முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 43, 44 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 43 and 44)

முகுந்தமாலையில 43ஆவது ஸ்லோகம் இப்ப பார்க்கப் போறோம். பகவானோட நாமங்களைச் சொன்னா பகவானே கிடைப்பான் ‘யாந்தி வைஷ்ணவீம் ஸித்திம் பரமாம்’ ன்னு இருக்கும்போது அதைச் சொல்ல மாட்டேங்கறாளேன்னு சொன்னார்.

நான் நாராயணனை வணங்கப் போறேன். நாராயணனுடைய பூஜையை பண்ணப் போறேன். நாமத்தை ஜபிக்கப் போறேன். நாராயணனுடைய தத்வத்தை ஸ்மரிக்கப் போறேன். நான் இதை பண்ணிண்டே இருக்கப் போறேன்னு சொன்னார்

நமாமி நாராயணபாத³பங்கஜம்

கரோமி நாராயணபூஜனம் ஸதா³ ।

வதா³மி நாராயண நாம நிர்மலம்

ஸ்மராமி நாராயணதத்த்வமவ்யயம் ॥

ன்னு தன்னுடைய முடிவை சொன்னார். அதனால எனக்கு கிடைச்ச பெரும் பேறு, அந்த பகவானோட அனுபவமே எனக்குக் கிடைச்சுது ன்னு சொல்லிட்டு, இன்னிக்கு இரண்டு ஸ்லோகங்கள் திரும்பவும் இப்பேற்பட்ட பேரானந்தம் இருக்கும்போது, ஜனங்கள், வீண் பேச்சிலயும் சிற்றின்பத்துலயும் காலத்தை கழிக்கறாளேன்னு சொல்றார். அதைப் பார்ப்போம்

आश्चर्यमेतद्धि मनुष्यलोके सुधां परित्यज्य विषं पिबन्ति ।

नामानि नारायणगोचराणि त्यक्त्वान्यवाचः कुहकाः पठन्ति ॥ ४३ ॥

ஆஸ்ச்சர்யம் ஏதத்ஹி மனுஷ்யலோகே ஸுதாம் பரித்யஜ்ய விஷம் பிபந்தி |

நாமானி நாராயண கோசராணி த்யக்த்வான்ய வாச: குஹகா: படந்தி ||

குஹகா: ன்னா hypocrites கபட ஸ்வபாவம் உள்ளவர்கள்னு ‘நாமானி நாராயண கோசராணி’ நாராயண நாமங்கள் நாராயணா, கிருஷ்ணா முகுந்தா, கோவிந்தா, முராரே, மாதவான்னு இந்த நாமங்களை சொல்றதில்லை. ‘ஆஸ்ச்சர்யம் ஏதத்ஹி மனுஷ்யலோகே’ மனுஷ்ய லோகத்துல ரொம்ப ஆச்சர்யம் என்னன்னா, ‘ஸுதாம் பரித்யஜ்ய விஷம் பிபந்தி’ அமிர்தத்தை விட்டுட்டு விஷத்தை எடுத்து குடிக்கறாளே. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று ன்னு வள்ளுவர் சொல்ற மாதிரி, இனிமையான இந்த பகவானோட நாமங்கள் இருக்கும்போது ஜனங்கள் வெறும் வெட்டிப் பேச்சு பேசிண்டு இருக்காளேன்னு சொல்றார். அடுத்த ஸ்லோகத்துலயும் அதையேதான் சொல்றார்

