ஸரஸ்வதி பெரியவா

Mahaperiyava reading a book

நான் ஸ்வாமிகளை தரிசனம் பண்ணின பதினைஞ்சு வயசுல இருந்து, மஹா பெரியவா ஸித்தி ஆகிற வரைக்கும், அந்த ஒரு எட்டு வருஷத்துல, ஸ்வாமிகள், அடிக்கடி “நீ போய் பெரியவாளை தரிசனம் பண்ணு. அவாதான் காமாக்ஷி. உனக்கு மூக பஞ்சசதி கிடைச்சிருக்கு, போயி பாத்துட்டு வா”, அப்டீன்னு சொல்லுவார். நான், காஞ்சிபுரத்துல வந்து பெரியவாளைத் தள்ளி நின்னு, தரிசனம் பண்ணிட்டு வந்துடுவேன். அதுல எனக்கு அதிகமா ஞாபகம் இருக்கிற காட்சி என்னன்னா, பெரியவா புஸ்தகங்கள் படிப்பா. ஒரு கூடை நிறைய லென்ஸ் வெச்சிருப்பா. கண்ணில ஒரு கண்ணாடி. அந்த கூடை லென்ஸ்ல இருந்து ஏதாவது ஒண்ண எடுத்து, ஒரு புஸ்தகத்து மேல காண்பிச்சிண்டு, ஒரு டார்ச் லைட் அடிச்சு புஸ்தகம் படிப்பா.  எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இவ்வளவு உலகமே ஸர்வக்ஞர்ன்னு கொண்டாடற  ஒரு மஹான் புஸ்தகம் படிக்கிறார், அப்டீன்னு எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.

அந்த புஸ்தகங்களில் எவ்வளவு ஆவல்னா, ஒரு வாட்டி, நான் பாத்துண்டு இருக்கும்போது, வானதி திருநாவுக்கரசு செட்டியார், தான் அப்பப்போ போட்ட புத்தகங்கள் எல்லாம் எடுத்துண்டு வருவார். அதையெல்லாம் ஒரு கூட தட்டுல அடுக்கி அத பெரியவா முன்னால வைப்பார். பெரியவா அதுல இருந்து சில புஸ்தகங்களை எடுத்து வெச்சுப்பார். ஒரு few hours அந்த புஸ்தகங்களை ஒண்ணு ஒண்ணா எடுத்துப் பார்த்து, படிச்சு முடிச்ச புஸ்தகங்களை எல்லாம் இந்த பக்கம் வெப்பார். அப்படி, புஸ்தகம் படிக்கிறது நிறைய பாத்துருக்கேன்.

அதைத் தவிர, வித்வத் ஸதஸ் conduct பண்றது பாத்துருக்கேன். பெரியவா பாத்துண்டு இருப்பா. ஏதாவது, ஒரு ஒரு வார்த்தைதான் பேசுவா. இல்லைனா ஒரு சைகை காண்பிப்பா. அதையே அந்த பண்டிதர்கள் புரிஞ்சுண்டு, பெரியவா என்ன சொல்ல விரும்பறான்னு, அதை அவா சொல்லுவா. அதே மாதிரி, தமிழ் பண்டிதர்களை எல்லாம் வெச்சுண்டு ஒரு ஸதஸ் பண்றதை பாத்துருக்கேன். இப்படி மஹாபெரியவா தரிசனம் அப்டீனா, எனக்கு personal ஆ ஞாபகம் இருக்கிறது, அவருக்கு படிப்புல ரொம்ப தீராத ஆவல், அப்டீங்கிறது எனக்கு ஞாபகம் இருக்கு.

இப்போ பெரியவாளை பத்தி எல்லாரும் சொல்ற அனுபவங்கள் எல்லாம் கேட்கும் போதும், அது ரொம்ப correctன்னு தெரியறது. கி.வா.ஜகன்னாதன் அவருடையப்  புஸ்தகங்கள் படிக்கும் போதும், அவரோட நாட்டுப்பெண் சித்ராங்கறவா பேசியிருக்கா. அதுல பாத்தா, பெரியவா, கி.வா ஜ வை திருப்புகழ் researchல ரொம்ப encourage பண்ணியிருக்கார். மு.மு.இஸ்மாயிலை கம்ப ராமாயணத்துல encourage பண்ணியிருக்கார்.

