Categories
Ramayana One Slokam ERC

ஜகன்மாதா சீதாதேவியின் அளவற்ற கருணை

ஸ்வாமிகள், வால்மீகி ராமாயண பிரவசனம் பண்ணும்போது, சீதாதேவி, அப்படீன்னு குறிப்பிட மாட்டார். எப்பவும், ஜகன்மாதா, அம்பாள், தாயார் அப்படீனுதான் குறிப்பிடுவார். அப்படி ராமர்கிட்ட இருந்த அளவு, சீதாதேவி கிட்டயும் அவருக்கு பக்தி. ராமர் எப்படி சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடிச்சு, தெய்வத் தன்மை அடைஞ்சு

“வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”

அப்படீன்னு, தெய்வமாகி, விபீஷணன் போன்ற தன்னுடைய பக்தர்களுக்கு, அபயம் கொடுத்தாரோ, அதேமாதிரி, சீதாதேவியும், கருணையோட எல்லையில இருந்து, எல்லார் கிட்டயும் பரிவு காண்பிச்சு இருக்கா. அதனால தான் நாம இரண்டு பேரையும் சேர்த்து நமஸ்கரிக்க வேண்டும். சீதையினுடைய பெருமை, காவியம் முழுக்க வர்றது, அதுக்கு சிகரம் வெச்சா போல, கடைசீல, ஒரு காட்சியில, சீதையினுடைய அளவற்ற கருணை வெளிப் படறது.

ராமர், ராவணனை வதம் பண்ணிடறார். லக்ஷ்மணனைக் கொண்டு, விபீஷணனை இலங்கைக்கு, ராஜாவாக பட்டாபிஷேகம் பண்ணி வைக்கறார். அப்புறம், விபீஷணன், ராஜா ஆனா பின்ன ராமரை வந்து நமஸ்காரம் பண்றான். அங்க ஹனுமார் இருக்கார். ராமர் ஹனுமார் கிட்ட “விபீஷண மஹாராஜா கிட்ட, உத்தரவு வாங்கிண்டு, லங்கா நகரத்துக்குள்ள போயி, அசோகவனத்தில், சீதை கிட்ட, என்னோட க்ஷேமத்தை, சொல்லி, இந்த பிரியமான செய்தியை, சொல்லிட்டு வா” அப்படீன்னு சொல்றார். ஹனுமாரும், அந்த மாதிரி விபீஷணன், கிட்ட சொல்லிண்டு லங்கைக்குள்ள போறார்.

போன வாட்டி, வந்த போது, மதில்சுவர் மேல ஏறி குதிச்சு, இடதுகாலை முன்னாடி வெச்சு, உள்ளே போனார். எதிரியுடைய கிருஹம் என்பதால். இப்போ, right royal ஆ போகும்போது, ராக்ஷஸர்கள், எல்லாம் கும்பிட்டு, உள்ள அனுப்பறா. நேரா, அசோகவனத்துக்குப் போறார். அங்க போய் சீதாதேவியை நமஸ்கரித்து, ‘அம்மா, ஹனுமான் வந்திருக்கேன், ராமர் க்ஷேமமா இருக்கார். ராமர், ராவணாதி ராக்ஷஸர்களை எல்லாம், வதம் பண்ணிட்டார். இனிமே, நீங்க வருத்தத்தை விட்டு விடலாம். நீங்க ராவணனுடைய க்ருஹத்துல இல்ல. ராம பக்தனான, விபீஷணனுடைய, க்ருஹத்துலதான் இருக்கேள்’ அப்படீன்னு, சொல்றார்.

இதை கேட்ட உடனே, சீதைக்கு சந்தோஷம். பேச்சே வரலை. ‘என்னம்மா, ஒண்ணும் சொல்லலையே’ன்னு, கேட்கும்போது, ‘எனக்கு, சந்தோஷத்துல பேச்சே வரலைப்பா. எப்பவுமே, நீ எனக்கு, இந்த மாதிரி பிரியமான, செய்தியை சொல்ற. உனக்கு, நான் என்ன கைம்மாறு பண்ணுவேன்? தங்கம் கொடுப்பேனா. ரத்னங்கள் கொடுப்பேனா, மூவுலகத்துடைய ஆட்சியை உனக்குக் கொடுத்தாலும், போறாது. நீ எனக்கு, அவ்வளோ  சந்தோஷத்தைக் கொடுக்கற, வார்த்தைகளால் திருப்தி பண்ற’, அப்படீன்னு சொன்ன போது, ஹனுமார், சொல்றார், ‘எனக்கு, அதெல்லாம் வேண்டாம், எனக்கு, உங்க ரெண்டு பேரையும், ராமரையும், சீதையையும்  சேர்த்துப் பார்த்தாலே போறும்’, அப்படீன்னு சொல்றார். சீதா தேவி சாக்ஷாத் லக்ஷ்மிதேவி. லக்ஷ்மி தேவியே, நான் உனக்குக் கடன் பட்டிருக்கேன், அப்படீன்னா, ஹனுமார் எவ்வளவு பெரிய பணக்காரர்! அப்படி அந்த பக்திங்கிறது, எல்லாத்துக்கும் மேல. ஹனுமாரை, வாயார வாழ்த்தறா

