ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 82-89 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 82 to 89 meaning
ஸங்க்ஷேப ராமாயணத்துல ராவண வதம் வரைக்கும் நேத்து பாத்தோம். இன்னிக்கு 81வது ஸ்லோகம்.
रामः सीतामनुप्राप्य परां व्रीडामुपागमत् |
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய பராம்ʼ வ்ரீடா³முபாக³மத் |
சீதையை திரும்பி அடைந்த ராமர் வருத்தத்திற்கு ஆளானார், அப்படின்னு அப்படி அங்க ஆரம்பிக்கறது. அதுக்கு முன்னாடி சில காட்சிகள் இருக்கு. அதெல்லாமும் நான் சொல்லிடறேன். இராவணன் வதம் ஆனபோது விபீஷணனே பொலம்பி அழறான்.இவன் எவ்ளோ நல்ல ராஜாவா இருந்தான். ராக்ஷஸா எல்லாரையும் எவ்ளோ நன்னா பாத்துண்டான். இவன் இந்த மாதிரி சீதை மேல ஆசை வெச்சு உயிரை விட்டானே.நான் எவ்வளவோ சொன்னேனே, அண்ணா அப்டின்னு சொல்லி அழறான்.
அப்போ ராமர் சமாதான படுத்தறார், அவன் சிறந்த வீரன், யுத்தம் பண்ணி யுத்த களத்துல தான் விழுந்து இருக்கான். அதனால நீ வருத்தப்படாதே. அடுத்த காரியத்தை பண்ணு.
“மரணாந்தாணி வைராணி ” – வைரமெல்லாம் மரணம் வரைக்கும்தான். அவனுக்கு ஸம்ஸ்காரம் பண்ணு அப்படின்னு சொல்றார். ராவணனுடைய மத்த மனைவிகளெல்லாம் வந்து பொலம்பி அழறா. மண்டோதரி வந்து, நான் உன்னோட எவ்ளோ சந்தோசமா ஆடை ஆபரணம் எல்லாம் அணிந்து புஷ்பக விமானத்துல சுத்தி இருக்கோம், அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லாம போயிடுத்தே. நான் எவ்ளோ சொன்னேன் , விபீஷணன் எவ்ளோ சொன்னான்.
शुभकृच्छुभमाप्नोति पापकृत्पापमश्नुते |
विभीषणः सुखं प्राप्तस्त्वं प्राप्तः पापमीदृशम् ||
ஶுப⁴க்ருʼச்சு²ப⁴மாப்னோதி பாபக்ருʼத்பாபமஶ்னுதே |
விபீ⁴ஷண꞉ ஸுக²ம்ʼ ப்ராப்தஸ்த்வம்ʼ ப்ராப்த꞉ பாபமீத்³ருʼஶம் ||
நல்லது பண்றவன் நல்லதை அடைவான். கெட்டது பண்ணா கெட்டதுதான் விளையும். விபீஷணன் க்ஷேமத்தை அடைந்தான் , நீ இந்த மாதிரி கோரமான வதத்தை அடைஞ்சியே அப்டின்னு பொலம்பறா . வந்திருக்கறது ராமர் சாதாரண இளவரசரோ , கூட வந்திருக்கறது குரங்கு கூட்டமோ இல்லை அப்படின்னு எனக்கு எப்பவோ தெரிஞ்சிடுத்து . அன்னிக்கு அவர் கர வதம் பண்ணதும், அடுத்து வாலி வதம் பண்ணதும், அடுத்து யுத்தத்துல கும்பகர்ணனை வதம் பண்ணதும் , கடல் மேல பாலம் கட்டினதும் இதெல்லாமே பார்த்தாலே அவர் “மஹாயோகி சனாதன:” – விஷ்ணு ஸ்வரூபம்னு தெரியலையா,அப்படின்னு அவ புலம்பி அழறா .
