Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 99வது, 100வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 99வது, 100வது ஸ்லோகம் பொருளுரை 9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 99, 100)

சிவானந்தலஹரில கடைசி 2 ஸ்லோகங்கள் இன்னிக்கு பார்ப்போம் . 99வது ஸ்லோகம் :

इदं ते युक्तं वा परमशिव कारुण्यजलधे
गतौ तिर्यग्रूपं तव पदशिरोदर्शनधिया ।
हरिब्रह्माणौ तौ दिवि भुवि चरन्तौ श्रमयुतौ
कथं शम्भो स्वामिन् कथय मम वेद्योऽसि पुरतः ॥ ९९॥

இத³ம்ʼ தே யுக்தம்ʼ வா பரமஶிவ காருண்யஜலதே⁴
க³தௌ திர்யக்³ரூபம்ʼ தவ பத³ஶிரோத³ர்ஶனதி⁴யா |
ஹரிப்³ரஹ்மாணௌ தௌ தி³வி பு⁴வி சரந்தௌ ஶ்ரமயுதௌ
கத²ம்ʼ ஶம்போ⁴ ஸ்வாமின் கத²ய மம வேத்³யோ(அ)ஸி புரத꞉ || 99 ||

இந்த ரெண்டு கடைசி ஸ்லோகங்கள் சிவனந்தலஹரியோட   பலச்ருதி போல இருக்கு. இந்த ஸ்லோகத்தில என்ன சொல்றார் – மாலறியா நான்முகனும் காணாமலே அப்பேற்பட்ட நீ எனக்கு கண் முன்னாடி தர்சனம் குடுத்தியே அப்படின்னு சொல்லறார்.இந்த சிவனந்தலஹரி ஸ்தோத்ரத்தை  பண்ணதுல ஆசார்யாளுக்கு பரமேஸ்வரனோட தர்சனம் கெடச்சிருக்குன்னு தெரியறது.

நான் அதோட அர்த்தம் சொல்றேன்,

“பரமசிவா காருண்ய ஜலதே” – கருணைக்கடலே

“தவ பத³ஶிரோத³ர்ஶனதி⁴யா”   – உன்னுடைய அடியையும் முடியையும் காண வேண்டும் என்ற எண்ணத்தில்

“ஹரிப்³ரஹ்மாணௌ தௌ”  – ப்ரஹ்ம்மா விஷ்ணு ஆகிய அந்த இருவரும்

“திர்யக்³ரூபம்ʼ க³தௌ” – பறவையும் மிருகமும் ஆகிய பிராணிகளின் உருவத்தை அடைந்து

“தி³வி பு⁴வி” – ஆகாசத்திலும் பூமியிலும்

“சரந்தௌ ஶ்ரமயுதௌ” – பலவிதமாக தேடி களைப்பைத்தான் அடைந்தார்கள். ஆனாலும்  உன்னுடைய தர்சனம் அவாளுக்கு கிடைக்கல.

“ஹே ஶம்போ” – மங்களத்தை அளிப்பவரே

“ஸ்வாமின்” – என்  ஆண்டவனே

“மம புரதஹ” – என் முன்பு இவ்வளவு எளிதாக

“வேத்யஹா” – கண்ணால பார்க்கும்படியாக கண்டுகொள்ளும் படியாக இருக்கிறீரே

“இதம் தே யுக்தம் வா” – இது பொருத்தம் தானா அப்படீங்கறார்

இந்த மாதிரி ஒரு ஸ்தோத்ரத்தை  படிச்சா நமக்கு என்ன கிடைக்கும்னா, ஒரு தெளிவு கிடைக்கும், மனசு ஒரு முகப்படும். Focus and Clarity வரும், அப்போ அந்த தெய்வத்தோட தர்சனம் கிடைக்கும். ஆச்சார்யாள் மாதிரி ஞானிகளுக்கு இந்த ஸ்தோத்ரத்தை  பண்ண உடனே அந்த தெளிவு கிடைச்சிடுத்து. நமக்கு இந்த மாதிரி ஒரு ஸ்தோத்ரத்தை படிக்கும்போது கொஞ்சம் அந்த லவலேசம் பரமேஸ்வரனுடைய அனுகிரஹத்துடைய அனுபவம் கிடைக்கும். நம்ப திரும்ப இந்த மாதிரி  ஸ்தோத்திரங்களை படிச்சு அந்த அநுபவத்தை துளிதுளியா சேர்த்துண்டு அதை நமக்குள்ள தக்க வெச்சுக்கணும்.

அடுத்த ஸ்லோகத்தில ஆச்சார்யாள், எனக்கு இனிமேல் என்ன சொல்றதுக்கு இருக்கு, நான் இந்த  ஸ்தோத்ரத்தை இங்கயே முடிச்சிக்கறேன்னு சொல்றார். ஆனா அது நமக்கு கிடையாது. வயிறார சாப்ட்டோம்னாலும், ஆனா மறுபடியும் பசிக்கறது, திரும்பவும் சாப்படறோம் இல்லையா.

