Categories
mooka pancha shathi one slokam

காசித் க்ருபா கந்தலீ – கருணை என்னும் கொடி

காசித் க்ருபா கந்தலீ (13 min audio, same as the transcript above)

कान्तैः केशरुचां चयैर्भ्रमरितं मन्दस्मितैः पुष्पितं

कान्त्या पल्लवितं पदाम्बुरुहयोर्नेत्रत्विषा पत्रितम् ।

कम्पातीरवनान्तरं विदधती कल्याणजन्मस्थली

काञ्चीमध्यमहामणिर्विजयते काचित्कृपाकन्दली ॥

காந்தை: கேச ருசாம் சயை ப்ரமரிதம் மந்தஸ்மிதை: புஷ்பிதம்

காந்த்யா பல்லவிதம் பதாம்புருஹையோ: நேத்ரத்விஷா பத்ரிதம் |

கம்பா தீர வனாந்தரம் விதததீ கல்யாண ஜன்மஸ்தலீ

காஞ்சீ மத்ய மஹாமணி: விஜயதே காசித் க்ருபா கந்தலீ||

என்று ஸ்துதி சதகத்தில் பத்தாவது சுலோகம். காஞ்சி தேசத்தில் மத்யமணியாக மஹாமணியாக காமாக்ஷி அம்பாள் விளங்கி கொண்டிருக்கிறாள். காஞ்சி என்றால் இடுப்பு என்று பொருள். இடுப்பில் உள்ள ஒட்டியாணத்தில் வரிசையாக உள்ள மணிகளில் மத்ய மணியாக காமாக்ஷி அம்பாள் இருக்கின்றாள் என மூக கவி கூறுகிறார். எப்படியெனில் ஏகாம்பரேஸ்வரர், குமரகோட்டம் சுப்ரமணியஸ்வாமி, கச்சபேஸ்வரர், வரதராஜ பெருமாள் என்று இப்படி பல மணிகள் இருக்கின்றன.அதில் நடுவில் மத்ய மணி காமாக்ஷி அதுவும் மஹாமணியாக, காமாக்ஷி ராஜராஜேஸ்வரியாகவும் த்ரிபுரசுந்தரியகவும் வீற்றிருக்கிறாள்.

இந்த மஹாமணியானது, மூக கவிக்கு ஒரு புதுமையான வடிவத்தில் தெரிகிறது. எப்படியெனில், “கம்பதீரா வனாந்தரம் விதததி” கம்பை நதியின் தீரத்திலுள்ள வனத்தில் காமாக்ஷி தேவி மூக கவிக்கு ஒரு மரமாக தெரிகிறாள். காமாக்ஷி தேவி எப்படி மரமாக தெரிகிறாள்? மரம் என்றால் அதில் இலைகள், தளிர்கள், பூக்கள், பழங்கள் இருப்பது போல காமாக்ஷி தேவியிடமும் பார்கிறார். “மந்தஸ்மிதை புஷ்பிதம்” – அதாவது அம்பாளின் மந்தஸ்மிதம் புன்னகை தான் புஷ்பம். புஷ்பம் இருந்தால் அதை சுற்றிலும் வண்டுகள் இருக்கும். “காந்தைஹி கேசருசாம் சையை ப்ரமரிதம்” அம்பாளின் கேசம் பாரம், அதன் காந்தி, சுருள் சுருளாக உள்ள முடி. அதனுடைய காந்தி வண்டுகளைப் போல உள்ளது.

“காந்த்யா பல்லவிதம் பதம்புருஹயோ:” – பாத தாமரையின் காந்தி என்கிற தளிர் உள்ளது. மேலும் காமாக்ஷி என்னும் இந்த மரத்தில் “நேத்ரத் விஷா பத்ரிதம்” கடாக்ஷம் கண்களின் அழகு இலைகள் போல் உள்ளது. இப்பேற்பட்ட காமாக்ஷி என்கிற மரம் நமக்கு என்ன பழத்தை கொடுக்கிறது என்றால், “கல்யாண ஜன்மஸ்தலி” அதாவது அளவற்ற மங்களங்களை பக்தர்களுக்கு கொடுத்துகொண்டே இருக்கின்றது. இந்த மரத்துக்கு என்ன பெயர் என்றால் “காசித் க்ருபா கந்தலீ” – கிருபை என்று பெயர்.

