ஆஸிதம் ஷயிதம் புக்தம்

 

ஸ்வாமிகள் பேரானந்தத்தில திளைத்து இருந்ததனால அவர் சன்னதிக்கு போனாலே மனசு அப்படியே உல்லாசமாகி விடும். எப்பவும் வேடிக்கையா பேசிண்டு இருப்பார், நம்ம கவலைகள் எல்லாம் மறந்துடும். அவர் ராமாயண பாகவத விஷயங்களை அனுபவிக்கும் போது பக்கத்துல இருந்தா, அந்த, தான் ரசிச்ச விஷயங்களையெல்லாம் Shareபண்ணுவார். அவர் ஒரு மணி நேரம் ராம நாம ஜபம் பண்றது, பாராயணம் பண்றது, பிரவசனம் பண்றது,ஜனங்கள்கிட்ட பேசறது, அதெல்லாம் பார்க்கவே ரொம்ப ஆனந்தமா இருக்கும்.

யாரவது மாமி தனியா வந்து, எங்காத்துல பாராயணம் பண்ணுங்கோன்னு கேட்டா, ஸ்வாமிகள், “நீங்க உங்காத்து மாமாவையும் அழைச்சுண்டு வந்து கூப்பிடுங்கோ நான் வரேன், அவரும் லீவ் போட்டு அந்த ஏழு நாளும் இருக்கணும்.” அப்படின்னு சொல்வார். அதை கூட வேடிக்கையா சொல்வார். கிருஷ்ண சைதன்யரை ஒரு மாமி கூப்பிட்டாளாம், இவர் அங்க போய் பஜனை பண்ணிண்டு இருக்கும்போது, புருஷன் வந்து, “யாரைக் கேட்டு இந்த மாதிரி, எல்லாரையும் கூப்பிட்டு நீ சாதம் போடறே” அப்படின்னு கிருஷ்ண சைதன்யரை அடிச்சுட்டாராம். கௌராங்கர் மேலே பட்ட காயம் பூரி ஜகன்னதார் மேலேயும் இருந்தது, அப்புறம் இவாள்லாம் திருந்தினான்னு ஒரு கதை இருக்கு,ஆனால் எனக்கு அடி வாங்க தெம்பும் இல்ல, எனக்காக பகவான் அடி வாங்கிக்கற அளவு பக்தியும் இல்ல, அதனால நீங்க மாமாவை அழைச்சுண்டு வாங்கோன்னு” அப்படின்னு வேடிக்கையா சொல்வார்.

அவர்கிட்ட யாராவது உங்களை நான் ஸ்வப்னத்துல பார்தேன், அப்படின்னு சொன்னா, “நிஜத்துலையே என்னால நாலு அடி கூட நடக்க முடியலை, நான் எங்க ஸ்வப்னத்துல எல்லாம் வர போறேன்” அப்படின்னு சொல்வார். தன்னை பத்தியே கூட Humour பண்ணிப்பார். நானெல்லாம் ஸ்வாமிகள் எல்லாம் கிடையாது, நான் சாமியார், டீ,காபியெல்லாம் குடிக்கறேன், தண்டம், கமண்டலு வச்சுக்கலை. நான் காவிய கட்டிண்டு ஆத்துலேயே மாடில உட்கார்ந்துண்டு இருக்கேன்” அப்படின்னு வேடிக்கையா சொல்வார்.

என்னை சின்ன வயசில முதல்ல போகும்போது, “ராத்திரி என்ன சாப்பிடுவே” அப்படின்னு கேட்டார். ரொம்ப வருஷம் இருபத்தஞ்சு வயசு வரைக்கும் இராத்திரில பால் சாதம் சாப்பிட்டுண்டு இருந்தேன். அப்ப பால் சாதத்துல, கூட என்ன தொட்டுப்பேன்னு கேட்டார், வெல்லம் வச்சுண்டு சாப்பிடுவேன் அப்படின்னேன். “சர்க்கரை போட்டுண்டு சாப்பிடேன்”அப்படின்னார்.

