ஸ்துதி சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – மஹாபெரியவா திருவடிகளே சரணம்
कवित्वश्रीकन्दः सुकृतपरिपाटी हिमगिरेः
विधात्री विश्वेषां विषमशरवीरध्वजपटी ।
सखी कम्पानद्याः पदहसितपाथोजयुगली
पुराणी पायान्नः पुरमथनसाम्राज्यपदवी ॥
கவித்வஸ்ரீகந்த:³ ஸுக்ருʼதபரிபாடீ ஹிமகி³ரே:
விதா⁴த்ரீ விஶ் வேஷாம் விஷமஶர வீரத்⁴வஜபடீ ।
ஸகீ² கம்பாநத்³யா: பத³ஹஸிதபாதோ²ஜயுக³லீ
புராணீபாயாந்ந: புரமத²னஸாம்ராஜ்யபத³வீ ||
இது ஸ்துதி சதகத்திலே 46ஆவது ஸ்லோகம்.
கவித்வஸ்ரீகந்த: – கவிதை அழகுக்கு மூலமாகவும், ‘மூலம்’ன்னா கிழங்கு.
கிழங்குலேந்து செடி திரும்பத் திரும்ப முளைக்கும். அந்த மாதிரி
எங்கேயாவது ஓரு அழகான கவிதையைப் பாத்தா இது காமாக்ஷியோட
அனுக்கிரஹம் அப்படின்னு சொல்லலாம். ‘சிவாநந்த லஹரி’யில 50 ஆவது ஸ்லோகம். இது மஹாபெரியவாளுக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்லோகம். ஸ்ரீசைலத்திலேயே போய் ஸ்வாமி ஸன்னதிலே இதை நெறைய சொல்லிண்டு இருந்தான்னு ஆச்சார்ய திவ்ய சரித்திரத்திலே
எழுதிருக்கா.
“ஸந்த்யாரம்பவிஜ்ரும்பிதம் ச்ருதிசிரஸ்தாநாந்தராதிஷ்டிதம்
ஸப்ரேமப்ரமராபிராமமஸக்ருத் ஸத்வாஸநாஷோபிதம்
போகீந்த்ராபரணம் ஸமஸ்தஸுமந: பூஜ்யம் குணாவிஷ்க்ருதம்
ஸேவே ஸ்ரீ கிரிமல்லிகார்ஐுந மஹாலிங்கம் சிவாலிங்கிதம்”
இந்த ஸ்லோகம் சிவனுக்கும் பொருந்தும் மல்லிகை மலருக்கும் பொருந்தும். இந்த மாதிரி ஓரு கவிதையைப் படிக்கும்போது இது ‘காமாக்ஷியோட அனுக்கிரஹம்’ன்னு நமக்கு தோணறது.
ஸுக்ருʼதபரிபாடீ ஹிமகி³ ரே: ஹிமவான் செய்த புண்ணியம் எல்லாம் சேர்ந்து ஒரு உரு எடுத்து வந்த மாதிரி. நம்ம பண்ணின புண்ணியங்கள் எல்லாம் எத்தனையோ ஜென்மங்களா புண்ணியம் பண்ணினதுனாலே இந்த ஜென்மத்தில ‘அதிருஷ்டமா’ கண்ணுக்கு தெரியாம அது இருந்துண்டு நமக்கு ஒரு நல்லதை பண்ணறது. அந்த மாதிரி ஹிமவான் பண்ணின புண்ணியம் எல்லாம் சேர்ந்து கண்ணுக்கு தெரியும்படியாக ஒரு உருவம் எடுத்தது ‘காமாக்ஷி’ அப்படிங்கறார்.
அப்படி ஹிமவான் என்ன புண்ணியம் பண்ணினார் அப்படின்னா, ஹிமவான் தபஸ்விகளுக்கு இருக்கறதுக்கு இடம் குடுத்தார். அந்த புண்ணியந்தான். கிருஷ்ணனே வந்து தங்களுக்கு மத்தியிலே பொறக்கறதுக்கு கோபிகைகள் என்ன புண்ணியம் பண்ணினா அப்படின்னா ‘கோ ஸம்ரக்ஷணம்’ பண்ணினா, அதுதான் அப்படின்னு ஒருத்தர் எழுதியிருந்தார். அந்த மாதிரி தபஸ்வி சரணமா ஹிமவான் இருக்கார். அந்தப் புண்ணியத்தினாலே காமாக்ஷியே குழந்தையா வந்து அவருக்கு பொறந்தா.
