ஸ்ரீ சங்கர சரிதம் – பன்னிரண்டாம் பகுதி – பத்மபாதர் கதை

நேற்றைய கதையில் ஆதி சங்கரர் மண்டனமிஸ்ரரை வாதத்துல ஜெயிச்சு, அப்பறம் மண்டனமிஸ்ரர் சுரேஸ்வராச்சார்யாள் அப்படீங்கற பேர்ல சன்யாசம் எடுத்துண்டு ஆதி சங்கரரோடு கிளம்பினதும், மண்டனமிஸ்ரருடைய பூர்வாஸ்ரம மனைவி ஸரசவாணி, ஆச்சார்யாள் வேண்டுதல்படி ஸ்ருங்கேரில சாரதாம்பாளாக குடி கொண்டு உலகத்துக்கு அருள் பண்ணிண்டு இருக்கற விவரமெல்லாம் சொன்னேன்.

இன்னிக்கு, பத்மபாதரோட கதையை பார்ப்போம். பத்மபாதர் ஆதி சங்கரர் கிட்ட முதல்ல வந்து சேர்ந்த சிஷ்யர். காசியில ஆதி சங்கரர்க்கு பதினாறு வயசு இருக்கும் போது, அவர் பாஷ்யங்கள் எல்லாம் எழுதி பூர்த்தி பண்ணின உடனே  பத்மபாதர் வந்துட்டார். இங்க சோழ தேசத்துலேர்ந்து போனவர், சனந்தனன் பேர். ஆதி சங்கரரை தரிசித்து பக்தி ஏற்பட்டு ஆதி சங்கரருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கார்.

இந்த கதை முன்னாடியே சொன்னேன், ஒரு நாள் கங்கையில், அந்த பக்கம் பத்மபாதர் இருக்கார் அக்கரையில. இந்த பக்கம் இக்கரையில ஆதி சங்கரர் இருக்கார். குரு ஸ்னானம் பண்ணிட்டு “துண்டு கொண்டுவா” ன்னு சொல்றார், “ஆஹா! குருநாதர் ஈரமா இருக்காரே,  துண்டு கேட்கிறாரே” னு, நடுவுல நதி இருக்கிறது கூட தெரியாம, பத்மபாதர் நதியிலேயே நடந்து வரார். அப்போ கங்காதேவி அவர் பாதங்களை  தாங்கிக்கறதுக்கு பத்மங்களை, தாமரைகளை உண்டாக்கி அதுல அவர் கால் வெச்சுண்டு வந்துடறார், வந்து துண்டை கொடுத்துடறார் . அப்போ, ஆதி சங்கரர் காண்பிக்கிறார்  “பாரு கங்காதேவி பத்மங்களை உண்டு பண்ணி உன்னை காப்பாத்தினா, அதனால இன்னையிலேர்ந்து உனக்கு பத்மபாதர்ன்னு பேரு” அப்படீன்னு சொல்றார். இந்த மாதிரி இது அவருக்கு காரண பெயர் பத்மபாதர்ங்கிறது. சங்கர பகவத் பாதர், கௌட பாதர் அப்படீங்கிறது, பகவனோட திருவடியா இருக்கா எங்கிறதுனால பகவத் பாதர்ன்னு பேரு . பத்மபாதருக்கு பத்மங்கள் பாதங்கள்ல தோன்றியதுனால பத்மபாதர்னு பேரு. இப்படி உத்தம சிஷ்யரா இருக்கார்.