अतिलक्षणसंपन्नं माधुर्यगुणभूषितम् ||६-११३-२६

बुद्ध्या ह्यष्टाङ्गया युक्तं त्वमेवार्हसि भाषितुम् |

श्लाघनीयोऽनिलस्य त्वं सुतः परमधार्मिकः ||६-११३-२७

ब्लं शौर्यं श्रुतं सत्त्वं विक्रमो दाक्ष्यमुत्तमम् |

तेजः क्षमा धृतिः स्थैर्यं विनीतत्वं न संशयः ||

அதிலக்ஷண ஸம்பன்னம் மாதுர்ய குண பூஷிதம் ||

புத்யா ஹ்யஷ்டாங்கயா யுக்தம் த்வமேவர்ஹஸி பாஷிதும் |

ஷ்லாகநீய: அனிலஸ்ய த்வம் புத்ர: பரமதார்மிக: |

பலம் ஷௌர்யம் ஷ்ருதம் ஸத்வம் விக்ரமோ தாக்ஷ்யம் உத்தமம் ||

தேஜ: க்ஷமா த்ருதி: ஸ்தைர்யம் வினீதத்வம் ந ஸம்ஷய: ||

இப்படி, எல்லா குணங்களும் உன்கிட்ட இருக்கு, ஹே ஹனுமான், அப்படீன்னு சொல்றா. மஹாபெரியவா,

बुद्धिर्बलं यशो धैर्यं निर्भयत्वमरोगिता । अजाड्यं वाक्पटुता च हनुमत्स्मरणाद्भवेत् ॥

புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

அப்படீங்கிற ஸ்லோகத்தை எடுத்துண்டு, உலகத்துல மனுஷா கிட்ட ஒரு குணம் இருந்தா, ஒரு குணம் இருக்காது. ஹனுமார் கிட்ட தான், இந்த எல்லா குணங்களும் சேர்ந்து இருக்கு. அதனால நாம ஹனுமாரை பிரார்த்தனை பண்ணினா, நமக்கும், எல்லா குணங்களும், ஆரோக்யமும், புத்தியும், பலமும், யஸசும் எல்லாமே கொடுப்பார், அப்படீன்னு சொல்ற மாதிரி, சீதாதேவி எல்லா குணங்களையும் பட்டியலிட்டு, இதெல்லாம், உன் கிட்ட தான் இருக்கு, அப்படீன்னு சொல்றா.

அப்புறம் ஹனுமாருக்கு, இந்த ராக்ஷசிகளை பார்த்த உடனே கடுங்கோபம் வர்றது. ‘இதுகளெல்லாம் அஸத்துகள். உங்களை எவ்வளவு பாடு படுத்தினா, கடி, தின்னு, கொல்லு, அப்படீன்னு உங்களை, எவ்வளோ பயமுறுத்தினா. நான் இவாளை இப்போ சிக்ஷிக்கறேன், தண்டனை கொடுக்கறேன், காது, மூக்கு எல்லாம் பிச்சு, முட்டியால, எலும்பெல்லாம் உடைச்சு, பல்லை எல்லாம் தட்டி’, அப்படீன்னு சொல்றார். இதை கேட்டே, அந்த ராக்ஷசிகள் எல்லாம், பயந்து நடுங்கி இருப்பா. அப்போ சீதாதேவி சொல்றா, “வேண்டாம்ப்பா. அவா அப்போ, ராவணனுடைய அடிமைகளா இருந்தா. அவன் சொன்னான் எங்கிறதுக்காக என்னை பயமுறுத்தினா. ஏதோ நான் பண்ண பாவம், எனக்கு அனுபவிக்கணும்னு இருக்கு, நான் அதை அனுபவிச்சேன், இனிமே அவா அப்படி பண்ண மாட்டா. நீ அவாளை மன்னிச்சுடு. அப்டீன்னு சொல்லிட்டு, அந்த புலிக்கிட்ட, கரடி சொன்னது, இல்லையா, அந்த வார்த்தைகளை, நினைச்சுக்கோ, அப்படீன்னு சொல்லி

पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम ||

कार्यं कारुण्यमार्येण न कश्चिन्नापराध्यति |

பாபானாம் வா ஷுபானாம் வா வதார்ஹாணாம் ப்ளங்கம |

கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்சித் நாபராத்யதி ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம் சொல்றா, சீதா தேவி.