அப்புறம் ராமர் சொல்றார், அவாளெல்லாம் போக சொல்லிட்டு, சம்ஸ்காரம் பண்ணு ராவணனுக்கு அப்டின்னு சொல்லும்போது, விபீஷணனுக்கு இந்த மண்டோதரி புலம்பி அழும் போது.
பிறர் மனைவி மேல ஆசைப்பட்டு இந்த மாதிரி நீ உயிரை விட்டாயே அப்டினெல்லாம் கேக்கும்போது விபீஷணனுக்கு ஒரு சந்தேகம் வரது. இவனுக்கு நான் ஸம்ஸ்காரம் பண்ணா ஜனங்கள் என்னை வெறுப்பாளோ அப்டின்னு. அதனால நான் இவனுக்கு ஸம்ஸ்காரம் பண்ண விரும்பலை அப்டின்னு சொல்றான். அப்போ ராமர் நீ பண்ணலேன்னா நான் பண்ணுவேன் ” மரணாந்தாணி வைராணி… த்வம் யஷோ பாக் பவிஷ்யதி” — உனக்கு புகழ் ஏற்படும். நீ ஸம்ஸ்காரம் பண்ணு அப்டின்னு சொல்றார்.
அப்புறம் ப்ராஹ்மணர்களுக்கு என்ன வேத மந்த்ராம் எல்லாம் உண்டோ அதுப்படி விபீஷணன், ராவணனுக்கு ஸம்ஸ்காரம் பண்ணறான்.
அப்புறம் ராமர் கிட்ட வந்த ஒடனே, ராமர் லக்ஷ்மணன்கிட்ட சொல்லி விபீஷணனை லங்கைக்கு ராஜாவா பட்டாபிஷேகம் பண்ண சொல்றார். பட்டாபிஷேகம் முடிஞ்ச உடனே விபீஷணன் மங்கள பொருட்கள் எல்லாம் எடுத்துண்டு வந்து ராமரை நமஸ்காரம் பண்ணறான். அப்போ ராமர் ஹனுமான்கிட்ட, ஹே ஹனுமன் நீ இந்த விபீஷண மகாராஜா கிட்ட அனுமதி வாங்கி லங்கைக்குள்ள போய் சீதாதேவியை பார்த்து இந்த வெற்றி செய்தியை சொல்லு அப்டின்னு சொல்றார். அதே மாதிரி ஹனுமான் போய் சீதாதேவியை பார்த்து அம்மா, ராமர் ராவணனை வதம் பண்ணிட்டார். நீங்கள் ராம பக்தனான விபீஷணனுடைய கிருஹத்தில் தான் இப்ப இருக்கேள். நீங்கள் மனம் கலங்க வேண்டாம் அப்டின்னு சொல்றார்.அவளுக்கு பேச்சே வரல. என்னம்மா ஒண்ணும் சொல்லல அப்டின்னா உடனே, சீதை “ஹே ஹனுமான்”, நீ எப்பவும் எனக்கு நல்ல செய்தி சொல்லி என்னை சந்தோசப்படுத்தற. உனக்கு நான் என்ன குடுப்பேன் அப்டிங்கறா. சீதாதேவி ஸாக்ஷாத் லக்ஷ்மிதேவி தான். லக்ஷ்மிதேவியே உனக்கு குடுக்கறதுக்கு என்கிட்ட ஒண்ணும் இல்லப்பா அப்டின்னு சொன்னான்னா, அதுக்கு மேல வேற என்ன வேணும். ஹனுமார் சொல்றார் எனக்கு உங்களையும் ராமரையும் சேர்த்து பார்க்கணும் அவ்ளோதான், எனக்கு வேற எதுவும் வேண்டாம் அப்டின்னு சொல்றார். அப்புறம் ஹனுமார், இந்த ராக்ஷஷி எல்லாம் உங்களை ரொம்ப கொடுமை படுத்தினா, நான் இவாளை பல்ல தட்டி, எலும்பெல்லாம் ஒடைச்சு , முடியெல்லாம் பிடிங்கி ,கொல்லறேன் அப்படின்னு சொன்னபோது அவாஎல்லாம் நடுங்கறா.
