடையும் ப்ரியத்தோடயும் நீ ஃபாலோ பண்றியோ அந்த தர்மமே உன்னை காப்பாற்றட்டும் அப்டின்னு சொல்லி மங்களா சாஸனம் பண்ணி குழந்தையை அனுப்பறா. அங்கேர்ந்து சீதா தேவியோட அரண்மனைக்கு வரார். சீதைக்கிட்டயும் இதே வார்த்தையை சொல்றார். அப்பா என்னை காட்டுக்கு போக சொல்லியிருக்கார். நான் போய்ட்டு வரேன். நீ இங்க இருந்துண்டு சிஷ்ருஷை பண்ணிண்டிரு தசரதருக்கும் கௌசல்யாதேவிக்கும் அப்டின்னு சொன்னவுடனே.. அவ சீதை சொல்றா.. என்னதிது விளயாட்டாட்டம் பேசரேளே.. உங்களை காட்டுக்கு போன்னு சொன்னா, தனியா என்னை கூப்பிட்டு சீதை நீயும் ராமனோட காட்டுக்கு போகணும்னு சொல்லணுமா. உங்களுக்கு என்ன பாக்யமோ அதானே எனக்கும் பாக்யம்? ஒரு பெண்ணுக்கு அவளோட அப்பாம்மாவோட பாக்யமோ, அக்கா தங்கைகள், அண்ணா தம்பிகளோட பாக்யமோ friends பாக்யமோ பிள்ளைகளோட பாக்யமோ கிடையாது. ஒரு பெண்ணுக்கு அவளோட கணவனுக்கு என்ன பாக்யமோ அது தான். அதனால உங்களுக்கு வனவாசம்னா எனக்கும் அதான். தனியா என்னத்துக்கு சொல்லணும் எனக்குன்னவுடனே.. இல்லம்மா வனம்ங்கறது சாதாரணம் கிடையாது. பயங்கரமான இடம். சிங்கம் புலி எல்லாம் உறுமும். பூச்சிகள் எல்லாம் கடிக்கும். சாப்பாடு கிடைக்காது. ரிஷிகளுக்கு சிஷ்ருஷை பண்ணணும். மூணு வேளை குளிக்கணும். ரொம்ப கஷ்டம்னவுடனே. உங்களுடன் இருக்கும் போது எனக்கு அது தான் சொர்கம். உங்களோட இல்லைனா எனக்கு அயோத்தியும் நரகம் தான் அமராவதியும் நரகம் தான். என்னை அழைச்சிண்டு போங்கோ. த்யுமத்ஸேனனுடைய பிள்ளை சாவித்ரி மாதிரி என்னை புரிஞ்சுக்கோங்கோ…எங்க போனாலும் நான் உங்க பின்னாடி வருவேன். என்னை கைவிடாதீங்கோ அப்டின்னு சொல்றா. இவர் இருந்தாலும் அப்டின்னவுடனே அவ வந்து, நீங்க கை விட்டால் நான் உயிரை விட்டுடுவேன் அப்டின்னு சொல்றா. உடனே சரி வான்னு சொல்லி அவளையும் கூப்ப்ட்டுக்கறார்.
तं व्रजन्तं प्रियो भ्राता लक्ष्मणोऽनुजगाम ह ।
स्नेहाद्विनयसम्पन्नस्सुमित्रानन्दवर्धन: ।।1.1.25।।
தம்ʼ வ்ரஜந்தம்ʼ ப்ரியோ ப்⁴ராதா லக்ஷ்மணோ(அ)னுஜகா³ம ஹ |
ஸ்னேஹாத்³வினயஸம்பன்னஸ்ஸுமித்ரானந்த³வர்த⁴ன: ||1.1.25||
அந்த ராமாயண ஆர்டர்ல வந்து இதுக்கப்புறம் லக்ஷ்மணன் கூடவே வந்துண்டிருக்கான் அங்க கௌசல்யை அரண்மனைக்கும் இங்க சீதை அரண்மனைக்கும் ராமரோட அரண்மணைக்கும்.. வந்துட்டு.. இப்ப லக்ஷ்மணன் சொல்றான். எனக்கு தேவலோகமோ அயோத்தியோ எதுவும் வேண்டாம். என்னையும் அழைச்சிண்டு போ ராமான்னவுடனே ராமர் சொல்றார். நீ இங்க இருந்துண்டு கௌசல்யையை பாத்துக்க கூடாதா அப்டின்னவுடனே கௌசல்யை நூற்றுக்கணக்கான க்ராமங்களை தானம் பண்ணிருக்கா. அவாள்ளாம் கௌசல்யை பாத்துப்பா. பரதன் பாத்துக்க மாட்டானா? உன்னோட தேஜஸ் இருக்கு. அப்படி பரதன் என்ன கைவிட்டுடுவானா? காட்டுல போனால் உனக்கு தான் எதாவது சகாயம் வேண்டிருக்கும். என்னை அழைச்சிண்டு போ ..