ஸ்துதி சதகம் 3வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி குங்குமம்
ये सन्ध्यारुणयन्ति शङ्करजटाकान्तारचन्द्रार्भकं
सिन्दूरन्ति च ये पुरन्दरवधूसीमन्तसीमान्तरे ।
पुण्यं ये परिपक्वयन्ति भजतां काञ्चीपुरे माममी
पायासुः परमेश्वरप्रणयिनीपादोद्भवाः पांसवः ॥
யே ஸந்த்4யாருணயந்தி ஶங்கர ஜடாகாந்தார சந்த்ரார்ப4கம்
ஸிந்தூ3ரந்தி ச யே புரந்த3ரவதூ4 ஸீமந்த ஸீமாந்தரே |
புண்யம் யே பரிபக்வயந்தி ப4ஜதாம் காஞ்சீபுரே மாமமீ
பாயாஸு: பரமேஶ்வர ப்ரணயினீ பாதோ3த்ப4வா: பாம்ஸவ:||
இது ஸ்துதி சதகத்தினுடைய 3வது ஸ்லோகம்.
*பரமேஶ்வர ப்ரணயினீ பாதோத்பவா: பாம்ஸவ:* – பரமேஸ்வரனுடைய உயிர் நாடியான, உயிருக்கும் மேலான, ப்ரியத்துக்குரிய காமாக்ஷி – *பரமேஸ்வர ப்ரணயினீ*- அப்படீங்கறா. அப்படி அவாளுக்குள்ள ஒற்றுமை, ப்ரேமை. அந்த காமாக்ஷியுடைய – *பாதோத்பவா: பாம்ஸவ:*- திருப்பாதங்களிலிருந்து வெளிப்படும் *பாம்ஸவ:* ன்னா துகள், அதாவது பாத தூளி – *அமீ பாம்ஸவ:* அந்த காமாக்ஷியுடைய பாத தூளி – *மாம் பாயாஸு:* – என்னைக் காப்பாற்றட்டும்.
அந்த பாத தூளி மகிமை எப்பேற்பட்டதுன்னா – *யே ஸந்த்யாருணயந்தி ஶங்கர ஜடாகாந்தார சந்த்ரார்பகம்* – பரமேஸ்வரனுடைய ஜடாபாரம் – அது ஒரு காடு போல இருக்காம். *காந்தாரம்* னா காடு. *ஜடா காந்தார சந்த்ரார்பகம்* – அந்த காட்டுல இருக்கக் கூடிய – *சந்த்ரார்பகம்* னா – சந்திர குழந்தைன்னு அர்த்தம். அதாவது இளம்பிறை. பரமேஸ்வரன் அவருடைய ஜடாபாரத்துல இளம்பிறையை சூடிக்கொண்டிருக்கிறார். காமாக்ஷியினுடைய பாததூளி அந்த சந்திரனை – *ஸந்த்யாருணயந்தி* – சந்தியா காலத்து செம்மை வண்ணமாக தீட்டிவிட்டது. சிவப்பா அடிச்சுடுத்து. அப்படீன்னு ஒரு பதப்ரயோகம். கவிகளுடைய ஸ்ருஷ்டி அதெல்லாம். *ஸந்த்யா ருணயந்தி* அப்படீங்கறார். அந்த பரமேஸ்வரனுடைய தலையிலிருக்கிற சந்திரன் அம்பாளுடைய பாத தூளியினால சிவப்பா ஆயிடுத்துன்னா என்ன அர்த்தம்? ஸ்வாமி நமஸ்காரம் பண்றார், ப்ரணய கலகத்தும் போது. அப்ப அந்த பாத தூளி பட்டு சந்திரன் சிவந்து போயிடறான்.
*ஸிந்தூரந்தி ச யே புரந்தரவதூ ஸீமந்த ஸீமாந்தரே* – புரந்தரவதூன்னா இந்திரனுடைய மனைவி சசி. சசிதேவியினுடைய – *ஸீமந்த ஸீமாந்தரே* – ஸீமந்தம்னா வகிடு. அந்த, அதாவது, வகிடோட எல்லையில், வகிட்டுப் பொட்டுல – *ஸிந்தூரந்தி* – ஸிந்தூரம் போல காமாக்ஷியுடைய பாத தூளி இருக்கு. அவ சசிதேவி, கணவனை காப்பாத்திக் குடுத்தா; கணவனுக்கு அபயம் குடுத்தாங்கறதனால வந்து நமஸ்காரம் பண்றா. அந்த, அம்பாளுடைய பாத தூளி, அந்த வகிட்டுல இருக்கற குங்குமம் போல இருக்கு அப்படீங்கறா.