விதா⁴த்ரீ விஶ் வேஷாம் – வெறும் இந்த பூலோகம் மட்டும் இல்லை. ‘விதா⁴தா’ ன்னா பிரம்மா. விஸ்வத்தையும் ஸ்ருஷ்டி பண்ணினது காமாக்ஷிதான். விஷமஶர வீரத்⁴வஜபடீ – ‘விஷமஶர:’ன்னா அஞ்சு புஷ்ப பாணங்களை
வெச்சிண்டு இருக்கற மன்மதன். அவனுடைய ‘வீரத்⁴வஜபடீ’ . வெற்றிக்
கொடியைப் பறக்க விடுபவள். எரிஞ்சு பஸ்மமா போயிட்ட மன்மதனை
திரும்பவும் உலகத்தை எல்லாம் ஜெயிக்கும் படியா பண்ணியிருக்கா.
தன்னுடைய கண்களிலே மன்மதனை வெச்சுண்டு பரமேஸ்வரனையே
வசம் பண்ணினாள். ஸகீ² கம்பாநத்³யா: கம்பா நதியின் தோழி என்கிறார். அயோத்யா காண்டத்திலே பரதன் வர்றதுக்கு முன்னாடி, ராமர் ஸீதா தேவியை அழைச்சிண்டு மந்தாகினி நதி , சித்ரகூட மலை, அதோட இயற்கை வனப்பு எல்லாம் விவரிச்சிண்டே போயிண்டு இருப்பார். அப்போ மந்தாகினி கிட்ட வந்த உடனே, ‘ இந்த மந்தாகினி நதியவே நீ உன்னோட தோழின்னு நினைச்சுக்கோ’ அப்படின்னு சொல்வார். அதுமாதிரி ஸீதாதேவி ‘ஸகீ மந்தாகினி நத்யா:’ . காமாக்ஷி ‘ ஸகீ கம்பாநத்யா:’
.
பரமேஸ்வரன் அம்பாளுடைய பக்தியை சோதனை பண்ணறதுக்காக, தன்
தலையில இருந்த கங்கையவே கம்பா நதியாக ஓடச் சொன்னார். அந்த நதி ஓடி வந்து அம்பாள் பூஜை பண்ணிண்டுருந்த மணல் லிங்கத்தை அடிச்சிண்டு
போகப் பார்த்தபோது அந்த லிங்கத்தை அம்பாள் அணைச்சுண்டா. அப்படி
முதல்ல கம்பை சண்டைக்கு வந்தா. அப்பறம் பரமேஸ்வரன் பார்வதி
கல்யாணம் பண்ணிட்ட பின்னே கம்பை காமாக்ஷியுடைய தோழி ஆயிட்டா.
பத³ஹஸிதபாதோ²ஜயுக³லீ – காமாக்ஷி தேவியுடைய திருப்பாதங்கள்
தாமரையுடைய அழகைப் பரிஹாஸம் பண்ணறது. அவ்வளவு அழகா இருக்கு
அந்த சிவப்பு.
புராணீ – எல்லாருக்கும் முன்னாடி தோன்றின தெய்வம். ‘கறைக் கண்டனுக்கு
மூத்தவளே’ என்று பாடறாரே அபிராமிப் பட்டர். அந்த மாதிரி எல்லாருக்கும்
முன்னாடி தோன்றினது காமாக்ஷிதான்.
பாயாந்ந: – ந:பாயாத் . எங்களைக் காப்பாத்தட்டும்
புரமத²னஸாம்ராஜ்யபத³வீ – முப்புரங்களை எரித்த பரமேஸ்வரனுக்கு
சாம்ராஜ்ய பதவியைக் குடுத்தவள் காமாக்ஷிதான். அவர் எங்கேயோ ஒரு
கிழட்டு மாடு வெச்சிண்டு, சாம்பல பூசிண்டு தபஸ் பண்ணிண்டிருந்தார்.