அந்த பத்மபாதரோட பூர்வ கதை ஒண்ணு இருக்கு. அவர் இந்த சோழ தேசத்துல இருந்த போது, ஒரு மஹான் கிட்ட நரசிம்ம மந்த்ரம் உபதேசம் வாங்கிண்டு, ஒரு காட்டுக்குள்ள மலை மேல உள்ள போய் உட்காந்துண்டு, அதை ஜபிச்சிண்டு இருக்கார் . பல நாளா நிறைய ஆவார்த்தி பண்ணிண்டு இருக்கார் , நரசிம்மரோட தரிசனம் கிடைக்கணும் அப்படீன்னு வேண்டிண்டு. ஒரு வேடன் வரான், அந்த வேடன்  வந்து இவரை பார்த்தவுடனே “என்ன சாமி? எதுக்கு இங்க காட்டில வந்து கஷ்டப்படற, உனக்கு என்ன வேணும்? தேனா தினைமாவா, எது வேணும்னாலும் எங்களை கேட்டா கொண்டு வந்து கொடுப்போமே. நீ பூஞ்ச பிராம்மணன். நீ இங்க காட்டுல வந்து தாக்குப் பிடிக்க முடியாது, எங்களை மாதிரி பலசாலியா இருக்கறவா தான் காட்டுல வேட்டையாடி உயிரோடு இருக்க முடியும், என்ன வேணும் சொல்லு” அப்படீன்னு கேட்கறான்.

இந்த பத்மபாதருக்கு, “இது என்னடா, இவன் ஒருத்தன் வந்து நம்ம தபஸுக்கு இடையூறு பண்றானே” ன்னு தோணறது. அப்போ அவர் சொல்றார்  “நீ போயிட்டு வாப்பா. எனக்கு ஒண்ணும் வேணாம், நான் பார்த்துகிறேன்” அப்படீன்னு சொல்றார். “இல்ல நீங்க என்ன வேணும்னா கேளுங்க சாமி, உங்களுக்கு பண்ணா ஒரு சந்தோஷம்”அப்படீன்னு சொல்றான். உடனே பத்மபாதர் சொல்றார் “ஒரு சிங்கத் தலையும், மனுஷ உடம்புமா ஒரு மிருகம் இருக்கு, நான் அதை தேடிட்டு இருக்கேன் , நீ போயிட்டு வா” அப்படீங்கிறார். அவனுக்கு ஆஸ்சர்யமா ஆயிடறது “சாமி, இந்த காட்டுலயே நான் தான் பெரிய வேடன்னு பேரு, இத்தனை வருஷமா நான் இந்த காட்டுல இருக்கேன், ஆனா நீ சொன்ன மாதிரி ஒரு மிருகத்தை நான் பார்த்தது இல்லையே” அப்படீங்கிறன். “அப்படி ஒண்ணு இருக்கு.  நீ போயிட்டு வா”ங்கிறார். “சாமி, நீ பொய் சொல்ல மாட்டே. நான் உனக்கு அந்த மிருகத்தை பிடிச்சுத் தரேன்” அப்படீன்ன உடனே இவர் சிரிக்கறார் . “என்ன சிரிக்கற நீ. நான் நாளைக்கு சாயங்காலத்துக்கு உள்ள, உனக்கு அந்த மிருகத்தை பிடிச்சு தரேன். இல்லைனா நான் உயிரையே விட்டுடறேன்” அப்படீன்னு சொல்லி, அந்த வேடன் அன்னைக்கு முழுக்க திரியறான் அந்த காட்டுல. அவர் சொன்னார்னா சரியா இருக்கும் ன்னு சொல்லி அந்த ரூபத்தையே தியானம் பண்ணிண்டு, ஏகாக்ர சித்ததோட அந்த காட்டுல உடனே தேட ஆரம்பிச்சு, அன்னைக்கு ராத்திரி எல்லாம் தேடறான், அடுத்த நாள் பகலெல்லம் தேடறான். அவனுக்கு பசி, தாகம் எல்லாம் மறந்து போயிடறது. அப்படி, ஒரு மனஸோடு நரசிம்ம ஸ்வாமியை தியானம் பண்ணிண்டு தேடிண்டே  இருக்கான், ஆனாலும் அவனுக்கு கிடைக்கல. அப்படி தேடி கிடைக்கிற வஸ்துவா! பகவான் ஆச்சே.