*புண்யம் யே பரிபக்வயந்தி பஜதாம் காஞ்சீபுரே* – காஞ்சீபுரத்தில் இருப்பவர்களுடைய – புண்யம் பரிபக்வயந்தி – காமாக்ஷியினுடைய பாத தூளி, அது ஸிந்தூரம்னு சொல்லிட்டா இல்லயா? அந்த காமாக்ஷியினுடைய கோயில்ல போனா குங்குமார்ச்சனை பண்ணி, காமாக்ஷிக்கு முன்னாடி பகவத்பாதாள் ப்ரதிஷ்டை பண்ண ஸ்ரீ சக்ரத்துல குங்குமார்ச்சனை பண்ணுவா. அப்புறம் அந்த குங்குமத்த அரூபலக்ஷ்மி அப்படீன்னு அங்க ஒரு ஸன்னிதி இருக்கு. அந்த ஸன்னிதில வச்சு, அப்புறம் நம்மட்ட குடுப்பா. அந்த குங்குமத்த இட்டுண்டே வந்தா, அவாளுடைய புண்யம் ஜாஸ்தியாயி அவாளுக்கு அது செல்வத்தக் குடுக்கும். அழகைக் குடுக்கும். மோக்ஷ லக்ஷ்மியையே குடுக்கும். அந்த மாதிரி காஞ்சீபுரத்தில் இருப்பவர்களுடைய புண்யத்தை – *பரிபக்வயந்தி* – அந்த பரிபக்குவம் அடைய பண்ணிக்கறது காமாக்ஷியினுடைய பாத தூளி. அப்பேர்ப்பட்ட அந்த பாததூளி, என்னையும் காப்பாத்தட்டும் அப்படீன்னு ஒரு அழகான ப்ரார்த்தனை.
காமாக்ஷி கோயில்ல குடுக்கற குங்குமத்த எடுத்து நம்மாத்து குங்குமத்துல சேர்த்துண்டு தினம் நெத்தியில இட்டுக்கும் போது, சுமங்கலிகள் இந்த ஸ்லோகத்த சொல்லி இட்டுக்கலாம் அப்படீன்னு நான் சொன்னேன். சில பேர் பண்றா. அதுல ஒரு குழந்தை சொன்னா நான் இந்த பாராயணத்தும் போது இந்த ஸ்லோகம் வரும் போதெல்லாம் வகிட்டுல குங்குமம் இட்டுக்கறேண்ணா, அப்படீன்னு சொன்னா. ரொம்ப அழகா இருக்குன்று சொன்னேன். தீர்க்க செளமாங்கல்யத்தக் குடுக்கும் காமாக்ஷியினுடைய பாத தூளி.
இந்த முதல் வரில பரமேஸ்வரனே வந்து நமஸ்காரம் பண்றார் அப்படீன்னு சொல்றார். கணவன் மனைவிக்குள்ள’ அந்த ப்ரேமை ஜாஸ்தியாயிருந்தா, பரமேஸ்வர ப்ரணயினீன்னு சொல்றாரே. அப்படி ஒருத்தர்க்குள்ள அன்பு இருந்தா, கணவன் மனைவியினுடைய பேச்சைக் கேக்கறதுக்கு செளபாக்யம்னு அர்த்தம். அந்த மாதிரி செளபாக்யமும் பெருகும், காமாக்ஷியினுடைய அனுக்ரஹம் இருந்தா. அந்த பொண்ணு விசேஷம் பரிபக்குவம் அடைஞ்சு எல்லா க்ஷேமமும் கிடைக்கும். அப்படி, அவ்ளோ பலன் காமாக்ஷியுடைய குங்குமத்துக்கு.
காஞ்சி காமாக்ஷி கோயில்ல குடுக்கற குங்குமம் தனி ஒரு அழகா இருக்கும். அதோட வர்ணமும், அதோட வாசனையும். ரொம்ப அழகா இருக்கும். மதுரைல குடுக்கற குங்குமம். அது ஒரு அழகா இருக்கும். அது மாதிரி ஒவ்வொரு க்ஷேத்ர விசேஷம். இந்த ஸ்லோகத்துல – *மாம் அமீ பாம்ஸவ: பாயாஸு :*- என்னைக் காப்பாற்றட்டும். அப்படீன்னு சொல்லும் போது பெண்கள், சுமங்கலிகள் அந்த மாதிரி கணவனுடைய எப்பவும் கூடி இருக்கணும்; கணவன் தன்னுடைய அன்புக்குக் கட்டுப்படணும்; அந்த கணவனுடைய அன்புனால தன்னுடைய குழந்தைகளும், பரிஜனங்களும் எல்லாரும் க்ஷேமமா இருக்கணும் – அப்படீன்னெல்லாம் வேண்டிக்கறதுக்கு இந்த ஸ்லோகத்துல இருக்கு.