அவரைக் கல்யாணம் பண்ணிண்டு, குடும்பி ஆக்கி, அவருக்கு முப்புரங்களை
எரிக்கற சக்தியைக் குடுத்து, பரமேஸ்வரனை உலகமெல்லாம் வணங்கும்
தெய்வமாக்கினது காமாக்ஷிதான் அப்படிங்கறார். இவருக்கு அம்பாள் மேலே
அவ்வளவு பக்தி.
கவித்வஸ்ரீகந்த:³ ஸுக்ருʼதபரிபாடீ ஹிமகி³ரே:
விதா⁴த்ரீ விஶ் வேஷாம் விஷமஶர வீரத்⁴வஜபடீ ।
ஸகீ² கம்பாநத்³யா: பத³ஹஸிதபாதோ²ஜயுக³லீ
புராணீபாயாந்ந: புரமத²னஸாம்ராஜ்யபத³வீ ||
இன்னிக்கி மஹாபெரியவாளுடைய ஆராதனை. 25ஆவது ஆராதனை. 100
வர்ஷம் அருளாட்சி பண்ணி காமாக்ஷியோடவே கலந்தவா. அதிலேந்து 25
வருஷங்கள் ஆயிருக்கு. இந்த ஸ்லோகத்தைப் படிக்கும்போது இந்த
ஸ்லோகம் பெரியவாளுக்கே பொருந்தும் அப்படின்னு தோண்றது.
எப்படின்னா…
கவித்வஸ்ரீகந்த: பெரியவாள நம்ம தலைமுறைக்காறாள் எல்லாம் எப்படி
தெரிஞ்சிண்டோம்ன்னா ‘தெய்வத்தின் குரல்’ மூலமாத்தான் தெரிஞ்சிண்டோம்.
இல்லையா!. அந்த ‘தெய்வத்தின் குரல்’ படிக்கும்போது அது பெரியவாளே
பேசற மாதிரி இருக்கும். அது மூலமா எத்தனையோ நமக்கு ஆச்சர்யமான
தகவல்களும், ஒரு தெளிவும், அதுமூலம் ஒரு அனுக்ரஹமும், அன்பும்
நமக்கு உணரமுடிஞ்சிது. அதுக்கப்புறம் நம்ம மதத்தைப் பத்தி எல்லா
literatureக்கும் அதுதான் basis அப்படின்னு தோணும். யாரும் நம்முடைய
மதத்தைப் பத்தி அழகா பேசினாலும், அது தெய்வத்தின் குரல் படிச்சவாளா
இருக்கணும் அப்படின்னு தோணறது. அந்த அளவுக்கு ஒரு Magnum Opus ஆ
நம்முடைய மதத்தைப் பத்தி மஹாபெரியவா தெய்வத்தின் குரலைக்
குடுத்துருக்கா.
ஸுக்ருʼதபரிபாடீ ஹிமகி³ ரே: ஹிமய மலைக்கு தெற்கிலே இருக்கிற பாரத
தேசத்திலே வந்து அவதாரம் பண்ணினதினாலே நம்முடைய புண்ணியம்
அது. அதுவும் நம்ம தமிழ் தேசத்திலே அவதாரம் பண்ணி, இங்கிருந்து
பாரததேசம் முழுக்க பாதயாத்திரை பண்ணி, இரண்டு வாட்டி காசி யாத்திரை
பண்ணி, எத்தனையோ தேசங்களுக்குப்போய் அங்க அங்க ஜனங்களுக்கு
தர்சனம் குடுத்து உபதேசம் பண்ணி அவாளை நல்வழிப் படுத்தினார் .