அதனால கடைசியில மனசு நொந்து போய், “சரி அவர் சொன்னாரு. நமக்குத் தான் தெரியில, நாம உயிரை விடுவோம்” அப்படீன்னு, பக்கத்து மரத்துல சுத்திண்டு இருக்குற கொடியை எடுத்து, தூக்கு போட்டுக்க போறான். அவ்வளோ தூரம் சத்ய நிஷ்டை. கொடுத்த வாக்கை காப்பாத்தாலைன்னா உயிரை விடுவோம்னு, உயிரை விட போயிடறான். அவன் கழுத்துல அந்த சுருக்கை போட்டுக்க போகும் போது, நரசிம்ம சுவாமி அவனுக்கு தரிசனம் கொடுத்துடறார் . இப்படி ஒரு, ஒரு மனசோட தியானம் பண்ணி இருக்கான், இப்படி உயிரையும் கொடுக்கறதுக்கு தயாராகிட்டான்ன உடனே, நரசிம்ம சுவாமி அவனுக்கு தரிசனம் கொடுத்துடறார் . “ஆஹா மாட்டினியா, உன்னைத் தான் தேடிண்டு இருந்தேன்” அப்படீன்னு சொல்லி, அந்த சுருக்கு போட்டுக்க வெச்சுருந்த அந்த கொடியையே எடுத்து, அவரை கட்டறான். அவரும் கட்டுப் படறார், பக்த பராதீனன் அல்லவா! நேரா இந்த பத்மபாதர் கிட்ட  கூட்டிண்டு வரான். “இதோ பாரு சாமி, புடிச்சிண்டு வந்த்துட்டேன், எடுத்துட்டு போ ஊருக்கு” அப்படீங்கிறான். அவருக்கு, பத்மபாதருக்கு கண்ணுக்கு தெரியலை. அப்போ வருத்ததோடு “ஸ்வாமி நான் இத்தனை தபஸ் பண்ணறேன். என் கண்ணுக்கு நீங்க தெரியலையே” ன்ன போது, ஸ்வாமி சொல்றார், நரசிம்ம சுவாமி சொல்றார், “ரெண்டே நாளில் இவன் கோடி வருஷம் தபஸ் பண்ணா, என்ன ஒரு ஏகாக்ர சித்தம் வருமோ, அத்தனை ஒரு மனசோட தியானம் பண்ணி இருக்கான், இந்த வேடனோட ஸத்சங்கம் உனக்கு கிடைச்சனதுனால என்னோட வாக்கையும், கர்ஜனையும் கேட்டாய். உன்னுடைய மந்த்ரம் சித்தி ஆயிடுதுன்னு வெச்சுக்கோ, நீ ஊருக்கு போ. இந்த மந்திர ஜபம் நீ பண்ணினது பின்னாடி ஒரு தடவை உபயோகமா இருக்கும்” அப்படீன்னு ஸ்வாமி சொல்றார். சரின்னு இவர் வந்துடறார்.

அப்பறம்  காசிக்கு போறார் , ஆதி சங்கரருக்கு சிஷ்யர்ஆகிறார் . இந்த ஆதி சங்கர பகவத் பாதாள் கிட்ட,  பல மதஸ்தர்கள் வந்து வாதம் பண்றா, இந்த காபாலிக மதம்னு ஒண்ணு, நரபலி எல்லாம் கொடுக்கறவா. அவா வந்து வாதம் பண்றா. சில பேர் கேட்டுக்குறா சங்கரர் சொல்றதை, அவா திருந்தறா. வாமாச்சாரங்கள்  எல்லாம் விட்டு, தக்ஷிண ஆசாரத்துக்கு வந்து, நல்ல வழியில பூஜை பண்றா. ஆனா சில பேர் அவர் கிட்ட ரொம்ப வெறுப்பு வெச்சுண்டு, இவரை ஒழிச்சு கட்டணும்னு பேசிண்டு இருக்கா. அதுல ஒரு காபலிக தலைவன் இருக்கான், அவன் என்ன பண்றதுன்னு பார்க்கிறான். இவரை நம்மால நேரடியா ஜெயிக்க முடியாது, இவர் பெரிய தபஸ்வியா இருக்கார். அதனால ஒரு சூழ்ச்சி பண்ணலாம்ன் னு, தனியா ஆதி சங்கரர் இருக்கும்போது அவர் பக்கத்துல வந்து “சாமி நான் இந்த காபாலியை குறித்து நான் ரொம்ப நாளா உபாசனை பண்றேன், எனக்கு தரிசனம் கிடைக்கலை. ஒரு சாம்ராஜய பட்டாபிஷேகம் பண்ணிண்ட ராஜாவோ, இல்லை ஒரு சன்யாசியோ, அவா தலையை வெட்டி நெருப்புல பலி கொடுத்தா, எனக்கு சாமி தரிசனம் கிடைக்கும்னு சொல்றாங்க, எங்களுடைய மதத்துல.  அது தான் நம்பிக்கை. ராஜா கிட்ட போனா அவன் முதல்ல என்னை வெட்டிடுவான். நீ சாமியாரா இருக்கே. உன்  தலையை கொடேன்” ன்னு கேட்கறான்.