ஸ்வாமிகள் சொல்வார் – சாதாரணமாக கவிகள் வர்ணனை பண்ணி விடலாம். அனால் மகான்கள் தான் அந்த அம்பாளின் சௌந்தர்யமே காருண்யம் என்று அநுபவித்து உணர்ந்து அதை ஒவ்வொரு இடத்திலும் சொல்வார்கள். இப்படி கிருபா வடிவமாக இருந்து கொண்டு அளவற்ற மங்களங்களை பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கும் காமாக்ஷி என்று படிக்கும்போது, எனக்கு அது எவ்வளவு உண்மை என்று மஹாபெரியவாளும் ஸ்வாமிகளும் அவர்களை அண்டி நமஸ்கரித்து, “உங்களை சேர்ந்தவனாக என்னை வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி ஒரு நமஸ்காரம் பண்ணின அந்த நிமிஷத்திலிருந்து அந்த ஜீவனுக்கு எவ்வளவு நன்மைகளை செய்கிறார்கள் என்று எண்ணி பார்க்கையில் தெரிகிறது. சில நிகழ்ச்சிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

தியாகு தாத்தா என்று ஒரு மஹாபெரியவாளின் உத்தம பக்தர். அவர் இளமையில் மஹாபெரிவாளிடம் பதினாறு வருடங்கள் சர்வீஸ் பண்ணிணவர். அவரை மஹாபெரியவா “நீ ஹிந்தி வாத்யார் வேலைக்கு போ” என அனுப்பியுள்ளார். அதாவது நன்றாக சேவை செய்யும் ஒருவரை தன் சௌகர்யத்தை உத்தேசித்து கூடவே வைத்து கொள்ளாமல், அவருக்கு முப்பது வயது ஆகிவிட்டது. அவர் கிருஹச்தாஸ்ரமத்தில் நுழைய வேண்டும்,. அவருடைய வாழ்க்கை பாதை நன்றாக அமைய வேண்டும் என்று வேலைக்கு அனுப்பி வைத்தார். இன்று தொண்ணுற்று மூன்று வயதில் பெரிவாளை பற்றி நினைத்து உருகி சந்தோஷமாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

அது போலவே நம் ஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் பண்ணிய ஜானகிராம மாமாவிடம், மஹா பெரியவா ஒரு நாள் காலையில் கூப்பிட்டு அனுப்பி, நம் ஸ்வாமிகளை பற்றி நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசியிருக்கிறார். “சுபாஷ்ரயம். நீ பிடித்தது புளியங்கொம்பாக பிடித்திருக்கிறாய்” என சொல்லி ஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் பண்ணுவது பெரும்பாக்கியம் என சொல்லி இருக்கிறார். அப்போது மாமா “எனக்கு வேலையை விட்டு விடலாம் என தோன்றுகிறது” என சொல்ல, அதற்கு மஹாபெரியவா “அது பாட்டுக்கு இருந்து விட்டு போகட்டும்” என்று சொன்னாராம். அதன் பின்னர் ரயில்வேயில் அவர் வேலை பார்த்தபோது, அவருடைய மேலதிகாரி ஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் பண்ணுவதற்கு எந்த இடையுறு இல்லாமல் உறுதுணையாக இருந்து இருக்கிறார். ஸ்வாமிகள் குருவாயூர் முதலான இடங்களுக்கு போகும் போது கூடவே அழைத்து செல்ல அந்த ரயில்வே பாஸ் உபயோகமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இப்போது அவர் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு தனது வாழ்கையை சிரமமில்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றால் அது மஹாபெரியவா சொன்ன ஒரு வார்த்தை. வாழ்க்கை முழுவதும் காப்பாற்றுகிறது என்பதற்கு உதாரணம்.

