சுக தாதம் தபோ நிதிம்

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்

வண்டே கானத்திடை இருந்து வந்தே கமல மது உண்ணும்

பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரை

கண்டும் களித்தங் உறவாடி தம்முள் கலப்பர் கற்றோரே.

அப்படின்னு ஒரு தமிழ் பாட்டு

“தாமரைக்கு பக்கத்திலேயே பிறந்தாலும் இந்த தவளைக்கு தேனோட ருசி தெரியறதோ? எங்கிருந்தோ வண்டு தான் வந்து, அந்த தேனை பருகி சந்தோஷப்படறது, அது மாதிரி படிச்சவாளுக்கு பக்கத்திலேயே இருந்தாலும் புல்லர்களுக்கு அவாளுடைய பெருமை தெரியமாட்டேங்கிறது, இன்னொரு படிச்சவா தான் தேடி வந்து, அவாள்ட்ட கலந்து பழகி விஷயங்களை க்ரஹிச்சுண்டு சந்தோஷப்படறா” அப்படின்னு இந்த பாட்டு.

ஸ்வாமிகள் சின்ன வயசிலிருந்தே ஸத் விஷயங்களை க்ரஹிச்சுக்கணும் அப்படின்னு எவ்வளவோ முயற்சி பண்ணி, தள்ளி தள்ளி இருந்தாலும் போய், அவரிகளிடம் இருந்து கேட்டுப்பார். ஸ்மரணம் கீர்த்தனம் விஷ்ணோ: அப்படின்னு, ஸத் கதா ஸ்ரவணம் பண்ணுகிற அந்த பழக்கம் ஸ்வாமிகளுக்கு கடைசி வரைக்கும் இருந்தது.

தான் பகவானோட புகழை பாடி, ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டு சந்தோஷப்படறது, அந்த நிலைமை எல்லாம் வந்த பின்னையும், ஸ்வாமிகள், தேடி தேடி போய் கதை கேட்பார், ப்ரவசனங்கள் கேட்பார். தான் பிரவசனம் பண்ணிண்டு மத்தவாளுடைய ப்ரவசனங்கள் கேட்கறது, ரொம்ப rare. இவர் ஒருத்தர் தான் இருப்பார் அப்படி..ஆனா ஸத்கதா ஸ்ரவணம், அது தான் பண்ண வேண்டிய காரியம், பகவானுடய கதைகளை கேட்டோம்னா காதுகள் மூலமா பகவான் உள்ளத்துக்குள்ள வந்துடுவார், அப்படின்னு அந்த நம்பிக்கை அவருக்கு. மயிலாபூர் சாய் சமாஜத்துல வருஷத்துல ஒரு தடவை ஏழு நாள் ஆன்ஞன் நம்பூதிரி, அவாளுடன் சேர்ந்தவாள் எல்லாம் பாகவதத்தை, ஏழு நாள், பாகவத text ஒரு ஐம்பது ஸ்லோகம் படிக்கறது, அந்த கதைய சொல்றது, இப்படி கார்த்தால ஆறுலேர்ந்து சாயங்கலாம் ஆறு வரைக்கும், சப்தாஹமா பூர்த்தி பண்ணுவா. ஸ்வாமிகள் அதை போய்க் கேட்பார், இப்படி முப்பத்தஞ்சு வருஷம் விடாம கேட்டிருக்கிறார்.

ஸ்ரீ சுந்தர் குமார் வந்து பழகின பின்ன, “நான் சாய் சமாஜத்தில் பாகவத பிரவசனம் பண்றேன் வந்து கேக்கணும்” னு வேண்டிக் கொண்டார். அப்போதிலிருந்து பல வருஷங்கள் அவாளுடைய பிரவசனத்தை கேட்டுண்டு இருந்தார், அப்படி அவருக்கு அந்த, ஸத்விஷயங்களை எங்கிருந்தாலும் க்ரஹிச்சுக்கணும் அப்படிங்கற ப்ரியம் உண்டு.

சின்ன வயசுல அவருடய ஊர்ல போலகம் ஸ்ரீராமா சாஸ்த்ரிகள்னு ஒரு மஹான் இருந்தார், அவருக்கு சாஸ்திர ரத்னாகரம் அப்படின்னு பெரியவா Title குடுத்திருக்கா. ரொம்ப படிச்சவர், அவர் எந்த படித்துறைல குளிப்பரோ, காவேரில அங்க போய் ஸ்வாமிகள் குளிப்பாராம். அவரை நமஸ்காரம் பண்ணி, அவர் எதாவது ஸத் விஷயங்கள் சொல்வார் கேட்டுக்கணும்னு ஆசைல.