சிவன் சாரை அவரோட photography திறமையை வெளிப்படுத்தும்படியா  பெரியவா test வெச்சு இருக்கா. பெரியவா ஒரு குளத்தங்கரையில நூறு வைதிகாளோட நிக்கறா. “நாங்க எல்லாரும் வரும்படியா ஒரு photo எடு”ன்னு, சொன்ன உடனே சிவன் சார் மடமடன்னு அந்த குளத்துக்குள்ள இறங்கி ஒரு photo எடுத்துருக்கார். அதே மாதிரி, “சிதம்பரத்தோட எல்லா கோபுரங்களும் தெரியற மாதிரி photo எடு”ன்னு சொன்ன உடனே சிவன்சார் அந்த மாதிரி photo எடுத்துருக்கார். இந்த மாதிரி சித்திரக்கலைல பெரியவா அவர encourage பண்ணியிருக்கா. இந்த கும்பகோணத்துல லைப்ரரியப் பாத்துக்கச் சொல்லியிருக்கா.

தேதியூர் சுப்ரமணிய சாஸ்த்ரிகள் ஸ்ரீ வித்யா சம்பந்தமான புஸ்தகங்கள் எல்லாம் போடறதுக்கு பெரியவா encourage பண்ணியிருக்கா. எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்னு சமஸ்கிருத காலேஜ்ல இருந்தார். அவர்கிட்ட வேதம், சங்கர பாஷ்யம் கேட்டு இருக்கார். நம்ம ஸ்வாமிகள்கிட்ட ஸ்ரீமத் பாகவதம் கேட்டுருக்கார். சங்கீதம்னா மதுரை மணி ஐயர். அந்த மாதிரி, சித்திரம் வரையரதுன்னா சில்பி. கல்வெட்டுனா நாகசாமி. சிற்பம்னா கணபதி ஸ்தபதி, வில்லுப் பாட்டுனா ஆறுமுகம். வால்மீகி ராமாயணம், காளிதாசர் காவ்யங்கள்னா வீழிநாதன் மாமா, அப்டீன்னு, இந்த மாதிரி பண்டிதர்களை பெரியவா நிறைய encourage பண்ணியிருக்கான்னு அப்டீங்கிறது காதுல விழுந்துண்டே இருக்கு.

மஹா பெரியவா சொல்றா “அம்மா குழந்தைக்கு பால் கொடுத்து ஆளாக்கிற மாதிரி, அம்பாள் குரு வடிவாக வந்து ஞானப் பால் கொடுத்து, ஒருத்தனோட அக்ஞானத்தைப் போக்கறா. அதுனாலதான் அம்பாளோட உபாசனைக்கு ஸ்ரீவித்யா உபாசனைன்னு பேர்” அப்டீன்னு சொல்றா. அது பெரியவாளுக்கு தான் பொருந்தும்.

அந்த ஞானத்தை அம்பாள்தான் கொடுக்கறா அப்டீங்கிறதுக்கு, பெரியவா கேனோபநிஷத்ல இருந்து ஒரு கதை சொல்றா. அதாவது தேவர்களுக்கே கூட அம்பாள் தான் ஞானத்தைக் குடுத்தாங்கிற ஒரு கதை.

ஒரு தடவை தேவாசுர யுத்தத்தின்போது, தேவர்கள் ஜெயிச்சுடரா. அவா வெற்றி விழா கொண்டாடறா. ஒருத்தரை ஒருத்தர் ஸ்தோத்திரம் பண்ணிண்டு, இப்படி. அப்போ, பரமாத்மா பார்த்தாராம். இது என்னடா, இந்த தேவர்களுக்கே ஜெயிச்ச உடனே, அசுர குணம் வந்துடும் போல இருக்கே, அப்டீன்னு நினைச்சு, அப்படி கெட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லி, பக்கத்துலயே ஒரு அடிமுடி காண முடியாத மாதிரி ஒரு ஜோதி ஸ்வரூபமா, ஒளி வடிவமா பகவான் காட்சி கொடுக்கறார். இது என்னன்னு, இவாளுக்கு எல்லாம் வியப்பா இருக்கு. இப்போ நமக்கு புரியாததை யட்சிணினு சொல்றோமொல்யோ, அந்தமாதிரி அவா அதை யக்ஷம்னு சொன்னா.