அதே போல நாகராஜ மாமா என்று ஒருவர் ஸ்வாமிகளிடம் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு இருந்தார். அவரும் ரயில்வே துறையில் தொழிலாளிகளுடன் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். அப்போது மஹாபெரியவா Hospet என்ற ஊரில் இருந்தபோது தன்னை பார்க்க வந்தவர்கள் அனைவரையும் “அங்கு நாகராஜன் என்று ஒருவர் இருக்கிறார். அங்கே போய் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்” என்று சொல்வாராம். ஆனால் அந்த நாகராஜ மாமாவை மஹாபெரியவா “நீ குடுமி வைத்துகொள்” என சொல்லவில்லை. இதன் மூலம் மஹாபெரியவா எவ்வளவு கருணை மிக்கவர் என எனக்கு புரிந்தது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், முதலில் எனக்கு மஹாபெரியவா என்றால் மடம், சம்பிரதாயம், மிகவும் ஆசார அனுஷ்டானங்கள் மிக்கவர் என்று மட்டும் தான் தெரிந்தது. மஹாபெரியவாளோட சில சிஷ்யர்களை பார்த்து நானாக அப்படி நினைத்து கொண்டேன். பிறகு ஸ்வாமிகள் சொல்லி கொடுத்து மஹாபெரியவாளைப் பற்றி நிறைய கேட்க கேட்க, அவா கருணையே வடிவானார் என்று எனக்கு தெரிந்தது.

அது போல முதலில் மடத்து சம்பந்தம் ஏற்பட்டபோது, எங்க அப்பா ஏன் குடுமி வைத்து கொள்ளவில்லை என நினைத்தேன். அப்போது ஸ்வாமிகள் தான் “உங்க அப்பா போல பரோபகார குணமும், அவரை போல எளிமையாக வாழ்வதும், பூஜை பண்ணுவதும், திருப்புகழ் படிப்பதும் பார்க்க முடியாது. அவர் ஒரு மகான். நீ அவரை ஏன் குடுமி வைத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறாய். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவரை பார்த்து உண்மையான பக்தி என்ன என்பதை நீ கற்றுகொள். நீ அவரை போல் இருந்தாலே போதும்” என்று சொல்வார்.

ஸ்வாமிகள் என்னிடம் மிகவும் கருணையுடன் இருந்தார். அருகில் உள்ளவர்கள் “இவனுக்கு அவர் நிறைய செல்லம் கொடுக்கிறார்” என்று சொல்லும் அளவிற்கு ஸ்வாமிகள் என்னிடம் கருணையுடன் இருந்தார். நான் தாம்பரத்தில் ஒரு வேலை பார்த்துவிட்டு ஸ்வாமிகளிடம் வருவேன். அங்கே இருப்பவர்கள் வேஷ்டி மாற்றி கொண்டு பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு படிக்க உட்காருவார்கள். நானும் அதை பார்த்து அதே மாதிரி பண்ணும்போது ஸ்வாமிகள் “அதெல்லாம் வேண்டாம், நீ கஷ்ட பட வேண்டாம், நீ அலைந்து திரிந்து வருகிறாய். pant போட்டுக்கொண்டே உட்கார்” என்று சொல்வார். “ராமாயணம் படிக்கவேண்டும். அதுதான் முக்கியம்” என்று சொல்வார். நான் அசதியில் கொஞ்சம் தூங்கிவிட்டால் “அவனை எழுப்ப வேண்டாம். அவன் அலைந்து வந்திருக்கிறான்.” என்று சொல்வார். ஒரு முறை எனக்கு ஹைட்ரோசில் வந்து கஷ்ட பட்டபோது, சிவன் சாரிடம் ஸ்வாமிகள் எனக்காக வேண்டிகொண்டார். அவர் எந்த நாளில் சிவன் சாரிடம் வேண்டிகொண்டாரோ அதே நாளில் நானொரு Doctor கிட்ட போய் அவர் கொடுத்த மருந்து சாப்பிட்டு கொஞ்ச நாளில் அது சரியானது.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் ஸ்வாமிகள், தெய்வ பக்தி என்பது புரட்சி கிடையாது. பக்தி மார்கத்தில் பொறுமை வேண்டும். revolutionary கிடையாது evolutionary ஆகத் தான் போக வேண்டும் என்று சொல்லி, வாழ்க்கை முழுவதும் அவர் காண்பித்த வழியில் செல்ல பாதையும் போட்டுக் கொடுத்தார். அவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறார்.