ஒரு நாளைக்கு அவர் “கல்யாணம், ஒரு ஸ்லோகம் பண்ணிருக்கேன் கேளு”, அப்படின்னு ஒரு ஸ்லோகம் சொன்னாராம், அதுல, “ஒரு குடும்ப ஸ்த்ரீ, நாட்டிய மங்கை நிறைய நகை போட்டுண்டிருக்காளேன்னு பாத்து தான் வந்து குறைப் பட்டுக்க மாட்டாள்” அப்படின்னு ஒரு ஸ்லோகம் எழுதி இருந்தாராம், இதை கேட்ட உடனே ஸ்வாமிகள் ஆஹா ன்னாராம், என்ன ஆஹா னு சொல்றேன்ன உடனே, “உங்களை மாதிரி படிச்சவா, இந்த படிப்புலையே திருப்தியா இருப்பாளே தவிர, இதனால ஒரு புகழ் பணம் வரலயேன்னு குறை பட்டுக்கமாட்டா, எப்படி ஒரு குடும்ப ஸ்த்ரீ தன்னோட கற்புலயே திருப்தியா இருக்காளோ அந்த மாதிரி,” அப்படின்னு சொன்ன உடனே, “கல்யாணம், நன்னா புரிஞ்சுண்டியே நீ”, அப்படின்னு சொல்லி, “வா வா, உங்க ஆத்துக்கு வந்து உங்க அப்பா கிட்ட சொல்லணும் எனக்கு”, அப்படின்னு, ஆத்துக்கு வந்து “வெங்கட்ராம சாஸ்த்ரிகளே, உங்க பிள்ளை சுக தாதம் தபோ நிதிம் அப்படின்னு உங்களுக்கு பெருமை சேர்க்கப் போறான், நான் நிறைய ஆசீர்வாதம் பண்றேன்” அப்படின்னு சொல்லிட்டு போனாறாம்.

அந்த சுக தாதம் தபோ நிதிம் என்னன்னா,

व्यासं वसिष्ट नप्तारं शकते: पौत्रमकलमषम् |

पराशरात्मजं वन्दे शुकतातं तपोनिधिम् ||

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ரம் அகல்மஷம் |

பரசாராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம் ||

அப்படின்னு வியாசருக்கு நமஸ்காரம் என்று சொல்லும்போது, வசிஷ்டருடைய கொள்ளுபேரர், சக்தியினுடைய பேரர், பராசரருடைய பிள்ளை, சுகருக்கு அப்பா, அப்படின்னு வரது இந்த ஸ்லோகத்துல, ஒருத்தரை, பெரியவாளை (முன்னோர்களைச்) சொல்லி பிரவரம் சொல்லுவா, பிள்ளையைச் சொல்லி இன்னாருக்கு அப்பான்னா, அந்த பிள்ளையோட பெருமை தெரியறது, அந்த மாதிரி இந்த கல்யாணத்தோட மகிமைனால உங்க பேர் விளங்கபோறது, அப்படின்னு அந்த ராமா சாஸ்த்ரிகள் வாழ்த்தினாராம். அந்த வார்த்தை ரொம்ப சத்தியமாச்சு.

சாதுராம் ஸ்வாமிகள், அவா அண்ணா S.V. சுப்பிரமணியம் அப்படின்னு வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகளுடைய மடில தவழ்ந்து வளர்ந்து, வள்ளிமலை ஸ்வாமிகள்ட்ட இருந்து நிறைய திருப்புகழ் கத்துண்டு பாடுவார்கள். வள்ளிமலை ஸ்வாமிகள், வள்ளி கல்யாணம் திருப்புகழ்லேர்ந்து எடுத்து, ஜீவபிரம்ம ஐக்கியத்தை, ஓவ்வொரு கதைக்கும், அதை எப்படின்னு பொருந்தும்படியா அழகான ஒரு பிரவசனம் பண்ணுவார், அவர் வள்ளி கல்யாணம் சொல்லிண்டே முக்தி அடைஞ்சார், அப்பேற்பட்ட அந்த மஹானுடைய மடில வளர்ந்தவா இந்த சாதுராம் ஸ்வாமிகளும், இந்த S.V. சுப்பிரமணியமும். அவாளை ஸ்வாமிகள் தன் ஆத்துக்கு கூப்பிட்டு வள்ளி கல்யாணத்தை சொல்லச் சொல்லி கேட்பார். அவா சொன்னான்னா 6 hours, 7 hours சொல்லுவா, நானே கேட்டுருக்கேன், வேளைக்காரன் வகுப்புங்கிற பாட்டுக்கு சாயங்காலம் ஆறு மணிலேர்ந்து ராத்திரி ஒரு மணி வரைக்கும் பிரவசனம் பண்ணிணா, அதே மாதிரி வள்ளி கல்யாணத்தை எல்லாம் அவ்வளவு பிரியமா சொல்லுவா, அப்படி அவாளை ஆத்துக்கு கூப்பிட்டு ஸ்வாமிகள் கேட்டுருக்கார். அது மாதிரி ஸத் விஷயங்கள்ல ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிரியம். இன்னொரு சுவாரஸ்யமான ஒரு விஷயம் இருக்கு. அவரோட சமஸ்கிருத வாத்தியார் கந்தசாமி சிரோமணி சம்பந்தப் பட்டது, அந்த incident அடுத்தது சொல்றேன்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!

சுக தாதம் தபோநிதிம் (6 min audio in Tamizh, same as the script above)

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.