ஆதி சங்கரர் எவ்வளோ ஞானத்தோட இருக்கார்! உடம்பு நான் ங்கிற எண்ணமே இல்லாம இருக்கிற, ஆதி சங்கரர் சொல்றார் “ஆஹா  அப்படியா, இந்த மரங்கள் பட்டு போனா அடுப்பு எரிக்க உபயோகப்படறது. மிருகங்களோட உடம்பு கூட அதுகள் இறந்தப்பறம் உபயோகமா இருக்கு, கொம்பை வெச்சு அபிஷேகம் பண்றா. தோல் எல்லாம் வச்சு ஏதோ உபயோகம் படுத்திக்கிறா. அப்படி இந்த மனுஷ சரீரம் தான் உபாயோகமே இல்லமா இருக்குன்னு நான் நினைச்சேன். இதுனால உனக்கு ஒரு உபயோகம்னா, நான் அதை கொடுக்கறேன். எனக்கு ஒண்ணும் ஆக்ஷேபணை இல்லை. இருந்தாலும் கூட இருக்கற சிஷ்யர்கள் எல்லாம், இந்த உடம்பு மேல ஒரு அபிமானம் வச்சிருக்கா. அதனால நான் ஒரு இடம் சொல்றேன். நாளைக்கு அந்த இடத்துல, அந்த நேரத்துல இருப்பேன். நீ வந்து என் தலையை எடுத்துண்டு போயிடு”ங்கறார். அப்படி ஒரு வைராக்கியம்.

அதே மாதிரி அடுத்த நாள் அவர்  உட்கார்ந்து இருக்கார். இந்த காபலிகனும் வரான். பெரிய வாளை எடுத்து அவர் கழுத்துல போடா போறான். அப்போ அங்கே திடீர்னு பத்மபாதர் வர்றார். அவருக்குள்ள நரசிம்ம ஸ்வாமி ஆவிர்பவிச்சு, அந்த காபலிகனை கிழிச்சு  போட்டுடறார். ஆதி சங்கரர் ரொம்ப நேரம் கழிச்சு கண்ணை திறந்து பார்க்கறார். அந்த காபலிகனோட ம்ருத சரீரம்  இருக்கு. பத்மபாதர் கை கூப்பி நின்னுண்டு இருக்கார். “என்னாச்சு? ன்னு  கேட்கறார். “எனக்கு தெரியலையே” னு பத்மபாதர் சொல்றார் “நான் கங்கை கரையில இருந்தேன், திடீர்னு இங்க இருக்கேன். என்னாச்சு ன்னு எனக்கு தெரியலை” அப்படீன்னு சொல்றார். “ஓஹோ! உனக்கு நரசிம்ம மந்த்ரம் உபதேசம் ஆகியிருக்கா” ன்னு கேட்கறார். “ஆமா முன்ன நிறைய ஆவ்ருத்தி பண்ணேன், ஜபங்கள் எல்லாம் பண்ணேன். ஸ்வாமி ஒரு வேடனுக்கு தரிசனம் கொடுத்தார், எனக்கு தரிசனம் கொடுக்கலை, பின்னாடி நான் வந்து சஹாயம் பண்ணறேன் ன்னு சொன்னார்”. அப்படீன்ன உடனே, “அது தான் பண்ணியிருக்கார். நரசிம்ம ஸ்வாமி  உனக்குள்ள வந்து என்னை காப்பாத்தணுங்றதுக்காக இந்த காபலிகனை கிழிச்சு போட்டு இருக்கார்” அப்படீன்னு சங்கரர் சொன்ன  உடனே, “அப்படியா, இதுக்கு மேல இன்னும் என்ன வேணும், நரசிம்ம ஸ்வாமி பண்ண பெரிய உபகாரம். என் குருவை காப்பாத்தினாரே”, அப்படீன்னு, நரசிம்ம ஸ்வாமியையும், ஆச்சார்யாளையும் பத்மபாதர் ஸ்தோத்ரம் பண்றார். இது ஒரு பத்மபாதருடைய  அழகான ஒரு கதை.

