Categories
Ramayana One Slokam ERC

லக்ஷ்மணனுடைய உண்மையான ப்ராத்ருபக்தி

ஆரண்யகாண்டத்துல அறுபத்து ஏழாவது சர்க்கத்தோட முதல் ஸ்லோகம்

पूर्वजोऽप्युक्तमात्रस्तु लक्ष्मणेन सुभाषितम् । सारग्राही महासारं प्रतिजग्राह राघवः।।

“பூர்வோஜோபி உக்தமாத்ரஸ்து லக்ஷ்மணேன ஸுபாஷிதம் |
ஸாரக்ராஹி மாஹாஸாரம் பிரதிஜக்ராஹ ராகவ: ||

“பூர்வோஜுபி ” – அண்ணாவாக இருந்தாலும் “உக்தமாத்ரஸ்து” லக்ஷ்மணன் சொன்னவுடனே ராமர், அவன் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார், ஏன்னா, அவர் ” ஸாரக்ராஹி” – சொல்றாவா யாருன்னு  பார்க்காமல் சொல்லப்படும் விஷயம்  ஸாரமுடையதாக இருந்தால் அதை க்ராஹிசுக்ககூடியர் ராமர். அதுனால ஸாரக்ராஹி. மேலும் லக்ஷ்மணன் சொன்ன விஷயம் “மஹாஸாரம்”,  ரொம்ப ஸாரமான விஷயத்தை அவன் சொன்னான். அதனால் உடனடியாக அவன் சொன்ன வார்த்தைகளை ராமர் ஏற்றுக் கொண்டார். “ஸுபாஷிதம்” லக்ஷ்மணர் ரொம்பஅழகா பேசினார். ” ஸாரக்ராஹி மாஹாஸாரம் பிரதிஜக்ராஹ ராகவ: ” ” பிரதிஜக்ராஹ” அப்படின்னா ஏற்றுக் கொண்டார்னு அர்த்தம். அப்படி என்ன லக்ஷ்மணன்  சொன்னான்? என்ன ராமர் ஏற்றுக்கொண்டார்?

ராமர் மாயமானாக வந்த மாரீசன் பின்னாடி போறார். சீதாதேவி “எனக்கு அந்த மான் வேணும்”னு கேட்கிறாள். லக்ஷ்மணர் சொல்றார் “இது மாரீசனுடைய மாயை. இந்த மாதிரி மான் உலகத்துல கிடையாது, கந்தர்வக் கோட்டை மாதிரி இது மாயை, அதன் பின்னாடி போக வேண்டாம்” என்று லக்ஷ்மணன் சொல்கின்றார். சீதையோ  “எனக்கு   கட்டாயம் அந்த மான் வேண்டும் எனக்கு உயிருடனோ, உயிரில்லாமலோ வேண்டும் எனக்கு, நான் அதன் தோலை தடவிப் பார்த்து சந்தோஷப் படுவேன், அயோத்யைக்கு எடுத்து செல்லலாம், பரதனிடம் காண்பிக்கலாம், அம்மாவிடம் காண்பிக்கலாம்” என்று சொல்கிறாள். உடனே, ராமர் “இவள் ஒண்ணுமே என்கிட்ட கேட்பதில்லை, இப்பொழுது இத்தனை வருஷத்துக்கு அப்பறம் ஏதோ ஒண்ணு கேட்டாளே, ஆகையால், காட்டில் கிடைக்கும் அருமையான பொருளாகயிருந்தால் அதன் பின்னாடி போக வேண்டும். அதனாலென்னாகுமோ என்று யோசிக்காமல் ஒரு அரிய பொருள் கிடைத்தால் அதன் பின்னாடி போகவேண்டும் என்று சுக்ர நீதியில் கூறியுள்ளது” என்கிறார்.