இது  என்ன புலிக் கதை, கரடிக் கதை? இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்? அப்படீன்னா,

ஒரு தடவை, காட்டுல ஒரு வேடனை, ஒரு புலி துரத்தறது. அந்த வேடன், பயந்துண்டு, ஒரு மரத்து மேல ஏறுகிறான். புலிக்கு மரம் ஏற வராதுன்னு, ஒரு ஐதீகம். மேல போனா அங்க ஒரு கரடி இருக்கு. கரடி நன்னா மரத்துல  ஏறும். மரத்துலயே வசிக்கும். அந்த கரடியை பார்த்த உடனே, ‘ஐயோ, அந்த கரடி, நம்மளைக் திங்கப் போறதுன்னு’ இவன் பயந்துடறான். அப்போ அந்த கரடி சொல்றது, ‘நீ என்னோட வீட்டுக்கு வந்துருக்க. நீ என்னோட விருந்தாளி. நான் உன்னை காப்பாத்தறேன். உனக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல, இங்க. நீ பயப்படாதே’. அப்படீன்னு சொல்றது. அப்பாடின்னு, வேடன் கொஞ்ச நேரம், நிம்மதியா ஆசுவாசப் படுதிக்கறான்.

அப்புறம் அவனுக்குக் களைப்புல தூக்கம் வர்றது. கரடி சொல்றது, ‘நீ தூங்கு, இந்த புலி கிட்ட இருந்து, உன்னை protect பண்றேன்’, அப்படீன்னு சொல்றது. அவன் தூங்கறான். அவன் தூங்கும்போது, இந்த புலி, சொல்றது, ‘இந்த வேடன் நமக்கு பரம வைரி. நீ என்ன அவனைக், காப்பாத்தினாலும், அவன் அடுத்தது நம்ம மேலே அம்பை போடுவான். அதனால அவனைக் கீழ தள்ளி விடு. நான் சாப்டுடறேன் அவனை, என் பசிக்கு ஆச்சு’, அப்படீன்னு சொல்றது. அப்போ, இந்த கரடி, ‘இல்ல நான் அந்த மாதிரி பண்ண மாட்டேன், நான் வாக்குக் கொடுத்திருக்கேன், இன்னிக்கு, அவன் என் வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்கான், அவனை நான் காப்பாத்துவேன்’, அப்படீன்னு சொல்றது.

அப்புறம் அந்த வேடன் கொஞ்ச நேரத்துல எழுந்துக்கறான். இந்த கரடி சொல்றது, ‘எனக்கு கொஞ்சம் தூக்கம் வர்றது, நான் தூங்கறேன், நீ பாத்துக்கோ’, அப்படீன்னு சொல்லிட்டு கரடி தூங்கறது. அப்போ, புலி வேடன் கிட்ட சொல்றது, ‘இந்த கரடியை கீழ தள்ளி விடு. எனக்குப் பசி. நான் அதை தின்னுட்டுப் போயிடறேன், எனக்குப் பசி அடங்கிடுத்துன்னா, நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன், நீ நிம்மதியா வீட்டுக்கு போகலாம்’, அப்படீன்னு சொன்ன உடனே, இந்த வேடன் சின்ன புத்திக்காரன். அவன் அந்த கரடியை கீழ தள்ளப் பாக்கறான். அந்த கரடி, முழிச்சுண்டு, ஒரு கிளையைப் பிடிச்சுண்டுடறது. இப்ப இவனுக்கு நடுக்கம். ‘ஐயையோ என்னை கொல்லாதே, மன்னிச்சுடு, மன்னிசுடு’ங்கறான். அப்போ கரடி சொல்றது, நீ, உன்னுடைய புத்தியை காமிக்கற. ஆனா, நான் அதுக்காக உன்னை, கைவிட மாட்டேன், எப்ப நான் உன்னைக் காப்பாத்தறேன்னு வாக்குக் கொடுத்தேனோ, நான் உன்னை காப்பாத்துவேன். நீ கவலைப் படாதே’, அப்படீன்னு சொல்றது.

அப்ப புலி கேட்கறது, ‘உன்னை இவன் கீழத்  தள்ளப் பார்த்தான், இவனை போயி நீ காப்பாத்தறயே?’ அப்பதான் இந்த ஸ்லோகத்தை கரடி புலிக்கிட்ட சொல்றது

பாபானாம் வா ஷுபானாம் வா வதார்ஹாணாம் ப்ளங்கம |

கார்யம் கருணம் ஆர்யேண ந கஸ்சித் நாபராத்யதி ||

பாபம் பண்ணவாளோ, நல்லவாளோ, வதம் பண்ணக் கூடிய அளவுக்குத் தப்பு பண்ணவாளோ, யாரா இருந்தாலும் மன்னிக்க வேண்டும். ஒரு தப்புக்  கூடப்  பண்ணாதவன்னு யாருமே கிடையாது, அபராதமே செய்யாதவன்னு, ஒருத்தனுமே கிடையாது. அதனால பெரியவா கருணையோட இருக்கணும், தப்பை மன்னிக்கணும், அப்டீன்னு சொல்றது.