எனக்கு அதான் வேணும்னவுடனே சரி கிளம்புனு சொல்றார். அது முதல்ல இங்க வர்ரது.
“தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்4ராதா லக்ஷ்மணோSநுஜகா3ம ஹ” .
அந்த ப்ரியமான அண்ணாவை லக்ஷ்மணன் பின் தொடர்ந்து அவனும் காட்டுக்குப்போனான்.
ஸ்னேஹாத்³வினயஸம்பன்னஸ்ஸுமித்ரானந்த³வர்த⁴ன: ||1.1.25||
அவன் ரொம்ப அண்ணா கிட்ட ப்ரியம் வைக்கிறவன். வினையம் நிறைந்தவன். சுமித்திரையின் ஆனந்தத்தை வளர்ப்பவன். இந்த வார்த்தை வந்து இங்க ரொம்ப பொருத்தம். ஏன்னா அவா திரும்பியும் தசரதர் அரண்மனைக்கு போய் உத்தரவு வாங்கிண்டு காட்டுக்கு கிளம்பறா.. அந்த இடத்துல சுமித்திரை லக்ஷ்மணனை பார்த்து சொல்றா.
ராமம்ʼ த³ஶரத²ம்ʼ வித்³தி⁴ மாம்ʼ வித்³தி⁴ ஜனகாத்மஜாம்|
அயோத்⁴யாமடவீம்ʼ வித்⁴தி³ க³ச்ச² தாத யதா²ஸுக²ம்||2.40.9||
ராமனை தசரதரா நினைச்சுக்கோ. சீதாதேவியை நான்னு நெனைச்சுக்கோ. காட்டை அயோத்தினு நெனைச்சுக்கோ. ராமனோட போ அப்டிங்கறா. ராமனுக்காக நீ உயிரையும் குடுக்கணும் அப்டிங்கறா. அந்த வார்த்தையை லக்ஷ்மணன் காப்பாத்தறார். ராமனுக்காக யுத்தத்துல உயிரையும் குடுக்கறார். எதோ அனுமார் இருந்ததால உயிரை மீட்டுக்குடுக்கறார். அப்படி அந்த சுமித்திரை ராமனுக்கும், பரதனுக்கும் கைங்கர்யம் பண்றதுக்காகவே இரண்டு புள்ளைகளை பெற்றாள். லக்ஷ்மணன் சத்ருக்னன்னு.. அப்படி அவ பெரிய ஞானி. அதனால அந்த சுமித்ரானந்த வர்த்தந: – சுமித்ரைக்கு பிள்ளையா பிறந்ததால இந்த லக்ஷ்மணன் ராமன்ட்ட அவ்வளவு பக்தியா இருக்கான். அவன் பின்னாடியே காட்டுக்குப் போறான்.
भ्रातरं दयितो भ्रातुस्सौभ्रात्रमनुदर्शयन् ।
रामस्य दयिता भार्या नित्यं प्राणसमा हिता ।।1.1.26।।
ப்⁴ராதரம்ʼ த³யிதோ ப்⁴ராதுஸ்ஸௌப்⁴ராத்ரமனுத³ர்ஶயன் .
ராமஸ்ய த³யிதா பா⁴ர்யா நித்யம்ʼ ப்ராணஸமா ஹிதா ||1.1.26||
ஸௌப்ராத்ரம் னா அந்த அண்ணா தம்பிகளிடம் உள்ள அன்பு. அதை வெளிப்படுத்திக்கொண்டு அந்த அன்புக்குறிய அண்ணனோடு, லக்ஷ்மணன் காட்டுக்கு போனான்.
ராமஸ்ய த3யிதா பா4ர்யா – ராமனுக்கு மிகவும் ப்ரியமான அவனுடைய மனைவி நித்யம் ப்ராணஸமா – எப்பவும் ப்ராணனைபோல ராமனுக்கு உயிரை போல இருந்தாள். ஹிதா – எப்பவும் அவர்க்கு புடிச்சதையே பண்ணிண்டிருப்பா..