அந்த யஷத்துக்கிட்ட முதல்ல அக்னிய அனுப்பறா. அக்னி போயி நீ யாருன்னு கேட்கறதுக்குள்ள, அந்த யஷம் அக்னிய பாத்து நீ யாருன்னு? கேட்கறது. உடனே அக்னி  “என் பேர் ஜாதவேதஸ். அக்னி பகவான்”, அப்டீன்னு சொன்ன உடனே, உன்னுடைய சக்தி என்னன்னு அந்த யஷம் கேட்கறது. அதுக்கு அக்னி பகவான், நான் எதையும் பஸ்மீகரம் பண்ணிடுவேன் அப்டீன்ன உடன், யக்ஷம் ஒரு துரும்பை கீழ போட்டு இத எரி பாக்கலாம் அப்டீன்ன உடனே, அக்னி தன்னோட முழு பலத்தையும் உபயோகப் படுத்தி அதை எரிக்கப் பாக்கறார். ஆனா அவரால எரிக்க முடியல. அக்னி பகவான் வெட்கப் பட்டுண்டு திரும்பி வந்துடறார்.

அப்புறம் வாயுவ அனுப்பறா. வாயு அதுக் கிட்டப் போன உடனே நீ யார்?னு யஷம் கேட்கறது. வாயு என் பேர் மாதரீஷ்வன், நான் எதையும் புரட்டி போட்ருவேன், அப்டீன்ன உடனே, திரும்பவும் யக்ஷம் ஒரு துரும்பை போட்டு, இத தூக்கு பாக்கலாம், அப்டீன்ன உடனே, தன்னோட முழு பலத்தையும் use பண்ணி அத தூக்கப் பாக்கறார். வாயு பகவானால அத தூக்க முடியல. வாயுவும் வெக்கப் பட்டுண்டு திரும்பி வந்துடறார்.

என்னடா இது, நாம எல்லாம் வெற்றி விழா கொண்டாடும் போது, இந்த ஒரு யஷம் என்னன்னே தெரியல, அதுவே நமக்கு ஒரு தோல்வி. நம்முடைய பக்ஷத்துல ரொம்ப சக்திமானான அக்னி, வாயுவெல்லாம் தோத்துப் போயிட்டானு நினைச்சு, அந்த வெற்றி விழா, அவாளுக்கு அபஜயம் ஆகிவிடறது, அவமானமா ஆகிவிடறது. கொஞ்சம் நல்லறிவும் வரது. விநயம் வரது. இந்திரன் பணிவோட அந்த யக்ஷத்தை நெருங்கி நமஸ்காரம் பண்றான். அப்போ “அந்த யக்ஷம் இருந்த இடத்தில் ஒரு ஸ்திரீ ரூபத்தில், உமா தேவி, ஹைமவதியாக காக்ஷி கொடுத்தாள்” அப்படீன்னு அந்த உபநிஷத்தில வரது.

“பஹு ஷோபமானா” ரொம்ப ஷோபையோடு, அழகோடு, காக்ஷி கொடுத்தா. “ஞானம் தான் ஷோபை” அப்படீன்னு ஆதி சங்கரர், ஆச்சார்யாள் இங்கே பாஷ்யம் எழுதி இருக்காளாம். அப்படி ஞான வடிவமான அம்பாள் தங்கமயமாக ஒளி உருவமாக காக்ஷி கொடுத்தா.

அப்போ இந்திரன் “இங்கே இப்போ ஒரு ஜோதி தெரிஞ்சுதே, அது என்ன”னு கேட்கறான். அப்போ அம்பாள் சொல்றா “அது தான்பா பரப்ரம்மம். அது தான் அகண்டமான சக்தி. அந்த அகண்டமான சக்தியோட துளித்துளி தான் நம்ம எல்லோர்கிட்டேயும் இருக்கறது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், மனுஷ்யர்களுக்கும் எல்லார்கிட்ட இருக்கற சக்தியும் அந்த பரப்ரம்மத்தோட சக்தி தான்” அப்படீன்னு ஞானோபதேசம் பண்றா, அப்படீங்கற உபநிஷத் கதையை சொல்லிட்டு பெரியவா சொல்றா,