ஒரு argument sake இந்த மாதிரி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். லக்ஷ்மணன் நல்லெண்ணத்தில் சொல்கிறார். ராமர் சீதைக்காக போக வேண்டுமென்று முடிவு செய்து விட்டார். ராமர் “நான் அதை பிடித்துக் கொண்டு வந்து விடுகிறேன். நீ இவளை பார்த்துக் கொள், உன்னையும் இந்த ஜடாயு பக்ஷியையும் நம்பி நான் சீதையை விட்டுட்டு போகிறேன், நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், நான் போய் மானை பிடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்” என்று  சொல்லிட்டு கிளம்பறார். சீதாதேவிக்கு அபிராமனான ராமன் தன் பக்கத்தில் இருக்கும்போது, இந்த மான் மீது ஆசை வரது. அந்த மாதிரி, உலகத்தில் நாம் பகவானை பக்கத்தில் வைத்துக் கொண்டு, உலக விஷயங்களுக்கு ஆசைப்பட்டு, பகவானை பிரிந்து கஷ்டத்தை அடைகிறோம்.

ராமர் மாரிசன் பின் செல்கின்றார். அவன் அவரைத் தள்ளித் தள்ளி அழைத்துச் செல்கின்றன். ராமருக்கு மான் பக்கத்திலுள்ளது போல் தெரிகிறது, அம்பை எடுப்பதற்குள்  ரொம்ப தூரத்தில் இருப்பது போல் தெரிகிறது. உடனே  பின்னாடி ஓடறார். இப்படி அடுத்த promotion வரப் போகிறது, அடுத்த hike வரப்போகிறது, என்று நம்பி உலகத்தாருக்கு நாம் உழைப்பதைப் போல், அந்த கானல் நீர் போன்ற அந்த மானின் பின் ராமர் ஓடுகிறார். மிகத்தொலைவு தள்ளிக் கொண்டு போய்விட, அவருக்கு ஸந்தேஹம் வருகின்றது. இது மாயை தான் என்று தீர்மானம் பண்ணி அதன் மேல் அம்பை விடுகிறார். ஒரு பனைமரம் உயரத்திற்கு மேலே துள்ளி ஹா என்று கத்தியபடி கீழே விழுகிறான் மாரீசன். வீழ்ந்த உடனே ராக்ஷச உருவம் அடைகிறான். அப்பொழுது, மறந்து போகக் கூடாதோ! ராவணன் கூறிய வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வருகிறது  “ஹா  சீதே, ஹே லக்ஷ்மணா” என்று ராமர் குரலில் கத்தியபடி உயிரை விடுகிறான்.

அந்த சத்தம் இவர்களுக்கு கேட்கிறது. அதைக் கேட்டவுடனே சீதை “நீ இப்பவே ராமரை காப்பாத்த போகணும்” என்கிறாள். லக்ஷ்மணர் எவ்வளவோ சொல்கிறார், “ராமரை ஜயிக்ககூடிய ஒருத்தன், இதுவரை பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்கமாட்டான். என் அண்ணவாகிய ராமர் “என்னை காப்பாற்று” என்ற வார்த்தையை சொல்லவே மாட்டார். தேவர்களையே அவர் காப்பாற்றக் கூடியவர், அதனால் ராமருக்கு ஒன்றும் ஆபத்து கிடையாது. இங்கே நான் உங்களை தனியாக விட்டு சென்றால், உங்களுக்குத் தான் ஆபத்து, ஆகையால் என்னை பலவந்தம் பண்ணாதீர்கள்” என்று சொல்கிறார்.

சீதை தனது வயத்தில் அடித்துக் கொண்டு, மிகவும் கடுமையான வார்த்தைகளை சொல்லி, “நீ ஒரு துராத்மா, வேஷதாரி, நீ கெட்ட எண்ணத்துடன் என் பின் வந்துள்ளாய்” என்று வேண்டாத வார்த்தைகளை சொல்கிறாள். என்னமோ அவளுடைய போறாத வேளை, துக்கத்தினாலும், பயத்தினாலும் அப்படி வார்த்தைகள் அவளுடைய வாயிலிருந்து வந்து விடுகிறது. அதைக் கேட்டவுடனே லக்ஷ்மணர் “என் காதில் இரும்பை காய்ச்சி ஊற்றுவது போலான கடுமையான  வார்த்தைகளை சொல்கிறீர்கள்.” என்கிறார்.  சீதையோ “நீ போகலைன்னா நான் கோதாவரியில் வீழ்ந்து விடுவேன்” என்கிறாள், லக்ஷ்மணர் “சரி, நான் போறேன்! நான் என்ன செய்வேன்” என்று சொல்லி லக்ஷ்மணர் போயிடறார். அந்தப் பக்கம் லக்ஷமணர் போனவுடனே , ஒரு தர்மாத்மாவை வேஷதாரி என்று சொன்னதால், ஒரு வேஷதாரி சந்நியாசி போல் வேஷம் போட்டுண்டு வந்து விடுகிறான். மூன்றே நிமிஷத்தில் பண்ணின பாவத்திற்கு பலன். ராவணன் வந்துடறான். சீதையை அபஹரித்து கொண்டு போயிடறான். ஜடாயு ராவணனோடு யுத்தம் செய்து தன் உயிரையே அர்பணிக்கிறார். அவர் அடிபட்டு விழுந்து கிடக்கிறார். இராவணன் சீதையை தூக்கிண்டு போயிடறான்.