जनकस्य कुले जाता देवमायेव निर्मिता ।
सर्वलक्षणसम्पन्ना नारीणामुत्तमा वधू: ।।1.1.27।।

ஜநகஸ்ய குலே ஜாதா தே3வமாயேவ நிர்மிதா |
ஸர்வலக்ஷணஸம்பந்நா நாரீணாமுத்தமா வதூ4 : ৷৷1.1.27৷৷
ஜநகஸ்ய குலே ஜாதா- ஜனகருக்கு மகளாக வளர்ந்தவள். “தே3வமாயேவ நிர்மிதா” – ரொம்ப அழகா இருந்தாள். இந்த இடத்துல தேவ மாயை போல என்பதற்கு விஷ்ணு மோஹினி பகவான் அவதாரம் எடுத்ததை போல அவ்வளவு அழகாக இருந்தாள் அப்டின்னு போட்டிருக்கா.
கதா சிதாத்யா லலிதா பும்ரூபா க்ரிஷ்ண விக்ரஹா
வேணுநாத வினோதேன கரோதி விவஶம் ஜகது – னு ஒரு ஸ்லோகம் இருக்கு. லலிதா தான் க்ரிஷ்ணன். க்ரிஷ்ணன் தான் லலிதா. அந்த மாதிரி… அந்த விஷ்ணு பகவான் மோஹினி அவதாரம் எடுத்த மாதிரி அவ்வளவு அழகா இருந்தாள்.
ஸர்வலக்ஷணஸம்பந்நா- எல்லா லக்ஷணங்களும் பொருந்தியவள். நாரீணாமுத்தமா வதூ4 – பெண்களுக்குள்ள ரொம்ப உத்தமி. நாரீகுலைக சிகாமணி னு மூககவி சொல்வாரே அந்த மாதிரி.
सीताप्यनुगता रामं शशिनं रोहिणी यथा ।
पौरैरनुगतो दूरं पित्रा दशरथेन च ।।1.1.28।।