அடுத்தது வ்யாஸாச்சார்யாளும், சங்கரரும் வாதம் பண்றா. வ்யாஸர் ஒரு கிழவர் மாதிரி வந்து, சங்கரர் பண்ணின பிரம்ம சூத்ர பாஷ்யத்துல மடக்கி, மடக்கி கேள்வி கேட்கறார். அதைச் சொல்லிண்டு இருந்தேன். அப்போ சங்கரருக்கே வந்திருக்கறது வ்யாஸாச்சார்யாள்ன்னு தெரியலை. இந்த பத்மபாதருக்கு, குரு பக்தியினால அது தெரிஞ்சிடறது. அவர் சொல்றார்

சங்கர : சங்கர : ஸாக்ஷாத் வ்யாஸோ நாராயண : ஸ்வயம் |

தயோர்-விவாதே ஸம்ப்ராப்தே கிங்கர : கிங்கரோம்யஹம் ||

அப்படீன்னு சொல்றார். இந்த சங்கரரோ சாக்ஷாத் சிவபெருமான், வந்திருக்கிற வ்யாஸாச்சார்யாளோ விஷ்ணு ஸ்வரூபம். இவா ரெண்டு பேரும் விவாதம் பண்ணா, கிங்கரனான நான் என்ன பண்ண முடியும்? ‘கிங்கரஹ’ அப்படீங்கிறதுக்கு வேலைக்காரன் அப்படீன்னு ஒரு அர்த்தம். என்ன பண்ணனும், என்ன பண்ணனும் – அப்படீன்னு கேட்கறதுனால, ‘கிம் கரோமி’ அப்படீன்னு கேட்டுண்டே இருக்கறதுனால ‘கிங்கரஹ’ னா வேலைக்காரன் னு அர்த்தம். வேலைக்காரனான நான் என்ன பண்ண முடியும்? இரண்டு பேருக்கும்  நமஸ்காரம் தான் பண்ண முடியும், அப்படீன்னு நமஸ்காரம் பண்றார்.

அப்போ சங்கரர் “நான் பண்ணின இந்த பாஷ்யத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்கோ” அப்படீன்ன உடனே, வியாசர் சொல்றார். “ஒரு தப்பும் இல்லை. எப்படி மடக்கி கேட்டாலும், என்ன மாதிரி வாதம் பண்ணினாலும், இதுல பதில் இருக்கு” னு காண்பிக்கறதுக்குகாகத் தான் இவ்ளோ நேரம் நான் உங்களோட வாதம் பண்ணினேன். இந்த ப்ரம்ம சூத்ர பாஷ்யம் இந்த உலகத்துல விளங்கும்”, அப்படீன்னு ஆசிர்வாதம் பண்ணி, இன்னும் ஒரு பதினாறு வருஷங்கள் ஆயுசு கொடுத்து, இப்படி 32 வருஷங்கள் ஆதி சங்கரருக்கு ஆயுசு கொடுக்கிறார். இது பத்மபாதருடைய இன்னொரு கதை.