சீதாதேவி, இந்த வார்த்தைகளைச் சொல்லி, அதனால இந்த ராக்ஷஸிகளை மன்னிச்சுடு, அப்படீன்னு சொல்றா

लोकहिंसाविहाराणां रक्षसां कामरूपिणम् ||

कुर्वतामपि पापानि नैव कार्यमशोभनम् |

லோக ஹிம்ஸா விஹாராணாம் ரக்ஷஸாம் காமரூபிணாம் |

குர்வதாமபி பாபானி நைவ கார்யம் அஷோபனம் ||

லோக ஹிம்சை பண்ணிண்டு, மேலும் மேலும் பாவம் பண்ணாக் கூட, அவாளைக்  கூட நாம மன்னிக்க வேண்டி இருக்கு, அதனால இவாளை விட்டுடு, அப்படீன்னு சொல்றா. அப்பேற்பட்ட அந்த அம்பாளுடைய, ஜகன்மாதா சீதாதேவியின் அளவற்ற கருணை நம்மையும் காப்பாத்தட்டும்.

ஜகன்மாதா சீதாதேவியின் அளவற்ற கருணை (9 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

 

 

4 replies on “ஜகன்மாதா சீதாதேவியின் அளவற்ற கருணை”

அருமை ! நீயின்றி நானில்லை நானின்றி நீ என்ற திருப்புகழ் ஞாபகம் வரது ! ராமரும்.சீதையும் ஒன்றாக ஆன்மாவில் கலந்தவர்கள் !
ஆதலால் எங்கள் வீட்டில்.கோலமிடும் போது ராம ஜெயம் என்ற வழக்கமான முறைக்குச் சிறிது. மாறுபட்டு ஶ்ரீ சீதா ராமஜெயம் என்று எழுதும்.பழக்கம்.இருந்து வருகிறது ,!!
பூலோகத்தில் அதர்மத்தைக் களைய அம்பாளும்.பகவானும் அவதரித்தார்கள் அல்லவா ?
சிறந்த சொற்பொழிவு தக்க கதையுடன் !
வளர்க தங்கள். பணி!!

ஜய் சீதா ராம! 🙏
நமஸ்காரம் அண்ணா 🙏
சீதையின் மிருதுவான மனதை திறம்பட உரைத்துள்ளீர்.
லக்ஷ்மி தேவியின் அவதாரமான சீதை நம்மனைவருக்கும் தாயார். பூமியில் பல துயரங்களை சந்தித்து மிகவும் பொறுமையுடன் வாழ்ந்த மங்கையர் குல மாணிக்கம். என்னே ஒரு மன்னிக்கும் உத்தம குணம்.

தாயார் ஒருவருக்கு மட்டுமே இந்த அளவுக்கு கருணையுள்ளம் பொங்கும். எப்பேர்பட்ட தியாகத்தையும் செய்யும் வகையில் இந்த தாயுள்ளம் படைக்கப்பட்டுள்ளது.

குற்றங்களை மன்னித்து, மறக்கும் குணங்களாலும், கருணையள்ளத்தினாலும் மட்டும் தாயுள்ளமும், தாய்மையையும் தனித்துவமான ஓர் இனமாக படைக்கப்பட்டுள்ளது

பாரதத்தில் அஸ்வத்தாமன் திரௌபதியின் புத்திரர்களை கொன்றும் அவனை திரௌபதி மன்னித்து விட்டாள்.

இது போல வாழ்ந்து வழி காட்டிய உத்தம தாயாரின் சரிதத்தை வணங்கி உபாசிக்கவும் இன்றைய இளைய தலைமுறைக்கு எல்லா மங்களங்களையும் தாயார் அருளட்டும்.
“த்ரிமூர்த்தி த்ரிதஷஸேஷ்வரீ “என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளை வழிபட வகை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஸ்வாமிகள் பற்றி ஒவ்வொரு முறை கேட்டு படிக்கும் போதும் உள்ளத்தில் ஒரு தனி உற்சாகமும் அவருக்கென்று தனி இடம் பிரதானமாக வைத்துள்ளேன். அவர் அனுக்ரஹத்தில் அவர் பின் பற்றியவைகளுள் ஒரு சிலவற்றை முறையாக அனுஷ்டிக்க பிரயாசை. 🙏

ராமர் எப்படிக் கருணையுள்ளாவரோ அதே போலத் தாயாரும் கருணைக்கடல் அல்லவா? விளக்கம் super.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.