लाटीनेत्रपुटीपयोधरधटी रेवातटीदुष्कुटी

पाटीरद्रुमवर्णनेन कविभिर्मूढै: दिनं नीयते |

गोविन्देति जनार्दनेति जगतां नाथेतिकृष्णेति च

व्याहारै: समयस्तदेकमनसां पुम्सामतिक्रामति ॥ ४४ ॥

லாடீ நேத்ரபுடீ பயோதரதடீ ரேவாதடீ துஷ்குடீ

பாடீரத்ரும வர்ணனேன கவிபிர்மூடை: தினம் நீயதே |

கோவிந்தேதி ஜனார்தனேதி ஜகதாம் நாதேதி க்ருஷ்ணேதி ச

வ்யாஹாரை: ஸமய: ததேகமனஸாம் பும்ஸாம் அதிக்ராமதி ||

முன்னாடி ஸ்லோகத்துல குஹகா: கபட சுபாவம் உள்ளவர்கள் வீண்பேச்சு பேசி திரிகிறார்கள் னு சொல்றார். கவிகள் கூட பெண்களோட வர்ணனையிலையும் சந்தன வ்ருக்ஷம், அங்க இருக்கற குடிசை, அவளோட கண்ணு அது இதுன்னு அதெல்லாம் பத்தி கவிதை எழுதறா. ரொம்ப எதுகை மோனை இருக்கு. அதுனால என்ன பிரயோஜனம்?

கோவிந்தேதி ஜனார்தனேதி ஜகதாம் நாதேதி க்ருஷ்ணேதி ச

ன்னு இந்த பகவானோட கீர்த்தனங்களை பண்ணி பகவானிடத்தில் மனசை வெச்ச அந்த புண்யசாலிகளுடைய நாட்கள் இனிமையா கழியறதுன்னு சொல்றார். அப்படி இந்த newspaper, T.V., எதையெடுத்தாலும் உலக விஷயங்கள் 24 பக்கம் இருக்கும். தினம் ஒரு மணி நேரம் அதை படிக்கறா. மணிக்கணக்கா T.V.யில program பாக்கறா. இதெல்லாம் time waste னு சொல்றார். இந்த நேரத்தை நீ பகவானுக்காக செலவு பண்ணினா, அதுல கிடைக்கற அந்த சந்தோஷத்தைத் தக்க வெச்சுண்டு, மனசுல அந்த ஆனந்தத்தை வளர்த்துக்கணும்னு சொல்றார்.

ஆனா அந்த மாதிரி யாரையாவது பார்த்தா தான் நமக்கு புரியும். பகவானோட பஜனத்தைப் பண்ணி, அதுல உண்மையா சந்தோஷப் பட்டு, அதுனால எனக்கு பணமோ, புகழோ, பெருமையோ எதுவுமே வேண்டாம். எனக்கு இந்த பகவானோட கதைகளைப் பேசறதுலயே சந்தோஷம் இருக்கு. இந்த கதைகளைப் படிச்சிண்டு உட்கார்ந்திருக்கறதுலயே சந்தோஷம் இருக்குன்னு, தானே அதை ருசிச்சு, ரசிச்சு அனுபவிச்சிண்டு இருக்கிறவாளை பார்க்கும் போது தான் ‘அவாளுக்கு எந்த தேவைகளும் இல்லை. இந்த பகவானோட கதைகள் மூலமாஅவா பிரம்மானந்தத்துல இருக்கா’ ங்கிறதை பார்க்கும் போது நமக்கும் ‘ஓஹோ. நம்முடைய வாழ்கையை நாம வீணடிச்சுண்டிருக்கோம். ஒவ்வொரு நாளும், பொழுது போறது. இவாளை மாதிரி நாம இருக்கணும்’ என்கிற ஆசை வரும்.

பகவானோட அந்த ஆனந்தம், சிவானந்தம், சிவானந்த லஹரின்னு சொல்றார் ஆசார்யாள். ப்ரவாகமா வரும் சிவானந்த லஹரின்னு ஆதிசங்கரர் சொல்றார். அந்த சிவானந்த லஹரி பெருகி வரும்போது அது என் மனதில் வந்து தேங்கட்டும்னு சொல்லி சிவானந்த லஹரியில இரண்டாவது ஸ்லோகம்