நான் ஸ்வாமிகளிடம் பழகும் போது எனது தங்கை பிளஸ் டூ படித்து முடித்தாள். நான் மஹா பெரியவா புத்தகத்தை எல்லாம் படித்து விட்டு, “உடனே கல்யாணம் பண்ணிவிடலாம்” என நினைத்தேன். ஸ்வாமிகள் “வேண்டாம் அவள் நன்றாக படிக்கிறாள். மேலே படிக்கட்டும்” என்று சொல்லி, அவள் MCA வரை படித்து விட்டு அதன் மூலம் சில நன்மைகள் அடைந்தாள். இப்போதும் ஸ்வாமிகளிடம் பக்தியோடு இருக்கிறாள். அது போல என் அக்காள் பணத்திற்கு கொஞ்சம் சிரம பட்டபோது, “திருஷா திராகீயஸ்யா” என்ற ஒரு சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்து அதை சொல்லச் சொன்னார். அவள் இப்போ தன் பெண்ணிற்கு நல்லபடியாக கல்யாணம் பண்ணினாள். இப்படி ஸ்வாமிகளை நமஸ்கரித்தவர்களுக்கு எல்லாம் க்ஷேமம் தான்.

எனக்கு கல்யாணம் முடிந்து எனது மனைவியை ஸ்வாமிகளிடம் அழைத்துக் கொண்டு வந்து “இவளுக்கு ஏதாவது சுலோகம் சொல்லிக் கொடுங்கள்” என்று கேட்டேன். ஸ்வாமிகள் அவளிடம் “உனக்கு என்ன ஸ்வாமி பிடிக்கும்?” என்று கேட்டார். அதற்கு “பிள்ளையாரைப் பிடிக்கும்” என்று அவள் சொல்ல, “ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச” சொல்லு என சொன்னார். அதை எழுதியும் கொடுத்தார். நான் “எத்தனை ஆவர்த்தி பண்ண வேண்டும்? தினம் அறுபத்து மூணு பண்ண சொல்லவா?” என்று கேட்டேன். “வேலை இருக்கும், சிரமமாக இருக்கும், ஒரு ஆவர்த்தி செய்தால் போதும்” என்று சொன்னார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆனால் இப்போது அவளே நிறைய திருப்புகழ், ஸ்லோகங்கள் எல்லாம் கற்றுக்கொண்டு, அவர் சொன்ன ஸ்லோகத்தையும் நிறைய ஆவர்த்தி செய்து கொண்டு இருக்கிறாள். ஸ்வாமிகளின் கருணை – அவர் ஒண்ணு செய் என்றாலும் அது என்றென்றும் தொடர்ந்து செய்கிற மாதிரி இருக்கும். அது தான் ரொம்ப முக்யமாக அவர் நினைத்தது.

ஸ்வாமிகள் பெண்களிடம் ரொம்ப கருணையுடன் இருந்தார். “பெண்களுக்கு உடலுழைப்பு அதிகம். அவர்களிடம் கருணையாக இருக்க வேண்டும்” என்று சொல்வார். அவர் அந்த மாதிரி சொல்லி சொல்லி தான் என்னுடைய கல்யாண வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது. “கோபமாக பேசாதே, கருணையுடன் இரு. அன்பாக பேசு” என்று சொல்வார். யாரையும் நாம் எடை போடக்கூடாது. யாரையும் மனம் நோகும் படி பேச கூடாது என்று அவர் சொல்வார். இதற்கு ஒரு extreme example சொல்றேன். நான் அமெரிக்காவில் இருந்தபோது “அந்த ஊரில் உள்ள பெண்கள் கற்பெல்லாம் பற்றி கவலைபடுவதில்லை” என்று சொன்னேன் .அதற்கு ஸ்வாமிகள், “அப்படி பேசாதே. அவர்களுடைய ஒழுக்க நெறி வேறாக இருக்கலாம், அப்படி சொல்லகூடாது” என்று சொன்னார். எவ்வளவு பரந்த மனப்பான்மை. “அங்கேயும் கற்பு நெறியுடன் பெண்கள் இருப்பார்கள். இல்லையென்றால் எப்படி அங்கே மழை பெய்யும்? அதற்கு வேறு அர்த்தம் அவர்கள் வைத்து கொண்டிருப்பார்கள்.” என்று சொல்வார். அது போல “நீ மாத்யாஹ்னிகம் பண்ணு, இன்னொருவர் அதை பண்ணுகிறார்களா என்று பார்க்காதே” என்று சொல்வார். அது போலவே அவர் இருந்தார். பிறரிடம் நல்லதை பாராட்டுவார். தப்பு வழியில் போலாமா என்று கேட்டால், போகதே என்று சொல்வார். ஆனால் அவர் தலையிட்டு சரி செய்ய மாட்டார். நல்ல வழி எது, பண்ண வேண்டியது என்ன என்பதை சொல்லிக் கொடுத்து, அந்த வழியிலேயே வாழ்ந்தும் காட்டினார். அவருடைய அளவற்ற கருணையும் அன்பும் அவர் பண்ணின நன்மைகளும் இந்த காசித் க்ருபா கந்தலீ என்ற ஸ்லோகத்தை படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது.