அப்போ சீதை சொல்றா.
पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम ||
कार्यं कारुण्यमार्येण न कश्चिन्नापराध्यति |
பாபானாம்ʼ வா ஶுபா⁴னாம்ʼ வா வதா⁴ர்ஹாணாம்ʼ ப்லவங்க³ம ||
கார்யம்ʼ காருண்யமார்யேண ந கஶ்சின்னாபராத்⁴யதி |
பாவம் பண்ணவாளா இருந்தாலும் சரி, வதத்துக்கு உரியவாளா இருந்தாலும் சரி.
“கார்யம் கருணம் ஆர்யேன ” – பெரியவாளா இருக்கறவா மன்னிக்கணும். அவா இராவணன் பேச்சை கேட்டுண்டு பண்ணா. இப்போ ராவணன் இல்ல. இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டா, மன்னிச்சுடுனு சொல்றா. அப்புறம் சரிம்மான்னு சொல்லிடறார் ஹனுமார்.
என்ன சொல்லணும் ராமர்கிட்ட அப்படின்னா, சொல்றதுக்கு என்ன இருக்கு, ராமரை பார்க்கணும் அப்படின்னு சொல்றா. ஹனுமார், ராமர்கிட்ட போய் சொன்னவுடனே, ராமர் விபீஷணன் கிட்ட சீதையை அலங்காரம் பண்ணி அழைச்சுண்டு வா அப்படின்னு சொல்றார். சீதைகிட்ட போய் சொன்னவுடனே, நான் இப்படியே வரேனே ஸ்னாநம் பண்ணாம அப்டின்னவுடனே இல்ல அவர் சொல்லறதை கேளு அப்டின்ன பின்ன, சீதையை ஸ்னாநம் பண்ணி அலங்காரம் பண்ணி அழைச்சிண்டு வறா.
तामुवाच ततो रामः परुषं जनसंसदि |
தாமுவாச ததோ ராம꞉ பருஷம்ʼ ஜனஸம்ʼஸதி³ |
ஜனங்களுக்கு மத்தியில் சீதாதேவியை பார்த்து ராமர் கடுமையான வார்த்தைகளை சொன்னார். என்ன சொன்னார்னா “ஹ்ருதயாந்தர்கத க்ரோத:” – சீதையை பார்த்தவுடனே அவருக்கு உள்ளுக்குள்ள பொத்தி வெச்சிருந்த கோபம் பொங்கி வந்ததுன்னு சொல்றார் வால்மீகி. அது என்ன கோபம்னா, அன்னிக்கி லக்ஷ்மணனை பாத்து நீ ஒரு காமாத்மா, ராமர் உயிருக்கு ஆபத்துன்னா நீ போகமாட்டேங்கறேன்னு ஒரு வார்த்தை சொன்னா இல்லையா, அவ்ளோ தூய்மையான அந்த ஆத்மாவை பாத்து அப்படி பேசினது, எந்த தப்பு வேணா பண்ணலாம் character assasination மட்டும் பண்ண கூடாது. அது பண்ணா எப்படி இருக்கும்னு சீதைக்கு தெரியர்த்துக்காக அப்படி சொல்றார். மேலும் அவர் ஒரு ராஜா. ராஜாவுடைய மனைவி எந்த ஒரு பேச்சுக்கும் இடம் இல்லாம இருக்கணுங்கறதுக்காக, அவர் என்ன சொல்றார்னா, நான் என்னுடைய குல கெளரவத்தை காப்பாத்தறதுக்காக ராவணனை வதம் பண்ணேன். உன்னை மீட்டுட்டேன். ஆனா நீ ஒரு வருஷம் இன்னொருத்தனோட கிருஹத்துல இருந்திட்ட. எனக்கு நீ வேண்டாம்.