गलन्ती शंभो त्वच्चरितसरितः किल्बिषरजो

दलन्ती धीकुल्यासरणिषु पतन्ती विजयताम् ।

दिशन्ती संसारभ्रमणपरितापोपशमनं

वसन्ती मच्चेतोहृदभुवि शिवानन्दलहरी ॥

க³லந்தீ சம்போ⁴ த்வச்சரிதஸரித: கில்பி³ஷரஜோ

த³லந்தீ தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் ।

தி³சந்தீ ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்

வஸந்தீ மச்சேதோஹ்ருʼத³பு⁴வி சிவானந்த³லஹரீ ॥

ன்னு ஒரு ஸ்லோகம். இதுக்கு அர்த்தம் ‘சம்பு’ங்கிறதுக்கு ஆனந்தத்தை இருப்பிடமா கொண்டவர்னு அர்த்தம் ‘த்வச்சரிதஸரித: க³லந்தீ’ இந்த சிவானந்த லஹரி, சிவானந்த பிரவாகம் எங்க இருந்து கிளம்பறதுன்னா உன்னுடைய சரித்திரம் என்கிற நதியிலிருந்து கிளம்பறது. அங்கேயிருந்து கிளம்பி வழியில பாவம்ங்கிற புழுதியைப் போக்கிண்டு ‘கில்பி³ஷரஜோ த³லந்தீ’

பிரவாகம்ங்கிறது ஆரம்பத்துல சின்னதா தானே இருக்கும். ஸரஸ்ங்கிற மடுவுல இருந்து ‘த்வச்சரிதஸரித: க³லந்தீ’ அங்கேயிருந்து பாய ஆரம்பிக்கறது ‘கில்பி³ஷரஜ:’ பாவம் என்ற புழுதியை ‘தளந்தி’ அடிச்சிண்டு போயிடறது. ஒரு நதியில ஜலம் இல்லேனா பலவிதமான அழுக்கு தேங்கியிருக்கும். நதியில ஜலம் ஓடும் போது அதெல்லாம் அடிச்சிண்டு போயிடும். அதுமாதிரி என்னுடைய பாவங்களை எல்லாம் இந்த சிவானந்த லஹரி அடிச்சிண்டு போயிடறது ‘தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ’ ஒரு நதி ஓட ஆரம்பிச்சுதுன்னா வாய்க்கால்லயும் ஜலம் ஓடும். அதுமாதிரி என்னோட தீ ன்னா புத்தி, என்னுடைய புத்தி என்கிற வாய்க்கால் வழியா பாய்ஞ்சு வந்து எல்லா தடாகங்கள்லேயும் வந்து விழறது. இது ‘ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்’ இந்த பிறவிச்சுழல்ங்கிற துக்கத்துக்கு இந்த சிவானந்த லஹரில ஸ்நானம் பண்ணா அந்த தாபங்கள் எல்லாம் போயிடும். ‘ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம் திசந்தி’ இந்த சிவானந்த லஹரி – என்னுடைய மனமாகிய மடுவுல வந்து ‘வசந்தி’ வந்து தேங்கறது. அங்கேயே இருக்கட்டும்னு வேண்டிக்கறார். அந்த மாதிரி நாம் பகவானோட கதைகளைப் பேசி அவருடைய நாமங்களை ஜபிச்சா நம் மனசுல சிவானந்த லஹரியே வந்து தேங்கும்.

அந்த மாதிரி மஹான்களை பார்த்து, அவாளோட வாக்கும் இருக்கு.

சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ வஸந்தவல் – லோகஹிதம் சரந்த : |