நான் வந்து ஏதோ Instruction அப்படின்னு எடுத்துண்டு ரொம்ப sincere ஆ ஒரு பத்து வருஷம் அப்படி பண்ணிண்டு இருந்தேன். அப்புறம் ஒரு வாட்டி “சர்க்கரையை காட்டிலும் வெல்லம் மடி” அப்படின்னு யார்கிட்டயோ சொல்லிண்டு இருந்தார், அப்போ நான் கேட்டேன், “நீங்க என்னை பால் சாதத்துக்கு சர்க்கரை போட்டுக்கோ, அப்படீன்னு சொன்னேளே” ன்னு கேட்டேன். அது Taste-ஆ இருக்கும்னு சொல்லியிருப்பேன் அப்படின்னார். அது மாதிரி அவர் ரொம்ப லைட்டா இருப்பார்.

மத்த பிரவசனம் பண்றவாளுக்கெல்லாம் பணம் கொட்டறது அப்படின்னா, “கொட்டினா பொறுக்கறதுக்குதான் நேரம் இருக்கும், எனக்கு படிக்கறதுக்குத் தான் நேரம் இருக்கு”, அப்படிம்பார்.

“இப்ப அப்பா பையனை படிக்க சொல்றார். அவன் கேட்க மாட்டேங்கறான், சினிமா பார்க்கறதுக்கு காசு குடு, காசு குடுன்னா, சரி என்னமோ ஒழி அப்படின்னு குடுத்துடுவார். அந்த மாதிரி இந்த பஜனம் பண்ணும்போது பகவான் கிட்ட வந்து பணம் வேணும், புகழ் வேணும்-னா பகவான் சரி அப்படின்னு குடுத்துடுவார். எனக்கு அது வேண்டாம். என் நோக்கமே வேற” அப்படின்னு சொல்வார். அவா போனபிறகு என்கிட்டே “இதெல்லாம் ஸீதாதேவி கிட்டே ராக்ஷசிகள் பேசின பேச்சு மாதிரி. இதெல்லாம் நான் காதுல வாங்கமாட்டேன்” அப்படிம்பார்.

1991 சிவன் சார் தர்சனம் கிடைத்த பின் ஒரு நாளைக்கு லலிதா ஸஹஸ்ரநாமம் படிச்சுண்டு இருந்தபோது,ஸதாசிவா அனுக்கிரஹதா”, அப்படிங்கற வரி வந்தது. காமாக்ஷி அம்பாள் ஐந்து காரியங்கள் பண்றா.

सृष्टिकर्त्री ब्रह्मरूपा गोप्त्री गोविन्दरूपिणी ॥

संहारिणी रुद्ररूपा तिरोधानकरीश्वरी ।

सदाशिवाऽनुग्रह्दा पञ्चकृत्यपरायणा ॥

ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணி

ஸம்ஹாரிணி ரூத்ரரூபா திரோதான கரீஸ்வரி

சதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய பராயணா

அப்படின்னு இந்த உலகத்தை ஸ்ருஷ்டி பண்ணிணதும், காப்பத்தறதும், ஸம்ஹாரம் பண்றதும், இதுக்குள்ள, நமக்கெல்லாம் ‘நான்’ என்கிற எண்ணத்தை கொடுத்து, ‘எனது’ என்கிற எண்ணத்தை கொடுத்து, இதெல்லாம் பகவான்தான்கிறது தெரியாம எல்லாம் மறைச்சுருக்கா இல்லையா, அது திரோதானம்னு பேரு. அதுவும் அம்பாள் தான் பண்றா, பாக்கியம் இருக்கிற ஜீவன்களுக்கு அந்த திரையை விலக்கி, ஞானத்தை அனுக்ரஹம் பண்றதும் அம்பாள் தான். அப்படி ‘சதாசிவா அனுக்ரஹதா’ அப்படிங்கற வரி வரும். அந்த வார்த்தைக்கு ஸ்வாமிகள் “ஆஹா”ன்னார். என்ன என்று கேட்டேன். இல்லை சிவன் சாரோட பூர்வாச்ரம் பேர் வந்து சதாசிவம். நான் அவர் காலை பிடிச்சுண்டு இருக்கேன், அவர் தான் அனுக்கிரஹம் பண்ணனும். அப்படின்னு சொன்னார்.

சின்ன வயசுல ஒரு கல்யாணத்துல இவரை ஊஞ்சல் கல்யாணத்தின் போது பாடு அப்படின்னு சொன்னாளாம்.ஸ்வாமிகள்

 स्मरमथनवरणलोला मन्मथहेलाविलासमणिशाला ।

कनकरुचिचौर्यशीला त्वमम्ब बाला कराब्जधृतमाला ॥

ஸ்மரமதன வரண லோலா மன்மதஹேலா விலாசமநிஷாலா |

கனகருசி சௌர்யஷீலா த்வமம்ப பாலா கராப்ஜ்ய த்ருதமாலா ||

அப்படின்னு குறிஞ்சி ராகத்துல ஒரு ஸ்லோகத்தை பாடினாராம். எல்லாரும் கை தட்டினாளாம். அந்த பொண்ணு பேரு பாலாவாம், அட! பொருத்தமா பாடறியே!! அப்படின்னாளாம்.