லக்ஷ்மணர் போய் ராமரை பார்த்தவுடன் ராமர், ” சீதையை விட்டுட்டு ஏன் இங்கே வந்தாய்? உன்னை நம்பியல்லவா நான் சீதையை விட்டுட்டு இங்கு வந்தேன்?அது மாரிசன் தான், மாயமான் தான்” என்று சொல்கிறார். அதுக்குள்ளவே ராமருக்கு கெட்ட சகுனங்கள் வர ஆரம்பித்து விடுகிறது! மிருகங்கள் பறவைகள் எல்லாம் அலறுகின்றன, ஏதோ கெடுதல் நடந்துள்ளது என்று அவருக்கு தெரிகிறது. வேகமாக திரும்ப நினைக்கிறார். ஆனால் அவரது கால் பாவ மாட்டேங்கிறது. லக்ஷ்மணனையும் பார்த்தவுடனே, “ஏன் வந்தாய்?” என்று கேட்கிறார். அப்பொழுது லக்ஷ்மணர் “சீதை என்னை தாங்க முடியாத சில  வார்த்தைகள் கூறினாள். அதனால் தான் வந்துட்டேன்” என்கிறார். ராமர் கடும் கோபத்துடன் “நீ சீதையை பார்த்துக் கொள் என்று நான் உத்தரவிட்டுளேன், அதை மீறி நீ எப்படி சீதையை விட்டுவிட்டு வரலாம்? ஒரு பெண் கோபமாக பேசினாள் என்பதற்காக என் உத்தரவை நீ மீறினது சற்றும் எனக்கு பிடிக்கவில்லை” என்று திட்டுகிறார்.

அங்கு சீதையும் அனாவசியமா திட்டினாள், இங்கு ராமரும் திட்டுகிறார், இன்னொருத்தராக இருந்தால் என்ன செய்வார்? “போரும் உங்க கைங்கர்யம். நான் அயோத்திக்கு போறேன்” என்று போயிடுவார். ஆனால் லக்ஷ்மணர் மிகவும் பொறுமையாக இருக்கார். “நான் அப்பவே அது மாரீசன் என்று சொன்னேன், அதையும் கேட்கவில்லை. இருவரும் சேர்ந்து கஷ்டத்தில் மாட்டிக் கொண்டீர்கள், இப்பொழுது என்னைத் திட்டுகிறீர்களா?” என்று கேட்கத் தோன்றும். ஆனால் லக்ஷ்மணருக்கு உண்மையான சஹோதர பாசம், அண்ணா மீதுள்ள அன்பினால், ஒண்ணும் பேசாமல் அமைதியாக கேட்டுக்கறார்.

அப்பறம் திரும்பி வந்து ஆஸ்ரமத்தில் பார்க்கிறா, சீதையை காணவில்லை. ராமர் புலம்பி அழுகிறார். ராமர் சீதைக்காக புலம்பி அழுவதை படித்தால், உலகத்திலேயே மிக அழகான காதல் காவியம் வால்மீகி ராமாயணம் தான் என்று தெரியும். இதுக்கு மேல ஒருத்தர் எழுதவே முடியாது, அவ்வளவு அழகா ஒவ்வொண்ணும் சொல்லி புலம்புகிறார். நடுவிலே “நான் உயிரையே விடுகிறேன்” என்கிறார். அப்பறம் அவர் “இல்லை நான் இங்கு உயிரை விட்டு மேலுலகத்துக்கு போனால், நம்ம அப்பா, தசரத மகாராஜா, “நான் உன்னை பதினான்கு வருடம் காட்டில் இருக்கச் சொன்னேன், நீ இங்கே, எங்கு வந்தாய்?னு கேட்பார்”  அப்படின்னு, அந்த அளவிற்கு, கடுமையான துக்கத்துக்கு நடுவிலும் தர்மத்தில் உறுதி. அப்படி புலம்புகிறார் “நீ திரும்ப போய், அங்கு பரதனிடம் சொல்லிவிடு, இனிமேல் நான் வரமாட்டேன் என்று, எனக்கு வாழ்க்கையில் இனி ஒன்றுமே கிடையாது” என்று பலது புலம்புகிறார்.