ஸீதாப்யனுக³தா ராமம்ʼ ஶஶினம்ʼ ரோஹிணீ யதா² |
பௌரைரநுக3தோ தூ3ரம் பித்ரா த3ஷரதே2ந ச ৷৷1.1.28৷৷
“ஸீதாப்யனுக³தா ராமமஂ”- சீதையும் ராமனை பிந்தொடர்ந்து காட்டுக்கு போனாள். “ஶஶினம்ʼ ரோஹிணீ யதா² “ – சந்திரனோடு எப்பவும் ரோஹிணி பிரியாமல் இருக்கறமாதிரி ராமனோட போனாள்.
“பௌரைரநுக3தோ தூ3ரம் பித்ரா த3ஷரதே2ந ச” – அப்பறம் ராமர் போய் தசரதர் அரண்மணையில உத்தரவு வாங்கிண்டு போக போறார். தசரதர் என்னை ஜெயில்ல போட்டுட்டு நீ ராஜ்யத்தை எடுத்துக்கோ ராமான்னவுடனே இல்லப்பா உங்க வார்த்தையை சத்யமாக்கணும்.. எனக்கு அதனால எந்த கஷ்டம் வந்தாலும் கஷ்டமே கிடையாது நீங்க இப்படி மனசை தளர விடாதீங்கோ அப்டின்னு சொல்றார். இப்ப தான் எல்லார்க்கும் தசரதருடைய உண்மையான நிலைமை புரியறது. சுமந்திரர் கண்டிக்கிறார் கைகேயியை.. அவ ஒண்ணும் காதுல வாங்கல. வசிஷ்டர் கண்டிக்கிறார். நாங்க சீதையை ராணியாக்குவோம். நீ என்ன அடாவடி பண்ற நீ அப்டின்னு சொல்றார். சீதா ஆனா ராமனோட போறதுன்னு முடிவா இருக்கா. அப்பறம் தசரதர் சுமந்தரர் கிட்ட இவனை கொண்டு போய் எங்க கேட்கறானோ அங்க விடுப்பா அப்டின்னு சொல்லிட்டு சீதைக்கு பதினாலு வருஷத்துக்கு எண்ணி புடவையும், நகைகளெல்லாம் குடுத்து சந்தோஷமா போய்ட்டுவாம்மானு சொல்றார். சீதை கௌசல்யையை நமஸ்காரம் பண்ணும்போது கௌசல்யை சொல்றா.. ஏழையாய் போய்ட்டான்னு ராமன்ட்ட வருத்தப்படாதே அப்டின்னவுடன் சீதை சொல்றா.. இல்லவே இல்லம்மா.. “நாதந்த்ரீ வாத்³யதே வீணா” – தந்தி இல்லாம வீணை வாசிக்க முடியுமா? குதிரை இல்லாம ரதத்தை ஓட்ட முடியுமா ? நூறு பிள்ளைகள் இருந்தாலும் கணவனுக்கு சமமாகுமா? என் கணவர் ராமரை ஒரு நாளும் நான் கை விட மாட்டேன். ஒரு நாளும் நான் மனஸை மாத்திக்க மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு…. இப்படி சொல்லும்போது.. கௌசல்யைக்கும் அந்தப்புரத்து பெண்களுக்கும் சந்தோஷமும் துக்கமும் வந்ததாம்.. ஏன்னா இப்பேர்பட்ட பெண்ணா இருக்காளேன்னு சந்தோஷம். இப்பேர்பட்ட பெண்ணுக்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்ததேனு துக்கம். அவா மூணு பேரும் தேர்ல ஏரிண்டு “பௌரைஹி அனுகதோ தூரம்” .. அவா போறா ஜனங்கள்ளாம் கூடவே போறா. தசரதர் கொஞ்ச தூரம் வரார். பெரியவாள்ளாம், திரும்பி வரணும்னு நினைக்கறவாளை ரொம்ப தூரம் போய் வழியனுப்பகூடாதுன்னு சொன்னவுடனே நின்னுடறார். ஜனங்களானா சரயு நதிக்கறை வரைக்கும் போறா. அங்க அன்னிக்கு ராத்திரி தூங்கும்போது ராமர் அவாளை விட்டுட்டு ராவோட ராவா தேர்ல ஏறி போய்டறார். இல்லைனா அவா விடவேமாட்டா. ராமர் லக்ஷ்மணங்கிட்ட சொல்றார். நம்ப பொருப்பு இவாளை காப்பாத்த வேண்டியது. இவாளுக்கு கஷ்டம்னா நம்ப போக்கணும். நம்மாலே இவா கஷ்டப்படக்கூடாது. அதனால நாம இப்ப கிளம்பலாம்னு ராத்திரிலயே கிளம்பி அந்த நதியை தாண்டி போய்டறார். அங்கேர்ந்து போய்

शृङ्गिबेरपुरे सूतं गङ्गाकूले व्यसर्जयत् ।
गुहमासाद्य धर्मात्मा निषादाधिपतिं प्रियम् ।।1.1.29।।

ஶ்ருʼங்கி³பே³ரபுரே ஸூதம்ʼ க³ங்கா³கூலே வ்யஸர்ஜயத் |
கு³ஹமாஸாத்³ய த⁴ர்மாத்மா நிஷாதா³தி⁴பதிம்ʼ ப்ரியம் ||1.1.29||