விதா⁴த்ரீ விஶ் வேஷாம் – ‘உலகத்தையே ஸ்ருஷ்டி பண்ணினது பெரியவா
தான்’ ன்னு இன்னக்கி எப்படி தெரியறதுன்னா, எந்த எந்த culture லேயோ
பொறந்தவா நம்ம குழந்தைகள். ‘தோடகாஷ்டகம்’ சொல்லி இன்னைக்கி
பெரியவாளை நமஸ்காரம் பண்ணிண்டு இருக்கு. வேற எது சொன்னாலும்
அவ காதில வாங்க மாட்டா. ஆனா பெரியவா பேரச் சொல்லி ‘ஒரு
ஸ்தோத்ரம் சொல்லு’ அப்படின்னா அந்த குழந்தைகள் அதைக் கேட்டுண்டு
பண்ணறா. அப்படின்னா என்ன அர்த்தம். ஓரோருத்தருக்குள்ளேயும்
தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமா தன்னை ஸ்ருஷ்டி பண்ணின நம்முடைய
creator, அந்தக் கடவுள் மஹாபெரியவாதான்னு எல்லாரும் உணர்றான்னு
அர்த்தம்.
விஷமஶர வீரத்⁴வஜபடீ – அப்படின்னா மன்மதனுடைய வெற்றிக் கொடிய
பறக்கவிடறா பெரியவா. இங்க இருக்கற கலியிலே ஜனங்கள் எவ்வளவு
புத்திகெட்டு என்னன்னவோ பண்ணிண்டு இருக்கும்போது பெரியவாளுடைய
பக்தர்கள் தார்மீகமா ஒரு கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா தம்பதிகளா
இருக்கான்னா அதுக்கு பெரியவாளோட ஆத்மசக்திதான் காரணம்.
ஸகீ² கம்பாநத்³யா: காஞ்சி தேசத்துக்கு வந்து பெரியவா அதிஷ்டானமா
இருக்கா. இன்னக்கி அங்க விமரிசையா அவரோட ஆராதனை உத்ஸவம்
நடக்கறது. ‘கும்பகோணம் ஸ்வாமிகள்’ அப்படின்னுதான் முதல்ல
கும்பகோணத்திலே மடம் இருக்கும்போது அவரைச் சொல்லிண்டிருந்தா.
பெரியவா காஞ்சிபுரத்துக்கு வந்து, தினமும் அந்த காமாக்ஷிய தர்சனம்
பண்ணி, அந்த காமாக்ஷியுடைய அனுக்ரஹத்தை எல்லாருக்கும் பெற்றுக்
கொடுத்தார். அதிலே இருந்து ‘காஞ்சி பெரியவாள்’ ஆயிட்டா. உலகம் முழுக்க
காஞ்சி சங்கராச்சார்யா அப்படின்னுதான் foreigners கூட புரிஞ்சிண்டுருக்கா.
‘பதஹஸிதபாதோ²ஜயுக³லீ’ ன்னு மஹாபெரியவாளுக்கு சொல்லும்போது,
தாமரை என்கிறது தூய்மையை குறிக்கிறது. மஹாபெரியவா சன்யாச தர்மத்த
கடைபிடிச்ச பின்னே இன்னொருத்தர் அந்த மாதிரி அந்த சன்யாச தர்மத்த
உலகத்தில கடைபிடிக்கவே முடியாது. அவ்வளவு தூய்மையா எல்லா
ஆச்சாரங்களையும் கடைபிடிச்சுண்டு மூணு வேளை ஸ்நானம்,
சந்திரமௌலீஸ்வர பூஜை, சாதுர்மாஸ்ய விரதத்தின் போது இன்னென்ன
சேர்க்கலாம், இன்னென்ன சேர்க்கக்கூடாது, அந்த நியமங்கள், எத்தனையோ
பட்டினி. எல்லாத்துக்கும் மேல துறவறம்னா அப்பேற்பட்ட துறவு. கொஞ்சம்
கூட காமினி காஞ்சனத்தில, ஒரு சொட்டு கூட களங்கம் இல்லாத தூய்மை.
மத்த சந்யாசிகள் எல்லாம் நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு அவாளைக்
கேலி பண்ணற அளவுக்கு மஹாபெரியவாளுடைய அந்தத் துறவு
அனுஷ்டானம் இருந்தது.
பெரியவாளுடைய ‘ப்ரெண்ட்ஸ்’ன்னு பாத்தா அந்த மடத்திலே இருந்த
துறவிகள்தானே. அவளோடெல்லாம் பெரியவா ரொம்ப விளையாட்டா
பேசிண்டுருந்திருக்கா. வேடிக்கை பண்ணுவான்னு கூட சொல்லுவா. ஒரு
வாட்டி ஒரு கிரஹஸ்தரும் ஒரு ஸன்யாசியும் சண்டை போடறா. சத்தமா.