நான் ஸ்ரீகாளஹஸ்திக்கு போயிருந்தேன். அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினேன். அங்கே மலை மேலே ஒரு சஹ்ஸ்ர லிங்கம் கோவில் இருந்தது. அந்த லிங்கத்தை தரிசனம் பண்ணினேன். பக்கத்துலேயே யக்ஷ லிங்கம்னு ஒண்ணு இருக்கு. அது பக்கத்துல இந்திர லிங்கம்னு ஒண்ணு இருக்கு. காலஹஸ்தில பெரிய கோவிலில் அம்பாள் பெயரும் “ஞான ப்ரஸுனாம்பா” “ஞானப்பூங்கோதை” னு தமிழ்ல சொல்றா. அதுனால இந்த அடிமுடி காணாத ஜோதி ஸ்வரூபம்னு சொன்னவுடன் உங்களுக்கு திருவண்ணாமலை அருணாசலம் ஞாபகம் வந்திருக்கும். ஆனா எனக்கு, இந்த காளஹஸ்தியில் தான் இந்த கேனோபநிஷத் சம்பவம் நடந்து இருக்குனு தோணறதுனு பெரியவா சொல்றா.

“கிருஷ்ணனோடு ஆவிர்பவிச்ச துர்கா தேவி துஷ்ட சம்ஹாரம் பண்ணினதை சாரதா நவராத்திரினு கொண்டாடறோம். ராமரோடு அம்பாள் ஞானாம்பிகையாக ஆவிர்பவிச்சதை வசந்த நவராத்திரி ஒன்பது நாட்களில் கொண்டாடுகிறோம்” அப்படீன்னு சொல்லி முடிக்கறா.

குரு வடிவாக அம்பாள் வந்து ஞானோபதேசம் பண்றா, ஞானப் பால் குடுக்கறானு கேட்ட உடனே எனக்கு காமாக்ஷி ஞாபகம் வரது. “குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி”னு மஹாபெரியவா காமாக்ஷியோட அவதாரம் தானே. மூக பஞ்சசதி ல ஸ்துதி சதகத்துல ஒரு ஸ்லோகம் வரது

नित्यं निश्चलतामुपेत्य मरुतां रक्षाविधिं पुष्णती

तेजस्सञ्चयपाटवेन किरणानुष्णद्युतेर्मुष्णती ।

काञ्चीमध्यगतापि दीप्तिजननी विश्वान्तरे जृम्भते

काचिच्चित्रमहो स्मृतापि तमसां निर्वापिका दीपिका ॥

நித்யம் நிஸ்ச்சலதாம் உபேத்ய மருதாம் ரக்ஷாவிதிம் புஷ்ணதீ

தேஜசஞ்சய பாடவேன கிரணான் உஷ்ணத்யுதேர் முஷ்ணதீ |

காஞ்சீமத்யகதாபி தீப்தி ஜனனீ விஷ்வாந்தரே ஜ்ரும்பதே

காசித்சித்ரம் அஹோ ஸ்ம்ருதாபி தமஸாம் நிர்வாபிகா தீபிகா ||

காஞ்சி தேசத்துல ஒரு தீபம் இருக்கு. தீபச்சுடர் காத்துல அசையும். ஆனா இந்த தீபம் “நித்யம் நிஸ்ச்சலதாம் உபேத்ய” சுடர் அசையாத தீபம். காத்துல தானே தீபம் அசையும். இந்த தீபம் மருத்துக்களையே காப்பாத்தறது, என்ன ஆச்சர்யம்? மருத்துக்கள் ணா தேவர்களில் ஒரு வகை. அந்த மருத்துக்கள், தேவர்களை எல்லாம் அம்பாள் தான் காப்பாதறா, அப்படீன்னு சொல்றார். “தேஜசஞ்சய பாடவேன கிரணான் உஷ்ணத்யுதேர் முஷ்ணதீ” எல்லா ஒளியையும் தன்னிடத்தில் தேக்கி வெச்சுண்டு இருக்கறதுன்னு பார்த்தா உஷ்ணத்யுதி யான சூரியன். அந்த சூரியனோட ஒளியையே மழுங்க அடிக்க கூடிய ஒளியோடு இந்த தீபம் விளங்கறது. ” காஞ்சீமத்யகதாபி தீப்தி ஜனனீ விஷ்வாந்தரே ஜ்ரும்பதே” காஞ்சீ மத்யத்துல இருந்தாலும் இந்த விளக்கோட ஒளி “விஷ்வாந்தரம்” அண்டத்திலுள்ள எல்லா இடங்களிலும் இந்த தீபத்தோட ஒளி பரவி இருக்கு. “காசித்சித்ரம்” இதுக்கெல்லாம் மேலே ரொம்ப ஆச்சர்யம் என்னனா “அஹோ ஸ்ம்ருதாபி தமஸாம் நிர்வாபிகா தீபிகா” ஒரு விளக்கை ஏத்தி வெச்சா தான் அந்த அறையில் இருக்கற இருள் போகும். இந்த காமாக்ஷிங்கற விளக்கை நினைச்சாலே நம்ம மனசுல இருக்கற அக்ஞானம்கிற இருள் போயிடும் அப்படீன்னு மூககவி சொல்றார். இந்த ஸ்லோகத்துக்கு பெரியவா தான் பொருள். அவரை நினைச்சாலே அக்ஞானம் போகும்.