இதை தவிர இன்னொன்னு இருக்கு. மண்டனமிஸ்ரர் சுரேஸ்வராச்சார்யாள் ஆயிட்டார். அங்கேயிருந்து அவா ஸ்ருங்கேரிக்கு வர்றா, அப்படி வந்ததுண்டு இருக்கும் போது,  ஆசார்யாள் கிட்ட ஸுரேஸ்வராச்சார்யாள், “உங்களுடைய ப்ரம்ம சூத்ர பாஷ்யத்துக்கு, நான் வார்திகம் அப்படீன்னு ஒரு detailed notes, எழுதறேன்” அப்படீன்னு சொல்றார். ஆச்சார்யாள் சரின்னு சொல்றார். இதை அவாள்லாம், மத்த சிஷ்யர்கள் எல்லாம் கேட்டுண்டு இருக்கா. அவாளுக்கெல்லாம் கொஞ்சம் சந்தேஹம். சுரேஸ்வரர் பூர்வ மீமாம்சை-யில இருந்தார். இப்ப தான் வேதாந்தத்தை ஒத்துண்டு இந்த பக்ஷத்துக்கு வந்திருக்கிறார். அவர் ஆதி சங்கரருடைய  பாஷ்யத்தை எடுத்து அதிலிருந்து சரி, தப்பெல்லாம் பார்த்து, விட்டு போனது எல்லாம் எழுதறேன்னு எழுதினா, ஏதாவது அவருடைய பழைய கொள்கைகள்ல இருக்கறதை எழுதிட போறார்,  அப்படீன்னு ஒரு சந்தேஹம். இதை வந்து பத்மபாதர் ஆச்சார்யள் கிட்ட சொன்னதா ஒரு சங்கர விஜயத்துல இருக்கு. அப்ப ஆச்சார்யாள் சும்மா இருந்துடறார். இது சுரேஸ்வரர் காதுலேயும் விழுந்துடறது . சுரேஸ்வரர் “சரி, நான் வார்திகம் எழுதறது இல்லை” ன்னு வச்சுட்டார்.

அப்புறம், சுரேஸ்வராச்சார்யாள் என்ன பண்றார். நைஷ்கர்ம்ய சித்தி, அப்படின்னு ஒரு புஸ்தகம் எழுதி, ஆச்சார்யாளை நமஸ்காரம் பண்ணி, அவர் பாதத்துல வைக்கறார். அந்த ‘அத்வைத சித்தி’ ன்னு  அர்த்தம். காரியமே இல்லாத நிலைமையை எப்படி அடையணும்னு ஒரு வழி காண்பிக்கற மாதிரி ஒரு புஸ்தகம். ரொம்ப சுத்தாத்வைதத்தை பத்தி ஒரு புஸ்தகம் எழுதி ஆச்சார்யாளுக்கு சமர்ப்பணம் பண்றார். இதைப் பார்த்த உடனே எல்லாருக்கும் புத்தி வந்துடறது. சுரேஷ்வரரைப் போய் நாம சந்தேகப்பட்டோமே அப்படின்னு, அவரை எல்லாரும் நமஸ்கராம் பண்ணி, மன்னிப்பு கேட்டுக்கறா. இருந்தாலும் பத்மபாதருக்கு, இந்த மாதிரி, “நாம, ஆச்சார்யாள் பண்ணச் சொல்லி, இவர் வார்த்திகம் எழுதப் போகும் போது, நாம போய் நடுவுல பேசிட்டோமே” அப்படின்னு ஒரு மனஸ்தாபம் இருந்திருக்கு.

அப்புறம் பத்மபாதாச்சார்யார், டீகா, அப்படின்னு அவர் ஒரு explanatory notes, இந்த சங்கரருடைய ப்ரம்மசூத்ர பாஷ்யத்துக்கு, பத்மபாதர் ஒரு டீகா ஒண்ணு எழுதறார். அதை அவர் எழுதிண்டே வர்றார், ஆசார்யாள் கிட்ட படிச்சு கண்பிக்கறார். திடீர்னு அவருக்கு க்ஷேத்ராடனம் போகணும்னு தோணறது. அவர், “க்ஷேத்ராடனமாக இராமேஸ்வரத்துக்கு போயிட்டு வர்றேன்” அப்படின்னு ஆதி சங்கரர் கிட்ட கேட்கிறார். “சரி போயிட்டு வாப்பா” ன்னு குரு ன்னு சொல்றார். அவர் அந்த க்ஷேத்ராடனம் வரும்போது, இங்க திருவானைக்கா-வில தன்னோட மாமா ஆத்துக்கு வர்றார். அந்த மாமா ஆத்துல தங்கறார். அந்த மாமா ரொம்ப தீவிர மீமாம்ஸகர். அவர் கிட்ட பேசிண்டு இருக்கும்போது “இந்த மாதிரி சங்கரர்-னு ஒரு மஹான், அவதார புருஷர், அவருக்கு சிஷ்யனா இருக்கேன்” னு சொல்றார்.