அது மாதிரி பகவானை வாயாற பாடி தலையாற கும்பிட்டு அப்படீன்னு ம ஹான்கள் சொல்றா. அப்படி பண்ணா கூட அந்த வேளைக்கு ஒரு திருப்தி வரணும். அந்த வாட்டி வாயாற பாடும்போது ஒரு திருப்தி வரணும், திருப்தி ஏற்படற வரைக்கும், ப்ரதக்ஷிணம் பண்ணனும், நமஸ்காரம் பண்ணனும் , பூஜை பண்ணனும். கணக்கே கிடையாது இதுக்கு. அப்படி பண்ண பின்ன நம்ப உலக விஷயத்துல ஈடுபடறோம், அப்போ அந்த அனுபவம் கொறஞ்சிடறது. அப்போ திரும்பவும் ஒரு வாட்டி மறுநாளும் அந்த பாகவனோட கார்யங்கள்ல ஈடுபடனும்.

இத³ம்ʼ தே யுக்தம்ʼ வா பரமஶிவ காருண்யஜலதே⁴
க³தௌ திர்யக்³ரூபம்ʼ தவ பத³ஶிரோத³ர்ஶனதி⁴யா |
ஹரிப்³ரஹ்மாணௌ தௌ தி³வி பு⁴வி சரந்தௌ ஶ்ரமயுதௌ
கத²ம்ʼ ஶம்போ⁴ ஸ்வாமின் கத²ய மம வேத்³யோ(அ)ஸி புரத꞉ || 99 ||

இது ஒரு பலச்ருதி. சுவாமியோட தரிசனம்.. அவருடைய அனுக்கிரகம் அனுபவம்..

அடுத்த ஸ்லோகத்தில, பரமேஸ்வரா நீ தான் எல்லாத்துக்கும் மேலான தெய்வம் அப்படின்னு உணர்ந்துகொண்டேன் அப்படின்னு சொல்றார்.அது ஒரு பலஸ்ருதி.

பக்தி பண்ணும் போது “ஏகபக்திர் விஷிஷ்யதே”. அப்படின்னு எந்த ஒரு தெய்வத்துகிட்ட நம்ம மனசு வெக்கறோமோ, அந்த தெய்வத்தால நம்ம ஆட்கொள்ளப்பட்டால் அதுக்கப்புறம் வேற ஒரு இடத்துல மனசு போகாது. அப்படி அந்த ஏக பக்தி ஏற்படுவதும் ஒரு அனுக்கிரஹம், ஒரு பலஸ்ருதி.

அந்த ஸ்லோகத்தை பார்ப்போம்.

ஆன்மீகத் தேடல்ல தெய்வம் தன்னை எங்க வெளிப்படுத்திக்கறதோ, ஒரு குரு, ஒரு கோயில்ல இருக்கிற சுவாமி, ஒரு மந்திரம் ஒரு ஸ்தோத்திரம் எங்க நமக்கு அந்த தெய்வீக அனுபவம் ஏற்படறதோ, அதுவரைக்கும் அந்த தேடல் இருக்கும். அந்தத் தேடல் முடியறதுங்கறதே ஒரு பலஸ்ருதி தானே.. இந்த ஸ்லோகத்தில அதைத்தான் சொல்றார்.

स्तोत्रेणालमहं प्रवच्मि न मृषा देवा विरिञ्चादय्ः
स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः ।
माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव-
द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शम्भो भवत्सेवकाः ॥ १००॥

ஸ்தோத்ரேணாலமஹம்ʼ ப்ரவச்மி ந ம்ருʼஷா தே³வா விரிஞ்சாத³ய்꞉
ஸ்துத்யானம்ʼ க³ணனாப்ரஸங்க³ஸமயே த்வாமக்³ரக³ண்யம்ʼ விது³꞉ |
மாஹாத்ம்யாக்³ரவிசாரணப்ரகரணே தா⁴னாதுஷஸ்தோமவ-
த்³தூ⁴தாஸ்த்வாம்ʼ விது³ருத்தமோத்தமப²லம்ʼ ஶம்போ⁴ ப⁴வத்ஸேவகா꞉ ||100||

அர்த்தம் என்னென்னா; ஹே சம்போ,

“ஸ்தோத்ரேணாலம்” – மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத உன் பெருமையை எவ்வளவு பேசினாலும் முடியாது அதனால இந்த ஸ்தோத்திரத்தை நான் இங்க முடிச்சிக்கறேன்.