பத்து திக்குல எங்க வேணா போலாம். நீ லக்ஷ்மணன்கிட்ட வேணாலும் போ, பாரதன்கிட்ட வேணாலும் போ, சுக்ரீவன்கிட்ட வேணாலும் போ, விபீஷணன்கிட்ட வேணாலும் போன்னு சொல்றார். இந்த வார்த்தையை பொறுப்பாளா அம்பாள். ரொம்ப துடிச்சு போய்டறா. இந்த வார்த்தையை அன்னிக்கே நீ ஹனுமான்கிட்ட சொல்லிருந்தா அன்னிக்கே உயிர விட்ருப்பேனே. ஆறு வயசுல நீ என் கையை வலிக்க வலிக்க பிடிச்ச, அன்னிலேருந்து வேற ஒருத்தரை மனசால்கூட நினைக்காமல் இருக்கேன். சாதாரண பெண்களை பார்த்து பேசற மாதிரி என்னை பார்த்து பேசறயே. என்னோட உடம்பே என் வசத்துல இல்லை.ராவணன் தூக்கிண்டு போனான், நான் என்ன பண்ணுவேன். என் மனசு முழுக்க முழுக்க உன்கிட்ட இருக்கு. அப்டின்னவுடனே ராமர் ஒண்ணும் பதில் சொல்லல.அதனால சீதாதேவி இவர் கைவிட்ட பின்ன இந்த உடம்பை வெச்சிண்டு எனக்கு என்ன வேண்டியிருக்கு அப்படின்னு லக்ஷ்மணா நெருப்பு மூட்டு அப்டிங்கறா. லக்ஷ்மணன் ராமரை பார்க்கறான். ராமர் கண் காமிக்கறார்.உடனே லக்ஷ்மணன் நெருப்பு மூட்றான் சீதாதேவி மனோ வாக் காயத்துனால நான் ராமரை தவிற வேறு ஒருவரையும் நினைச்சதில்லை என்பது உண்மையானால் இந்த அக்னி என்னை காப்பாத்தட்டும் அப்படின்னு அக்னிக்குள்ள இறங்கிடறா.
अमृष्यमाणा सा सीता विवेश ज्वलनं सती ||
அம்ருʼஷ்யமாணா ஸா ஸீதா விவேஶ ஜ்வலனம்ʼ ஸதீ ||
சதி பதிவ்ரதை அவள். அந்த வார்த்தைகளை பொறுக்காமல் அக்னிக்குள் புகுந்தாள் சீதாதேவி .
ततोऽग्निवचनात्सीतां ज्ञात्वा विगतकल्मषाम् |
बभौ रामः संप्रहृष्टः पूजितः सर्वदैवतैः||
ததோ(அ)க்³னிவசனாத்ஸீதாம்ʼ ஜ்ஞாத்வா விக³தகல்மஷாம் |
ப³பௌ⁴ ராம꞉ ஸம்ப்ரஹ்ருʼஷ்ட꞉ பூஜித꞉ ஸர்வதை³வதை꞉||
அந்த மாதிரி சீதாதேவி அக்னிக்குள்ள போனவுடன் எல்லா தேவர்களும் பிரம்மா , அக்னி , இந்திரன் , பரமேஸ்வரன் எல்லாரும் காட்சி கொடுத்து, ஹே ராமா நீ யாருன்னு உணரவில்லையா, நீ ஸாக்ஷாத் விஷ்ணு பகவான், சீதாதேவி லக்ஷ்மிதேவி அப்டின்னவுடனே ராமர் சொல்றார்,
आत्मानं मानुषं मन्ये रामं दशरथात्मजम्
ஆத்மானம்ʼ மானுஷம்ʼ மன்யே ராமம்ʼ த³ஶரதா²த்மஜம்
நான் என்னை தசரத குமாரனான ராமராக அறிகிறேன் அப்படின்னு சொன்னபோது,இல்ல ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் பண்ணக்கூடிய ஜகத் பரிபாலனம் பண்ணக்கூடிய விஷ்ணு பகவானே நீதான் அப்படின்னு ப்ரஹ்மா ஸ்தோத்ரம் பண்ணறார். அந்த ப்ரஹ்ம ஸ்துதியோட முடிவுல