ஶ்ருங்கி3பே3ரம் போறார். அங்கே ராமனுடைய உயிர்த்தோழன் தர்மாத்மாவான நிஷாதர்களுக்கும் வேடர்களுக்கும் படகோட்டிகளுக்கும் ராஜாவான குஹனை, ஆத்மசமஸ்சகா அப்டின்னு ஒரு வார்த்தை எப்போதும் வந்துண்டே இருக்கும். தன்னுடைய உயிர்த்தோழனான குஹனை பார்க்கறா. அவன் சாப்பிட சொல்கிறான். இல்லை இன்னிக்கு ஜலமே சாப்பிட்டுக்கறேன்னு சொல்றார். அப்பறம் சுமந்திரரை இங்கேர்ந்து திரும்பி போக சொல்றார். அவர் ரொம்ப வருத்தப்படறார். என்னை கை விடாத ராமான்னவுடனே இல்லை தசரதர் கிட்ட நீங்க போய் ராமனை நான் காட்டுல விட்டேன். அவன் கங்கையை தாண்டி வனத்துக்குள்ள போய்ட்டான்னு சொன்னா தான் கைகேயி அவரை நிம்மதியாக விடுவாள். அங்க போங்கோ .. பரதனை பட்டாபிஷேகம் பண்ணி வைங்கோ உங்க மனசு சமாதானமடையும் அப்டின்னு சமாதானம் சொல்லி சுமந்திரரை அனுப்பி வைக்கறார். அப்பறம் குகன் கிட்ட எங்களுக்கு ஒரு படகு கொடுன்னவுடனே அவன் ஒரு படகுல அவாளை அமிச்சு விடறான். அந்த படகுல கங்கையை தாண்டும் போது கங்காதேவிக்கிட்ட சீதாதேவி பிரார்த்தனை பண்ணிக்கறா. நல்லபடியா நாங்க திரும்பி வந்தால் உன் கரையில இருக்கற தெய்வங்களுக்கெல்லாம் நான் சாப்பாடு ஆராதனைகள்ளாம் பண்றேன் அப்டின்னு வேண்டிக்கறா.
गुहेन सहितो रामो लक्ष्मणेन च सीतया ।
ते वनेन वनं गत्वा नदीस्तीर्त्वा बहूदका: ।।1.1.30।।

கு³ஹேன ஸஹிதோ ராமோ லக்ஷ்மணேன ச ஸீதயா|
தே வனேன வனம்ʼ க³த்வா நதீ³ஸ்தீர்த்வா ப³ஹூத³கா: ||1.1.30||
சீதாதேவியோடயும் லக்ஷ்மணனோடயும் குஹனை பார்த்தார். அப்பறம் மிகவும் அதிக ஜலம் ஓடக்கூடிய பல நதிகளை கடந்து அப்படின்னு வர்ரது. அந்த கங்கை, யமுனை, மந்தாகினி அந்தமாதிரி நதிகள் எல்லாம் வழில வர்ரது. அதெல்லாம் தாண்டி பரத்வாஜரை பார்க்கறா. ப்ரயாகைன்னு, கங்கையும் யமுனையும் கூடற இடத்துல. பரத்வாஜர் அவாளை வரவேற்று அவாளுக்கு உபசாரம் பண்ணி, தன் கையாலயே சமைச்சு போடறார். தங்கர இடம் சொல்லுங்கோனு கேட்டபோது இங்கயே தங்குங்கோனு சொல்றார் பரத்வாஜர். இல்லை இங்க இருந்தா எல்லாரும் வந்துண்டே இருப்பா அதனால வேற இடம் சொல்லுங்கோனவுடனே சித்திரகூடம்னு மந்தாகினி நதிக்கறைல இருக்கு. அதற்கு வழி எல்லாம் சொல்லி போய்ட்டுவாப்பானு அனுப்பி வைக்கறார்.

चित्रकूटमनुप्राप्य भरद्वाजस्य शासनात् ।
रम्यमावसथं कृत्वा रममाणा वने त्रय: ।।1.1.31।।

சித்ரகூடமனுப்ராப்ய ப⁴ரத்³வாஜஸ்ய ஶாஸனாத் |
ரம்யமாவஸத²ம்ʼ க்ருʼத்வா ரமமாணா வனே த்ரய: ||1.1.31||