கூடக் கூட லக்ஷ்மணர் சமாதானம் சொல்லிண்டே வருகிறார். “கோதாவரியில் சென்று பார்ப்போம், தாமரைப்பூ கொண்டுவர போயிறிருப்பாள்” என்று அவர் கூறியுடன் “போய் பார்த்துக் கொண்டு வா” என்கிறார்,  லக்ஷ்மணர் திரும்பிவந்து அங்கே இல்லையென்றவுடன் “இல்லை, இல்லை, நானே வந்து பார்க்கிறேன் ” என்று தானும் ஒரு தரம் போய் தேடிப் பார்க்கிறார், இல்லை தான்! “இந்த குஹையில் பார்க்கலாம், அவள் ஒளிந்து விளையாடுகிறாள்” என்று இப்படி ரெண்டு பேரும் தேடி தேடி ஆயாசம் அதிகரிக்கிறது, பசி தாஹம் அதிகரிக்கிறது, ராமருக்கு கோபம் வருகிறது. அந்த கோதாவரியிடம் “சீதையை பார்த்தாயா?” னு கேட்கிறார், பக்கத்திலுள்ள பிரஸ்ரவண மலையிடம் கேட்கிறார். அவைகளும் ராவணக்குக்கு பயந்து பதில் சொல்லவில்லை, ராமர் அந்த மலையைப்பார்த்து “சீதை எங்கே?” என்ற உடனே அது எதிரொலிக்கிறது. ராமர் “உன்னை பொடி ஆக்குகிறேன் பார். என்னுடைய பொறுமையை அனைவரும் சோதிக்கிறார்கள், தெய்வங்களே இந்த பொறுமை என்ற என் நல்ல குணத்தை, ஒரு கெட்ட குணமாக ஆக்கி விட்டார்கள். அதனால் நான் என்னுடைய அஸ்திரங்களை உபயோகித்து, இந்த உலகங்களை அழிக்கப் போகிறேன்” என்று கடும் கோபத்தோட அஸ்திரங்களை எடுக்கிறார். அவரால் உலகை அழிக்க முடியும். அவரிடம் அவ்வளவு சக்தி இருக்கு, அவரிடம் ப்ரம்மாஸ்திரம் இருக்கு.

அப்பொழுது லக்ஷ்மணர் ராமரின் இரண்டு கால்களை பற்றி “அண்ணா அப்படி பண்ணாதேங்கோ. கஷ்டங்கிறது யாருக்குத் தான் வருவதில்லை? பூமிக்கே பூகம்பம் ஏற்படுகிறது, சூரியசந்திரர்களுக்கே கிரஹணம் பிடிக்கிறது, வசிஷ்டருக்கே புத்ரசோகம் ஏற்பட்டது, அப்படி கஷ்டம் என்பது எல்லோருக்கும் வருகிறது. ஒரு புயல் காற்றில் மரங்கள் விழும், மலை விழுமா?! தங்களை போல் உள்ளர்வர்கள், பெரியவர்கள் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சரியான காரியங்களை செய்யவேண்டும். தாங்கள் “சர்வ பூத ஹிதேரத:” “ஸர்வலோக  சரண்ய:” உலகத்துக்கே புகலிடமானவர். எல்லோருடைய நன்மையையும் விரும்புபவர். யாரோ ஒருவன் தப்பு செய்துள்ளான். அவனை கண்டுபிடிச்சு தண்டிப்போம். உலகத்தையே அழிப்பேன் என்று கிளம்பலாமா? தயவு பண்ணுங்கோ. கொஞ்சம் பொறுமையாக இருங்கோ, நாம் எப்படியாது சீதையை தேடிக் கண்டுபிடிப்போம்” என்று கூறுகிறார்.