ஸ்வாமிகள், ஒரு நாப்பது வயசுல கஷ்டம் எல்லை மீறி போயிண்டு இருந்தபோது, ஒரு வாட்டி ஒரு சுந்தர காண்ட புஸ்தகம், மேலே ஸ்லோகம், கீழே meaning. அந்த புஸ்தகத்தை கூட, என்கிட்டே காண்பிச்சு எனக்கு குடுத்து விட்டார். அந்த புஸ்தகத்தை Publish பண்ணினவர் முதல் புத்தகத்தை (first copy) எடுத்துண்டு வந்து ஸ்வாமிகள் கிட்ட குடுத்தாராம், ஸ்வாமிகள் அந்த புஸ்தகத்தை பிரிச்சாராம், பிரிச்ச உடனே ஒரு பக்கத்தில் முதல் ஸ்லோகமா ஸீதாதேவிகிட்ட ஹனுமார், அம்மா, “உன் கஷ்டம் எல்லாத்தையும் இன்னிக்கே நான் போக்கிடறேன். இப்பவே உன்னை தோள்ல தூக்கிண்டு போயி ராமர்கிட்ட சேர்த்துடறேன்” அப்படிங்கற ஸ்லோகம் வந்ததாம். அப்படியே ஸ்வாமிகள் வந்து அவ்ளோ சந்தோஷபட்டார். இதுமாதிரி பகவான் இருக்கார், நம்ம கஷ்டத்தை எல்லாம் போக்குவார் அப்படின்னு அன்னிக்கு அவ்வளவு ஆறுதலா இருந்தது. அப்படின்னு சொல்வார்,

இன்னொரு நிகழ்ச்சி. மூக பஞ்சசதி-ல

दधानो भास्वत्ताममृतनिलयो लोहितवपुः

विनम्राणां सौम्यो गुरुरपि कवित्वं च कलयन् ।

गतौ मन्दो गङ्गाधरमहिषि कामाक्षि भजतां

तमःकेतुर्मातस्तव चरणपद्मो विजयते ॥

ததானோ பாஸ்வத்தாம் அம்ருதனிலயோ லோஹிதவபு:

வினம்ராணாம் ஸௌம்ய: குருரபி கவித்வம் ச கலயன்: ||

கதௌ மன்தோ கங்காதர மஹிஷி காமாக்ஷி பஜதாம்

தம: கேதுர்மாத: ஸ்தவ சரணபத்மோ விஜயதே

அப்படிங்கற ஸ்லோகம் இருக்கு.

ததானோ பாஸ்வத்தாம்” அப்டின்னா சூரியனைப்போல ஒளி விடறது. இது அம்பாளோட பாதத்துக்கும் பொருந்தும்.சூரியன் பேர் வருகிறது.

அம்ருதநிலய:, அம்ருதநிலய: என்பது. சந்த்ரனுக்கு பேரு. அம்பாளோட பாதத்துல அம்ருதம் இருக்கு அப்படின்னு ஐதீகம்.

லோஹிதவபு” பாதங்கள் சிவப்பு நிறத்துல இருக்கு, அங்காரஹன் சிவப்பு நிறம்.

வினம்ராணாம் ஸௌம்யநமஸ்காரம் பண்றவாள்கிட்ட அம்பாளோட பாதம் சௌம்யமா இருக்கு. சௌம்யம்னா புதன்னு அர்த்தம்.

குருரபி” அம்பாளோட பாதம் ஞானத்தை குடுக்கறதுனால குருவாகவும் இருக்கு.

கவித்வம் ச கலயன் பாதம் கவிகளுக்கு நல்ல வாக்கு குடுக்கிறது. கவிங்கற வார்த்தைக்கு சுக்ரன்-னு அர்த்தம்.