சித்திரகூடத்திற்கு போய் நல்ல ஒரு பர்ன சாலையை கட்டிண்டு மூன்று பேரும் கந்தர்வ ராஜர்களைப் போல.. இந்திராதி தேவர்களை போலங்கறார் வால்மீகி. அப்படி அவா எல்லாத்தையும் இழந்து மரஉரி உடுத்திண்டு மாந்தோல் உடுத்திண்டு ஜடை போட்டுண்டு காட்டுல வந்து வசிக்கறா. ஆனா மனசு தானே காரணம் சந்தோஷத்திற்கு? அவா மூணு பேரும் ரொம்ப சந்தோஷமா இருந்தா.. எவ்வளவு அழகா இருக்கு இந்த இடம்! சித்திரகூடம் பாத்தியா!.. அந்த சித்திர கூடத்துக்கு போற வழியில ராமர் லக்ஷ்மணர்கிட்ட சொல்றார்..இந்த பரத்வாஜருடைய அன்பு கிடைக்கறதுக்கு எதோ புண்யம் பண்ணிருக்கோம் லக்ஷ்மணா அப்டிங்கறார். அதாவது எதோ பாபத்தினால பல கஷ்டம் வந்த போதிலும் ஏதோ புண்யம் பண்ணிருக்கறதால இவரோட அன்பு கிடைச்சது அப்டிங்கறார். அந்த அளவுக்கு ego இல்லாம இருக்கார். நான் எவ்வளவு பெரிய ராஜா. எனக்கு என்ன என்ன கிடைச்சிருக்கணும். நான் இப்படி கஷ்ட்டப்படறேனேனு நினைக்கலை. எதோ நம்ப பண்றது நமக்கு வர்ரது. பாவ புண்யங்களால.. அதுக்கு நடுவுல இந்த ஒரு அனுக்ரஹம் கிடைச்சதே! முனிவரோட தரிசனம் கிடைச்சதே ! அவரோட அன்பு கிடைச்சதே !. அப்டின்னு நினைக்கறார். இதான் ராமர். இந்த ராமாயணத்துல முழுக்க ரிஷிகள்ட்ட போய் அவாளோட ஆசீர்வாதம் வாங்கிண்டே இருப்பார் ராமர். அகஸ்தியர் வந்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்லிக்குடுத்து ராவண வதம் பண்றார். அந்த மாதிரி பொறந்தவுடனே வசிஷ்டர் பேர் வைக்கறார். முதல்லேர்ந்து கடைசி வரைக்கும் ராமருக்கு அந்த வேதம், தர்ம சாஸ்திரம், ரிஷிகளுடைய ஆசரணம் அப்படி எல்லாம் வாழ்ந்து காமிக்கறதுக்காகவே பூமில அவதாரம் பண்ணீனவர். இந்த 31ம் ஸ்லோகம் வரைக்கும் படிச்சிருக்கோம். ரொம்ப அழகா சந்தோஷமா முடியறது அதனால

ரம்யமாவஸத²ம்ʼ க்ருʼத்வா ரமமாணா வனே த்ரய: ||1.1.31||

மூன்று பேரும் ரொம்ப சந்தோஷமாக சித்திரக்கூடத்தில் வசித்தார்கள். போற வழியில ஒரு ஆலமரம் இருக்கு. அங்க சீதையை வேண்டிக்க சொல்லு அப்டின்னு ரிஷி சொல்றார். பரத்வாஜர். அந்த மாதிரி அவ அங்க வேண்டிக்கறா. அப்போ .. அதுக்கப்பறம் சீன்ல ராமர் லக்ஷ்மணங்கிட்ட சொல்றார். சீதையை உத்ஸாகப்படுத்து . அவ கேட்கற பூக்கள் பழங்கள் எல்லாம் பரிச்சு குடு அப்டிங்கறார். ஸ்வாமிகள் சொல்வார்.. இந்த ஆலமரத்துட்ட வேண்டிக்கோனு முனிவர் சொன்னதால சீதை வந்து ஏதோ நம்பளால இந்த கஷ்டமெல்லாம் வந்திருக்கு போல அதனால தான் முனிவர் நம்பளை வேண்டிக்க சொல்றார் அப்டின்னு நினைச்சு கொஞ்சம் வாட்டமா இருக்காளாம். அந்த வாட்டத்தை போக்கறதுக்காக அவளை உற்சாகப்படுத்து லக்ஷ்மணா அப்டின்னு சொல்றார் ராமர் அப்டின்னு ஒருத்தர்க்கொருத்தர் அவ்வளவு ப்ரியமா இருக்கா.. அந்த சித்திரக்கூடத்துல ரொம்ப சந்தோஷமா வசிக்கிறார்கள். இதோட இன்னிக்கு இருக்கட்டும். பரதன் திரும்ப வந்து அவன் கிளம்பி ராமரை சித்திரகூடத்துல வந்து பார்த்து அவருடைய பாதுகையை வாங்கிண்டு போய் பட்டாபிஷேகம் பண்ணினதெல்லாம் நாளைக்கு பாக்கலாம்.
ஜானகி காந்தஸ்மரணம்.. ஜய் ஜய் ராம ராம !!!

Series Navigation<< ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaningஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 32-40 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 32 to 40 meaning >>

4 replies on “ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning”

இராமன் காட்டுக்குச் செல்வதைக் கூட சந்தோஷமாகக் கேட்டது இது தான் முதல் தடவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.