अमोघं दर्शनं राम न च मोघस्तवस्तवः|
अमोघास्ते भविष्यन्ति भक्तिमन्तस्च ये नरा ||
“அமோகம் தர்ஷனம் ராமா நச மோக தவஸ்தவ: |
அமோகாஸ்தே பவிஷ்யந்தி பக்திமந்தஸ்ச ஏ நரா: ||”
அப்படின்னு உன்னுடைய தரிசனமோ, உன்கிட்ட பண்ணற ஸ்தோத்திரமோ, உன்கிட்ட பண்ணற பக்தி வீண் போகாது அப்படின்னு சொல்றார். அப்புறம் அக்னி பகவான் வந்து இந்த சீதையை ஏற்றுக்கொள் அப்படின்னு சொன்னவுடனே ராமர் எனக்கு அவளோட மனசும் தெரியும், அவளோட தூய்மையும் தெரியும். ஜனங்களுக்காக இப்படி ஒண்ணு பண்ணேன்னு சீதாதேவியை ஏத்துண்டு,அப்போ தான் அவர் “பபௌ ராம: ஸம்ப்ரஹ்ருஷ்ட:” – சந்தோஷத்தை அடைந்தார். “பூஜித: சர்வதெய்வதை:” – எல்லா தெய்வங்களும் அவரை கொண்டாடினார்கள்.
कर्मणा तेन महता त्रैलोक्यं सचराचरम् ||
सदेवर्षिगणं तुष्टं राघवस्य महात्मनः ||
கர்மணா தேன மஹதா த்ரைலோக்யம்ʼ ஸசராசரம் ||
ஸதே³வர்ஷிக³ணம்ʼ துஷ்டம்ʼ ராக⁴வஸ்ய மஹாத்மன꞉ ||
தேவர்கள், ரிஷிகள் மூவுலகத்தில் எல்லாரும் ராமருடைய, அந்த ராவண வதம் என்ற கார்யத்தினால் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அப்புறம்
अभिषिच्य च लङ्कायां राक्षसेन्द्रं विभीषणम्
அபி⁴ஷிச்ய ச லங்காயாம்ʼ ராக்ஷஸேந்த்³ரம்ʼ விபீ⁴ஷணம்
, விபீஷணனை லங்கைக்கு ராஜாவாக அபிஷேகம் செய்து வைத்தார்கள் அப்படின்னு வரது, அது பின்னாடி வரது. நம்ப மொதல்லயே பாத்தோம்.
कृतकृत्यस्ततो रामो विज्वरः प्रमुमोद ह ||
க்ருʼதக்ருʼத்யஸ்ததோ ராமோ விஜ்வர꞉ ப்ரமுமோத³ ஹ ||
அவருக்கு இருந்த சீதையை பிரிஞ்சு இருந்த வருத்தம் அது எல்லாம் போய் “பிரமுமோத:” ரொம்ப சந்தோஷப்பட்டார். “க்ருத க்ருத்ய” விபீஷணனுக்கு வாக்கு கொடுத்திருந்தார், என் தம்பிகள் மேல ஆணை, ராவண வதம் பண்ணி உன்னை ராஜாவாக ஆக்கறேன்னு. அந்த காரியத்தையும் பண்ணி முடிச்சார். அப்புறம் விபீஷணன் இங்க கொஞ்ச நாள் இருந்துட்டு போங்கோ, நான் உங்களுக்கு உபசாரம் பண்ணறேன், நல்ல ஸ்னான பாணாதிகள் எல்லாம் பண்ணி நன்னா சாப்பிட்டு, பதினாலு வருஷம் முடிஞ்ச பின்ன அவர் ஒரு நகரத்துக்குள்ள போலாம் இல்லையா, அதனால லங்கைக்கு வாங்கோ உங்களை தெய்வமா பூஜை பண்ணறேன்னு சொல்லும்போது, ராமர் சொல்றார் இல்ல நான் திரும்ப போகணும்.