இவரை பார்த்தாலே இவருடைய  மாமாக்கு, “என்னடா இது சன்யாஸ வேஷம் போட்டுண்டு வர்றானே மருமான்”-னு வருத்தமா இருக்கு. பத்மபாதர் “இந்த மாதிரி நான் புஸ்தகம் எழுதி இருக்கேன்” என்று காண்பிக்கிறார். அந்த புஸ்தகத்தை படிச்சு பார்த்தா உடனே அந்த மாமாக்கு, “ஆஹா, இவ்ளோ தெளிவா இவன் இதை எழுதறான். இந்த புஸ்தகம் மிஞ்சித்துன்னா நம்முடைய மீமாம்ஸை இல்லாம போயிடும்”, அப்படின்னு சொல்லிட்டு, அவர் “நீ இராமேஸ்வரம் தானே போறே, போயிட்டு வர்ற வழியில இங்க வா. இந்த புஸ்தகத்தை நான் பத்திரமா படிச்சு பார்த்துட்டு தர்றேன்”, அப்படின்னு, அதை வாங்கி வச்சுகறார்.

இவர் revise பண்ணி, புஸ்தகத்தை எழுதி முடிக்கலாம்னு கொண்டு வந்தார். மாமா அதை வாங்கி வச்சுக்கறார். மாமாக்கு இதுல எவ்வளோ கோபம் எங்கிறதை காண்பிக்கறதுக்கு, அவர் கிட்ட ரெண்டு வீடு இருந்ததாம், ஒரு வீட்டுல அந்த புஸ்தகத்தை வச்சு, அந்த வீட்டையே எரிச்சுடறார். அப்புறம் பத்மபாதர், இராமேஸ்வரம் போயிட்டு திரும்ப வரும்போது, “நான் அந்த வீட்டுல வச்சிருந்தேன்பா, அந்த வீடோட அந்த புஸ்தகம் எரிஞ்சு போயிடுத்து” அப்படின்னு சொல்றார். பத்மபாதர் வருத்தப் பட்டுண்டு, “சரி நாம ஏதோ சுரேஸ்வராச்சார்யாளை  தப்பா நினைச்சதுனால, இப்படி ஆயிடுத்து போலிருக்கு, எல்லாம் ஆச்சார்யாள் சங்கல்பம்” அப்படின்னு சொல்லிட்டு திரும்பியும் ஆசார்யாள் கிட்ட வர்றார்.

இதுல என்னன்னா, முதல் தடவை அவர் எழுதினபோது, இந்த மாதிரி ஒரு டீகா எழுதிண்டு இருக்கேன், அப்படின்னு ஆச்சார்யாள் கிட்ட படிச்சு காண்பிக்கறார். “நீ என்கிட்டே படிச்சு காண்பிச்சதுல, முதல் அத்தியாயம் நாலு பாதமும், இரண்டாவது அத்தியாயம் முதல் பாதமும் எனக்கு ஞாபகம் இருக்கு” அப்படின்னு ஆச்சார்யாள் அதை கட கடன்னு திருப்பி சொல்றார். இந்த மாதிரி புஸ்தகம் எரிஞ்சு போயிடுத்துன்னு சொன்ன உடனே, “நீ என் கிட்ட இந்த 5 பாதம் படிச்சு காண்பிச்சே, அது எனக்கு ஞாபகம் இருக்கு, அதை திருப்பி சொல்றேன் எழுதிக்கோ,” அப்படின்னு சொல்றார். இவர் அந்த 5 பாதங்களை எழுதிக்கறார். அதனால் அந்த புஸ்தகத்துக்கு பஞ்சபாதிகான்னு பேரு. அப்புறம், இவாள்ளாம் சுரேஷ்வரர்கிட்ட ப்ரார்த்தனை பண்ணிண்டதுனால சுரேஷ்வரர், ரெண்டு உபநிஷத்துக்கு வார்த்திகம் எழுதியிருக்கார். அதுல கிருஷ்ண யஜுர்வேதத்தோட வழக்குல இருக்கற, தைத்ரீய உபநிஷத்துக்கும், சுக்ல யஜுர்வேதத்தோட ப்ருஹ்தாரண்ய உபநிஷத்துக்கும், சங்கரர் பாஷ்யம் எழுதி இருக்கார். சுரேஷ்வராச்சாரியாள் பாஷ்யத்துக்கு வார்த்திகம் எழுதியிருக்கார், அதானால அவருக்கு வார்திகக்காரர்ன்னே ஒரு பேரு.