அந்த ஸன்யாசி வந்து பெரியவாகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணறாராம்.
பெரியவா விளையாட்டா, ‘என்ன சுவாமிகளே, நல்ல காலம்
வாய்ச்சண்டையோட போச்சு. கைச்சண்டையா முத்தியிருந்தா ஒங்கள்ட்ட
கம்பு இருக்கு. அவர்ட்ட அதுகூட இல்லை’ அப்படின்னாராம்.
ஸன்யாசியாயிருக்கறவன் சாந்தமா இருக்கணும். இந்தமாதிரி சண்டை
போடலாமாங்கிறத விளையாட்டா சொல்லறார்.
புராணீ – பெரியவா அப்படிங்கற வார்த்தை நம்ம பெரியவா ஒருத்தருக்குதான்.
அதிலேயும் மஹாபெரியவான்னு நம்மெல்லாம் இப்போ கொண்டாடறோம்.
“முன்னை பழம்பொருட்கும் முன்னை பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேற்றும் அப்பெற்றியனே” அப்படின்னு பாடின மாதிரி
எல்லாருக்கும் பெரியவா ‘மஹாபெரியவா’. அந்தப் பெரியவா இந்த
ஆராதனை வைபவத்திலே தன்னை வணங்கறவர்க்கெல்லாம் எல்லா
க்ஷேமங்களையும் குடுப்பா. ஸ்வாமிகள் சொல்லுவார். இந்த கலியிலே நம்மால எல்லா வேத தர்மங்களையும் அனுஷ்டிக்க முடியாது. ஆனா மஹாபெரியவா நூறு வர்ஷங்கள் அத்தனை வேத தர்மங்களையும் அனுஷ்டிச்சு அவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கா. ஸன்யாசிக்கு அவரோட புண்ணியம் அவரை ஒட்டாது. அது நமக்குத்தான். நமஸ்காரம் பண்ணறவாளுக்கு அவருடைய புண்ணியம் போகும். அதனாலே ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ அப்படின்னு நாலு தடவை சொல்லி அவரை நமஸ்காரம் பண்ணினா போறும். வேற ஒரு மந்திரமும் வேண்டாம் அப்படின்னு சொல்லுவார்.
ந:பாயாத் – அந்த பெரியவா நம்மளைக் காப்பாத்தட்டும். இந்த மூககவி ரொம்ப
பிராட் மைண்டட். ‘ந:’ ன்னா ‘எங்களை’ ன்னு அர்த்தம். ‘என்னை’ன்னு
சொல்லாம அவர் நம்மெல்லாரையும் சேர்த்து ப்ரார்த்தனை பண்ணறார். ‘ந:
பாயாத்’ எங்களைப் பெரியவா காப்பாத்தட்டும். இந்த கோரமான கலியில
ஒவ்வொரு நாளும் பலவிதமான ஆபத்துக்கள் நெருங்கி வந்துண்டே இருக்கு.
பெரியவா பக்தர்களை அது ஒண்ணும் பாதிக்கறதில்லைன்னு கண்கூடாப்
பார்க்கறோம்.
புரமத²னஸாம்ராஜ்யபத³வீ – சட்டதிட்டங்கள்படி பரமேஸ்வரன்
தண்டிக்கறதுன்னு வெச்சிண்டா நம்ம ஒன்னுமே பண்ணமுடியாது.