பரதன் காத்துண்டு இருக்கான். அவனுக்கு சத்யம் பண்ணிட்டு வந்திருக்கேன். பதினைந்தாவது வருஷம் முதல் நாள் நான் வரணும்னு சொன்னான். நான் அப்படியே ஆகட்டும்னு சொல்லிருக்கேன்.அதனால நான் கிளம்பறேன்.இன்னும் இங்க இருந்து அயோத்தி வரைக்கும் போகணும்னு சொல்லும்போது விபீஷணன் சொல்றான், புஷ்பக விமானம் இருக்கு அதுல ஏறி ஒரே நாள்ல போய்டலாம் அப்படின்னு சொன்ன உடனே அப்போ நீ புஷ்பக விமானத்தை எடுத்துண்டு வா நான் இப்பவே கிளம்பறேன் கோவிச்சுக்காதே அப்படின்னு சொல்லும்போது விபீஷணனும் சரின்னு சொல்றான்.
அதுக்கு மின்னாடி இந்திரன் உனக்கு ஏதாவது வரம் வேணுமான்னு கேக்கறபோது
देवताभ्यो वरं प्राप्य समुत्थाप्य च वानरान् |
தே³வதாப்⁴யோ வரம்ʼ ப்ராப்ய ஸமுத்தா²ப்ய ச வானரான் |
எனக்காக யுத்தம் பண்ணி உயிரிழந்த எல்லா வானரர்களும் மீண்டும் உயிரோடு வரணும், நல்லபடியா கை, கால் எல்லாம் எதுவும் ஹானி இல்லாம healthy ஆ திரும்பவும் உயிரோட வரணும்னு அப்படின்னு வேண்டிக்கறார். அது மாதிரி உயிர் போனவாளெல்லாம் திரும்ப வர்றா. எல்லாரும் ஆச்சர்யப்படறா.
देवताभ्यो वरं प्राप्य समुत्थाप्य च वानरान् |
अयोध्यां प्रस्थितो रामः पुष्पकेण सुहृद् वृतः ||
தே³வதாப்⁴யோ வரம்ʼ ப்ராப்ய ஸமுத்தா²ப்ய ச வானரான் |
அயோத்⁴யாம்ʼ ப்ரஸ்தி²தோ ராம꞉ புஷ்பகேண ஸுஹ்ருʼத்³ வ்ருʼத꞉ ||
வானரர்களை எல்லாம் ராமர் உயிர்ப்பித்தார். அப்புறம் புஷ்பக விமானத்துல ஏறி அயோத்திக்கு புறப்பட்டார். ஸுஹ்ருத் வ்ருʼத – ஸுஹ்ருத்க்களுடன் கிளம்பினார். அது என்னன்னா ராமர் புஷ்பக விமானத்துல ஏரிக்கறார், லக்ஷ்மணன் எரிக்கறான். சீதாதேவியை மடில உட்கார வெச்சிக்கறார். விபீஷணனும் சுக்ரீவனும் கேக்கறா, நாங்களும் உங்களோட வறட்டுமா. உங்க பட்டாபிஷேக வைபவத்தை பாக்கணும், கௌசல்யா தேவிக்கு நமஸ்காரம் பண்ண ஆசைப்படறோம் அப்படின்னு சொன்னபோது ஆஹா இதுக்கு மேல எனக்கு என்ன சந்தோஷம் இருக்க போறது அவசியம் வாங்கோ, விபீஷணா நீ உன் நாலு மந்திரிகளோட ஏறிக்கோ. சுக்ரீவா நீ வானராளோட ஏறிக்கோ
அப்படின்னா உடனே , அவா அந்த புஷ்பக விமானத்துல ஏறிண்டு அயோத்தி திரும்ப வறா.