“அஹம் ம்ருʼஷா ந ப்ரவச்மி” – நான் இல்லாததை எதுவும் சொல்லவில்லை;

“தே³வா விரிஞ்சாத³ய்꞉” – ப்ரஹ்மா முதலான தேவர்கள்

“ஸ்துத்யானம்ʼ க³ணனாப்ரஸங்க³ஸமயே” – யார் இந்த உலகத்துல ஸ்தோத்திரம் பண்ணுவதற்கு தகுதி உடையவர்கள் என்று தீர்மானம் செய்யும் சமயத்தில்

“த்வாமக்³ரக³ண்யம்ʼ விது³꞉” – நீங்கள் தான் எல்லார்க்கும் மேலான தெய்வம், உங்களத்தான் ஸ்தோத்திரம் பண்ணனும் என்று, “விது:”, – அறிகிறார்கள்,

“பவத்-ஸேவகாஹ”- உம்முடைய அடியார்கள்

“மாஹாத்ம்யாக்³ரவிசாரணப்ரகரணே” – உன்னத பதவிக்குரியவர் யார் என்று விசாரணம் பண்ணும் போது

“தா⁴னாதுஷஸ்தோமவத்” – தானியத்தில் கலந்த உமி கூட்டம் போல மற்ற தேவர்கள்

“தூதாஹ” – தானியத்தில் போரடிக்கும் போது உமி பறந்து போயிடும், அந்த மாதிரி உங்களை தெரிந்த பின்னர் மத்த தேவர்கள் விஷயம் உமி போல தான், நீங்க தானியம் போல. அப்டீங்கறார்,

“த்வாம் உத்தம பலம்” –   நீங்கள் தான் எல்லாவற்றுக்கும் மேலான பலமான மோட்சத்தை அருள்வீர்கள் என்று அறிந்து கொள்கிறார்கள், விதுஹு –

இதே கருத்தை இந்த ரெண்டு ஸ்லோகத்தில் வர கருத்தை மாணிக்கவாசகர் ஒரு திருவாசகப் பாட்டுல சொல்கிறார்.

தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும்
மற்றைமூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தையாவர்கோன்
என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே

இந்த யாமார்க்குங் குடியல்லோம், எமனை அஞ்சோம், இதை மொதல்ல அப்பர் பெருமான் தான் பாடினார்னு நான் நெனைச்சிண்டு இருந்தேன், இத படிக்கும் போது தான் தெரியறது, திருவாசகத்துல மாணிக்கவாசகர் முன்னாலேயே பாடி இருக்கார்னு. இந்த உலகத்துல நான் யாருக்கும் குடிமகன் கிடையாது , நான் பரமேஸ்வரனோட அடியார் கூட்டத்துல சேர்ந்துட்டேன், அப்டீங்கறதே முக்தி தானே, அதுக்கப்பறம் என்ன முக்தி, அது பகவான் பார்த்துப்பார்.

யாதும் அஞ்சோம் – எந்த பயமும் இல்ல

இந்த ஏக பக்தி பண்ணும்போது தான், அந்த பகவான் நம்பள ஆட்கொண்டார்ன்னு  தெரிஞ்சிடுதுன்னு பயமே போயிடும், அப்டி இல்லாம பல இடங்கள்ல நம்ப திரும்பி தேடிண்டு இருக்கற வரைக்கும் நமக்கு அந்த அபயம் மனசுல பகவான் குடுத்தா கூட உணர முடியாது, அதனால பயம் இருந்துண்டே இருக்கும்.

அதே மாதிரி பெரிவான்னா மஹாபெரியவாதான், ஒரு எடத்துல மனச வெச்சா  நமக்கு அந்த அபயம் கிடைக்கும்.

அப்படி இந்த சிவானந்தலஹரி ஸ்தோத்ரத்தை படிச்சதுக்கு இரண்டு பலன். ஒண்ணுஅந்த தெய்வீகத்தை உணர்வது, ரெண்டாவது அந்த எடத்துலயே ஏகபக்தியா பரமேஸ்வர த்யானத்துல எப்பவும் இருக்கறது, நான் சொன்னா மாதிரி நம்பள மாதிரி இருக்கறவா திரும்ப இந்த ஸ்தோத்ரத்தை படிச்சு அந்த அனுபவம் கிடைக்கறதுக்கு முயற்சி பண்ணனும்.

இந்த 100 ஸ்லோகத்தையும் படிக்கற பெரிய பாக்கியம் எனக்கு கெடச்சது, உங்களோட பகிர்ந்துண்டேன். சிவானந்தலஹரிதான் நமக்கு ஆச்சார்யார் அனுக்கிரஹம் பண்ணார், இதை படிச்சால் நமக்கு பரமேஸ்வரன் அனுக்கிரஹம் கிடைக்கும்.

நமபார்வதி பதயே!!!  ஹர ! ஹர ! மஹாதேவா !!!

Series Navigation<< சிவானந்தலஹரி 97வது, 98வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 1 முதல் 34 ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு >>

One reply on “சிவானந்தலஹரி 99வது, 100வது ஸ்லோகம் பொருளுரை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.