பெரியவா படிப்புல ஆர்வம் காண்பிச்சா ங்கறதுக்கு best example சுந்தரராம மாமா. “துரைஸ்வாமியோட பிள்ளை சுந்தரராமன்” (Sundararaman, that son of Duraiswamy) என்று அந்த மாமா, மஹாபெரியவா தன்னை எப்பாடுபட்டு படிக்க வெச்சான்னு ஒரு கட்டுரை எழுதி இருக்கா. அது ரொம்ப அழகா இருக்கும். தனியா அவர் ஒரு பத்து நிமிஷம் பேசி இருக்கார். அதுல சொல்றார் – “மஹாபெரியவாளுக்கு எல்லாரும் நன்னா படிக்கணும். என்கிட்டே ‘நீ என்ன படிக்கற?’ னு கேட்டார். Mathematics ல ரிசர்ச் பண்றேன்னு சொன்னேன். ஸ்ரீனிவாச ராமானுஜம் ஒருத்தர் தானா? அவருக்கும் எத்தனையோ ச்ரமங்கள் இருந்தது. ஆனாலும் மூளைக்குள்ளேயே நிறைய ரிசர்ச் பண்ணி அவர் பேரோட விளங்கினார். அந்த மாதிரி ஒவ்வொருத்தரும் அவாவளோட வேலையில், ஆராய்ச்சியில், எந்த vocationனா இருந்தாலும் முயற்சியோட நம்பிக்கையோட நிறைய படிச்சு, நிறைய ரிசர்ச் பண்ணனும். கல்யாணம், குழந்தைகள் அவ்வளவு தானா வாழ்க்கை? ஜனங்களுக்கு உபயோகமாக புத்தியைக் கொண்டு ஏதாவது பண்ணனும்” னு personal ஆக சொல்லி இருக்கா. அவரும் chance கிடைக்கும் போதெல்லாம் அதை எல்லாருக்கும் சொல்லிண்டே இருந்தார். “பெரியவா வெறும் வேதாந்தி கிடையாது. செயல் வேதாந்தி. எல்லாரும் நன்னா இருக்கணும். உலகமே க்ஷேமமாக இருக்கணும். ஒருத்தருக்கு ஒருத்தர் பரோபகாரம் பண்றதுக்கு புத்தியை உபயோகப் படுத்தணும். பாரத தேசம் intellectuals நிறைஞ்ச தேசமாக இருந்தது. திரும்பவும் அப்படி கொண்டு வரணும்” அப்படின்னு பெரியவா சொல்லி இருக்கா. அதைக்கேட்ட போது தான் இந்த ஸரஸ்வதி பெரியவாளைப் பத்தி பேசணும் னு ஒரு inspiration.

ஜானகீ காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம

[ஸரஸ்வதி பெரியவா] (12 min audio)

Share

Comments (2)

 • Reminded of this slokam from mooka pancha shathi, Swamigal recommends to children for excelling in studies
  vidye vidhathru vishaye kaathyaayani kaali kamakoti kale / bhaarathi bhairavi bhadre shaakini shaambhavi shive sthuve bhavatheem // 78th slokam Arya shatakam, mooka pancha shathi
  विद्ये विधातृविषये कात्यायनि कालि कामकोटिकले ।
  भारति भैरवि भद्रे शाकिनि शाम्भवि शिवे स्तुवे भवतीम् ॥
  வித்யே விதாத்ருவிஷயே காத்யாயனி காளி காமகோடி கலே |
  பாரதி பைரவி பத்ரே ஷாகினி சாம்பவி சிவே ஸ்துவே பவதீம் ||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.