அந்த அயோத்தி திரும்பி வர வழில. பரத்வாஜ ஆஸ்ரமம் வரது
भरद्वाजाश्रमं गत्वा रामः सत्यपराक्रमः |
ப⁴ரத்³வாஜாஶ்ரமம்ʼ க³த்வா ராம꞉ ஸத்யபராக்ரம꞉ |
வனவாசம் போகும்போது ப்ரயாகைல பரத்வாஜரை பாத்து நமஸ்காரம் பண்ணி உத்தரவு வாங்கிண்டு, அவர் சொல்லி தான் சித்ரகூடம் போனார்.அதனால பரத்வாஜரை பார்ப்போம்னு அங்க இறங்கறார். அங்க இறங்கிட்டு
भरतस्यान्तिकं रामो हनुमन्तं व्यसर्जयत् ||
ப⁴ரதஸ்யாந்திகம்ʼ ராமோ ஹனுமந்தம்ʼ வ்யஸர்ஜயத் ||
ஆனா பரதன் இன்னிக்கி ராமர் வருவார்னு காத்துண்டு இருப்பானே அப்டிங்கறதுனால ஹனுமனை கூப்பிட்டு, ஹே ஹனுமான் நீ அயோத்திக்கு போ, வழில ஸ்ருங்கிபேரபுரம் போ, அங்க குஹனை பார்த்து அவன்கிட்ட நான் நாளைக்கு வரேங்கற விஷயத்தை சொல்லிட்டு, அங்கிருந்து அவன் கிட்ட வழி கேட்டுண்டு அயோத்திக்கு போய் பாரதன்கிட்ட நாளைக்கு பஞ்சமி அன்னிக்கி ராமர் வந்துடுவார்ன்னு சொல்லு அப்டின்னவுடனே, ஹனுமார் அதே மாதிரி போய் பரதனை பாக்கறார். பரதன் உயிரை பிடிச்சிண்டு காத்துண்டு இருக்கான் ராமர் வருவார்னு. அவர்கிட்ட இந்த மாதிரி நாளைக்கு ராமர் வரார்னு சொன்னவுடனே அவன் சந்தோஷத்துல மூர்ச்சை போட்டு விழுந்துடறான். அப்புறம் எழுந்து, ஒருவன் உயிரோடு மட்டும் இருப்பானேயானால் அவனுக்கு நல்ல செய்தி வரும் அப்படிங்கறது என் விஷயத்தில சத்தியமா ஆச்சுன்னு சொல்றான். நீங்க மனுஷ்யாளோ, தேவரோ , ரிஷிகளோ , வானரமோ யாரா இருந்தாலும், ராமர் வரார்னு நல்ல செய்தி சொன்னேள். என்ன வேணா கேளுங்கோ செய்யறேன். ராஜ்யத்தை வேணாலும் தறேன் அப்படின்னு சொல்றார்.
அப்புறம் நடந்தது எல்லாம் சொல்லுங்கோ அப்டிங்கறபோது ஹனுமார் விஸ்தாரமா, ராமர் கைகேயி திருப்திக்காக வனவாசம் போனதும், ஆனால் அதை நீ விரும்பாமல் சித்ரகூடத்திற்கு வந்து அவரை திரும்ப வருமாறு பிரார்த்தனை பண்ணதும், ராமர் பாதுகை குடுத்து உன்னை அனுப்பிச்சதும் இதெல்லாம் உனக்கு தெரியும்.