இந்த மஹாஸாரமான வார்த்தைகளை கேட்டு ராமர், அவர் அண்ணவாக இருந்தாலும், லஷ்மணன் தம்பியாக இருந்தாலும் “பூர்வோஜுபி உக்தமாத்ரஸ்து”, அவர் அந்த வார்த்தைகளை கூறியவுடனே ” லக்ஷ்மணேன ஸுபாஷிதம் “லக்ஷ்மணர் சொன்ன இந்த வார்த்தைகளை, அழகாக அவர் சொல்கிறார். இதில் என்னவென்றால், அண்ணாவும், மன்னியும் சேர்ந்து திட்டுகிறார்கள். அதுக்கே அவர் வெறுத்து அயோத்திக்கு போயிடலாம், இப்பொழுது ராமர் கோபித்துக் கொண்டு உலகத்தை அழிக்கின்றேன் என்று புறப்படுகிறார். அப்படி ஏதாவது அவர் செய்ய ஆரம்பித்தால் ரிஷிகள் சாபம் கொடுப்பார்கள். “என்னமோ பட்டுண்டு போட்டுமே, எவ்வளவு பேசினா” என்று நினைக்காமல், லக்ஷ்மணர், ராமரோட காலைப் பிடித்து, அவரை சமாதானம் செய்து, அவரை இந்த காரியத்தில் இருந்து தடுத்தான் பாருங்கோ, இது தான் உண்மையான அன்பு.

அப்படி இந்த வால்மீகி ராமாயணத்தை படித்தால் பரஸ்பரம் அன்பு, அண்ணா தம்பிக்குள்ள இருக்கற அன்பு, கௌசல்யா தேவிக்கும் தசரதருக்கும் இருந்த புத்திர வாத்சல்யம், ராமருக்கு இருந்த பித்ரு பக்தி.

ராமர் காட்டுக்கு கிளம்பும்போது கௌசல்யா தேவியும் தசரத மன்னரும் தேருக்கு பின்னாடி ஓடி வரா. சுமந்திரர் என்கிற தேரோட்டி கிட்ட “கொஞ்சம் மெதுவாகப் போ, மெதுவாகப் போ” என்கிறார். அப்படி வயசானவா அழுதுண்டு வரதைப் பார்த்து, ராமர் சுமந்திரர் கிட்ட “இப்படி அம்மா அப்பா அழறதை பார்க்க கூடாது. அது ஒரு பாபம். நீ சீக்கிரம் போ. அப்பறம் திரும்ப வந்து கேட்டால் “காதில் விழவில்லை”னு சொல்லிடு” என்கிறார். ஆபத்துல பொய் சொன்னா பாபம் இல்லை என்பது போல சொல்கிறார். இப்படி இவரோட பித்ரு பக்தி. அவாளோட புத்திர வாத்சல்யம். புத்திர வாத்சல்யத்துனால தசரதர் உயிரையே விட்டாரே!

அது மாதிரி ராமருக்கும் சீதைக்குமான பரஸ்பரம் உத்தமமான பிரேமை. அப்படியே இந்த ராமருக்கும் லக்ஷ்மணருக்கும், ராமருக்கும் பரதனுக்கும் இடையில் இருந்த அன்பு. ஸௌப்ராத்ருகம் என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு வார்த்தை. அண்ணா தம்பிக்குள்ளே இருக்கற அன்பு. வர வர இந்த காலத்தில் எல்லாருக்கும் ஒரு phone எல்லாருக்கும் ஒரு bank account. யாருக்கும் இன்னொருத்தரே வேண்டாம் என்கிற அளவுக்கு போயிண்டு இருக்கோம். அதுக்கு நடுவிலே, இந்த ராமாயணத்தை, ரொம்ப ideal  ஆக இருக்கு, எல்லாம் தெரிஞ்ச கதை தானே என்று நினைக்காமல் ராமாயணத்தை நாம் படித்தோமானால், இந்த மாதிரி ஆதர்சங்களை அடிக்கடி நினைச்சு பார்த்தால், என்னிக்காவது ஒரு நாள், ஒரு occasion இல்லைனா ஒரு occasionல அந்த ஆதர்சத்தை நாமும் follow பண்ணுவோம்.