கோபிகா ஜீவன ஸ்மரணம்!!! கோவிந்தா கோவிந்தா!!!

3 replies on “காசித் க்ருபா கந்தலீ – கருணை என்னும் கொடி”

Namaskaram

You are blesssed by Swamigal. Also, we are blessed because we are learning a lot from you.

காஞ்சி நகரம் பூமித் தாயின் இடுப்பு என்ற மத்ய ப்ரதேசம் என வர்னிக்கப்படுகிறது!
பெண்களின் மத்யபாகமாகிய இடுப்புக்கு என்ன அணிகலன்? ஒட்யாணமல்லவா?
காஞ்சியை ஒட்யாண பீடமென வர்ணிக்கப்படுகிறது !!

தேவி குலை குலையாகக் கூடிய வாழையைப்போல் கருணா ரஸத்துடன்
காஞ்சியின் மத்தியில் ஓர் பூங்காவாகவும், அதில் பூத்த மலர்களில் வண்டு
மொய்ப்பது போலோர் காக்ஷியை இங்கு மூககவி நம்கண்முன்
தோற்றுவிக்கிறார்!
தேவியின் திருவடிகள் தாமரைமலரை ஒத்ததாகும்! அதைச் சுற்றி தளிர்கள்
அவள் காந்தியால் தெரிக்றதாம்!! கண்களைச் சுற்றித் தெரியும் ஒளியால்
புஷ்ப தளங்களை ஒத்ததாக இருக்கிரது1 அவள் ஆலயமே ஆலயத்துக்கு
ரத்னக் கல் போல விளங்குகிறது!

மூக பஞ்ச சதிமுழுதும் அம்பாளின் ஒட்டியாணம், புன் சிரிப்பு பல இடங்களில்
பல விதமாய் வர்ணிக்கப்படுகிறது!!!
ரொம்ப ரஸனையோடுஅம்பாளைப் பார்துப்பார்து வர்ணிக்கிறாற் கவி!
இப்படிப்பட்ட அம்பாள் நாம் கேட்டதெல்லாம் வழங்கும் கற்பக வ்ருக்ஷமாக
இருக்கிறாள்!!
த்யாகுத் தாத்தா , ,ஜானகிராமன் மாமா!,நாகராஜ மாமா ,
வெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!!

ஸ்வாமிகளிடம்னெருங்கிப் பழகி அவர் செல்லக் குழந்தையாக
இருந்து அவர் அண்மையில் பல நல்ல விஷயங்களைக்
கற்றுத் தேர்ந்து இத்தனை விஷய ஞானம் உள்ளவராக
திகழும் கணபதியும் ஓர் பாக்யசாலியல்லவா?

மஹா பெரியவா, ஸ்வாமிகள், சிவன் சார் போன்ற மஹா
ஞானிகளுடன் நெருங்கிப் பழக பூர்வ ஜன்ம சுகிர்தந்தான் காரணம்!!
ஏல்லாருக்கும் இது வாய்ப்பதில்லை!

தான் கற்றதை இவ்வுலகம் அறிய போதிப்பதுக் ஓர் வரப்ரசாதம்,
எல்லாருக்கும் வாய்க்காத ஓர் ப்ரஸாதம்1
அதை பூர்ண ச்ரத்தையோடு கற்பிக்க ஓர் ஆற்றல் பொறுமை
வேண்டும்!
பெரியவா ஸ்வாமிகள் சிவன் சார் அம்பாள் பூர்ன கடாக்ஷம்!!

ஜய ஜய ஜகதம்ப சிவே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.