அதுக்கப்புறம் நடந்தது சொல்றேன்னு அங்கேயிருந்து எல்லா விஷயங்களும் , இன்னொரு வாட்டி நாம சங்க்ஷேப ராமாயணம் தான் படிக்கணும் அப்படி எல்லாத்தையும் சொல்லி , வெற்றி வீரராக ராமர் வந்துட்டார்.பரத்வாஜ ஆஸ்ரமத்துல தங்கறார். பரத்வாஜர் இன்னிக்கி விருந்து சாப்பிட்டு நாளை போக சொன்னார். அதனால அங்க தங்கறார். நாளைக்கி ராமர் வந்து சேருவார்னு சொல்லி முடிக்கறார்.
पुनराख्यायिकां जल्पन् सुग्रीवसहितश्च सः |
पुष्पकं तत्समारुह्य नन्दिग्रामं ययौ तदा ||
புனராக்²யாயிகாம்ʼ ஜல்பன் ஸுக்³ரீவஸஹிதஶ்ச ஸ꞉ |
புஷ்பகம்ʼ தத்ஸமாருஹ்ய நந்தி³க்³ராமம்ʼ யயௌ ததா³ ||
இங்க புஷ்பக விமானதுல ராமர் சுக்ரீவனோடு , நடந்தவைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு நந்திக்ராமம் வந்து சேர்ந்தார் . இந்த நடந்ததெல்லாம் சொல்லிக்கொண்டு அப்படிங்கறது, சீதாதேவிக்கு லங்கைலேந்து ராமர் reverse order ல சொல்றார். நான் இங்கதான் ராவண வதம் பண்ணேன். லக்ஷ்மணன் இந்திரஜித்தை இங்கதான் வதம் பண்ணான். அதோ பாரு ஹநுமார்க்காக கடல்ல மைனாக மலை வந்தது, இதோ நல சேது , இது கிஷ்கிந்தை அப்படின்னு எல்லாத்தையும் reverse order ல சீதாதேவிக்கு சொல்லி அவளை சமாதானம் படுத்திண்டே வரார்.
நந்திக்ராமத்துக்கு வந்து சேந்தவுடனே பரதன் ஓடிப்போய் ராமருக்கு நமஸ்காரம் பண்ணறான். பரதனை கட்டி அணைச்சிக்கறார். அப்புறம் எல்லாரையும் ராமர் நமஸ்காரம் பண்ணறார்.
नन्दिग्रामे जटां हित्वा भ्रातृभिः सहितोऽनघः |
रामः सीतामनुप्राप्य राज्यं पुनरवाप्तवान् ||
நந்தி³க்³ராமே ஜடாம்ʼ ஹித்வா ப்⁴ராத்ருʼபி⁴꞉ ஸஹிதோ(அ)னக⁴꞉ |
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||
நந்திக்ராமத்தில் தன்னுடைய ஜடையெல்லாம் நாவிதர்களை கொண்டு எடுத்துட்டு, தம்பிகள் கூட சேந்து அம்மா வரா, வசிஷ்டர் முதலான ப்ராஹ்மணர்கள் எல்லாம் வரா, எல்லோரோடும் சேர்ந்து ராமர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். அடுத்த lineல,
रामः सीतामनुप्राप्य राज्यं पुनरवाप्तवान् ||
ராம꞉ ஸீதாமனுப்ராப்ய ராஜ்யம்ʼ புனரவாப்தவான் ||
ராமர் சீதையை அடைந்து, ராஜ்ஜியத்தையும் மீண்டும் அடைந்தார் அப்டின்னு ஒரு வரி இருக்கு. இதான் ராம பட்டாபிஷேகம். இதுக்கப்புறம் 11 ஸ்லோகங்கள்ல ராம ராஜ்ஜியத்தின் பெருமை, ராமாயணம் படிக்கறதோட பலஸ்ருதி
அதெல்லாம் வரது. அதோட அர்த்தம் நாளைக்கு பார்ப்போம். நாளைக்கு கொஞ்சம் விஸ்தாரமா ராம பட்டாபிஷேக ஸ்லோகங்களும் பார்ப்போம்.
ஜானகி காந்தஸ்மரணம்.. ஜய் ஜய் ராம ராம !!!