தீர்ணா : ஸ்வயம் பீம – பவார்ணவம் ஜநாந் அஹேதுநாsந்யாநபி தாரயந்த : ||

ன்னு விவேக சூடாமணியில சங்கரபகவத்பாதாள் சொல்றார். மஹான்கள் சாந்தா: மஹாந்தா: சாந்த குணம் கொண்ட அந்த மஹான்கள் வசந்தம் போல ஒரு காரணமும் இல்லாமல் வருவார்கள். வசந்த ருது வந்தால் எல்லாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கறது. அது மாதிரி அவா அவதாரம் பண்ணி வரா. இந்த பயங்கரமான பவக்கடலை தாங்கள் தாண்டினவர்களாக இருப்பதால் மற்றவர்களையும் தாண்ட வைக்கிறார்கள்னு சொல்றா. அவா இருக்கும்போது அவாளை தரிசனம் பண்ணா அவா நம்ம கையை பிடிச்சுக் கூட்டிண்டு போயிடுவா. அவாளுடைய காலத்துக்கு அப்புறம் அவாளோட வாக்குங்கிற படகை விட்டுட்டு போயிருக்கா. அதுல ஏறிண்டு தாண்டி அவாகிட்ட நாம போயிடலாம். அப்படி இந்த சிவானந்தலஹரி போன்ற அமிர்த வாக்கு இருக்கு. முகுந்தமாலை போன்ற குலசேகராழ்வாருடைய வாக்கு இருக்கு. இதெல்லாம் படிக்கும்போது நமக்கு பகவானுடைய ஸ்மரணையிலையே இருக்கணும்கிற ஆசை வரது. அதை திடப் படுத்திக்கறதுக்காக இதெல்லாம் விடாம படிப்போம்.

முகுந்த மாலையில இன்னும் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கு. அடுத்த ஸ்லோகத்துல, ‘நான் போற வழிக்கு ஒரு பொதி சோறு கட்டிண்டிருக்கேன். அது கெட்டுப் போகாதது’ ன்னு அழகான ஸ்லோகம் சொல்றார். அதற்கடுத்த ஸ்லோகத்துல இந்த முகுந்தமாலை குலசேகர கவியால் பாடப்பட்டதுன்னு வர்றது. அது குலசேகராழ்வாரே சொல்லியிருக்காரா, வேற யாராவது அவருடைய பெருமையை சொல்லியிருக்காளான்னு தெரியலை. அதோட முகுந்த மாலை பூர்த்தியாறது.

அதற்கப்பறம் நாம பாக்கியம் இருந்தா சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தை படிப்போம். இன்னிக்கு இந்த ஸ்லோகத்தோட பூர்த்தி பண்ணிக்கறேன். பகவானோட நாமங்களை நாம சொல்லணும்

கோவிந்தேதி ஜனார்தனேதி ஜகதாம் நாதேதி க்ருஷ்ணேதி ச

வ்யாஹாரை: ஸமய: ததேகமனஸாம் பும்ஸாம் அதிக்ராமதி

ன்னு பகவான் கிட்டயே மனசை வெச்சு பகவானுடைய நாமங்களைச் சொல்லிக் கொண்டு என்னுடைய காலம் கழிய வேண்டும்னு கிருஷ்ணனை வேண்டிப்போம். கிருஷ்ணனோட அனுக்ரஹத்துனால சிவானந்தல ஹரியை எடுத்து படிப்போம். இந்த 46 ஸ்லோகங்கள்ல சொன்னது தான் சிவானந்தல ஹரிலயும் வரும். நாம பார்ப்போம். ஆச்சர்யமா இருக்கும். அதுலயும் இதே மாதிரி கருத்துக்கள் வரும். கவிதையோட அழகு கொஞ்சம், கொஞ்சம் இவர் ஒரு மாதிரி சொல்லியிருப்பார். அவர் ஒருமாதிரி சொல்லியிருப்பார். ஆனா இந்த பக்தியோட இந்த சாராம்சம் குலசேகரகவி சொன்ன மாதிரியே ஆதிசங்கர பகவத்பாதாளும் சொல்லியிருப்பார் என்கிறதை பார்த்து ரசிக்கறதுக்காகவே இதற்கு பிறகு அடுத்து அதை படிக்கணும்னு தோணித்து. நாம நல்லபடியா இந்த 46 ஸ்லோகங்களை படிக்க முடிஞ்சது பெரிய பாக்கியம். அதே மாதிரி அந்த சிவானந்த லஹரியும் படிக்கறதுக்கு பகவான் அனுக்ரஹம் பண்ணட்டும்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< முகுந்தமாலா 41, 42 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா பூர்த்தி 45, 46 ஸ்லோகங்கள் பொருளுரை >>
Share

Comments (3)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.