சுரேஷ்வராச்சாரியாளை, காஞ்சி மடத்துலேயும், சிருங்கேரி மடத்துலேயும், துவாரகா மடத்துலேயும், தன்னோட ஆச்சார்ய பரம்பரையில் சொல்லிக்கறா. பெரியவா இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ரொம்ப easy-ஆ  resolve பண்ணிடுவா. இவர் நல்ல படிச்சவர், ரொம்ப பெரியவர், சுரேஷ்வரர். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு, அதனால ஒவ்வொரு மடத்துலேயும் கொஞ்ச நாள் இருந்து, ஒரு சிஷ்யரை உருவாக்கிவிட்டு, அப்புறம் அடுத்த ஊருக்கு வந்திருப்பார், அடுத்த மடத்துல அங்கேயும் ஒரு சிஷ்யரை உருவாக்கி  அந்த மடத்து administrative காரியங்கள் என்னன்ன பண்ணணுமோ, அந்த மடத்தை நிர்வாகம் பண்றதுக்கு என்ன வேண்டியதோ, அதெல்லாம் பண்ணி கொடுத்துட்டு, அடுத்த இடத்துல போயி அங்கேயும் மடத்தை ஆரம்பிச்சிருப்பார். ஆச்சார்யாள் உத்தரவின்படி. அதனால 3 மடங்கள்ளேயும் நாங்க வந்து சுரேஷ்வரரை முதல் ஆச்சார்யாளா நினைக்கிறோம். அப்படின்னு ரொம்ப சுலபமா மஹா பெரியவா சொல்றா.

இங்க காஞ்சீபுரத்துல ஆதி சங்கரர் சர்வஞ பீடம் ஏறின போது, ஒரு சின்ன பையன் அவரை பல கேள்விகள் கேட்கறான். அதற்கு ஆச்சார்யாள் அழகா பதில் சொல்லிடறார். அப்புறம் அவன் ஆசார்யாளை நமஸ்காரம் பண்றான். “உனக்கு என்ன வேணும்” என்ற உடனே, “எனக்கு சன்யாஸம் வேணும்” னு கேட்கறான். அதனால அந்த குழந்தைக்கு ஆச்சார்யாள் சன்யாஸம் கொடுக்கறார். பால சன்யாஸி, அவர் பேர் சர்வஞாத்மர், சர்வஞ்ஞாத்ம முனி. அவர் ஸம்ஷேபஸாரீரகம், அப்படின்னு ஒரு புஸ்தகம் எழுதியிருக்கார். அந்த சர்வஞ்ஞாத்மர், சுரேஷ்வராச்சாரியாள், guidance-ல காஞ்சி மடத்துல முதல் ஆச்சர்யாளா இருந்திருக்கார், அப்படின்னு சங்கர விஜயத்துல இருக்கு.

அப்படிஇன்னிக்கு, ஆதி சங்கரரோட முக்கிய சிஷ்யர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், சர்வஞாத்மர் எல்லாரையும் ஸ்மரிச்சோம். நாளைக்கு ஹஸ்தாமலகர், தோடகர், அப்படின்னு ஒரு 2 சிஷ்யர்கள் அவாளோட பெருமை எல்லாம் நினைப்போம்.

பத்மபாதர் கதை (17 min audio file. Same as the script above)

ஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – பதினொன்றாம் பகுதி – மண்டனமிஸ்ரரை சங்கரர் வென்றதுஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.