கதௌ மந்தஹ மெதுவா நடக்கிறது பாதம். இந்த கதௌ மந்தஹ ங்கறது ‘சனைச்சரஹ

காமாஷி தமஹ் கேது:. தமஸ்-ன்னா இருட்டு. அது ராஹு, கேதுன்னா, இருட்டுக்கு எதிரி. அஞ்ஞானத்துக்கு எதிரியா இருக்கு இந்த பாதம், இப்பேற்பட்ட பாதம் ஒளியோடு விளங்கட்டும், அப்படின்னு, இந்த ஸ்லோகத்தை பாராயணம் பண்ணினா “நவ கிரஹங்களும்” அனுகூலமா இருக்கும்ன்னு சொல்வார். சித்திரை முதல் தேதி பஞ்சாங்க படனம் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி ஆசீர்வாதம் பண்ணுவார்.

ஒரு வைஷ்ணவர் கேட்டார். ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரத்துல ராமர் பாதத்தை ஏழு க்ரஹங்களுக்கு ஈடாக சொல்கிறார். இந்த மாதிரி ஒங்க புஸ்தகத்துல இருக்கா என்று கேட்டார். ஸ்வாமிகள் ஒன்பது க்ரஹங்களுக்கும் மேலாகவே அம்பாள் பாதத்தை மூக கவி சொல்லி இருக்கார் என்று இந்த ஸ்லோகத்தை காண்பித்தார்.

ராமாயணத்துல, சுமந்தரர் திரும்பி வரார். அவர்கிட்ட தசரதர் “ஹே சுமந்தரா, நீ அவ்வளவு தூரம் போயி ராமனை காட்டுல விட்டுட்டு வந்தியே, அவ்வளவு தூரம் அவனோட கூட இருந்தியே, நீ பண்ண பாக்கியம், ரொம்ப பாக்கியம்,அவன் என்ன பண்ணான்னு சொல்லு,

“ ஆஸிதம் சயிதம் புக்தம் ஸுத ராமஸ்ய கீர்த்தய

அவன் என்ன சாப்பிட்டான், அவன் எங்க உட்கார்ந்தான், எங்க படுத்துண்டான், என்ன பேசினான், எல்லாத்தையும் சொல்லு.

ஜீவிஷ்யாமி அஹமேதேன யயாதிரிவ சாதுக்ஷு” அந்த மாதிரி தசரதர் சொல்றார் “ராமனோட பேச்சு, அவனோட நடத்தை, அவன் உக்காந்தது அவன் பேசினது, அவன் சாப்பிட்டது, இதெல்லாம் சொல்லு.

ஜீவிஷ்யாமி அஹமேதேன இதை கொண்டு நான் உயிர் வாழ்வேன்.

அது என்ன கதைன்னா யயாதி – ங்கற மஹாராஜா, அவன் புண்யத்தினால இந்திர லோகத்துக்கு போறான். இந்திரன் போட்டிக்கு வந்துட்டான்னு, யயாதி கிட்ட, அப்படி என்ன புண்யம் பண்ணினேனு கேக்கறான். கேட்ட உடனே யயாதி தான் பண்ணிண புண்யங்களை எல்லாம் List பண்ணினானாம். புண்யத்தை எல்லாம் தானே சொன்னா போயிடும் என்று, ஒரு சாஸ்திரம். அதனால தன்னோட புண்யத்தை தானே பேசினதுனாலே, கீழே விழுந்துட்டான், அப்படின்னுகதை.

அப்ப, இந்திரன் கிட்ட, நான் ஏதோ தப்பு பண்ணி திரும்ப பூமிக்கு போறேன். பூமியில At least சாதுக்களோட இருக்கும்படியா ஒரு அனுக்ரஹம் பண்ணு, சாது சங்கம் வேணும்னு, ரிஷிகளோட போயி அவன் இருந்தான்.அப்படின்னு முடியறது. இந்த மாதிரி யயாதி வந்து சாதுக்கள்னால மீண்டான். அந்த மாதிரி தசரதர் சொல்றார்”ராமனோட விஷயங்களைப் பேசு ஜீவிஷ்யாமி அஹமேதேன இதை கொண்டு நான் உயிர் வாழ்வேன்.

இந்த ஸ்லோகத்தை படிச்ச போது, இதே மாதிரி ஸ்வாமிகளோட காரியம் எதை நினைச்சாலுமே, அது நமக்கு சந்தோஷத்தையும், உயிருக்கு ஒரு ஊட்டத்தையும் குடுக்கிறது என்று தோன்றியது.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

ஆஸிதம் ஷயிதம் புக்தம் (9 min audio in tamizh, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.