நமக்கு என்ன, பக்தர்களுக்கு என்னன்னா, பக்தர்களும் அந்த மாதிரி பகவான் கிட்ட பக்தி பண்ணா நம்மருடைய பக்தி பரிபக்குவம் அடையும்; நம்மளும் இடையறாது பகவானோட கூடியிருக்கலாம்; நம்முடைய அன்புக்கும் பகவான் கட்டப்படுவார். அப்படீன்னு ஒரு அர்த்தம் வெச்சுக்கலாம்.
யே ஸந்த்யாருணயந்தி ஶங்கர ஜடாகாந்தார சந்த்ரார்பகம்
ஸிந்தூரந்தி ச யே புரந்தரவதூ ஸீமந்த ஸீமாந்தரே |
புண்யம் யே பரிபக்வயந்தி பஜதாம் காஞ்சீபுரே மாமமீ
பாயாஸு: பரமேஶ்வர ப்ரணயினீ பாதோத்பவா: பாம்ஸவ: ||
நம: பார்வதி பதயே |
ஹர ஹர மஹாதேவா ||
3 replies on “காமாக்ஷி குங்குமம்”
காமாக்ஷியின் குங்குமம் எல்லாருக்கும் எத்தனை ஸௌபாக்யங்களை கொடுக்கறது என்று சொல்கிற அழகான ஸ்லோகம். அருமையான விளக்கம். 👌🙏🌸
அம்பாளுடைய பாததூளியே இத்தனை மங்களங்களையும் கொடுக்கறது.🙏🌸
ராமருடைய பாததூளி பட்டு அகலிகைக்கு சாப விமோசனம் கிடைச்சதே ! ‘அஞ்ஞானம் நீங்கி ஞானம் கிடைத்த மாதிரி’ன்னு உவமை சொல்றார் கம்பர். விஸ்வாமித்ரர், தாடகையோடு போரிட்டதை குறிப்பிட்டு, ‘உன் கை வண்ணம் அங்கு கண்டேன்’. அகலிகை சாப விமோசனத்தைப் பார்த்து, ‘உன் கால் வண்ணம் இங்கு கண்டேன்’னு சொல்றார். கௌதமர்கிட்ட, ‘அஞ்சன வண்ணத்தான்தன் அடித்துகள் கதுவாமுன்னம் வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்.’னு சொல்றார். ராமருடைய பாததூளி பட்டும் படுவதற்கு முன்னயே அகலிகை பழைய வடிவத்தோட எழுந்து நிற்கிறாளாம்.
நம்முடைய பக்தி பரிபக்குவம் அடையறதுக்கும் அம்பாளுடைய நினைப்பிலேயே நம் மனசு கரையறதுக்கும் அந்த பாதங்களே ரக்ஷிக்கட்டும்.🙏🌸
பரமேஸ்வரனின் பிரியபத்நியான காமாக்ஷியின் பாத தூசி பரமனின் ஜடா முடியாகிய காட்டில் உறையும் இளம் பிறையினை சந்தியா காலத்தில் செவ்வண்ணமாக மாக்குகிறது! தேவேந்திரன் மனைவி சசி தேவி தன் வகிடு அம்பாள் பாதத்தில்பதிய நமஸ்காரம் செய்யும் போது, அவள் நடு வகிட்டில் சிந்தூர வண்ணமாக ச் செய்கிறாள் அம்பாள்!! காஞ்சியில் தன்னை வணங்கித் துதிப்பவருக்கும் தன் பாத நினைவிலேயே தோயும் பரமானந்தம் அளிக்கிறாள்!!
இந்த இடத்தில் பெரியவா சொல்வது நினைவு வருகிறது. ஸ்துரீகள் நேர் வகிடு எடுத்து வாரிக்கொள்ள வேண்டும், சீமந்த சிந்தூரி என்று சொல்லப்படும் இடத்தில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது.
ஒரு பெண் தனக்குக் குழந்தைப் பேறு இல்லை என்று பெரியவாளிடம் சொல்லி வருத்தப் பட்டபோது பெரியவா சீமந்த சிந்தூறி என்று சொல்லும் படியான முன் நெற்றியில் வகிடு சங்கமிக்கும் இடத்தில் குங்குமம் தரிக்கும்படி அனுகிரகித்தார்,!
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று பட்டர் சொல்வதும் அதுதான் !!
இந்தக் காலப் பெண்களுக்குப் தேவையான ஒர் பதிவு!!
ஜய ஜய ஜகதம்ப சிவே…
அருமையான ஸ்லோகம் அருமையான விளக்கம் மஹாபெரியவா சரணம்