அதுக்கப்பறம் ராமர் லக்ஷ்மணன் கிட்ட “சரி, என்ன பண்ணலாம் சொல்லு” னு கேட்கறார். லக்ஷ்மணன் சொல்றான் “ஒரு மான் ஆகாசத்தை பார்த்துண்டு தெற்கு திக்குல போச்சு. யாரோ ஆகாசத்துல தெற்கு திக்குல சீதையை தூக்கிண்டு போயிருக்கலாம்.” அவ்வளவு புத்திமான். அவன் கரெக்ட் ஆக guess பண்ணிடறான். “நாமும் தெற்கு திக்குல தேடுவோம்” னு போறா. அங்கே ஜடாயு விழுந்து கிடக்கறதை பார்க்கறா. ஜடாயு கிட்ட ராமர் என்ன ஆச்சுன்னு கேட்கறா. அது ஒரு ஒரு வார்த்தைகள் “ராவணன் னு ஒரு ராக்ஷசன் சீதையை தூக்கிண்டு போயிருக்கான். உனக்கு திரும்ப கிடச்சுடுவா”னு சொல்லிட்டு ராமர் மடியிலேயே உயிரை விடுகிறது.

ராமர் “இந்த பக்ஷி என் அப்பா மாதிரி பாசம் வெச்சு எனக்காக உயிரையே குடுத்து இருக்கு. அதுனால நான் என் அப்பா போல நினைச்சு, இந்த பக்ஷிக்கு ஸம்ஸ்காரம் பண்ணுகிறேன்” என்று சொல்லி ராமர் சிதை மூட்டி, பிண்டம் வெச்சு, ரிஷிகள் சொன்ன மந்திரங்களை எல்லாம் ஜெபிச்சு, “ஏ கழுகே, ஏக பத்னி விரதம் காத்தவர்களும், பூமி தானம் செய்தவர்களும், யுத்தத்தில் உயிரை விட்டவர்களும் போகும் உலகங்களுக்கெல்லாம் மேலான உலகத்துக்கு நான் உன்னை அனுப்புகிறேன். நீ போ!” என்று சொல்கிறார். அதாவது வைகுண்டத்தோட சாவி ராமர் கையிலே தானே இருக்கு! அவர் தானே வைகுண்டவாசனான விஷ்ணு பகவான். அதனால அவர் ஜடாயுவை வைகுந்தத்துக்கு ஏத்தினார் என்று சொல்வார்கள். ஜடாயு மோக்ஷம் என்று சொல்வார்கள்.

இப்படி வால்மீகி ராமாயணம் படிச்சா நாமும் பித்ரு பக்தி, ஸௌப்ராத்ருகம், மத்தவாளை புரிஞ்சுக்கறது, விட்டுக் குடுத்தல், எல்லாம் நாமும்  follow பண்ணுவோம் னு சொல்றேன். ஆனா நமக்கு யாரவது காரணமில்லாமல் அன்பு காண்பிச்சு இருந்தால், நாமும், தன்னலமாக இருக்கறதை விட மத்தவா கிட்ட அன்பு காண்பிச்சா அதிகம் சந்தோஷம் இருக்குனு புரிஞ்சுண்டு, அப்படி இருக்க முயற்சி பண்ணுவோம். எனக்கு எங்க அப்பா அம்மா, ஸ்வாமிகள் அப்படி அளவற்ற அன்பு காண்பிச்சா. அதுனால நான், மத்த தன்னலத்தை விட முடியலைன்னாலும், இப்படி பொங்கி பொங்கி ராமாயணத்தை சொல்லி, அதுனால சில பேர் சந்தோஷப் படறா. மஹாபெரியவா எல்லார் கிட்டேயும் அப்படி அன்போடு, கருணையோடு இருந்தா. அதுனால அப்படிப்பட்ட மகான்களை, அவாளுடைய கல்யாண குணங்களை நினைச்சு ஒரு sense of gratitude நாம வளர்த்துண்டா, நம்ம குணமும் நல்லதாக மாறும். தன்னலமா இருக்கறதை விட மத்தவா கிட்ட அன்பு காண்பிச்சு, அதுனால அதிகமாக சந்தோஷம் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

பூர்வஜோபி உக்தமாத்ரஸ்து (14 min audio in tamil. same as the script above)

ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.