காமாக்ஷியா இருந்து பெரியவா நம்மளைக் காப்பாத்தறதுனாலதான் நமக்கு
இந்த அளவுக்கு சாப்படறதுக்கு உணவும், ஓரளவு மழையும் பெஞ்சிண்டு,
நாமும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை நடத்திண்டு இருக்கோம். வேதம்
படிக்கறதுக்கோ, ஹோமங்கள் பண்ணறதுக்கோ, யாகங்கள் பண்ணறதுக்கோ,
பலவிதமான ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கு. இடம், காலம், என்ன என்ன
சாமான்கள் சேர்க்கலாம், யார் யார் ‘ரித்விக்’கா இருக்கணும், அப்படியெல்லாம்
பலவிதமான ரூல்ஸ் இருக்கு. அல்ப சக்தர்களாகவும், அல்ப புத்தி
இருக்கறவா நமக்கு ‘அம்மா காப்பாத்து’னு சொல்லறதுக்கு ஒரு ரூலும்
இல்லையே. ‘காமாக்ஷி ந: பாயாத்’ னு இவர் சொல்லறார். இதுமாதிரி
ஸ்தோத்திரங்கள் சொல்லறதுக்கு ஒருவிதமான ரெஸ்ட்ரிக்ஷனும் கிடையாது. எங்க இருந்தாலும் நம்ம காமாக்ஷி மேலயும் காமாக்ஷி வடிவமான பெரியவா
மேலயும் ஸ்தோத்திரங்கள் சொல்லலாம். ‘மஹாபெரியவா திருவடிகள்
சரணம்’ அப்படின்னு சொல்லி வேண்டிப்போம்
கவித்வஸ்ரீகந்த:³ ஸுக்ருʼதபரிபாடீ ஹிமகி³ரே:
விதா⁴த்ரீ விஶ் வேஷாம் விஷமஶர வீரத்⁴வஜபடீ ।
ஸகீ² கம்பாநத்³யா: பத³ஹஸிதபாதோ²ஜயுக³லீ
புராணீபாயாந்ந: புரமத²னஸாம்ராஜ்யபத³வீ ||
நம: பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
2 replies on “மஹாபெரியவா திருவடிகளே சரணம்”
காமாக்ஷி மேல் மூககவி பாடியிருக்கும் இந்த அழகான ஸ்தோத்திரம், மஹாபெரியவாளுக்கும் எப்படி பொருந்தும் என்று விளக்கியது மிகச் சிறப்பு. அற்புதமான விளக்கம்👌🙏🌸
காமாக்ஷி, கம்பா நதியின் ஸகீ – ஸீதாதேவி, மந்தாகினி நதி ஸகீ 👌👌
ஸௌந்தர்யலஹரியில், “பர்வதராஜன் புத்ரி என்பதால் கிரிஸுதா, ஹிமகிரிஸுதா, பார்வதி என்றெல்லாம் பேர்கள் வருகின்றன” என்று மஹாபெரியவா குறிப்பிட்டு, “ஸர்வலோக ஜனனி, வாஸ்தவத்தில் அந்த ஹிமவானுக்கும் தாயாரானவள், தானும் குழந்தையாக வந்த அதிசயத்தை நினைத்து, அம்மாவைக் குழந்தையாக்கி அநுபவிக்கிற பாவத்தில் ஆசார்யாள், இந்தப் பேர்களை அதிகம் சொன்னார் போலிருக்கிறது.” என்று சொல்கிறார். மூககவியும் அதே பாவத்தில் காமாக்ஷியை பல இடங்களில் பர்வதராஜ புத்திரியாக அழைக்கிறார் போலும். இந்த ஸ்லோகத்தில் ஹிமவான் செய்த மாபெரும் தவம் என்கிறார்.🙏🌸
மன்மதன், சிவனை ஜயித்ததற்கு அடையாளமாகக் காஞ்சிக்கு ‘சிவஜித்’ க்ஷேத்திரம் என்ற பெயர் விளங்க காரணமாக இருந்து, அதனால் அவனுடைய வெற்றிக் கொடியை பறக்க விடுகிறாள் காமாக்ஷி என்கிறார் மூககவி. அதனால், ‘புரங்களை எரித்த சிவனின் சாம்ராஜ்யத்தை தன் வசமாக்கியவள்’.
அப்படிப்பட்ட காமாக்ஷியும் மஹாபெரியவாளும் நம்மை ரக்ஷிக்கட்டும்🙏🌸 குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி 🙏🙏🙏🙏
ஸ்ரீசைலஸ்வாமி பிரம்மரம்பா சமேத மல்லிகாஅர்ஜுனர் பற்றிய இந்த ஸ்லோகம் விசேஷம். அதற்கு மகாப்பெரியவாளையும் இணைத்த விளக்கம் இனிமை. வாழ்த்துக்கள். பெரியவாளுக்கு கோடி நமஸ்காரம்